நிம்மதிக்கடல் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


எத்தனை அணையிட்டு
பாதுகாத்து வைத்திருந்தாலும்
நீரெல்லாம்
கடலையே சேரும்
நீரில் பெரியது
கடல்
நிம்மதியில் பெரியது
மரணம்

55 comments:

ஜெயபாரதன் said...

இல்லறத்தை விட்டு
நிம்மதி தேடித்
துறவறத்தில்
சிகரத்தில் ஏறி
முள்ளின் மீதமர்ந்து
ஏகாந்தமாய்த்
தவம் புரிவதும்
நிம்மதி நாடி
மூச்சை நிறுத்தி
மரணத்தைத் தழுவும்
மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?
பிறந்த பிறகு
இறப்பை நோக்கிக்
காதல் புரிய வேண்டும் ?
அமைதி அளிக்குமா
சமாதி ?



சி. ஜெயபாரதன்

Unknown said...

//பிறந்த பிறகு
இறப்பை நோக்கிக்
காதல் புரிய வேண்டும் ? //

ஜெயபாரதன்,

மரணத்தின் மீது மனிதன் காதல் புரிவது பற்றியதல, மரணம் உயிர்கள் மீது காதல் கொண்டுள்ளது என்பதைக் கூறுவதே இக்கவிதைகள். மீண்டும் அனைத்தையும் வாசித்துப் பாருங்கள்

ஹரன் said...

ஏரியாய் அணையாய் வடிவெடுத்து
சிற்றாறாய் வாய்க்காலாய் வழிந்தோடி
காண்பதையெல்லாம் கழனி செய்து
விளைச்சலை ஆக்கி
வயிற்றுப் பசியினைப் போக்கி
குடிநீராய் உயிர்களைக் குளிர்வித்து
புதுப்பொலிவாய்த் திரும்பிவர
எஞ்சிய சிறு அளவாய்
தாய்மடி சேர்ந்தாலே
நீருக்கு நிம்மதி.


வழி மறந்து விதி மறந்து
பெருந்திரளாய் விரைந்தோடி
கடலிலே கலந்துவிட்டால்
சாபமே வெகுமதி.


பார்க்கும் வரை பேச முடியாது
பார்த்துவிட்டால் பேச இயலாது
எப்படி வந்தது இத்தனைத் துணிவு
யாருக்காக, எதற்காக இந்தப் பாடம்?


கண்ணால் பார்க்க முடியாத
கடவுளைப் போற்றுதல் மட்டும்தானா மூடநம்பிக்கை?


-கவலையுடன்
ஹரன்.

Unknown said...

//ஏரியாய் அணையாய் வடிவெடுத்து
சிற்றாறாய் வாய்க்காலாய் வழிந்தோடி
காண்பதையெல்லாம் கழனி செய்து
விளைச்சலை ஆக்கி
வயிற்றுப் பசியினைப் போக்கி
குடிநீராய் உயிர்களைக் குளிர்வித்து
புதுப்பொலிவாய்த் திரும்பிவர
எஞ்சிய சிறு அளவாய்
தாய்மடி சேர்ந்தாலே
நீருக்கு நிம்மதி.//

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஹரன். இவற்றைச் செய்யாது செத்தொழிய வேண்டும் என்பதை என் கவிதைகள் கூறவில்லை


//பார்க்கும் வரை பேச முடியாது
பார்த்துவிட்டால் பேச இயலாது//

தெளிவாக அறிந்து வைத்திருக்கிறீர்கள்

//எப்படி வந்தது இத்தனைத் துணிவு
யாருக்காக, எதற்காக இந்தப் பாடம்?//

மரணம் பற்றி அறிதல் வேண்டும். அந்த அறிவு நல்ல வாழ்க்கையையே மனிதனுக்குத் தரும் என்பது என் கருத்து.

//கண்ணால் பார்க்க முடியாத
கடவுளைப் போற்றுதல் மட்டும்தானா மூடநம்பிக்கை?//

கடவுளைக்கூட நாம் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் மரணத்தைப் பார்க்கிறோம். கடவுளை விட மரணம் மனிதனுக்கு மிக நெருக்க மான ஒன்று

பிரசாத் said...

"நிம்மதியில் பெரியது
மரணம்"


இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை நண்பரே. நீங்களே சற்று யோசித்தால்
உங்களுக்கே இக்கருத்தில் முரன்பாடு நிச்சயம் வரும். திருத்தத்தோடு
இக்கவிதை மறுபடியும் இழைக்கு வருமென்ற எதிர்பார்ப்போடு உங்கள் நண்பன்.

வே.பிரசாத்

Unknown said...

என் சிந்தனையின் தூரம் அவ்வளவுதான் பிரசாத். உங்கள் சிந்தனையை எழுதினால் ஆர்வமுடன் வாசிப்பேன்

ஜெயபாரதன் said...

புகாரி,

/// மரணம் உயிர்கள் மீது காதல் கொண்டுள்ளது என்பதைக் கூறுவதே இக்கவிதைகள். ///

இந்த வசனக் கருத்துள்ள வரிகள் எங்கே உள்ளன ? கவிதைகள் அவ்விதம் தொனிக்க வில்லையே !

மரணம் உயிர்கள் மீது காதல் கொண்டுள்ளது என்பதற்கு உதாரணங்கள் கூறுங்கள்.

வாழ்வுச் சமன்பாடு

உடல் + உயிர் = பிறப்பு
உடல் = பிறப்பு - உயிர் = இறப்பு

மரணம் உயிர்க்கு எதிர்ப்பு

சி. ஜெயபாரதன்

Unknown said...

ஜெயபாரதன்,

என் தலைப்பைப் பாருங்கள்: மரணம் உன்னைக் காதலிக்கிறது

இதற்கு மாற்றாக எங்கேனும் நான் எழுதி இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கவனிக்கிறேன்

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

மரணம் உயிரை அல்லவா காதலிக்கிறது என்று உங்கள் வசனம் கூறுகிறது

சாந்தி said...

//மரணத்தைத் தழுவும்
மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?//



அதே..

Unknown said...

//

மரணத்தைத் தழுவும்
மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?



அதே..
//

பிறப்பும் அந்த உயிரின் கையில் இல்லை
இறப்பும் அந்த உயிரின் கையில் இல்லை

குருதேவ் said...

//எத்தனை அணையிட்டு
பாதுகாத்து வைத்திருந்தாலும்
நீரெல்லாம்
கடலையே சேரும்
நீரில் பெரியது
கடல்
நிம்மதியில் பெரியது
மரணம்//


அணையென்பதற் கிங்கிருபொருளுண்டு
ஆவலிற்தழுவுத லென்பதுமொன்று
கணையெனப்பாயுங் காட்டாறதனை
கட்டியிருத்துவதே யின்னொன்று
துணையெனக் தழுவிடும் தூலவுடல்களும்
துகளெனப் பொடிந்திட வருவதுமரணம்
இணைபெரு மதகுகள் இசைவுடன் திறப்பின்
ஈங்குறு நதியெல்லாம் கடல்தனிற் சரணம்

குருமூர்த்தி

பூங்குழலி said...

//மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?

பிறந்த பிறகு
இறப்பை நோக்கிக்

காதல் புரிய வேண்டும் //

நன்றாக கேட்டீர்கள் ஜேபி...


உண்மைதான் புகாரி ...இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் மரணத்தை நாட வேண்டும் என்பது போல் உள்ளன

Unknown said...

பூங்குழலி,

//மரணத்தைத் தழுவும்
மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?

பிறந்த பிறகு
இறப்பை நோக்கிக்

காதல் புரிய வேண்டும்

நன்றாக கேட்டீர்கள் ஜேபி...//

பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும். பிறப்பும் இறப்பும் உங்கள் கையில் இல்லை. மரணம்தான் உங்கள் மீது காதல் கொண்டுள்ளது என்று கவிதைகள் சொல்கின்றன. நீங்கள் மரணத்தை நேசிப்பது உங்கள் கையில். மரணத்தை நேசிக்கிறேன் என்று வலிய சென்று உயிரை மாய்ப்பது மரணம் அல்ல. அது ஒரு கருச்சிதைவு.


// உண்மைதான் புகாரி ...இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் மரணத்தை நாட வேண்டும் என்பது போல் உள்ளன //


கவிதையையும் அதன் வ்ரிகளையும் சுட்டிக்காட்டினால் விளக்கம் தருவேன் பூங்குழலி

அன்புடன் புகாரி

சிவா said...

மிகவும் அருமை.. முற்றிலும் உண்மை ஆசான்

சிவா said...

நிம்மதியில் பெரியது மரணம் .. இது தான் எனது கண்ணோட்டமும் ...

பிரசாத் said...

பிறப்புக்கு முன் எங்கிருந்தோம் தெரியாது
இறப்புக்கு பின் எங்கிருப்போம் தெரியாது
பிறப்புக்கு முன் நிம்மதி என்றால்
இல்லாத ஒன்றின் கற்பனை ஊற்று
இறப்புக்கு பின் நிம்மதி என்றால்
தெரியாத ஒன்றின் தெளிவற்ற பேச்சு
வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது
அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...

Unknown said...

பிரசாத்

//பிறப்புக்கு முன் எங்கிருந்தோம் தெரியாது
இறப்புக்கு பின் எங்கிருப்போம் தெரியாது
பிறப்புக்கு முன் நிம்மதி என்றால்
இல்லாத ஒன்றின் கற்பனை ஊற்று
இறப்புக்கு பின் நிம்மதி என்றால்
தெரியாத ஒன்றின் தெளிவற்ற பேச்சு//


இந்தத் தெளிவின்மையைத் தெளிவு படுத்தவே என் இந்தக் கவிதைத் தொடர் பிரசாத். நான் உணர்ந்ததை எழுதுகிறேன். நீங்கள் முழுவதும் ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அந்த திசையில் உங்கள் சிந்தனையைச் செலுத்தினால் என்னோடு நீங்கள் உடன்படுவீர்கள்.

//வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது//

அதை வேண்டாம் என்று என் கவிதைகள் சொல்லவில்லையே பிரசாத்


//அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...//

தாராளமாகச் செய்யுங்கள் பிரசாத். உங்களை தடை செய்வது யார்? பூரண நிம்மதிமட்டும் மரணத்தில் மட்டும்தான். மற்றவை நிலையானவை அல்ல

அன்புடன் புகாரி

சாந்தி said...

//அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...//



அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள் பிரசாத்..நம்மால் ஒரு அன்னை தெரசாவாக உருவாக முடியாமல், நாமே நம்மை சிறுமைப்படுத்திக்கொள்கிறோம்தான்...

Unknown said...

அன்பின் சாந்தி,

நேரடியாய் உங்களிடம் ஒரு கேள்வி. இந்த நாள் இந்த நிமிடம் நீங்கள் பூரண நிம்மதியில் இருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அது நீங்கள் மரணம் அடையும் வரை நீடித்திருக்கும் என்று நம்புகின்றீர்களா?

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

கடவுள் மனிதனைப் படைத்ததில்
காரணம் உள்ளது !
என்னைப் பெற்ற அன்னைக்கு
என்ன பதில் சொல்ல ?
என்னை ஏற்றுக் கொண்ட
இந்த உலகுக்கு
என்ன விடை சொல்ல ?
பொறுப்பற்று விருப்பற்றுச்
சாம்பலாய்
அமைதி பெறச்
சமாதிக்குப் போவதா ?
பிறவிப் பெருங் கடலில்
அலைகளை எதிர்த்து
நீச்சல் புரியாமல்
மூச்சை நிறுத்துவதா
முற்போக்கு ?
அன்னை தெராஸாவைப் பார் !
மரணக் கூண்டில் கண்மூடி
ஒளிந்து கொள்ளும்
நிம்மதிதான்
உன் குறிக்கோளா ?
முதற் புள்ளி வைக்கும் முன்னே
முற்றுப் புள்ளியா ?


சி. ஜெயபாரதன்

Unknown said...

//கடவுள் மனிதனைப் படைத்ததில்
காரணம் உள்ளது !
என்னைப் பெற்ற அன்னைக்கு
என்ன பதில் சொல்ல ?
என்னை ஏற்றுக் கொண்ட
இந்த உலகுக்கு
என்ன விடை சொல்ல ?
பொறுப்பற்று விருப்பற்றுச்
சாம்பலாய்
அமைதி பெறச்
சமாதிக்குப் போவதா ?//

இங்கேயே சாகா வரம் பெற்று வாழ்வீர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது ஜெயபாரதன்? பிறந்தவரெல்லாம் சாகத்தான் வேண்டும். அதில் துளியும் மாற்றமில்லை


//பிறவிப் பெருங் கடலில்
அலைகளை எதிர்த்து
நீச்சல் புரியாமல்
மூச்சை நிறுத்துவதா
முற்போக்கு ? //

உங்களை யார் எதிர் நீச்ச்சம் போட வேண்டாம் என்ற்து? உங்களை யார் தானே வலியச் சென்று மூச்சை நிறுத்திக்கொள்ளச் சொன்னது? ஏன் தவறாகப் புரிந்துகொண்டு மேலும் மேலும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்? எனக்கு விளங்கவில்லை.

குருதேவ் said...

//மரணத்தைத் தழுவும்
மனிதர் முதலில் ஏன்
ஜெனிக்க வேண்டும் ?//

பிறப்பும் இறப்பும் மனிதர்கள் கையில் இல்லை. இருக்காது.


//பிறந்த பிறகு
இறப்பை நோக்கிக்
காதல் புரிய வேண்டும் ? //

பிறந்தவன் இறப்பான்! இறப்பைத் தடுத்தல் இயலாது. ஆயின் அதைத் தேடிக் செல்லுதலும், அது நம்மை தேடி வருகையில் துன்பப்படுவதும் குழந்தைத்தனம்.


//அமைதி அளிக்குமா
சமாதி ?//

காலம் பதில் சொல்லட்டும்.

ஜெயபாரதன் said...

/// பிறந்தவரெல்லாம் சாகத்தான் வேண்டும். அதில் துளியும் மாற்றமில்லை ///

பின் ஏன் மரணம் காதல் கொள்ள வேண்டும் ?

ஜெயபாரதன்

Unknown said...

அது மரணத்தின் இயல்பு

Unknown said...

அப்போது கவிஞன் வேடிக்கைக்காரனா ?

இறப்பு உயிரற்றது. முடம் அது. சமாதிச் சாம்பல் எப்படிக் காதல் கொள்வதாகக் கற்பனை செய்வது ?

/// அது கவிஞனின் உரிமை ///

அப்படியானால் உதாரணங்கள் இல்லையா ?

/// கடவுள் இருக்கிறார் என்பது வேடிக்கை இல்லையா? ///

இல்லை

கடவுள் வேடிக்கை புரிபவன். ஈதோ ஒரு திருவிளையாடல் !

பெண் கூந்தலில் இயற்கை வாசனை உள்ளெதெனப் பாடிய சிவனையும் எதிர்த்தான் நக்கீரன். விடை சொல்லத் தெரியாத சிவன் சினந்து நெற்றிக்
கண்ணைத் திறந்தான்.

Unknown said...

//அப்போது கவிஞன் வேடிக்கைக்காரனா ?//


உங்களுக்கு அவன் வேடிக்கை காட்டுவதாக நினைத்தால் அவன் வேடிக்கைகாரன். எல்லாமும் உங்களிடமிருந்துதானே

//அப்படியானால் உதாரணங்கள் இல்லையா //


கவிதைகளில் தரப்பட்டவைதான் உதாரணங்கள்.



/// கடவுள் இருக்கிறார் என்பது வேடிக்கை இல்லையா?

இல்லை//

என்றால் மரணமும் வேடிக்கை இல்லை. கடவுளாவது காட்சி தந்ததே இல்லை. மரணம் தன்னை காட்டிக்கொண்டேதான் இருக்கிற்து ஒவ்வொரு நொடியும்.

// கடவுள் வேடிக்கை புரிபவன். ஈதோ ஒரு திருவிளையாடல் !

பெண் கூந்தலில் இயற்கை வாசனை உள்ளெதெனப் பாடிய சிவனையும் எதிர்த்தான் நக்கீரன். விடை சொல்லத் தெரியாத சிவன் சினந்து நெற்றிக்
கண்ணைத் திறந்தான்.///

ஹாஹாஹா

சிவா said...

ஏன் கற்பனை செய்ய கூடாது? கவிதையின் அழகே கற்பனை தானே!


//உயிருள்ளவையே காதல் புரிய முடியும் !!! மரணம் காதல் புரிகிறது
என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது !!!//

ஒரு உயிரும் மற்றொரு உயிரும் இணைவது - ரசாயன மாற்றம்
அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது - பெளதீகக் மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள் :)

வாணி said...

இந்த ஒப்பீடு அருமையா இருக்கு...
எனக்கு எப்போதும் கடலைப் பார்த்தால் மரணம்தான் நினைவுக்கு வரும்...நீங்களும்
அதையே எழுதியிருப்பது ஆச்சிரியமாய் இருக்கு...:)

அன்புடன்...
வாணி

சாந்தி said...

//அன்பின் சாந்தி,

நேரடியாய் உங்களிடம் ஒரு கேள்வி. இந்த நாள் இந்த நிமிடம் நீங்கள் பூரண
நிம்மதியில் இருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அது நீங்கள் மரணம் அடையும் வரை
நீடித்திருக்கும் என்று நம்புகின்றீர்களா?//


ஆசான் , பூரண நிம்மதி இல்லையென சொல்லலாம்..

ஆனால் என்னைவிட தாங்க முடியாத கஷ்டத்தில் இருப்பவரை பார்க்கும்போது அடடா
நான் குறை சொல்வதே என்னை வெட்கச்செய்யுது..

கவலை கஷ்டம் இருக்குதுதான். ஆனால் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களும் பல..
அதில் நிறைவு கொள்கிறேனே..போதும் என்ற மனம் பெற்றுக்கொண்டேன்..குறை
பார்க்காது நிறை பார்க்க பழகிக்கொண்டேன்.. அவ்வளவே..

மரணத்தை , கடவுளை பற்றிய எந்த பயமும் எண்ணமும் எனக்கில்லை..

கண்முன் காண்கிறவரிடத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வதே எனக்கு நிம்மதி..

Unknown said...

//ஆசான் , பூரண நிம்மதி இல்லையென சொல்லலாம்..//

அவ்வளவுதான் சாந்தி. நான் அதைத்தான் என் கவிதையில் சொல்லி இருக்கிறேன்


//ஆனால் என்னைவிட தாங்க முடியாத கஷ்டத்தில் இருப்பவரை பார்க்கும்போது அடடா
நான் குறை சொல்வதே என்னை வெட்கச்செய்யுது..//


தாராளமா வெட்கப்படுங்கள். என் கவிதை அதைத் தடுக்கவில்லையே


//கவலை கஷ்டம் இருக்குதுதான். ஆனால் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களும் பல..
அதில் நிறைவு கொள்கிறேனே..போதும் என்ற மனம் பெற்றுக்கொண்டேன்..குறை
பார்க்காது நிறை பார்க்க பழகிக்கொண்டேன்.. அவ்வளவே..//

தாராளமாக பழகிக்கொள்ளுங்கள். அது மிகவும் அவசியமும் கூட. இதையெல்லாம் செய்யக்கூடாது என்று என் கவிதை சொல்கிறதா சாந்தி?



//மரணத்தை , கடவுளை பற்றிய எந்த பயமும் எண்ணமும் எனக்கில்லை..//


அதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கவிதைத் தொடர்.


//கண்முன் காண்கிறவரிடத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வதே எனக்கு நிம்மதி..//

நிச்சயமாக. அதை என் கவிதை தடுக்கவில்லை. வரவேற்கவே செய்கிறது. உங்கள் நிம்மதிக்காக நீங்கள் எதையும் செய்யுங்கள்.

அன்புடன் புகாரி

பிரசாத் said...

//இந்தத் தெளிவின்மையைத் தெளிவு படுத்தவே என் இந்தக் கவிதைத் தொடர் பிரசாத்.
நான் உணர்ந்ததை எழுதுகிறேன். நீங்கள் முழுவதும் ஏற்க வேண்டும் என்று கட்டாயம்
இல்லை. அந்த திசையில் உங்கள் சிந்தனையைச் செலுத்தினால் என்னோடு நீங்கள்
உடன்படுவீர்கள்.//


தெளிவுபடுத்துவதிலும், உணர்ந்ததை எழுதுவதும் தவறில்லை. உங்களுடைய இந்த
கவிதை தொடரின் பிற கவிதைகளை நான் குறை கூறவும் இல்லை. ஏனென்றால் நான்
உங்களுடைய சிந்தனையோடு உடன்பட்டதால்.

// வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது

அதை வேண்டாம் என்று என் கவிதைகள் சொல்லவில்லையே பிரசாத்//


வேண்டாமென தங்கள் கவிதைகள் சொல்லவில்லை தான். ஆனால் தாங்கள் அதைப் பற்றி
ஒரு வார்த்தையும் கூறவில்லையே.


// அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...

தாராளமாகச் செய்யுங்கள் பிரசாத். உங்களை தடை செய்வது யார்? பூரண நிம்மதிமட்டும்
மரணத்தில் மட்டும்தான். மற்றவை நிலையானவை அல்ல. சில காலம் பூரணம் என்பதுபோல்
பிரமையைக் காட்டும் அவ்வளவுதான்//


பூரண நிம்மதி மரணத்தில் மட்டும்தான் என கூறும் தாங்கள் அதை அனுபவிக்க
இயலுமா... நான் எப்பொழுதும் நிம்மதியாகவே உள்ளேன். அது நீங்கள் சொல்லும்
பூரணம் என்னும் பிரமை அல்ல. வாழ்க்கையை நான் எடுத்து கொண்ட விதம்.
அனைவரும் பூரண நிம்மதியாய் என் போல இருப்பார்களா எனக்கு தெரியாது. ஆனால்
அனுபவிக்க இயலாத உங்கள் மரணத்தின் பூரண நிம்மதியைக் காட்டிலும் வாழும்
போது கிடைக்கும் நிம்மதி பெரிது என்கிறேன் நான்.

Unknown said...

//தெளிவுபடுத்துவதிலும், உணர்ந்ததை எழுதுவதும் தவறில்லை. உங்களுடைய இந்த
கவிதை தொடரின் பிற கவிதைகளை நான் குறை கூறவும் இல்லை. ஏனென்றால் நான்
உங்களுடைய சிந்தனையோடு உடன்பட்டதால்.//

நன்றி பிரசாத்

//வேண்டாமென தங்கள் கவிதைகள் சொல்லவில்லை தான். ஆனால் தாங்கள் அதைப் பற்றி
ஒரு வார்த்தையும் கூறவில்லையே.//

இதே தொடரில் இன்னொரு கவிதையில் தெளிவாகவே எழுதி இருக்கிறேன் பாருங்கள்

வெளிச்சம் இருளைக் கண்டு
பயப்படுவதைப்போல
மரணத்தைக்கண்டு மனிதன்
பயப்படத் தேவையில்லை
இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்து வாழ்வதே வாழ்க்கை
எந்தச் சுழலிலும்
ஏதேதோ காரணங்கள் கூறி
சிக்கிச் சிதையாமல்
எக்கணமும் சுகம் தேடும்
இதயமே பெறவேண்டும்
மரணத்திற்குப்பின்
நரகம் என்ற ஒன்றே கிடையாது
நிரந்தர நிம்மதி என்ற
சொர்க்கம் மட்டுமே உண்டு


//பூரண நிம்மதி மரணத்தில் மட்டும்தான் என கூறும் தாங்கள் அதை அனுபவிக்க
இயலுமா... //

கடவுளை நம்புகின்றீர்களா? எப்படி அனுபவித்து உணர்ந்தீர்கள் அவனை?

//நான் எப்பொழுதும் நிம்மதியாகவே உள்ளேன். அது நீங்கள் சொல்லும்
பூரணம் என்னும் பிரமை அல்ல. //

ஆக பூரணம் என்பது வாழ்வில் பிரமையாகவே தெரிகிறது உங்களுக்கு

//வாழ்க்கையை நான் எடுத்து கொண்ட விதம்.
அனைவரும் பூரண நிம்மதியாய் என் போல இருப்பார்களா எனக்கு தெரியாது. ஆனால்
அனுபவிக்க இயலாத உங்கள் மரணத்தின் பூரண நிம்மதியைக் காட்டிலும் வாழும்
போது கிடைக்கும் நிம்மதி பெரிது என்கிறேன் நான்.//

தாராளமாக நீங்கள் வாழும்போது கிடைக்கும் நிம்மதியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளலாம். அதில் எந்தப் பிழையும் இல்லை. அது உங்கள் விருப்பம். என் கருத்துப்படி நான் கண்ட உலகம் படி நான் அறிந்த அனுபவங்களின் படி நான் சந்தித்த வாழ்க்கையின்படி மரணமே பூரண நிம்மதி. அதைச் சொல்லும் உரிமை எனக்கு உள்ளது.

நீங்கள் பூரண நிம்மதியில் இருக்கிறேன் என்கிறீர்கள். நான் மறுப்பதால் ஒன்றும் ஆகிவிடாது. அது நிலையாக இப்படியே இருக்குமா என்றும் நீங்கள் சொல்லிவிட்டால் அதையும் கேட்டுக்கொள்வேன். நீக்கள் உண்மையையே பேசுகிறீர்கள் என்றும் நம்புவேன்.

அன்புடன் புகாரி

ஆயிஷா said...

அத்தனையும் உண்மை ஜேபீ ஐயா.
மரணத்தில் நிம்மதி இருக்கலாம். இல்லையென்பதில்லை. எனினும் அந்த நிம்மதிக்காக இந்த உலகில் நாம் எதனை சாதித்துள்ளோம் என்பது முக்கியமல்லவா? ஏதோ நமக்கு வந்த வேதனையை, சோதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லையே என்பதற்காக மரணத்தை நாடுவது பொருத்தமானதா ஆசான்? இவ்வுலகில் நம் கண்ணால் கண்டு கொள்ள முடியாத அளவு கஸ்டங்களை துன்பங்களை மனித உயிர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அத்துன்பங்களைக் கானும் போது நம் வேதனை நமக்குத் தூசு. அது காதலாக இருந்தாலும் கூட.
துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் துயர் துடைக்க வேண்டாம். ஒரு உயிரின் துயர் துடைத்தாலே அது நமக்குப் பெரிய நிம்மதி அல்லவா?
நாம் இந்த உலகத்தில் எதை நல்ல படியாக சாதித்துள்ளோம் மரணத்தில் நிம்மதி காண?
அன்புடன் ஆயிஷா

Unknown said...

இதை மட்டும்தன் நான் என் கவிதைகளில் அழுத்தமாகச் சொல்கிறேன். நீங்களும் ஏற்கிறீர்கள்.


//எனினும் அந்த நிம்மதிக்காக இந்த உலகில் நாம் எதனை சாதித்துள்ளோம் என்பது முக்கியமல்லவா? ஏதோ நமக்கு வந்த வேதனையை, சோதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லையே என்பதற்காக மரணத்தை நாடுவது பொருத்தமானதா ஆசான்? //

உங்களை நான் மரணத்தை நாடச் சொல்லவில்லையே. அப்படி நான் நாடச் சொல்வதாய் அமைந்த ஒரு கவிதையை இங்கே இடுங்கள் பார்க்கலாம்.

//இவ்வுலகில் நம் கண்ணால் கண்டு கொள்ள முடியாத அளவு கஸ்டங்களை துன்பங்களை மனித உயிர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அத்துன்பங்களைக் கானும் போது நம் வேதனை நமக்குத் தூசு. அது காதலாக இருந்தாலும் கூட. //

உங்கள் மன நிம்மதி எதில் கிடைக்கிறதோ அதை தாராளமாக அனுபவியுங்கள். நான் தடுக்கவில்லையே!

//துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் துயர் துடைக்க வேண்டாம். ஒரு உயிரின் துயர் துடைத்தாலே அது நமக்குப் பெரிய நிம்மதி அல்லவா?//

அப்படித்தான் நான் இந்த அன்புடன் குழுமத்தையே தொடங்கிவைத்தேன் ஆயிஷா

இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே

//நாம் இந்த உலகத்தில் எதை நல்ல படியாக சாதித்துள்ளோம் மரணத்தில் நிம்மதி காண? //

நீங்கள் எதுவுமே சாதிக்கவில்லை என்றாலும் உங்களுக்கு நிம்மதி உறுதி மரணத்தில்

அன்புடன் புகாரி

சீனா said...

மரணம் - இதனைப்பற்றி ஒரு நீண்ட விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

நாம் மரணத்தைக் காதலிக்க - விரும்பக் கூடாதென ஒரு அணி

மரணம் நம்மைக் காதலிக்கிறதென ஒரு அணி

இரு அணிகளுமே தங்கள் வாதத்தினைத் திறமையாக வைத்துள்ளனர்.

மரணம் என்பது தவிர்க்க இயலாதது
எப்பொழுது வரும் - யாருக்கும் தெரியாதது
மரணத்தினைப் பற்றிய பயம் யாருக்கும் பொதுவாக இல்லை
பயப்பட வேண்டுமா - அதுவும் தெரியவில்லை
வாழ்க்கையினை அனுபவித்து விட்டு
வாழுகையில் சாதித்து விட்டு
நலல செயல்களைச் செய்துவிட்டு
அல்லாதாவனையையும் அறிந்து
புறந்தள்ள வேண்டியதைப் புறந்தள்ளி
நல்வாழ்க்கை ( ??? ) வாழ்ந்து
மரணத்தினை வரும்பொழுது
ஏற்கலாமே

அதனைக் காதலிக்கவோ அல்லது அதனால் காதலிக்கப்படவோ வேண்டுமா
மரணத்தைக் காதலிக்கவோ -அதனால் காதலிக்கப்படுவதோ மனம் ஏற்க மறுக்கிறதே

காதல் என்னும் இன்பமூட்டும் சொல்லை மரணம் என்னும் துயரச்சொல்லுடன் ( நாம் தத்துவ வாதிகள் அல்ல - சாதாரண மனிதர்கள்) இணைத்துப் பேச மனம் ஒப்பவில்லையே

பொதுவாக காதலில் தோல்வி அடைந்தவர்கள் மரணத்தினைக் காதலிப்பார்கள் எனவும் ஒரு கருத்துண்டு.

முடிவாக - அவரவர்கள் அவரவரது சிந்தனையின் படி நடப்போம்

கவிதைகளை - அனைத்துக் கவிதைகளையும் மிகவும் ரசித்தேன்

புகாரி - ஜெயபாரதன் - ஹரண் - குருமூர்த்தி - பிரசாத் - அனைவரின் க்விதைகளும் அருமை - சொல்லாடல் - சிந்தனை அருமை அருமை

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

Unknown said...

அன்பின் சீனா,

நல்லதொரு மடல் இட்டிருக்கிறீர்கள். நன்றி சீனா. ஒரு விசயத்தைப் பார்க்கும்போது இப்படித்தான் நடுவில் நின்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது வரும் கருத்துக்களை கேள்வியாக முன்வைக்க வேண்டும். சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.

----------------
மரணம் என்பது தவிர்க்க இயலாதது
எப்பொழுது வரும் - யாருக்கும் தெரியாதது
மரணத்தினைப் பற்றிய பயம் யாருக்கும் பொதுவாக இல்லை
பயப்பட வேண்டுமா - அதுவும் தெரியவில்லை
----------------

இதன் அடிப்படையில்தான் என் கவிதைகள் வளர்கின்றன. மரணம் எப்படியானது அதைக் கண்டு பயப்பட வேண்டுமா வேண்டாமா? மரணம் எப்படி நிகழவேண்டும் என்றெல்லாம் நான் எழுதிச் செல்லுகின்றேன். ஒரு விசயம் நம் சிந்தனைக் கூடத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கும்போது அது பற்றிய சிந்தனை நின்றுபோய்விடுவதில்லை. அனுமானங்களாய் வெடிக்கின்றன. மரணத்தை அது வரும்முன் நாம் உணரப்பார்க்கிறோம்.

மரணம் என்றதுமே சிலருக்கு ஒரே இருட்டாய்த் தெரியும். மரணம் இருட்டா? யார் சொன்னது அப்படி?

மரணம் என்றதுமே வேறு சிலருக்கு கொடுரமான முகத்துடன் தூக்குக் கயிரை கையில் வைத்துக்கொண்டு மனிதர்களை விரட்டிக் கொல்லும் அரக்கன் உருவம் ஞாபகம் வருகிறது. மரணம் அப்படியொரு கொடூரமான அரக்கனா? யார் சொன்னது அப்படி?

மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது. அமைதி நிலவுகிறது. தாயின் மடி ஞாபகம் வருகிறது. அள்ளியணைக்கும் கரங்கள் நீள்கின்றன. மரணம் நிம்மதியா? யார் சொன்னது அப்படி?

நான் சொல்கிறேன். பலரும் மரணத்தைப்பற்றி இதுவரை சொன்னதெல்லாம் எப்படி அனுமானங்களோ அப்படியேதான் இதுவும். இதுவரை மரணத்தை விரோதியாகவே பார்த்த கண்களுக்கு மரணத்தைத் தாயாய் நினைக்க மனம் வரவில்லை. ஆனால் மரணம் தாய்தான்.

காரணம்: எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை. மரணம் துயரங்களின் முற்றுப்புள்ளி. எனவே நான் கூறும் அனுமானத்தில் உண்மை அதிகம் இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். தேவை சிறிது நேர சிந்தனைதான்.

ஓர் ஆத்திகன் சொல்கிறான். இறந்ததும் நான் கடவுளிடம் சென்றுவிடுவேன் என்று. நம்மை நம் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் மரணம் ஒரு கொடியதாக இருக்க முடியுமா?

ஒரு நாத்திகன் சொல்கிறான். இறந்ததும் நான் வேதியல் பொருளாகிவிடுவேன் என்று. நம் துயரங்களை எல்லாம் தீர்த்து நம்மை வேறு நிலைக்குக் கொண்டு சேர்க்கும் மரனம் கொடியதாக இருக்க முடியுமா?

----------------
வாழ்க்கையினை அனுபவித்து விட்டு
வாழுகையில் சாதித்து விட்டு
நலல செயல்களைச் செய்துவிட்டு
அல்லாதாவனையையும் அறிந்து
புறந்தள்ள வேண்டியதைப் புறந்தள்ளி
நல்வாழ்க்கை ( ??? ) வாழ்ந்து
மரணத்தினை வரும்பொழுது
ஏற்கலாமே
-------------------

அப்படித்தான் நானும் சொல்கிறேன் சீனா

---------------
அதனைக் காதலிக்கவோ அல்லது அதனால் காதலிக்கப்படவோ வேண்டுமா
மரணத்தைக் காதலிக்கவோ -அதனால் காதலிக்கப்படுவதோ மனம் ஏற்க மறுக்கிறதே
--------------

நாம் மரணத்தைக் காதலிப்பது நம் கையில்தான் உள்ளது. ஆனால் மரணம் நம்மைக் காதலிப்பது நம் கையில் இல்லை. ஒருதலைக் காதலின் உச்சம் மரணத்தினுடையது. ஆனால் அவ்வப்போது மனிதன் தாளார துயர் வரும்போது மரணத்தைக் காதலிக்கவே செய்கிறான். வாழ்நாளில் ஒரே ஒரு நிமிடமாவது மரணத்தைக் காதலிக்காத ஒரு மனிதன் இருக்கிறான் என்று எவரேனும் கூறமுடியுமா? அப்படி ஒருவன் இருந்தால் அவன் இன்னமும் வாழ்க்கை அனுபவம் எதையுமே பெறவில்லை என்று பொருள்.

மரணத்தைக் காதலிக்கிறேன் நான் என்றால் என் பெற்றோர்களோ, என் நண்பர்களோ என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். ஏன்? நான் தற்கொலை செய்துகொள்ளம் எண்ணம் கொண்டுள்ளேனோ என்ற ஐயம்தான் காரணம்.

நான் என் கவிதைத் தொடரில் தற்கொலையை ஆதரிக்கவில்லை. அதைக் கருச்சிதைவு என்றும் குறைப்பிரசவம் என்றும் கூறிவிட்டேன். என் சிந்தனை அதைத்தாண்டி செல்லவில்லை. அப்படி கருச்சிதைவு அடைந்தவர்களுக்கு பூரண நிம்மதி கிடைக்குமா என்று நான் கருத்துச் சொல்லவே இல்லை. என் சிந்தனை அங்கே தடைபட்டு நிற்கிறது. ஒருநாள் அதையும் எழுதக்கூடும் நான். ஏனெனில் தடைபட்டு நின்றாலும் என் சிந்தனை அதை எட்டிப்பிடிக்கவே காத்திருக்கிறது.

அன்புடன் புகாரி

ஆயிஷா said...

மரணம் எல்லோருக்கும் பொதுவானது....எப்ப வரும் என்பது தெரியாதது. அது எப்பவும் வரலாம். என்றாலும் அது துக்கம் தருவது..... இதயம் மீறும் எண்ணங்களால் எழுந்து பறப்போம். இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போம் எனும் உங்களின் ஆழந்த கருத்துக்கிடையில் இந்த துக்கமான சிந்தனைகளை கிளறிக் கொள்வானேன்?

ஆசான் உங்களிடம் நாங்கள் முட்டி மோதிக் கொள்வதெல்லாம்...நீங்கள் துக்கம் தரக்கூடியவாறு எழுத வேண்டாம் என்பதற்காக மட்டுமே.
அன்புடன் ஆயிஷா

Unknown said...

நன்றி ஆயிஷா,

மரணம் பற்றி சிந்திப்பதும் அறிந்துகொள்வதும் மனிதனுக்கு அவசியமான ஒன்று. அதை துக்கம் என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்? இந்த உலகிலிருந்து நாம் துண்டிக்கப்படுகிறோம் என்றுதானே?

நாம் பிறந்ததும் ஏன் அழுதோம்? இந்த உலகில் வந்து பிறந்துவிட்டோமே என்றா?

யாருக்குச் சரியான விடைதெரியும்?

ஆனால் நாம் நம் சிந்தனையாலும் அனுமானங்களாலும் விடைதேடலாம். அது சரியாகவும் ஆகலாம் தவறாகவும் ஆகலாம்.

எதுவானாலும் மரணம் பற்றிய மாற்று கண்ணோட்டத்தை அறிந்துகொள்வது அவசியம்தானே?

மரணம் கடவுளைப் போன்றது ஆயிஷா. சொல்லப்போனால், கடவுளைவிட கருணையானதாய் நான் மரணத்தைப் பார்க்கிறேன்.


அன்புடன் புகாரி

துரை said...

அன்பின் ஆசானே

இருட்டைப் பார்த்து நான் பயந்தது இல்லை இதுவரை. ( நிம்மதியா இருந்தேன் )

ஆனால் , இருட்டுக்குளிருந்து ‘யாரோ உன்னைப் பாத்துக்கிட்டே இருக்காரு” என்ற வார்த்தையை தொடர்ந்து கேட்ட பிறகு

இப்போ இருட்டைப் பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு ( நிம்மதி போச்சு)

--பிழை எங்கே ??

சொல்லி வார்க்கும் நெய்யிலா?
அள்ளிச் சேர்க்கும் வாயிலா ?

?

Unknown said...

அன்பின் துரை,

நீங்கள் மரணம் கண்டு பயப்படலாகாது. அது இருட்டுக்குள் இருக்கும் பேய் அல்ல. எப்போதும் உங்களைக் காதலிக்கும் தாய். உங்கள் உயிரை அது தட்டிப்பறிக்காது. மிகுந்த கருணை உடையது மரணம். இந்தக் கவிதையைப் பாருங்கள்:


கருணையே வடிவானது
மரணம்
கருவான நொடிமுதலாய்
காதலிக்கிறது அது உன்னை
ஆனபோதிலும்
ஒருபோதும் தட்டிப்பறித்தெடுக்க
எண்ணுவதே இல்லை
அது உன் உயிரை
தானே வரும் நாளுக்காய்க்
காதலோடு காத்திருக்கும்
உயர் காதல் கொண்டது
மரணம்
உன் தற்கொலை முயற்சிகள்
தோல்வியில் தொங்கிப்போவதற்கு
கருணைமிகு மரணமே காரணம்
கனிந்து நீ நிறைந்தவனாய்
வரும் நாளல்லாது
உடைந்து நீ
ஓடிவரத் துடிக்கும் நாளில்
உன்னை ஏற்காமல்
அது கதறியழும்
கருணையே வடிவானது
மரணம்

அன்புடன் புகாரி

ஹரண் said...

அனுபவத்திலிருந்து வரும் கருத்துக்களைக்கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றில்லை. ஒரே நிகழ்சி ஒவ்வொருவருக்கும் ஓரொரு அனுபவத்தைக் கொடுக்கும். இக்கருத்தோ நண்பர் புகாரியின் ‘கணிப்பு’. சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது எந்த வகையிலும் நிரூபிக்க முடியாத ஒரு கருத்து. காரணம் கண்டவர் விண்டிலர்.


அன்புடன்
ஹரன்

Unknown said...

மிகவும் சரி ஹரன்,

மரணத்தை கொடியதாக வர்ணித்ததும் அப்படித்தான். மரணம் எடுக்கவில்லை கொடுக்கிறது என்ன கண்ணோட்டத்தையும் உணர்ந்து பார்க்கலாம். மரணத்தை நாம் காதலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் மரணம் நாம் போய்ச்சேர வேண்டிய ஒரு கடல் என்பதில் மாற்றமே இல்லை.

மிக நல்லவனாக வாழ்ந்த ஒரு ஒருவனும் கெட்டவனாக வாழ்ந்த ஒருவனும் நிச்சயம் மரணத்தைச் சந்தித்தே ஆகவேண்டும். அந்த நினைப்பு கெட்டவனை நல்லவனாக்கக் கூடும்.

மரணம் பற்றிய நல்ல சிந்தனை மனிதனை நல்லவனாக உருவாக்கும். எல்லோரும் வாழட்டும் என்று பெரிய மனதோடு விட்டுக்கொடுக்கச் செய்யும். ஏனெனில் எல்லோரும் மரணத்தின் மடிக்குத்தான் போகிறோம், எனவே மண்ணில் நாம் இழப்பது எதுவுமில்லை. பிறருக்குக் கொடுப்பது நமக்கு இழப்பில்லை. மரணம் தரும் பெரிய நிம்மதியை வாழும்போதே நாம் அடைவோம் என்று உணரச் செய்யும்.

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

மரணம் புனிதமானது என்றால் மரணம் கொடுத்தவனை ஏன் தூக்கில் போட வேண்டும் ? கடவுள்
யாரென்று தெரியாமல், கண்ணாலும் காணாமல் அதைப் போன்றது மரணம் என்பதில் பொருளில்லை.

வீட்டில் எல்லாரையும் கொன்று ஒருவன் கடவுளிடம் அனுப்புவதாய்க் கற்பனை செய்யலாமா ?

உலகம் அழியப் போகிறதென்று ஒரு மதக்குரு இப்படித்தான் 500 (?) நஞ்சைக் கொடுத்துக் கொன்றான்.

நீங்கள் இப்படி மதக்குருவைப் போல் மரணக் குருவாக எழுதி வருவது விந்தையாக இருக்கிறது !!!


சி. ஜெயபாரதன்.

Unknown said...

//மரணம் புனிதமானது என்றால் மரணம் கொடுத்தவனை ஏன் தூக்கில் போட வேண்டும் ? //

மரணத்தை மனிதனால் கொடுக்க முடியாது. இதை ஒரு உதாரணத்துடன் சொல்வதென்றால். ஒரு கரு உருவானதும் அது பிறக்கும் நாளில் பிற்ந்தால்தான் அது பிறப்பு. ஒரு மருத்துவன் கத்தியை வைத்து கருவை அறுத்து எறிந்தால் அது மரணமில்லை. கொலை.


//உலகம் அழியப் போகிறதென்று ஒரு மதக்குரு இப்படித்தான் 500 (?) நஞ்சைக் கொடுத்துக் கொன்றான்.
நீங்கள் இப்படி மதக்குருவைப் போல் மரணக் குருவாக எழுதி வருவது விந்தையாக இருக்கிறது !!!//

நான் கொலை செய்வதையோ தற்கொலை செய்வதையோ ஆதரித்து எங்கும் எழுதி இருக்கிறேனா?

தானே நிகழும் மரணத்தைப் பற்றியே எழுதி வருகிறேன் ஜெயபாரதன்

துரை said...

சங்கடமான கேள்விதான் !

மிகமிக வேண்டப்பட்டவர் மரணத்திருக்கும் ( அது இயற்கை மரணம் என்றே எடுத்துக்கொள்ளுவோம் )
இடத்தில் நீங்கள்
உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கும் நீங்கள்

வருந்தி நிற்பீர்களா ?
அவர்குடும்பத்துக்கு வாழ்த்துச் சொல்வீர்களா ?

Unknown said...

மனித மனம் எப்படி வருந்தாமல் இருக்கும் துரை?

சாந்தி said...

இதுவரை மரணத்தை விரோதியாகவே பார்த்த
> கண்களுக்கு மரணத்தைத் தாயாய் நினைக்க மனம் வரவில்லை. ஆனால் மரணம் தாய்தான்.


:) தாயிடம் செல்ல நான் ஆசைப்படவா ?..


ஆனால்
> அவ்வப்போது மனிதன் தாளார துயர் வரும்போது மரணத்தைக் காதலிக்கவே செய்கிறான்.
> வாழ்நாளில் ஒரே ஒரு நிமிடமாவது மரணத்தைக் காதலிக்காத ஒரு மனிதன் இருக்கிறான்
> என்று எவரேனும் கூறமுடியுமா?


வாழ்வை வெறுப்பதால் மரணத்தை காதலிப்பதாய் எடுக்கலாமா?..

அவனுக்கு வழியே இல்லை என முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறானே தவிர, மரணத்தை
காதலிப்பதாய் , ஆர்வத்தோடு செல்வதாய் எப்படி எடுக்க முடியும்?..

Unknown said...

//தாயிடம் செல்ல நான் ஆசைப்படவா ?..//

தாராளமாக ஆசைப்படலாம்!
ஆனால் தாய் உங்களை ஏற்கப்போவது உங்களுக்கான உரிய நாளில் மட்டுமே!
தாய் கருச்சிதைவையோ குறைப்பிரசவத்தையோ விரும்புவாளா?

//வாழ்வை வெறுப்பதால் மரணத்தை காதலிப்பதாய் எடுக்கலாமா?..//

வேறெப்படி எடுப்பது?

//அவனுக்கு வழியே இல்லை என முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறானே தவிர, மரணத்தை
காதலிப்பதாய் , ஆர்வத்தோடு செல்வதாய் எப்படி எடுக்க முடியும்?..//

அது ஒரு மனோ நிலை. அது வராதவரை உணர்வது கடினம்தான்!

அதோடு அவன் முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறான் என்பதால் முடியப்போவதில்லை!

துரை said...

//என்றால் மரணத்திற்குப் பின் நமக்கு நிம்மதிதான் எஞ்சி இருக்கப் போகிறது. //

எல்லாம் துண்டிக்கப்படுகிறது என்றால் எல்லாம் தானே !
நிம்மதி மட்டும் எப்படி தொக்கி / தொடர்ந்து வருகிறது ???/
( அப்போ அது 100 - நிம்மதி = 99 % உண்மையா !)


//அதே சமயம் மண்ணில் உள்ள வாழ்வை நாம் இழக்கிறோம்.
அதை இழக்க எந்த உயிராவது சம்மதிக்குமா? //

இழந்தா நிம்மதிதானே
இழந்தா நிம்மதின்னா சம்மதிக்கணும் தானே !

//எனவே சொர்க்கத்தை மண்ணிலேயே காண்போம். எல்லோரும் வாழவும் நாமும் வாழவும் வாழ்வோம் என்ற சிந்தனையை மரணம் பற்றிய சரியான அறிதல் தரும். //

குழப்பமா இருக்கே இது !
[எனக்குத்தான் சரியாப் புரியலியோ ?]

Unknown said...

அன்பின் துரை,


// எல்லாம் துண்டிக்கப்படுகிறது என்றால் எல்லாம் தானே !
நிம்மதி மட்டும் எப்படி தொக்கி / தொடர்ந்து வருகிறது ???//

ஒரு நிலையிலிருந்து முழுவதும் துண்டிக்கப்பட்டு இன்னொரு நிலை மாறும்போது நமக்குக்

கிடைப்பது பூரண நிம்மதி.

உதாரணம்: பிறந்த குழந்தை பூரண நிம்மதியுடன் இருக்கிறது


// இழந்தா நிம்மதின்னா சம்மதிக்கணும் தானே !//

மனிதனுக்கு மனம் என்று ஒன்று உண்டு. அது எதையும் விட்டுப்பிரிய விரும்புவதே இல்லை.

பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் செத்துவிட்டால் எந்தத் தொல்லையும் நமக்கு இல்லை

என்று. ஆனால் ஒருக்காலும் சாகத் துணியாது. அதுவும் மரணத்துடனான ஒரு ஒப்பந்தமாக

இருக்கலாம். அந்த திசையில் நான் இன்னமும் சிந்திக்கவில்லை.

//எனவே சொர்க்கத்தை மண்ணிலேயே காண்போம். எல்லோரும் வாழவும் நாமும் வாழவும்

வாழ்வோம் என்ற சிந்தனையை மரணம் பற்றிய சரியான அறிதல் தரும்.

குழப்பமா இருக்கே இது !
[எனக்குத்தான் சரியாப் புரியலியோ ?]//


கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள் இதை. நாளை ஒருவன் இறந்துவிடுவான் என்பது உறுதியாகிவிடால்,

அந்த 24 மணி நேரத்தில் என்ன செய்வான்?

நம் தமிழ்ப்படங்களில் கூட காட்டுவார்கள். மிகக் கொடூரமான வில்லன் எல்லோரும், மரணத்

தருவாயில் நல்லதைச் செய்வார்கள்.

மரண வாக்குமூலத்தை ஏன் நாம் மதிக்கிறோம்.

கொடூரமான குற்றவாளிகளின் தூக்குக்க் முன்னாலான கடைசி ஆசைகள் எப்படியானவையாய்

இருக்கின்றன?

துரை said...

இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுக்க நாம் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது .

மரணம் என்பது முற்றுப்புள்ளி கூட அல்ல .புள்ளி என்றால் அதற்கு ஒரு உருவம் இருக்கும் .இது அதையும் தாண்டி இருக்கும் வெற்றிடம் / வெறுமை


//மரணம் மனிதனுக்கு எந்தத் துயரையுமே தருவதில்லை. துயரம் தரவேண்டிய அவசியமும் அதற்கு இல்லை//

துயரைத் தரமுடியாத ஒன்று , நிம்மதி மட்டும் எப்படித் தரமுடியும் !
நியூட்டனின் விதி இங்கே தப்பா போயிருதே :)
(தராசென்றால் இரண்டு தட்டு இருக்க வேண்டும்
நல்லது-கெட்டது , வெளிச்சம் - இருட்டு , இப்படி.........)

Unknown said...

//இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுக்க நாம் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது .

மரணம் என்பது முற்றுப்புள்ளி கூட அல்ல .புள்ளி என்றால் அதற்கு ஒரு உருவம் இருக்கும் .இது அதையும் தாண்டி இருக்கும் வெற்றிடம் / வெறுமை //

உங்கள் மனம் போல உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். நான் தாயாகப் பார்க்கிறேன். அதன் குணத்தை அறிந்ததனால் வந்த எண்ணம் இது.

//துயரைத் தரமுடியாத ஒன்று , நிம்மதி மட்டும் எப்படித் தரமுடியும் !
நியூட்டனின் விதி இங்கே தப்பா போயிருதே :)
(தராசென்றால் இரண்டு தட்டு இருக்க வேண்டும்
நல்லது-கெட்டது , வெளிச்சம் - இருட்டு , இப்படி.........)//

பசுவின் காம்பு ஏன் விஷத்தைத் தரவேண்டும்?

இருட்டுக்கு வெளிச்சம் என்பதுபோல பிறப்புக்கு இறப்பு. நியூட்டனும் ஒத்துத்தானே போகிறார்!

அன்புடன் புகாரி

ஹரன் ஜாபர் said...

மரணத்தை இழப்பு என எண்ணுபவர்கள் அழட்டும். அதனை விடுதலை என உணர்ந்த நீங்கள் ஏன் அழவேண்டும்?

Unknown said...

பிரிவு என்று ஒன்று அங்கே இருக்கிறதல்லவா ஹரன் ஜாபர்? அதற்கு அழமாட்டார்களா?

ஒருவனின் தந்தை இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பா போய்விடாரே என்று அழுவானா? அல்லது இறந்ததும் அப்பா மிகக் கொடுமையை அனுபவிப்பாரேஎ என்று அழுவானா?

அன்புடன் புகாரி