சொர்க்கம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


வாழும் நாட்களை
நரகமாக்கிக் கொள்ள
மதங்களெல்லாம்
மரணத்தின் பின்
நரகம் உண்டென்று
பிதற்றுகின்றன
அந்தத் தளையை அறுத்து
வெளியில்வா
வாழ்வைச் சுவை
சொர்க்கம் அனுபவி
மரணம்
நீங்காத நிம்மதியோடு
உனக்காகக் காத்திருக்கிறது
எல்லா பிள்ளைகளும்
நல்ல பிள்ளைகளே
மரணத்தாய்க்கு

Comments

சீனா said…
வாழும் வரை வாழ்க்கையை அனுபவி - மரணத்திற்குப் பின் யாருக்குத் தெரியும் நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பது - நரகமா சொர்க்கமா - பார்த்துக் கொள்ளலாம் அப்போது

சிந்தனை நன்று - உடன்படுகிறேன்

இருப்பினும் நரகம் என்று ஒன்று இருக்கிறது என நினைவில் வைத்துக்கொள்வது நல்லது நண்பா
பிரசாத் said…
எல்லா பிள்ளைகளும்
நல்ல பிள்ளைகளே
மரணத்தாய்க்கு


மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை...
துரை said…
//வாழும் நாட்களை
நரகமாக்கிக் கொள்ள
மதங்களெல்லாம்
மரணத்தின் பின்
நரகம் உண்டென்று
பிதற்றுகின்றன//

மரணத்துக்குப்பின் நரகம் என்பது பிதற்றலாகத் தோன்றுகிறது ! சரியென்றால்
மரணத்துக்குப்பின் நிம்மதி என்பது மட்டும் எப்படி ............................!!


//அந்தத் தளையை அறுத்து
வெளியில்வா
வாழ்வைச் சுவை
சொர்க்கம் அனுபவி
மரணம்
நீங்காத நிம்மதியோடு
உனக்காகக் காத்திருக்கிறது
எல்லா பிள்ளைகளும்
நல்ல பிள்ளைகளே
மரணத்தாய்க்கு//

இந்தத் தாய்க்கு எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளென்றால்

# சிலரை அன்பாய் அணைக்கிறாள்
#சிலரை அடித்து இழுக்கிறாள்
#சிலரை நொடியில் முத்தமிடுகிறாள்
#சிலரை நோகடித்து பின் அழைக்கிறாள்

ஏன் பாகுபாடு இந்த அன்னைக்கு ?

பாகுபாடு இருந்தால் அன்னையா ??
அன்பிற்கினிய கவிஞர் துரை,

//மரணத்துக்குப்பின் நரகம் என்பது பிதற்றலாகத் தோன்றுகிறது ! சரியென்றால்
மரணத்துக்குப்பின் நிம்மதி என்பது மட்டும் எப்படி ............................!!//

உங்கள் கேள்வி மிகவும் நியாயமானது. இதை நான் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

மரணத்திற்குப்பின் நரகம் என்பது சரியாக இருக்குமா அல்லது நிம்மதி என்பது சரியாக இருக்குமா?

மரணத்திற்குபின் வரும் பரிபூரண நிம்மதியை நம்மால் அனுபவிக்க முடியுமா என்று நீங்கள்

கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு கேள்வி.

மரணம் நேர்ந்ததும் அதுவரையிலான எல்லாமும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. என்றால் மரணத்திற்குப்

பின் நமக்கு நிம்மதிதான் எஞ்சி இருக்கப் போகிறது. அதே சமயம் மண்ணில் உள்ள வாழ்வை நாம்

இழக்கிறோம். அதை இழக்க எந்த உயிராவது சம்மதிக்குமா? எனவே சொர்க்கத்தை மண்ணிலேயே

காண்போம். எல்லோரும் வாழவும் நாமும் வாழவும் வாழ்வோம் என்ற சிந்தனையை மரணம்

பற்றிய சரியான அறிதல் தரும்.


// இந்தத் தாய்க்கு எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளென்றால்

# சிலரை அன்பாய் அணைக்கிறாள்
#சிலரை அடித்து இழுக்கிறாள்
#சிலரை நொடியில் முத்தமிடுகிறாள்
#சிலரை நோகடித்து பின் அழைக்கிறாள்

ஏன் பாகுபாடு இந்த அன்னைக்கு ?
பாகுபாடு இருந்தால் அன்னையா ??//

மிக நல்ல கேள்வி துரை.

கொஞ்சம் நெருக்கமாகச் சென்று இதை யோசித்தோமானால், உண்மை விளங்கும். இது மரணம்

தரும் பாகுபாடு அல்ல. மண்ணில் மனித வாழ்க்கை தரும் பாகுபாடு. ஒருவன் கொலை

செய்யப்படுகிறான். ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான். ஒருவன் நோயில் விழுந்து

இறக்கிறான். ஒருவன் முதுமை அடைந்து இறக்கிறான். இவை எல்லாமும் மண்ணில் நிகழும் மனித

வாழ்க்கையின் நிலையாமை தரும் பாகுபாடுகள். நாம் மரணத்தை எப்படி குறைகூற முடியும்.

மரணம் மனிதனுக்கு எந்தத் துயரையுமே தருவதில்லை. துயரம் தரவேண்டிய அவசியமும் அதற்கு

இல்லை

அன்புடன் புகாரி
ஜெயபாரதன் said…
புகாரி,

யானைக்குள் இருக்கும் குட்டி, தாய் யானையைக் காணாது. வெளியில் வந்தவுடன் தாயைக் காணும்.

மனிதன் கடவுளைக் காண பிரபஞ்சத்தை விட்டு வெளியே வர வேண்டும். கிணற்றுக்குள் கிடக்கும் தவளை கடவுளைக் காண முடியாது.

கடவுளுக்கு அஞ்சாத மனிதன் நெறி தவறலாம். மரணத்துக்கு அஞ்சாத மனிதன் கொலை புரியலாம்.


சி. ஜெயபாரதன்
ஜெயபாரதன்,

// மனிதன் கடவுளைக் காண பிரபஞ்சத்தை விட்டு வெளியே வர வேண்டும். கிணற்றுக்குள் கிடக்கும் தவளை கடவுளைக் காண முடியாது.//

பிரபஞ்சம்தான் கடவுள் என்பது என் நம்பிக்கை. பிரபஞ்சத்துக்கு வெளி என்பதே கிடையாது. இது கடவுள் பற்றிய விவாதத்துக்கு இழுத்துச் செல்லப்போகிறது :)

//மரணத்துக்கு அஞ்சாத மனிதன் கொலை புரியலாம். //

மரணத்துக்கு அஞ்சாத நிலை எய்திவிட்டால், கொடுக்கும் குணம் வருமே தவிர எடுக்கும் குணம் வராது. சுடலை ஞானம் என்பார்களே அது மனிதரிடம் நீடிக்காமல் போய்விடுவதே வாழ்வின் துயரங்களுக்கான காரணம். எனக்கும் மரணம் இருக்கிறது என்று எப்போது ஒருவன் முழுதாக உணர்கிறானோ அது அடுத்த நொடிகூட நடக்கலாம் என்று எப்போது ஒருவன் நம்புகிறானோ அப்போதே நல்லவன் ஆகிவிடுவான்

அன்புடன் புகாரி
சிவா said…
//மரணத்துக்கு அஞ்சாத மனிதன் கொலை புரியலாம். //மகானாகவும் ஆகலாம் அல்லவா
நன்றி சிவா

மகான் ஆகிறானோ இல்லையோ நல்ல மனிதன் ஆகிவிடுவான்
ஜெயபாரதன் said…
மகான்கள் எண்ணிக்கை குறைவு (சாக்ரடிஸ், ஏசு, காந்திஜி, லிங்கன், மார்டின் லூதர் கிங்)

ஈராக், ஈழம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மரண தேவனுக்குத் தேங்காய் உடைப்பது போல் ஆயிரக் கணக்கில் அனுதினம் கொலைகள் நடக்கின்றன.


ஜெயபாரதன்
//ஈராக், ஈழம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மரண தேவனுக்குத் தேங்காய் உடைப்பது போல்

ஆயிரக் கணக்கில் அனுதினம் கொலைகள் நடக்கின்றன.//

அதற்குக் காரணம் மரணத்தாயா அல்லது மனிதநாயா ஜெயபாரதன்?

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்