2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி

அழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.

புற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.

வாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.

இது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:

அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு


அப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.

கண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.

ரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.

அவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண்ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.

உலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.

ஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.

உலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.

ஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்?

ஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள்? கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.

பிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை?

தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா?

முக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? கமலுக்கு அக அழகு இல்லையா? அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா?

ஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள்? இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும்? கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.

கண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செய்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

பண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா?

கமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?

அவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது!

இல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.

கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி!

1 நட்பின் வழியே


தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும்.

சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது.

காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம்.

எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும்.

இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை!

காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்!

காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது.

கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா?

உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
20

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
19

பறவை பறக்கும் உதட்டுக்காரி
பஞ்சவர்ண சிரிப்புக்காரி
சிந்தாமணி கண்ணுக்காரி
சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

பால்வாழை நாக்குக்காரி
பறித்தெடுக்கும் பேச்சுக்காரி
மச்சமுள்ள காதுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி

வாழையிலை வயித்துக்காரி
வளையலளவு இடுப்புக்காரி
வசந்தம்பூத்த மார்புக்காரி
வழுக்கிவிழும் கழுத்துக்காரி

என்னை நினைக்கும் இதயக்காரி
என்னைத்தேடும் உணர்வுக்காரி
எப்போதும் என் கனவுக்காரி
எனைப்பிரியா உயிர்க்காரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
18

காத்திருப்பதற்காக
காதலிக்கவில்லை
ஆனால் காத்திருக்கிறேன்

காதலிப்பதற்காக
காத்திருக்கவில்லை
ஆனால்
காதலிக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
17

வற்றாக் குற்றாலமான
என் அன்பும்
அணையிடாக் காவிரியான
என் பாசமும்
உப்பிலாப் பசிபிக்கான
என் கருணையும்
கலையா முகிலான
என் கண்ணீரும்
என்னை
உனக்குள் திணித்து
உன்னை
ஏமாற்றி விட்டதாகக்
கோபப்பட்டாய்

உன்
கோபத்தையும்
குற்றச்சாட்டையும்
பரிவோடு ஏற்றுக்கொண்டு
நான் உன்மீது
அளப்பரிய
அன்பும் பாசமும்
கருணையும் கண்ணீரும்
கொட்டுகிறேன்

வேறென்ன
எனக்குத் தெரியும்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்து மின்னட்டையாக


அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி

*


மாசறு தீபாவளி (வைகைச் செல்வி இதழுக்கு)

அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

கனவு காதல் நளினம் நாணம்
நட்பு நேயம் உறவு ஊக்கம்
பரிவு பாசம் அகரம் ஆதி
எளிமை ஏற்றம் எண்ணம் ஏகம்
யாவும் யாவும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

உள்ளம் உயிர் வளமை செழுமை
வண்ணம் மின்னல் தனிமை இனிமை
மனிதம் புனிதம் மஞ்சள் மாட்சி
பக்தி பூசை மாண்பு நோன்பு
யாவும் யாவும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

தீபமென்றால் ஒளி ஆவளி என்றால் வரிசை
அழகு தீபங்களின் அறிவு தீபங்களின்
இதய தீபங்களின் இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

*கவிஞர் புகாரி*



(முழுக்கவிதை)

அன்பு என்பினும்
அறிவு என்பினும்
தீபம் தீபம்

அழகு என்பினும்
அமுது என்பினும்
தீபம் தீபம்

இரக்கம் என்பினும்
ஈகை என்பினும்
தீபம் தீபம்

உதயம் என்பினும்
உச்சம் என்பினும்
தீபம் தீபம்

0

கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆய்தம்
எளிமை இனிமை
எண்ணம் ஏற்றம்
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

தூளி என்பினும்
தாய்மை என்பினும்
தீபம் தீபம்

தவம் என்பினும்
வரம் என்பினும்
தீபம் தீபம்

ஞானம் என்பினும்
மோனம் என்பினும்
தீபம் தீபம்

கனிவு என்பினும்
கருணை என்பினும்
தீபம் தீபம்

0

உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தன்மை தனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பாசம்
மாண்பு நோன்பு
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

அகந்தை அறுப்பதும்
அமைதி விளைப்பதும்
தீபம் தீபம்

வக்கிரம் எரிப்பதும்
வஞ்சம் தகர்ப்பதும்
தீபம் தீபம்

நரகம் ஒழிப்பதும்
சொர்க்கம் மீட்பதும்
தீபம் தீபம்

வாழ்க்கை தருவதும்
வாழச் சொல்வதும்
தீபம் தீபம்

0

தீபமென்றால்
ஒளி
ஆவளி என்றால்
வரிசை
தீப ஆவளி
தீபாவளி

அழகு தீபங்களின்
அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்
இனிய தீபங்களின்
ஊர்வலம்தான்
தீபாவளி

0

இருளகற்றும் தீபமே
இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி
விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம்
தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள்
எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்

0

இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி
16

பூரித்துப் பூரித்துப்
பத்தே நிமிடங்களில்
பன்மடங்காய்ப் பெருத்துவிட்டேன்

எத்தனை ஜென்மங்கள் கழித்து
உன் யாழிசையை
என் செவிக் கூடத்தில்
இதயவாசம் மணக்க மணக்க
மீட்டுகின்றாய்

உன் பனிமுகம் கண்டறியா
என் கண்கள் கொதிக்கின்றன

ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன்

பேருந்து நிறுத்தத்தில்
ஒரு நிமிடம் விழிமூடி
மௌன தீபம் ஏற்றலாம்

பார்த்தால் பசிதீரும் என்று
முணுமுணுத்துக்கொண்டே
ஏதோ ஓர் பேருந்தில்
இலக்கின்றி ஏறிக்கொள்ளலாம்

என் பெயரை நானே சத்தமாய்க் கூவி
ஏதேனும் ஓர் ஐம்பது கிலோ
திரும்பிப் பார்க்கிறதா என்று
தமிழ் சினிமாவைப் போல் பித்தாடலாம்

அல்லது
இதில் எதையும் செய்யாதே
சிறகுகளைக் காற்றில் கழுவிக்கொண்டு
பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம்

சொல்...
உனக்குத்தான் என்மீது
கொஞ்சமோ கொஞ்சமாய்க்
கொஞ்சிக் குதித்தாடும்
நெஞ்சத் துடிப்பிருக்கிறதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இல்லறம்

இல்லமதில்
வெல்லம்
இரு
பிள்ளை உள்ளம்
ஓர் ஊரில் ஒரு வெள்ளை உள்ள எலி

ஓர் ஊரில்
ஒரு வெள்ளை உள்ள எலி
.
சின்னஞ்சிறு பொந்து
உற்சாக உலகம்
.
நெல்லோடு
கடலையும் பருப்பும்
.
பொழுதுக்கும்
சிரிப்பும் விளையாட்டும்
.
ஓர் இருளில்
மொத்தமாய்க் களவுபோனது
நெல் கடலை பருப்பு
.
தவித்தது
தவமிருந்து துடித்தது
.
நாள்
வாரமானது
வாரம் வருடமானது
.
கறுத்துப் போனது
சிறுத்துப் போனது
.
செவிகள்
சிதைந்துவிட்டன
.
கண்கள்
விழுந்துவிட்டன
.
நாவின் தாகம்
உயிரில் ஓலம்
.
இன்னும் ஓர் இருளில்
தங்கத்தால் ஒரு பொறி
தகதகப்பாய் உள்ளே
தேங்காய்க் கீற்று
.
எத்தனை வாசம்
எத்தனை வசீகரம்
.
பசியே
பதார்த்தத்தின் ருசி
.
அச்சத்தால்
பொந்துக்குள் பொந்துசெய்து
புதைந்துகொண்டது எலி
.
உயிரைப் பிளந்து
தாக மையத்தில் புறட்டி எடுத்தது
தேங்காய்க் கீற்று
.
மதி
மயங்குவதில்லை
ஆனால்
பசியோ விடுவதில்லை
.
இன்றோடு பொறிக்குள்
இருபது வருடங்கள்
.
தேங்காய்க் கீற்று எங்கே
நெல்மணிகள் எங்கே
கடலையும் பருப்பும் எங்கே
.
கம்பிகளுக்கிடையில்
கடுங்கொடும் பட்டினியில்
ஏக்கத்தின் விசித்திர திசைகளில்
கிழிந்தழியும் எண்ணங்களில்...

15 ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?

ஹஜ் என்னும் தியாகத் திருநாள் எப்படி வந்தது?

பெற்ற பிள்ளையையே
தனக்குப் பலிதருமாரு
இறைவன் கனவில் வந்து
கேட்டதாகக் கூறி
தியாகம் செய்ய முற்படுகிறார்
பக்தர்

மகனும்
தானே முன்வந்து
பலிபீடத்தில் தலைவைத்து
இறைவனுக்காக
வெட்டுப்படக் காத்திருக்கிறான்

கொடுவாள் எடுத்து
ஓங்கி வெட்டுகிறார்
பக்தர்

ஆனால்
அந்தக் கூர் வாளோ
வெட்ட மறுக்கிறது

சாத்தான் கூட
ஓடிவந்து தடுக்கிறான்
வெட்டாதே வெட்டாதே
என்று கூவுகிறான்

பின்னர்
இறைவனுக்குப்  பலியிடுதல்
வேண்டாம் - ஏனெனில்
இறைவன் தேவைகளற்றவன்

பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதும் என்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது

கருணை நிறைகிறது

மனித உயிரைப் பலியிடுவது
தியாகம் அல்ல என்று மறுத்த
இறைவனின் கட்டளை வந்த
நாளைத்தான்
தியாகத் திருநாள்
என்று அழைக்கிறார்கள்

நரபலி மறுத்து
மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்

உண்பதற்கே அன்றி
விலங்குகளை பலியிடுதல்
கூடாது என்பதே இஸ்லாம்

ஆகவேதான்
ஆகப் பழைய
வழமை காரணமாக
பலியிடப்படும் ஆடுகளும்
உறவுகளுக்கும் உலகுக்கும்
பகிர்ந்தளிக்கப்படுகிறது

ஆடுகளைப் பலியிடுதலும்
இறைவனின் தேவையல்ல
இறைவன் தேவைகளற்றவன்

இறைவன்
பெரிதும் விரும்பும்
ஒப்பிலா
பலி ஒன்று இருக்கிறது

மனிதனே முயன்று
மனிதனுக்குள் இருக்கும்
தீயவற்றை பலியிடுதலே
அது

அஸ்ஸலாமு அலைக்கும்

*

ஹஜ் பெருநாள் என்றால் என்ன என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இன்றும் அலுவலகத்தில் என்னிடம் கேட்டார்கள். வெள்ளைக்கார நாவில் ஈத் முபாரக் என்ற வாழ்த்தைப் போராடிப் பதியவைத்தேன். அழகாகவே வாழ்த்துச் சொன்னார்கள் ;-)

ஹஜ் பெருநாள் என்றால் என்ன? எப்படி வந்தது? ஏன் புனிதப் பயணம்?

முதலில் இந்த என் கண்ணோட்டத்தை வாசியுங்கள், பின் இறுதியாக ஹஜ் பெருநாள் எப்படி வந்தது என்ற வரலாற்றை வாசிக்கலாம்,

இஸ்லாம் மார்க்கத்தில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடலும் மனமும் உறுதியும் தூய்மையும் ஆகின்றன.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது.

சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது.

அந்தத் தொழுகைக்குச் செல்லும்முன் பலரும் குளித்து விடுவார்கள்.

அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேரத்தின் ஓசோன் காற்றை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது.

அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது.

உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவின் பல நிலைகளைப் போன்றது.

நெற்றி தரையில் தொடும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது.

இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும்.

இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும்.

அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனம் முழுமையான நம்பிக்கையைப் பெறுவதால், வாழ்வின் சுமைகள் பெரிதாகத் தெரிவதில்லை.

அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அன்பு கருணை ஈவு இரக்கம் என்ற உயர்ந்த மனம் வளர்கிறது.

அதிகாலை நாம் கேட்கும் பாடலோ படிக்கும் பாடமோ நம் மனதைவிட்டு எளிதில் நீங்குவதில்லை.

ஆகவே அதிகாலையிலேயே தொழுதுவிட்டால், தீய எண்ணங்கள் மனதில் தோன்றாது.

இந்த நிலை மெல்ல மெல்ல பலவீனம் அடைவதற்குள் அடுத்த தொழுகை வந்துவிடும்.

அந்த இரண்டாம் தொழுகை உச்சி வேளையில் இருக்கும்.

அதுவும் அதைத் தொடர்ந்த மற்ற தொழுகைகளும் தரும் தாக்கம் குறுகிய காலமே நீடிக்கும் என்பதாலும், மனச் சிதறல்கள் அதிகம் உள்ள பொழுதுகள் இவை என்பதாலும் அடுத்தடுத்த தொழுகைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

குத்துமதிப்பாக அதிகாலை ஐந்து மணிக்கு முதல் தொழுகையும், மதியம் பனிரண்டரை மணிக்கு இரண்டாம் தொழுகையும், பின்மதியம் மூன்றரை மணிக்கு மூன்றாம் தொழுகையும், மாலை ஆறு மணிக்கு நான்காம் தொழுகையும் பின்மாலை எட்டு மணிக்கு நாளின் இறுதித் தொழுகையான ஐந்தாம் தொழுகையும் இருக்கும்.

சரியான தொழுகை நேரம் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறும்.

அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாங்கு என்ற தொழுகை அழைப்பின் மூலமாகவும் தொழுகை நேரத்தை அவ்வப்போது அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு முறை தொழுகைக்குச் செல்லும்போதும் உடலைத் தூய்மைப் படுத்த வேண்டும்.

மனதைத் தொழுகைக்காகத் தயார் செய்யவேண்டும்.

அதன்வழியே மனத்தூய்மைக்கு ஏற்றதாய் மனம் மாற்றிக்கொள்ளப்படும்.

இந்தத் தொழுகையை தனித்தனியே தொழலாம் என்றாலும் பள்ளிவாசல் போய் நாலுபேரோடு தொழுவதையே இஸ்லாம் விரும்புகிறது.

இதன்மூலம் பிறரோடு உறவு வளர்வதையும் சகோதரத்துவத்தையும் மனிதர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறது.

மற்ற தினங்களில் அப்படி சேர்ந்து தொழுகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் கட்டாயம் உச்சி நேர இரண்டாம் தொழுகையின்போது பள்ளிவாசலில் அல்லது ஒரு பொது இடத்தில் ஒன்றாய்க் கூடி ஜும்மா என்ற சிறப்புத் தொழுகையோடு தொழவேண்டும்.

இந்தத் தொழுகைக்கு குறைந்தது நாற்பது பேர்களாகவது சேர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் இஸ்லாம் வைத்திருக்கிறது.

அந்த சிறப்புத் தொழுகையின்போது தொழுகை நடத்தும் இமாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை குத்பா என்ற பெயரில் வழங்குவார். நல்வழி செல்ல மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் ஓர் உரையாக நிகழ்த்தப்படும்.

இதன் மூலமாக ஊரில் உள்ள அனைவரும் சந்திக்கவும் ஒன்றுகூடவும் உறவு வளர்க்கவும் சகோதரத்துவம் கொள்ளவும் உடல் காக்கவும் மன உறுதி பெறவும் வழி அமைகிறது.

ஹஜ் என்பதும் இதே போல உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் ஓரிடத்தில் வந்து தொழுவதே ஆகும்.

அதோடு அந்த புண்ணியத் தளத்தைக் காணும்போது உடலில் ஏற்படும் நேர்மறை அதிர்வுகள் அல்லது மனதில் ஏற்படும் அபார உணர்வுகள் பக்தியை வளர்க்கக் கூடியதாய் இருக்கின்றன.

 அதைத் தவிர கொஞ்சம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் ஹஜ்ஜில் உண்டு.

முற்போக்கு மதமான இஸ்லாத்தில்கூட எப்படி வந்தன இம்மாதிரி சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

ஹஜ் செல்லும்போது சில நிபந்தனைகள் உண்டு.

உடல் தூய்மை மனத் தூய்மை காக்கும் செயலின் உச்சமாக இது மதிக்கப்படுகிறது.

ஆகவே ஹஜ் செய்ய முடிவு செய்தவர் நல்லதையே நினைத்து நல்லவராகவே வாழவேண்டும்.

ஹஜ் செல்லும்முன் ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவராய்த் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஹஜ் சென்று திரும்பியதும் அந்த நினைவிலேயே, தவறுகளுக்கு அஞ்சி நடந்து, உடல், உள்ளம், ஊர், உலகம் அத்தனையும் தூய்மையாய் மலர வாழவேண்டும்.

இதன்மூலம் பரிசுத்தமான, அமைதியான, நிறைவான, குற்றங்கள் அற்ற ஓர் உலக சமுதாயம் உருவாக இஸ்லாம் வழிவகுக்கிறது.

அதற்கான கட்டுப்பாடுதான் ஒவ்வொரு நாள் தொழுகையிலும் மெல்ல மெல்ல வளர்க்கப்படுகிறது.

நொடியும் மாறாத நம்பிக்கை
நாளில் ஐந்து முறை தொழுகை
இயலும் போதெல்லாம் ஜக்காத்
வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்

இந்த ஐந்து கடமைகளும்தான் இஸ்லாம் மார்க்கத்தில் ஒவ்வொருவரையும் நல்லொழுக்க வழியில் செல்லப் பயிற்சிதரும் கருவிகள்




2 தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

நரபலி மறுத்து
மனிதம் காத்தத் திருநாள்தான்
ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே
மும்முறை கனவில் வந்து
பலியிடக் கேட்டதாகக் கூறி
இறைவனுக்குத் தியாகம் செய்ய
முற்படுகிறார் பக்தர்

ஆனால்
கூர் வாளும்
வெட்ட மறுக்கிறது

சாத்தான்கூட
தடுக்கின்றான்

பின்னரோ
பலியிடுவதெனில்
ஓர் ஆடு போதுமென்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது
கருணை நிறைகிறது

மனித உயிர் பலியிடுவது
தியாகமன்று
உன் உள்ளத்தினின்று
தீயவற்றைப் பலியிடுவதே
தியாகம் என்றறியவைத்து
நரபலியை மறுதலித்த இறைவனின்
கட்டளை வந்த நாளே
தியாகத் திருநாள்

உலகமக்கள் யாவருக்கும்
உயர்வான உறுதியான உண்மையான
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
இது உங்கள் கவிதை

எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய
என் கவிதைகளின்
முதல் ரசிகனும்
முதல் விமரிசகனும்
நானல்லவா
15

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா


உயிருக்கு இளமை வேண்டாமா
இளமைக்குச் சுகம் வேண்டாமா
சுகத்துக்குத் தழுவல் வேண்டாமா
தழுவலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

ரசனைக்கு உணர்வு வேண்டாமா
உணர்வுக்கு உள்ளம் வேண்டாமா
உள்ளத்துக்குக் காதல் வேண்டாமா
காதலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
14

உயிரின் இருப்பிடம்
உதடுகளில் இடமாற்றம்
முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 
நமக்கு எவ்வளவு
நேசத்துக்குரியவர் என்றாலும்
ஊழல் வழக்கில் சிக்கி
நிரூபிக்கப்பட்டுவிட்டால்
படுபாவி என்று எரித்துக்
கொண்டாடத்தான் வேண்டும்


அம்மாவாய்
இருந்தால் என்ன
ஐயாவாய்
இருந்தால் என்ன

மக்கள் சொத்து
நாடு நலம்பெற
ஒப்படைக்கப்படும்போது

அந்த நம்பிக்கைக்கு
ஒரு பைசா
கலங்கம் விளைவித்தாலும்
அது
சுண்டெலியாய் இருந்தாலும்
பெருச்சாளியாய் இருந்தாலும்
பொறியில் அடைக்கத்தானே வேண்டும்

நாடு வேண்டுமா
நாசம் வேண்டுமா

இனியாவது
முடிவு செய்ய வேண்டாமா?
நெருப்பில் விழுந்தாலும்...

காதலைத் தொட்டாயிற்று
கல்யாணமும் முடித்தாயிற்று

இனியென்ன?

இதோ இதோ
இந்த வாழ்க்கையின்
இனிப்பான அடுத்த கட்டம்

ஆம்
பெற்றெடுத்துக் 
கொஞ்சுவது

அந்தப் பிஞ்சுகளின்
சின்னச் சின்ன ஆசைகளை
நிறைவேற்றி நிறைவேற்றி
நிறையாமல் வெறி கொள்வது

வாழ்க்கையின்
சர்க்கரைக் காலம்

வர்ணங்களுக்குள்
விழிகள் விழுந்து
நீச்சலடிக்கும் காலம்

உயிரையும்
உவப்போடு வழங்க
உரங்கொண்ட
சாதிப்புக் காலம்

அடடா
அந்தப் பிஞ்சுகள்
வளரவே கூடாது

வளர்ந்துவிட்டால்?

சட்டுச் சட்டென்று 
அவர்களும்
பெற்றெடுத்துப் பெற்றெடுத்து
பரிதவித்து நடுங்கும் கரங்களில்
பனி ரோசாக்கள் பத்துப்பதினாறை
கொட்டித் தந்துவிட வேண்டும்

பிஞ்சுகளின் பிஞ்சுகளும்
இந்த மரத்தில்தான்
ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் 

ஊஞ்சலாட
வழியற்ற மரங்கள்
உடைந்து நொறுங்கி
நெருப்பில் விழுந்தாலும்
வேகாமல்லவா கிடந்துழலும்

அன்புடன் புகாரி
கடவுள்
இல்லை என்று சொல்வதும்
மதங்கள்
இல்லை என்று சொல்வதும்
சாதிகள்
இல்லை என்று சொல்வதும்
அவற்றை
இல்லை என்று
சொல்வதற்காக அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று சொல்வதற்காக
காட்டுமிராண்டித்தனம் கூடாது
என்று சொல்வதற்காக
வன்முறை கூடாது
என்று சொல்வதற்காக
தீண்டாமை கூடாது
என்று சொல்வதற்காக

வேரையே அறுக்கச் சொல்வது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால் மட்டும்தான்


13

நீ
குழைந்த
வார்த்தைகளை
நான்
எப்படிக் கொண்டாடுவேன்
என்றே தெரியவில்லை

உதிர்த்த
நீ
மறந்துபோவாயோ
தெரியாது

ஏற்ற நானோ
தொலைந்தே போனேன்

தொலைந்தேன் என்றதும்
சுயம் தொலைத்தேனோ
என்று மருளாதே

நான் நானாக மீண்டேன்
வரமாக

ஈரமற்ற
வெளிகளிலிருந்து
மழை அவிழும் சோலைக்குள்
இந்தக் கவிவண்டை மீட்டுத்தந்த
உன் வார்த்தைப் பூக்களைப்
பாராட்டுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இரத்தவழி என்றில்லை

ஆதரவைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

அன்பைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

சந்திக்கும்
தற்செயல் புள்ளிகள்தாம்

உறவெனும்
அற்புத ஆரத்திற்கான
அத்திவார முத்துக்கள்

ஓர் உறவு
உயிர் போகும்வரைக்கும்
நிலைத்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஆனால்
இருக்கும்வரை
இறக்கும்வரைக்கான
சுக நினைவுகளைத் தருவதாய்
இருக்க வேண்டும்