***41

எங்கே கவிதை

எப்போதெல்லாம் கவிதை எழுதுவீர்கள்? ஏன்தான் கவிதை எழுதுகிறீர்கள்?
நீங்கள் என்ன கவிதை எழுதும் இயந்திரமா? கவிதைகள் எங்கே கொட்டிக்கிடக்கின்றன நீங்கள் இப்படி அள்ளிக்கொண்டு வந்து நிற்கிறீர்கள்? எப்படி இத்தனை அழகான கவிதைகளை உங்களால் எழுத முடிகிறது? சிந்தித்துக் கவிதை எழுதுவீர்களா அல்லது சட்டென்று கவிதை எழுதுவீர்களா?

இப்படியாய் ஒரு கவிஞன் முன் கேட்கப் படும் கேள்விகள் ஏராளம். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் மனம்போன போக்கிக் கிறுக்கியதுதான் இந்தக் கவிதை ;-)


உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க் கவிதைகள்

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும் விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க் கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும் கூடவே
கவிதை வரும்
காதல் வரும் முந்திக்கொண்டு
கவிதை வரும்
சோகம் வரும் அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை

அன்புடன் புகாரி

5 comments:

சீனா said...

அன்பின் புகாரி

ஆழ்கடலில் அகள்விழிச் சல்லடையால் அலச அழகு முத்துக் கவைதைகள் வருகின்றன

காற்று மேனி படர்ந்து - அலையலையாய் ஊர்ந்து - முகக்கரை மோதி - முத்தமிட - நுரைப் பூக்கள் பூக்கின்றன - கவிதைகளாய்

கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டு - காணும் கேட்கும் இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அருமையாக வர்ணிக்கும் திறமையே திறமை -

அதிகாலை - கலைந்தும் கலையாத தூக்கம் - இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகள் - எங்கே புகாரி இவ்வளவு கற்பனைகள் கற்றது எப்படி

உறங்கும் கண்கள்- உறங்காத மன அலைச்சல் - மூச்சு விடுவது கூட கவிதை

கோபம் - காதல் - சோகம் - மனித உணர்வுகள் அத்தனைக்கும் கவிதை படைக்க முடியும்

எங்கும் எப்போதும் நம்முடனிருப்பது கவிதை - ஐயமே இல்லை

அன்பின் புகாரி - பேனாவினைத் திறக்கும் முன்னே கவிதை படைக்கும் கண்ணதாசனை மிஞ்சுகிறீர்கள்

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் சீனா

சிவா said...

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்


அற்புதம் ஆசான்

பூங்குழலி said...

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்

உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்


கவிதை மொத்தமும்
ரொம்ப அழகு.ஒரே
வீச்சில் முடித்தாற்போல்

துரை said...

ஆசானை உணர்ந்தேன்

Vijay said...

கவிதைக்கே உங்கள் அழகிய வரிகளால் கவி சொல்லிவிட்டீர்கள்
அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்