வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்
காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை
சிந்தனைத் துளிகள்
சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள்
கேட்கக் கேட்க
ஞானப்பல்
முளைக்க முளைக்க
நிம்மதி
செத்துப் போய்
நித்திரை
அற்றுப்போய்
விரக்தி
ரொம்பிப்போய்
அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே
கருகிய என்னிடம்
மனைவியின்
மடியில் கொஞ்சம்
மகளின்
மடியில் கொஞ்சம்
பேத்தியின்
மடியில் கொஞ்சம்
என்று
நழுவிய தாய்மடி
மெல்ல
மீண்டும் மலர்ந்ததில்
முதிர்ந்த இந்தக் கூட்டுக்குள்
புத்தம் புது மழலை
பூரணமாய் வந்து
குடியேற
அர்த்தமான நிம்மதி
ஆனந்தமான கண்ணீர்
அவசரமில்லாத புன்னகை
No comments:
Post a Comment