தமிழுகுச் சோறூட்டு

பாராட்டு
உன் பாராட்டால்
நண்பா
நம் தமிழுக்குச் சோறூட்டு

நீ
பாராட்டும்போது
உனக்குள் மலரும்
பௌர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும்
தீபவிழிகளைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள் வேறுண்டா

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டேனென்று
ஏன்தான் அடம்பிடிக்கிறாய்

உன்
அரைகுறைச் சொல்லைப் பாராட்ட
ஆளற்றுப் போனதே
அந்தச் சோகமா

உன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே இவன்
அந்தப் பொறாமையா

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
என் கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனமா

இவன் என்
எதிரி எழுத்தாளனின் தாசனாயிற்றே
அந்த விரோதமா

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணமா

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பனே
உன் நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத்தான்
தொலைக்க வேண்டும்
நீ

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில்
எழுத்து நீர்க் குவளையோடு வருகிறாய்
பாராட்டுக்கள்
ஆனால்
அந்த வெளிச்சத்தை
முதலில் முத்தமிடவேண்டியவன்
நீயல்லவா

பாராட்டலாம் வா
பாராட்டுவதால்
பாராட்டியவன்தான்
பன்மடங்காய் உயர்கிறான்

மனதாரப் பாராட்டினால்
மறுகணமே நீ
மனிதனாய்ப் பிறந்துவிடுவாய்

ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும் பண்புதான்
அதன் மகுடம்

ரசனைகளற்றவனின் உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா

கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடனல்லவா

காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடனல்லவா

நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமையல்லவா

மறந்துவிட்டாயா
தாலாட்டிப் பாராட்டியதாலேயே
நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்

சொல்...

வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா

தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா

நிலவு வந்து பாராட்டாமல்
இரவு நெஞ்சில் இனிக்குமா

மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா

இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா

பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை
அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை

சொந்தம் பாராட்டாமல்
இன்பம் இல்லை
உறவைப் பாராட்டாமல்
உயிர்களே இல்லை

பாராட்டி வளர்வதன்றோ
கலைகள்
பாராட்டி செழிப்பதன்றோ
உலகம்

அடடா
இப்படி நீ பாராட்டாமல்
மூடிக்கிடந்தால்
கொத்துக் கொத்தாய் அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்

அந்த அழிவின் கருங்குழி வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா
நீதான் நண்பா
நீயேதான்

No comments: