எங்கே எங்கே ஈரச்சுவை


பச்சை இலைமகள்
நெற்றித் தளங்களில்
புத்தம் புதுப்பனி
கொட்டி வழுக்கிடும்
பயண சுகந்தங்களோ

பிஞ்சுக் கொடிகொண்ட
பால்மண வேர்களின்
முழுமொத்த விழிவிரித்த
தன்னுயிர்த் தேடல்களோ

பாறை முதுகுகளில்
மோதும் அலைகளின்
நெடுநீள் ஏக்கத் தொடு வெறியோ

கடும் பாலை நிலம் மீது
சூல்மேக மடியவிழ
சிந்தும் மழைத்துளியின்
சொட்டுப் பரிசங்களோ

திறக்காத மாங்கனிக்குள்
திருட்டு வண்டொன்றின்
வாழ்க்கை அதிசயமோ

அதிகாலை ஒளிக்கசிவாய்
இள அறிவுக் கதிரெழும்பும்
பிள்ளைப்பருவமதில்
மெல்ல மெல்ல
மனம் சொல்லச் சொல்ல
முதல் கவிதை வடிப்பதுவோ

பழைய நண்பனை
பல்விழுந்த நாளொன்றில்
பார்த்துவிட்ட நெகிழ்வில்
உணர்வெரிய உரையாடுவதோ

இளைய இதழ் நான்கு
திரிகளாகித் தீப்பிடிக்க
மூடிய இமைகளுக்குள்
அடைபடும் கிளர்வுகளோ

குடும்ப நலன் தேடி
திரைகடல் பல ஓடி
இளமைப் பேறூற்றின்
கண்மூடிக் காய்ந்தபின்
நடுங்கும் கரங்களோடு
பெற்றமண் அள்ளி
பெருமூச்சாய் முகர்வதோ

நாவினில் ஒளியாக
செவிகளில் சிறகாக
இதயத்துள் தேனூற
எழுந்தாடும் தமிழோ

உலகமே அவள் மடியாக
உயிரே தாய் பிரியமாக
இளம்பிஞ்சு நகம்பதித்து
பொன்மடி முட்டிமுட்டி
பால் சொர்க்கம் பருகுவதோ

எங்கே எங்கே ஈரச்சுவை
இங்கே அங்கே ஈரச்சுவை
எங்கும் எதிலும் ஈரச்சுவை
இதயம் இருந்தால் ஈரச்சுவை

No comments: