வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்
வாழும் கவிதை பிறப்பதில்லை
காற்றில் சுரங்கள் பிரிந்திருந்தால்
கானம் செவியை நிறைப்பதில்லை
கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டால்
காட்சிப் பிழைகள் நிறைவதில்லை
விண்ணும் விழியும் முத்தமிட்டால்
விரியும் ஞானம் குறைவதில்லை
பள்ளம் மேடுகள் தோள்தொட்டால்
பட்டினி என்னும் மிருகமில்லை
எல்லைக் கோடுகள் இணைந்துவிட்டால்
எங்கும் யுத்த நரகமில்லை
நிலமும் மழையும் உறவென்றால்
நெல்லும் புல்லும் கூத்தாடும்
நிலவும் வானும் நேர்பட்டால்
நிம்மதி நெஞ்சில் பாலாகும்
பலரும் சிலரும் கையணைத்தால்
பிரிவினை வஞ்சம் தூளாகும்
உள்ளம் உயிரைத் தழுவிவிட்டால்
உண்மைக் காதல் பயிராகும்
மண்ணைப் பிரிந்தால் துயராகும்
மனிதம் பிரிந்தால் அழிவாகும்
இணைவது ஒன்றே வரமாகும்
இணைக்கும் யாவும் இறையாகும்
No comments:
Post a Comment