தாழ்ந்த
வாயில் கடக்க
தலையைக் கொய்வதோ
சூழ்ந்த துயரம் வெல்ல
சுடுகாட்டில் வீழ்வதோ
வாழ்ந்த
நாட்கள் எண்ணி
வாடுவதால் ஆவதென்ன
வீழ்ந்த நாட்கள் தொட்டு
விசும்புவதால் போவதென்ன
மண்ணுயிர்
பறிக்கும் ஒருவன்
மதிகெட்ட மிருகமென்றால்
தன்னுயிர் பறிக்கும் மனிதன்
தலையில்லா சாத்தான்தானே
கண்ணிலே
புகுந்த எண்ணம்
கணநேரக் கலக்கம்
எண்ணியே முடியும் முன்னர்
எடுத்தாலது தீர்மானமா
எண்ணமே
உயிரைத் தின்னும்
இதுஎன்ன வேடிக்கை
எண்ணமும் உயர்ந்தது என்றால்
இப்படியும் நடக்குமா
புதைமனம்
சிந்தும் கண்ணீர்
புத்திக்குள் தீயைமூட்ட
பதைத்தவன் புதையும் குழிதான்
பரிதாபத் தற்கொலைகள்
பாசமும் அன்பும் நட்பும்
பழகிய காதல் யாவும்
வேசமாய்ப் போவதென்றால்
ஆசையாய்க் கட்டிய கனவுகள்
அனைத்துமே சிதறியதென்றால்
வேதனையோ உச்சம்தான்
வெறுப்பொன்றே மிச்சம்தான்
ஆசையின்
வேர்கள் ஓடும்
அனைத்துமா வெற்றிகொள்ளும்
வேகமாய்ச் சாவைத் தேடும்
வெறித்தனம் கயமையாகும்
கண்வழி
வழிவது சிலர்க்கோ
நீரல்ல இரத்தம்தான்
பொன்மொழி கேட்கும் நிலையில்
பொழுதவர்க்கு இல்லைதான்
தருவாள்
தருவாள் என்றே
தாய்ப்பாலுக்கு அழும்பிள்ளை
பருகும் தாய்மார் பிழியலாம்
தன் உயிரையே பிழியலாமா
நதியுடன்
நீந்தும் நீச்சல்
நலமென்றே கொள்ளலாகுமா
எதிர்த்து நீ நீந்தும் நீச்சல்
இனிப்பான சொர்க்கமில்லையா
எஃகினால்
ஆனதா வாழ்க்கை
இழுபடும் சவ்வுதானே
இயற்கையும் ஈன்ற உயிரை
இழிவென்று நசுக்கலாமா
உயிர்
ஒரு சுமையே அல்ல
உன்
உள்ளம்தான் சுமை தோழா
கயிறினைத் தூக்கி எறி
கலக்கத்தைச் சுட்டு எரி
சுமைகளில்
அனுபவம் பாரு
சுதந்திரம் உனக்குள் தேடு
அமைவதில்
உயர்வினைப் பாரு
அழியாத நம்பிக்கையோடு
No comments:
Post a Comment