நல்லவனாய்
இருப்பது முக்கியமா
நல்லவன் என்று
பெயர் எடுப்பது முக்கியமா

நல்லவனாய்
இருப்பவனெல்லாம்
நல்லவன் என்று
பெயர் எடுப்பதில்லை

நல்லவன் என்று
பெயர் எடுத்தவனெல்லாம்
நல்லவனாய் இருப்பதில்லை

நல்லவனாகவும் இருந்து
நல்லவன் என்று
பெயரும் எடுத்தவன்
அரிதிலும் அரிதானவன்

அப்படி அரிதானவன்கூட
எந்தக் காலமும்
எல்லோரிடத்தும்
நல்லவன் என்று
பெயரெடுத்ததுமில்லை

ஒரு கெட்டவன்
மனிதர்களின்முன்
நல்லவன் என்று
பெயரெடுக்க முடியும்

ஒரு நல்லவன்
மனிதர்களின்முன்
கெட்டவன் என்று
பெயரெடுத்திருந்தாலும்
இறைவனின்முன்
நல்லவன் என்றே
பெயரெடுப்பான்

நல்லவனாய் இல்லாமல்
நல்லவனாய்ப்
பெயர் மட்டும் எடுக்கப்
பாடுபட்டவனுக்கு
இரு சபைகளில் தண்டனை
உறுதியாக உண்டு

ஒன்று
மனச்சபை
மற்றது
இறைச்சபை

உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm



23

சகோதரனே

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன

நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்

நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்
.

உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்

அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே
.

நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்

நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே
.

பிரிந்தோம்

மீசைகளும் ஆசைகளும்
வளர வளர
நாம் பிரிந்தோம்சட்டைகளுக்காக வந்தச்
சண்டைகள்
சட்டுச் சட்டென்று
விட்டுப் போனாலும்

சொத்து சுகமென்று
வந்த சண்டைகள்
நம்மைச்
சும்மா இருக்கவிடவில்லையே
.

வெறுமனே ஓடும்போது
கரைகளைக் காயப் படுத்தாத
நம் நதிகள்

கோபம் என்றதும்
நாடு காடு என்றா பார்த்தன

உனக்கும் எனக்கும்
வீரம் விளைவித்தது
எந்தப் பாலோ
அந்தப் பால்தானா
நமக்குள்
விரோதத்தையும்
விளைவித்தது
.

நாம் பிரிந்தோம்

இந்த இடைவெளியில்
எனக்கும் உனக்கும்
எத்தனையோ உறவுகள்
புதுப் புது பந்தங்கள்
இரத்தக் கிளைகள்

எல்லாமும் ஆகின
.

இன்றோ
நானென் சாய்வு நாற்காலியின்
தனிமை மடியில்
மனதைத்
தொங்கப் போட்டுக்கொண்டு
மல்லாந்து கிடக்கிறேன்
.

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

நீ எங்கே

நீர் நிறைந்த
என் விழிகளுடன்
இன்று நான்
உன்னைத் தேடுகிறேன்

-அன்புடன் புகாரி 1997

அரசியல்வாதிகள் செத்து
என்றோ
பெருவணிகர்களாய்ப்
பிறந்துவிட்டார்கள்

இனியும் ஏன் இவர்களை
அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்
என்று நாம்
தப்பும் தவறுமாய்ச்
சொல்லித் திரியவேண்டும்

முதலே இடாமல்
முதல் எடுக்க
எத்தனைப் பாடுபட்டு
ராப்பகலாய் உழைக்கிறார்கள்

அவர்களது
விளம்பரயுத்திகளின் தரம்
வேறு யாருக்கேனும் வருமா

அவர்களது
கூட்டுச் செயல்பாட்டுப் பணிதான்
எத்தனை அபாரம்

அவர்களது
நிறுவன வளர்ச்சியும்
பெருலாப நோக்குப் பார்வைகளும்
எத்தனை வலிமையானவை

எதைக் கொடுத்தாலும்
விற்றுத் தீர்க்கிறார்களே

நேர்மை
பண்பு
நாட்டின் வளர்ச்சி
மக்கள் முன்னேற்றம்
என்று
எதை வேண்டுமானாலும்
கொடுத்துப் பாருங்கள்

ஓட்டு என்ற
வணிக உரிமம் பெற
ஒற்றைக் காலில் நிற்பார்கள்

ஒழுக்கத்தை ஏலம்விடுவார்கள்
உண்மையை விற்பார்கள்

எந்த விலை தந்தும்
ஓட்டுகளைப் பெற்றுத்தான் 
ஓய்வார்கள்

இனியும்
இந்த வணிகமணிகளை
அரசியல்வாதிகள்
என்று
பிழையாக அழைத்து
அவர்களின் பிழைப்பைக்
கொச்சைப் படுத்தாதீர்கள்

பெரு வணிகர்கள் என்றழைத்தே
கௌரவப்படுத்துங்கள்


- அன்புடன் புகாரி
பழக்கம்
வலிமையானது

ஆயின்
உண்மை
அனைத்தைக் காட்டிலும்
வலிமையானது

உண்மையறிவோம்
உயர்வோம்

- அன்புடன் புகாரி
தமிழ்ப் புத்தாண்டு
தையிலாம்

புது வருஷமோ
சித்திரையிலாம்

நலமும்
ஷேமமும் பெற்று
வளமும்
சுபிட்சமும் பெற

நான்
எதை
எப்போது
கொண்டாட வேண்டும்

இப்படிக்கு
அன்புடன் தமிழன்
உன்னிடம்
ஆரியம் வெல்லும்
ஆங்கிலம் வெல்லும்
ஆனால்...
தமிழ் வெல்ல
வழியில்லை என்றால்
நீ தமிழன்தானா?

உன்னிடம்
மதம் வெல்லும்
வயிறு வெல்லும்
ஆனால்...
தாய் வெல்ல
வழியில்லை என்றால்
நீ மனிதன்தானா?

என்
பணி முடியும்முன்
நீ கல்
நான் சிற்பி

என்
பணி முடிந்தபின்
நீ கடவுள்
நான் தீண்டத்தகாதவன்

மகாவீரர் அகிம்சையே
உலக மொழியாதல் வேண்டும்

அன்னை தெரிசா அன்பே
உலகக் கலாச்சாரமாதல் வேண்டும்

வன்முறையற்ற மனிதமே
உலகம் என்றாக வேண்டும்

மனிதா
உன் வாழ்வில்
இவை நோக்கிய உன் ஓரடியும்
சொர்க்கத்தின் கதவுகளைத்
தட்டாமல் திறக்கும்

வன்முறை அறுப்போம்

நெஞ்சுக்கே திரும்பும்
கூர்முனைக் கத்தி

கண்ணுக்குக் கண்கேட்கும்
குருட்டுக் கோடரி

ரத்தம் குடிக்கத் துடிக்கும்
போதை ராட்சசன்

தலைமுறை அழிந்தாலும்
அழியாப் பிணந்தின்னி

வன்முறை வெறுப்போம்
நாம் வாழ

வன்முறை துறப்போம்
நம் குடும்பம் வாழ

வன்முறை மறுப்போம்
நம் ஊர் வாழ

வன்முறை அறுப்போம்
நம் உலகம் வாழ

குடி
குடியைக் கெடுக்கும்

குடிக்காவிட்டால்
குடியரசு
தடியால் அடிக்கும்

ஊற்றித் தந்து
ஊட்டம் பெறுகிறது
தமிழரசு

குடித்துவிட்டு
மாய்ந்து மடிகிறது
தமிழினம்

தமிழ்நாடு
தனிநாடு

தன்னிகரில்லா
தண்ணிநாடு

அன்புடன் புகாரி
மனசாட்சி எனப்படும் ஆழ் உள்ளத்தின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் நேர்மையாக நடப்பதும் வழிபாடு எனப்படும்
இறைவன் வழியைப் பின்பற்றுதல் என்பதும் வழிபாடு எனப்படும்
ஆகவேதான் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறான் என்கிறார்கள்
இறைவனின் அறத்தை காலங்காலமாகக் கேட்டு வளர்ந்த உள்ளத்தில்தான் மனசாட்சி உறுதியாக நிற்கும்
இறைவனைத் தொழுதல் என்றாலும் அவனை வழிபடுதலே
இறைவணக்கம் என்றாலும் அவனை வழிபடுதலே
சொல்லில் ஏதும் இல்லை, வைக்கும் எண்ணத்தில்தான் எல்லாம் இருக்கிறது
அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது

கரி
மேலும் கருகிக் கருகி
இறுகுவது
வைரமாவதற்குத்தான்

உங்கள் வழமையான
அன்பிலும் பண்பிலும்
நயாகராவாகவே
இருங்கள்

வந்து குவியும் துக்கங்களை
வந்த நொடியே
காலைக் கடன்போல
வெளியேற்றிக்கொண்டே
இருங்கள்

ஏறும் துன்பம்
எதுவென்றாலும்
இறங்குவதே இல்லை
அதைச்
சுமந்து கொண்டே
நின்றால்

உங்களை
உண்மையிலேயே
உயிரில் வைத்து நேசிப்பவர்கள்
யார் யார் என்பதை
இவ்வேளையில்
கணக்கெடுத்துக்கொண்டே
இருங்கள்

பகட்டுகளையும்
ஏமாற்று வித்தைகளையும்
அடையாளப்படுத்திக்கொண்டே
இருங்கள்

இறைவன் உங்களை
அடுத்ததோர் உயர் நிலைக்குத்
தயார் செய்கிறான்

வெற்றி பெறுங்கள்
வாழ்த்துக்கள்






25 எழுது ஒரு கடுதாசி

கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.


நேத்துவர எம்மனச
      நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
      பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
      விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
      ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
      பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
      நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
      மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
      தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
      வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
      பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
      புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
      மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
      அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
      புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
      வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
      குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
      தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
      போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
      கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
      வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
      ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
      ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
      நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
      தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
      தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
      புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
      நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
      எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
      நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
      வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
      நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
      எழுது ஒரு கடுதாசி

- அன்புடன் புகாரி

24 அன்பு நெஞ்சே

ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு
         ஏணியைப் பள்ளத்தில் இறக்கிவிட்டு
ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு
         உள்ளமே இல்லாத கள்வர்களாய்
ஊரிலே பலபேர் நல்லவரே
         உன்தலை மீதேறி நடப்பவரே
யாரிவன் யாரவன் என்பதைநீ
         எண்ணி நடப்பாயென் அன்புநெஞ்சே

தோளிலே கையிடும் நண்பனென்பான்
         துணைக்குநீ அழைக்காமல் வந்துநிற்பான்
நாளிலே பலமுறை தேடிவந்து
         நன்றியே நானென்று கூறிநிற்பான்
ஏழைநீ துயர்பெற்ற நாட்களிலோ
         எங்கும் உன்கண்களில் படமாட்டான்
தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
         தெரிந்துநீ நடப்பாயென் அன்புநெஞ்சே

யாருமே போற்றிடும் ஏற்றதொழில்
         எவனையோ குறைகூறித் திரிவதென
ஊரிலே பலபேர் அப்படித்தான்
         உன்னையே குறைகூற வந்துநிற்பார்
யாரினைக் கண்டும் நடுங்காதே
         எவர்சொல் கேட்டும் நீ சிதையாதே
பேருக்கு அவர்முன் செவிமடுத்து
         பிறகதைத் தனிமையில் எடைபோடு

ஏனெனுங் கேள்வியைக் கேட்பதற்கு
         என்றும் எவருக்கும் அஞ்சாதே
ஆனது ஆகட்டும் என்பதுபோல்
         அசைய வெறுத்துமட்டும் விலகாதே
ஆனது உன்னால் எவையெவையோ
         அனைத்தையும் செய்து நீ முன்னேறு
ஊனமே எதுவென அறிவாயோ
         உடைந்து கைகட்டிக் கிடப்பதுதான்

தேனினைப் போலே இனியதெது
         தெளிந்தநல் லறிவுக்கு ஏற்றதெது
மானிட மொழிகளில் உயர்ந்ததெது
         மௌனமே யல்லாது வேறெதது
தூணிணைப் போலே அமைதியினைத்
         தூக்கி நிறுத்துவதப் பேரழகு
வேணும் போதே வாய்திறந்தால்
         வேதனை ஒண்டாது அன்புநெஞ்சே

சாதிகள் சிறிதெனத் தள்ளிவிடு
         சமத்துவம் பெருஞ்சுகம் போற்றிவிடு
சேதிகள் கேட்டிட அனுதினமும்
         செவியினைப் பிறருக்காய் வளர்த்துவிடு
பாதியை மெழுகிப் பொய்யுரைக்கும்
         பகட்டினை மதியாதே என்றென்றுமே
தேதியொன் றானதும் நிலைமறந்து
         தேவையைப் பெருக்காதே அன்புநெஞ்சே

ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படிகீழே தாழ்ந்திருப்பார்
ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படியேறி உயர்ந்திருப்பார்
ஆயினும் அவற்றையே பெரிதாக்கி
         ஆணவம் அவமானம் அத்துமீறும்
நோயினில் வீழ்ந்தே நோகாமல்
         நேர்வழி நடப்பாயென் அன்புநெஞ்சே

சாதனை ஆயிரம் செய்துவிடு
         சாவினை அழிக்கப் பெயர்நாட்டு
வேதனை வேண்டாம் தோல்விகளில்
         வேண்டும் திடநெஞ்சம் எப்போதும்
சோதனை எத்தனை வந்தாலும்
         சோர்வது கூடவே கூடாது
பாதம் பணிந்திட ஆசைகளைப்
         பழக்கப் படுத்திவை அன்புநெஞ்சே
ஆசை கொண்ட
எந்த உரையாடல் துவக்கமும்
வாக்குவாதச் சம்மட்டியால்
காயப்படாமல்
நிறைவு பெற்றதாய்
ஞாபகமே இல்லை

எடுத்துச் சென்ற
அப்பழுக்கற்ற
எந்த அன்பும் பாசமும்
அடிபட்ட புறாக்களைப் போல்
காலொடிந்து
அலகொடிந்து
சிறகொடிந்து
திரும்பும் வாடிக்கையேயன்றி
வேறெதுவும் இருந்ததே இல்லை

இன்று உறுதியாய்
புரியவைத்தே தீரவேண்டும்
விடிவுபெற்றே ஆகவேண்டும் என்ற
அரும்பெரும் முயற்சிகளெல்லாம்
குழப்பங்களின் மீது
கொடுங் குழப்பங்களைக்
கொப்பளிக்காமல் இருந்ததே இல்லை

இருப்பதோ
ஒரே ஒரு வாழ்க்கை
இதிலும்
ஏன் தட்ட வேண்டும்
இந்தக் கதவையே என்று
உட்கிளி கெஞ்சிக் கெஞ்சிக்
கேட்டழாத நாளே இல்லை

இருந்தும்
உறவுச் சங்கிலிகளில்
சின்னச் சின்ன வண்ண விழிகளின்
பெரிய பெரிய கண்ணீர்த் துளிகள்
கொட்டிக் கொட்டி
இறுக்கும் இறுக்கத்தை
அவிழ்த்து முடிப்பதற்கும்
அவிழாதவற்றை
உடைத்தெறிவதற்கும்
நாள் குறித்தால்
பாழும் மனம்
கேட்கவா செய்கிறது

இதோ
வந்துவிடப் போகிறது
மரணம்
பிறகென்ன விட்டுத் தள்ளு
என்று
சொல்லிச் சொல்லியேவல்லவா
எதிராய் நிற்கிறது

அன்புடன் புகாரி
20170404