நேற்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா வழக்கம்போல நன்றாக நடந்தது. பழைய முகங்கள் சில புதிய முகங்கள் பல என்று காண முடிந்தது. ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு நேரில் வந்து பரிசு பெறும் வாய்ப்பு கைகூடியிருக்கவில்லை.

(1)
நீச்சல்காரன் என்ற புனைபெயருடைய ராஜாராமன் என்ற இளைஞர் தமிழ்க் கணிமை விருது பெற்று தந்த சொற்பொழிவு மிகவும் இயல்பாக இருந்தது. ஒரு பள்ளிமாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுபோன்றதொரு தொனியில் இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. முகநூலிலும் https://www.facebook.com/neechalkaran?fref=ts வலைப்பூவிலும் http://www.neechalkaran.com/ இருக்கிறார்.

தமிழில் இவர் போன்றவர்களின் வளர்ச்சியே மிக மிக அவசியம். அந்தவகையில் நான் இவரையும் இவர்போன்று உருவாகின்ற அனைவரையும் முதன்மையானவர்களாக நிறுத்தி வாழ்த்துகிறேன்.

இவ்வேளையில் என் நினைவில் முத்து நெடுமாறன் வந்துபோகிறார். உலகின் முதல் கூகுள் தமிழ்க் குழுமமான என் அன்புடன் குழுமம் வந்துபோகிறது. 1999 முதலான என் கணித்தமிழ் வந்துபோகிறது. இன்னும் ஏராளமானோர் வந்துபோகிறார்கள். நான் அதனுள்ளேதான் வாழ்ந்துகிடக்கிறேன்.

(2)
தமிழ் விக்கிப்பீடியா சேவைக்காக மயூரநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. அவரின் உரையை அவர் சற்றே இறுக்கமானதாய் அவைக்குத் தேவையான அரியவற்றை சட்டென வழங்குவதாய் இருந்திருக்கலாம். அவரிடம் நிறைய செய்திகள் இருந்தும் வழங்குவதில் பயிற்சி இல்லை என்றே தோன்றியது.

தமிழில் உறுதி செய்யப்படவியலாத இப்படியான விக்கிப்பீடியா இடுகைகள் அவசியம்தான். பல்வகைத் துறை அறிஞர் கூட்டம் இதன் தரத்தில் நின்று உரம்சேர்க்க வேண்டி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

(3)
அமெரிக்காவில் மருத்துவராய் நாற்பதாண்டுகளுக்கும் மேல் வாழும் டாக்டர் திருஞானசம்பந்தம் என்பவரின் பேச்சு சுவாரசியம் மிகுந்ததாகவும் பலன் நிரம்பியதாகவும் இருந்தது. ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்குத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் அரை மில்லியனை தனியே இவர் மட்டுமே கொடுத்தவர். இவர் நண்பர் இன்னொரு அரை மில்லியனைக் கொடுத்திருக்கிறார்.

தமிழுக்கு உயர் பீடங்கள் அவசியம்தான். இதன் பலன் எந்த வகையில் தமிழின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துத் தரும் என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

(4)
முனைவர் மு. இளங்கோவனின் சிறப்புரை நன்றாக இருந்தது. கிடைத்த சில நிமிடங்களில் தொல்காப்பியனைத் தொட்டுக் காட்டினார். கணிமைப் பரிசுபெற்ற ராஜாராம் போன்றவர்களுக்கு உந்துதலாய் இருப்பதாக ராஜாராமே சொல்லிப் போனது அவருக்கான பெரிய பாராட்டு. அவர் தொல்காப்பியன் என்ற ஒருமுனை தொட்டதோடு நில்லாமல் இன்றைய கணினி முனையையும் தொட்டுப் பேசி இருக்கலாம் என்று தோன்றியது. பேசக்கூடியவரிடம் எதிர்பார்ப்பது பிழையில்லையே.

இவர்போன்றவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக, தமிழிக்கு நிறையபேர் வந்து சேரவேண்டும். தமிழ் பழமையோடு நின்றுவிடக்கூடாது, புதுமை புதுமை என்று நிறமிழந்தும் போய்விடக்கூடாது

(5)
முனைவர் ப்ரெந்தா பெக் சிறப்பு விருதினைப் பெற்று உரையாற்றினார். பலரும் கனடிய உடையில் வந்திருக்க இவரோ அழகாகச் சேலை கட்டி வெள்ளையோ வெள்ளை நிறத்தில் உள்ள தமிழ்ப்பெண்ணாகவே வந்திருந்தார். சில வரிகளில் தெளிவாகப் பேசினார். தமிழுக்கு இவர் போன்றவர்கள் வருவது இன்று நேற்றில்லை. தமிழ் அச்சில் வருவதற்கும், அகராதி தொகுத்ததற்கும் என்று நிறைய பணிகளை அயல்நாட்டவர் தமிழ்மீது பற்றுகொண்டு செய்திருக்கிறார்கள். சட்டென்று எனக்கு வீரமாமுனிவர் நினைவில் வருகிறார்.

இவர் போன்றவர்கள் இன்னும் இன்னும் ஏராளமாகத் தமிழுக்கு வந்த வண்ணம் இருக்க வேண்டும். அது தமிழ் வளர்ச்சிக்கு முக்கியமானதாய் இருக்கும்

(6)
தமிழிலிருந்து ஆங்கிலம் (கல்யாண் ராமன்) ஆங்கிலத்திலிருந்து தமிழ் (வி. டி. ரத்னம்) என்று மொழிமாற்றம் செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

மொழிமாற்றச் சேவைகள் தமிழ் வளர்ச்சிக்கான மிகப் பெரிய தூண்கள். தமிழை ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் வெட்டிப் படைப்புகள் ஓய்ந்து உச்சப்படைப்புகள் ஒளிரத் தொடங்கும்.

(7)
இந்த அவையில் மூத்தப் பெரும் படைப்பாளி அசோகமித்திரன் அவர்களுக்கு விருது வழங்கியது சிறப்பு. தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்திப் பிடித்து எழுதியவர்களுள் இவரும் ஒருவர்.

தமிழுக்கு இப்படி பெயர் சொல்லும் பிள்ளைகள் நிறைய வரவேண்டும்.

(8)
இன்னும் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

(9)
குறைகள் ஏதும் இருந்தனவா என்று யாரும் கேட்காதீர்கள். குறைகள் இல்லாமல் இல்லை ஆனால் நிறைகளையே பேசுவோமே என்று உள்ளம் சொல்கிறது.

இன்னும் எத்தனை எத்தனைபேர் தமிழ்த் தொண்டில் பிறந்ததுமுதலே இருக்கிறார். ஏன் பொதுநிலையில் நின்று அவர்கள் பக்கம் எல்லாம் இலக்கியத் தோட்டம் பூக்களைச் சொரிவதில்லை என்று எனக்குப் புரிவதே இல்லை. குறுகிய வட்டத்திலேயே சுழல்வதாகவே நான் காண்கிறேன். அது என் அறியாமையாகக் கூட இருக்கலாம். எனக்கு அறிவுரை சொல்ல எவரேனும் ஒரு தகுதியானவர் என்னிடம் விரைவில் வருவார் என்று நம்பிக்கையோடு நான் இதை நிறைவு செய்கிறேன்

(10)
அதற்குமுன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அச்சாணி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு என் வழமை மாறாத பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
27 இறுதியாய் ஒரு கேள்வி

இரத்த நயாகராவில்
மீண்டும் மீண்டும்
மனித உயிர்த் தாகத்தோடு
மதர்ப்பாய் நீராடும்
மத மங்கையரே

உங்கள்
மோகனப் பார்வைகளின்
பூரண ஈர்ப்பில்

மேலும் மேலும்
சுண்டி இழுக்கப்பட்டுச்
சுருண்டுவிழும்
பாமர ஆத்மாக்கள்

பக்திப் பெருக்கெடுத்து
கண்கள் மூடி
கைகள் உயர்த்தி

தங்கள் தலைகளிலேயே
கொள்ளி வைத்துக்கொள்கிறார்கள்

வாருங்கள்..
வந்து உங்கள் கூந்தலை
உலர்த்திக்கொள்ளுங்கள்

.

கீதை அழுகிறது
குரான் தேம்புகிறது
பைபிள் கண்ணீர் வடிக்கிறது

வாழ்க்கையைத்தானே
வரையறுத்துச் சொன்னோம்

இறைவனைத்தானே
கண்டு பிடித்துத்தந்தோம்

இந்த
மத வாகனங்களோ
இவர்களை
வாழ்க்கைச் சொர்க்கத்திற்கு
இட்டுச் செல்லாமல்

இப்படி
மூர்க்கமாய் முட்டிக்கொண்டு
சடல தாகம்கொண்ட
சுடுகாட்டையல்லவா
தங்களின்
வெற்றிமேடையாக்கிவிட்டன

.

இப்படி
மாண்டு தீர்ந்தால்

இந்த
மதங்கள் யாருக்கு

அந்த
இறைவன்தான் யாருக்கு

நான் மதவாதி
என்றான் இவன்
நான் பகுத்தறிவு வாதி
என்றான் அவன்
எனக்கோ
இரண்டுமே புரியவில்லை

மதவாதி என்றால் யார்?

ஒரு மதத்தில் பிறந்ததால் அதை ஏற்று, வேறு மதத்தினரைக் கண்டாலே சிவந்து சிறுத்து வெடித்து வெறுப்பவன் பெயர்தான் மதவாதியா?

என்றால் அவன் மதவாதி அல்ல மத வியாதி.
ஆம் அவனுக்குப் பீடித்திருப்பது மத வியாதிதான்

அந்த வியாதி தொற்றிப் பரவக்கூடியது. பரவிப் பரவி உலகையே அழித்து முடித்துவிடும் கொடூர வியாதி அது.

பகுத்தறிவு வாதி என்றால் யார்?

பகுத்தறியாதவன் மனிதனா? ஆகவே மனிதன் என்றாலே பகுத்தறிபவன் என்றுதான் பொருள். அதனால்தான் மனிதர்களுக்கு ஆறு அறிவு சொல்லப்படுகிறது. அந்த அறிவில் ஏற்றம் இறக்கலாம் இருக்கலாம் ஆனால் பகுத்து அறியவே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கவே முடியாது.

ஆகவே பகுத்தறியாதவன் மனிதனா? அப்படி மனிதனே அல்லாத மிருகத்தைப் பற்றி புழுக்களைப் பற்றி கற்களைப்பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அந்தக் காட்டுமிராண்டியால் அல்லது அறிவிலியால் ஆகும், ஆகப்போகும் துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கை என்ற அற்புதப் பயிரை அழித்துத்தான் முடிக்குமில்லையா?

நீ எந்த மதத்தில் வேண்டுமானலும் இரு. ஆனால் எல்லா மதங்களையும் நேசிப்பவனாய் இரு. மதத்தில் இருந்தாலும் இல்லாவிட்டால் நிச்சயமாக நீ சிறந்த பகுத்தறிவுவாதியாய் இரு. பகுத்தறிவிற்கு ஏற்பில்லாத எதையுமே எக்காரணத்திற்காகவும் எந்த மதத்திலும் ஏற்காதே.

உலகை நல்ல ஆன்மிகத்தால் சிறந்த பகுத்தறிவால் நிறை அது உனக்கும் உன் சந்ததிக்கும் எல்லாம் தரும் இனிமையே வாழ்வாய் மலரும்.

#மதவாதியும்_பகுத்தறிவும்
ஒரு மதத்தை
உண்மையாய் நேசிக்கும்
ஓர் உள்ளம்
எல்லா மதங்களையும்
தன் மதத்தைப் போலவே
நேசிக்கும்

அதுதான்
ஆன்மிகம் நிறைந்த
பொன்மனம்

அப்படியான
ஆன்மிக மனமற்றவர்கள்
எம்மதத்தில் இருந்தாலும்
அங்கே அவர்கள்
அரசியல் செய்துகொண்டுதான்
இருப்பார்கள்

மதங்களுக்குள்
அரசியல் பெருகப் பெருக
வக்கிரர்கள் பிறப்பார்கள்
வெறியர்கள் வளர்வார்கள்
தீவிரவாதிகள் செழிப்பார்கள்
மனிதர்கள் சாவார்கள்
சுஜாத்தாக்கள் எல்லாம் எழுதி எழுதி 
தமிழ் வாசகர்களை உருவாக்கி இருக்காவிட்டால்
ஜெயமோகன்களுக்கெல்லாம் இன்று 
நான்கு வாசகர்கள்கூட
இல்லாமல் போயிருப்பார்கள்
பேராற்றின்
பெருங்கரைகளுக்கு
அப்பால்

அலைவிழுந்து
சிதறித் தெறிக்கும்
சிறுகுழி
அழுக்குமணல்
விளிம்புகளில்

நிறமிழந்த
சிறுநுரைக்கூட்டம்
ஓடியோடி
காலக்காற்றில்
உடைந்தழியும்
காட்சிதனைக் காண்பார்

கிட்டியது
சாட்சியென்று...

பேராற்றின்
பேரெழில் ஆற்றலையே
தூற்றித் தூற்றித்
தாழ்வார் தரமிலார்

அவர்
உள்ளம்
கள்ளமேயன்றி
நல்லதோ சொல்
நுண்ணறி நெஞ்சே

அன்புடன் புகாரி
அர்ச்சனைகள் சுலோகங்கள் என்று இந்துமதம் சார்ந்த அனைத்தும் சமஸ்கிரதத்தில் இருப்பதால், தமிழனுக்கு அவன் ஓர் இந்து என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

பைபிள் ஹீப்ரு, அராமிக், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு கிருத்தவன் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

குர்-ஆன் அரபியில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு முஸ்லிம் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

இந்து முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் மதங்கள். மதங்களின் வழியேதான் மொழியுணர்வும் இருக்க வேண்டுமென்றால் உலகில் பல ஆயிரம் மொழிகள் அழிந்து மிகச் சில மொழிகளே வாழநேரிடும்.

மதம் என்பது ஏற்பதால் வருகிறது. இன்று நீ ஒரு மதத்தில் இருக்கலாம். நாளை இன்னொன்றுக்கு மாறுவாய் அல்லது மதமற்றவனாய் ஆவாய்.

ஆனால் மொழி என்பது அப்படியல்ல. அது தாயோடு வருகிறது. அதை அந்தத் தாயே நினைத்தாலும் அழிக்க முடியாது.

இன்றெல்லாம் தாயே தமிழை அழித்துத் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஊட்டுகிறாள். ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள். ஒரு தமிழனின் மரபணுக்களில் ஓடுவது தமிழெழுத்துக்கள். அதை அவளால் அழிக்கவே முடியாது.

அது ஒருநாள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியேறும். ஐம்புலன்களுடனும் ஐக்கியம் ஆகியிருக்கும் தாய்மொழியை அழிப்பது அத்தனை சுலபமான விடயம் அல்ல. வெளி உணர்வுகளுக்குத்தான் பூட்டு. உள்ளுணர்வுகளை மாற்ற அத்தனை எளிதில் முடியுமா?

ஆங்கிலம் மட்டும் படித்து ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தமிழன் ஒரு தமிழ்ப்பாட்டு கேட்டு தன்னை மறப்பான். ஏன்?

ஒரு சொற்பொழிவைக் கேட்டுச் சொத்தெழுதித் தர தயாராகும் உள்ளங்களும் உண்டு.

தாய்மொழி காப்போம், அது நம் செவிகளுக்கு நெருக்கமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் நாவுக்குள் தேன் வார்ப்பதைத் தடுப்பவர்களாய் நாம் இருக்க வேண்டாம்.

தாய்மொழி காப்போம், அது நம் விழிகளுக்குள் கனவுகளாய் விரிந்தவண்ணமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் உயிருக்குள் உயிராய் உட்கார்ந்திருப்பதை நம்மால் வெளியேற்றவே முடியாது என்பதை உணர்ந்தவர்களாய்... தாய்மொழி காப்போம்

அன்புடன் புகாரி
20160612

ஒரு கவிஞனின் முகவரி



கட்டிவைத்தக்
கரையில்லா வெள்ளம்

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்

தூற்றி
வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி

ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்

கவிஞன்

*

என்னைப்பற்றித்தான் நான் எனக்குள் கண்டதை எழுதினேன் இப்படி பாரதியைப் போல. ஆனால் இறுதியில் கவிஞன் என்று முடித்தேன். இந்த குணங்களை அனைத்துக் கவிஞர்களுக்குமானதாக ஈந்தேன். ஏனெனில் சுயம்பாட நாணம் கொள்வதும் என் அடையாளங்களுள் ஒன்று ;-)

நினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்

நினைத்துப் பார்க்கிறேன்

2005ல் சென்னை சென்றதும். திசைகள் எனக்கு அறிமுக விழா வைத்ததும். எழுத்தாளர் மாலன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தியதும் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றியதும், கவிஞர் இந்திரன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி, கவிஞர் அண்ணாகண்ணன் ஆகியோர் நூல் விமரிசனங்கள் தந்ததும், மறக்கமுடியாத நிகழ்வுகள்


சென்னையில் திசைகளின் கவிமுகம் அறிமுகம் விழாவில் திசைகள் மாலன் கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து தலைமையுரை ஆற்றுகிறார். சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து. விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி
*****

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப்
பாராட்டுவோர்
பலர்

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத்
தூற்றுவோர்
சிலர்

நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
வியப்போர்
பலர்

நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
மறைப்போர்
சிலர்

சிலரா பலரா

நம்மையும்
நம் வாழ்வையும்
தீர்மானிப்பவர்
உண்மையில்
சிலரா பலரா

சிலரும் அல்லர்
பலரும் அல்லர்

உன்னையும்
உன் வாழ்வையும்
தீர்பானிப்பவன்
நீதான்

உன் தமிழ்ப்பற்று
உனக்குள்
எவருக்காகவும்
வந்துவிடவில்லை

உனக்காகவே
உன்னால்
உனக்குள்
வந்தது
வளர்ந்தது

உன் கவிதை மோகம்
எவர் வளர்த்தும்
உனக்குள்
பற்றித் தொற்றி
வளர்ந்துவிடவில்லை

உன் மனம்
வளர்த்தே
மனதோடு மனதாக
தளைத்தது
வளர்ந்தது

அன்புடன் புகாரி
20160610

நினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை

நினைத்துப் பார்க்கிறேன்

1999 கனடா வந்தேன். வந்தநாள் முதலாக இணையத் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டேன். 

தமிழ்  உகலம் என்னும் யாஹூ குழுமம்

இங்கே கொட்டியத் தமிழ் மடல்கள் எண்ணிலடங்கா. இவர்கள் நல்ல தமிழில் மட்டுமே உரையாட உலகத்தோரை அழைத்தவர்கள். ஆஸ்தான கவிஞன் என்ற உயர்வை எனக்குத் தந்தவர்கள். இங்கேதான் உலகின் எந்த மொழியிலும் நிகழாத ஒரு புதுமை நிகழ்ந்தது.

அன்புடன் இதயம் என்ற என் கவிதைத் தொகுப்பை இணையத்திலேயே வெளியிட்டார்கள். மாலன் அதற்கான தலைவர்.

இங்கே நான் சந்தித்த தமிழ் நேசர்களைப் பட்டியலிட்டு எழுதத் தொடங்கினால் ’தமிழ் உலகம் தந்த என் உலகம்’ என்ற நீண்ட தொடர் எழுத வேண்டி வரும். அதெல்லாம் நான் பணி ஓய்வு பெறும்போது பார்த்துக்கொள்ளலாம். 

தினம் ஒரு கவிதை 

என்.சொக்கனின் தினம் ஒரு கவிதை என் கவிதைகளுக்கு முற்றம் தந்து  அழகாக வடிவமைத்து உலகெலாம் பரவச் செய்தது. சிறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வந்தாலும், நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ந்து கவிதைகள் இட்டுவந்திருந்தாலும், இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மாநில சிறந்த கவிதையாக என் கவிதை ஒன்று தேர்வு செய்யப்பட்டு இந்தியில் மொழிமாற்றம் ஆகியிருந்தாலும், அலிபாபா, தாய், குமுதம், திசைகள் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் அப்போதே வெளிவந்திருந்தாலும், ஒரு புத்தகம் போடவேண்டும் என்ற துணிச்சலை தினம் ஒரு கவிதையும் தமிழ் உலகமும்தான் எனக்குத் தந்தன. 

கூடவே கனடா உதயன் பத்திரிகை என் கவிதைகளுக்குத் தங்கப் பதக்கம் தந்து பாராட்டியதும் ஒரு முக்கிய காரணம்

அன்புடன் என்னு கூகுள் குழுமம்

யாஹூ குழுமங்களில் மட்டுமே உலாவந்த இணையத் தமிழை. திஸ்கியில் மட்டுமே திளைத்திருந்த இணையத் தமிழை முதன் முதலில் கூகுள் குழுமத்திற்குக் கொண்டு வந்த குழுமம். இது முழுக்க முழுக்க யுனித்தமிழ் என்னும் யுனிகோடு தமிழில் நடத்தப்படும் குழுமம். உலகில் இதுவே இப்படி உருவான முதல் குழுமம். அதைத் தோற்றுவித்து வளர்த்த பணி என்னுடையதுதான்.

அன்புடன் அனுபவங்களைப் பற்றி நான் சொல்ல, என் ஆயுளே போதாது.

இங்கே ஒவ்வொருவருக்கும் இணையத் தமிழ் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இணையத்தில் எப்படி தமிழில் எழுதுவது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. கூகுள் குழுமத்திற்கு அழைப்பு விடுத்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் படைக்கப்பட்டன.

இன்னும் வலைப்பூ, வலைத்தளங்கள் என்று நிறைய உண்டு

தற்போது முகநூல் டிவிட்டர்களிலும் தமிழ்ப்பந்தல் இட்டு தமிழ் தாகத்தை இணையக் கோப்பைகளில் அள்ளிப் பருக உலகத்தாருக்கு அன்புடன் தரப்படுகிறது
எளிமையாகச் சொல்வதென்றால் நோன்பு என்பது சூரியன் எழும்போது துவங்கும் விழும்போது முடிவடையும்.
அதிகாலையிலேயே காலை உணவை உட்கொண்டுவிட்டு மதிய உணவை உண்ணாமல் மீண்டும் இரவு உணவை உண்ண வேண்டும்.
இதில் சற்றே சிரமமானது என்னவென்றால் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அப்படியே கட்டுப்பாட்டோடு நோன்பு இருக்க வேண்டும்.
இப்படியாக ரமதான் மாதம் முழுவதும் முப்பது தினங்களுக்கு நோன்பு நோற்க வேண்டும்.
சில நாடுகளில் சில மாதங்களில் 9 மணி நேரங்கள் மட்டுமே நோன்பு இருக்க வேண்டி வரும். ஏனெனில் அங்கே அம்மாதம் பகல் பொழுது குறைவு.
சில நாடுகளில் சில மாதங்களில் 22 மணி நேரம்கூட நோன்பு இருக்க வேண்டி வரும் ஏனேனில் அப்போது அங்கே பகல் பொழுது மிக அதிகம்.
ஆனால் சில நாடுகளில் குறிப்பாக கனடாவின் வட எல்லைகளில் சூரியனே எழாமல் சில நாட்கள் செல்லும். சில நாட்களில் சூரியன் விழாமலே நிரந்தரமாய் நிற்கும்.
அங்கெல்லாம் எப்போது நோன்பு வைப்பார்கள். சவுதி அரேபியாவில் வைப்பதுபோல் சுமார் 14 மணிநேரம் நோன்பை எப்படி வைப்பது?
அதற்கு இருவகையான தீர்வுகளை யூதர்கள் கொண்டு வந்தார்கள். இஸ்லாமியர்களும் அதுபோன்ற தீர்வுகளை ஆலோசித்தார்கள்.
1. அருகில் உள்ள நாட்டின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது
2. மெக்காவின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது
தேர்தல் 2016
குளத்தைக்
குத்தகைக்கு எடுத்து
அத்தனை மீனையும் 
பிடிக்கப் போகும்
பாக்கியம்
இந்த முறை
யாருக்குங்க?
உங்கள்
பொய் மூட்டைகள்தான்
குத்தகைப் பணம்
அதுவன்றி
இந்த வணிகத்தில்
தனியே ஏதும்
பணம்தரத் தேவையில்லை
தவிர
மீன்களுக்குக் கொஞ்சம்
பொரி தூவினால்
போதும்
அம்புட்டும் சிக்கிடும்

தேர்தல் 2016
காசு பாக்கணும்னா ஒரு நல்ல காண்ட்ராக்ட் கிடைக்கணும்!
இந்த காண்டிராக்ட் யாருக்குக் கிடைக்குமோ?
நாக்குத்தள்ளி சூது நடக்குது.
நல்ல வியாபார உத்திகள்

கூட்டிக்கழிச்சுப் பாத்தா
தேர்தல் என்றால் வேற ஒண்ணுமே இல்லீங்க.
காசு பணம் money துட்டு சில்லறை நோட்டு கத்தை கரன்சி ரொக்கம் பொட்டி .. ...

ஆகா
ஒவ்வொரு மேடையிலும்
எத்தனை எத்தனை
அபார
நடிகர்கள் நடிகைகள்
தேர்தல்
நெருங்க நெருங்க
போட்டி வலுக்கிறது
மக்களின்
விருது யாருக்கு
வெற்றிக்குப்பின்
விருது தந்தவர்களையெல்லாம்
ஐந்தாண்டுகள்
நொக்கி நொறுக்கி
தோற்கடிக்கப் போகும்
அந்த வெற்றியாளர்
யார்? யார்? யார்?

ஒரு வாரம்தான் இருக்கு!
தேர்தலை நினைத்துத் தூங்காதவர்கள் எத்தனைபேர்?
ஆயிரமா? லட்சமா? கோடியா?
வாக்காளப் பெருமக்களே உங்கள் கனவில் வருவது ஐநூறா? ஆயிரமா? இல்லை அதுக்கும் மேலயா?
அப்டீன்னா, தேர்தலில் நிக்கிறவங்க கனவில் எத்தனை சைபர்கள் கொண்ட தொகை ஊஞ்சலாடும்?
இந்த வியாபாரம் நல்லபடியா நடக்கணும்னு சாமியை வேண்டிக்கிறேன் மக்களே!
கவிதை என்பது 
சொந்த 
உணர்வுகளிலிருந்து 
சிறகடித்துப் 
பறக்கும் 
வார்த்தைப் பறவை

அன்புடன் புகாரி
20160507
*****

கனடாவில்...

தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் தெரியவில்லை

கன்னடப் பிள்ளைகளுக்குக்
கன்னடம் தெரியவில்லை

தெலுங்குப் பிள்ளைகளுக்குத்
தெலுங்கு தெரியவில்லை

பாகிஸ்தானிக்கு
உருது தெரியவில்லை

பங்களாதேசிக்கு
பெங்காளி தெரியவில்லை

சீனருக்கு
மாண்டரின் தெரியவில்லை

தெரிந்ததெல்லாம்
ஆங்கிலம் ஒன்றுதான்

காதல் சந்தை
கல்யாணச் சந்தை எல்லாம்
அமர்க்களப்படுகின்றன

எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர்மொழி
எல்லோரும் கனடா மக்கள்

ஊரிலிருந்து
ஒருவன் வந்தால்
அவன்தான் வேற்று ஆள்

தேடிக் காதலிக்க
அவனிடம்
ஒன்றுமே ஒட்டவில்லை

கூடி மணமுடிக்க
அவனிடம்
பிடித்ததாய் ஏதுமில்லை

பங்களாதேசி மச்சான்
பாகிஸ்தானி மாமன்
தெலுங்கு மைத்துனி
கன்னட நாத்தனார்
சீன மாமியார்
தமிழ்ப் பெண்

போதுமா
எங்கள் பொன்னான
புலம்பெயர் வாழ்க்கை!

அன்புடன் புகாரி
20160506
சுயநலம்
விரிந்து விரிந்து
சூறையாடியது
உலகை

பலங்கொண்ட சுயநலம்
பதரான சுயநலங்களைக்
கொன்று மென்று
தின்று செரித்தது

இறுதியாய்...

ஒரே ஒரு
சுயநலம் மட்டுமே
மீந்தது
வாழ்ந்தது

ஒற்றை உயிரைச்
சுமக்கக் கசந்து

தன்னைத் தானே
சுருக்கிச் சுருக்கி

மீண்டும்
கருந்துளைக்குள்ளேயே
காணாமலே போனது
பரிதாபப் பிரபஞ்சம்

அன்புடன் புகாரி
20160505
எத்தனை உயிர்களோ யாருக்குத் தெரியும்?

இன்றே பிறந்த இளையவனே
உன்னிடம் ஒரு கேள்வி

பூமிக்குப்
புதியவனா
நீ

இல்லையடா
நீ பூமிபோல் பழையவன்

அறிந்துகொள்
பூமிக்கும் உனக்கும்
ஒரே வயதுதான்

ஆச்சரியமாய்
இருக்கிறதா

எங்கிருந்தோ வந்தா
நீ இந்த
பூமியில் விழுந்தாய்

இல்லை இல்லை
இந்த
பூமியிலிருந்துதான்
இப்படியாய்
நீ
மாறிக்கொண்டாய்

ஒரு
புதியவனைப் போல்
உன் மண்ணிலேயே
நீ விழுந்து
காயம்பட்டவனைப் போல
அழுகிறாய்

என்றால்
இது உன்
இன்னொரு பிறவியா

இல்லையடா
இல்லை

இந்த பூமி
ஐம்பூதங்களால்
ஆனது

ஐம்பூதங்களுக்குத்தான்
இங்கே
நாளும் பொழுதும்
நொடியும் நொடித்துகளும்
மாற்றங்கள்

அதன்
இன்றைய
ஒரு மாற்றமான
நீ
புதியவன் என
அழைக்கப்படுகிறாய்

மாற்றங்கள் எப்போழுதும்
புதுயனதானே

முந்நொடிபோல்
இந்நொடி இல்லை
இந்நொடி போல்
மறுநொடி இல்லை

நீ என்பது
ஓருயிர் அல்ல
உடைந்தழிந்து உயிர்மாறும்
பல நூறு மில்லியன்
உயிர்கள்

சாவும் பிறப்பும்
நூறு வருடம் என்பது
கூட்டுயிரான உனக்குத்தான்

கூட்டுயிருக்குள்
கூடுகட்டி வாழும்
கோடி கோடி உயிர்களுக்கல்ல

அவை
முந்நொடியில் சில லட்சமும்
பின்நொடியில் பல லட்சமுமாய்
அழிந்து பிறக்கும் அதிசயங்கள்

இந்த பூமியின்
ஒவ்வொரு துகளிலும்
எத்தனை உயிர்களோ
யாருக்குத் தெரியும்

அன்புடன் புகாரி
20160414

தென்திசை சென்று ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்
தை முதல்நாள்
அதுவே தமிழர் ஆண்டின் 
தொடக்க நாள்


பண்டைக்காலத் தமிழர்கள் தமது ஆண்டை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி-சித்திரை)
3. கார் - (வைகாசி-ஆனி)
4. கூதிர் - (ஆடி-ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி-அய்ப்பசி)
6. பின்பனி (கார்த்திகை-மார்கழி)

பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

மதுவா? மதமா? அரசியலா?

ஒரு மனிதனைச் சிந்திக்கக்கூடாது என்று சொல்லும் மூன்று விசயங்கள்: மது, மதம், அரசியல். இதில் எது அதிக கொடுமைகளை விளைவிக்கக் கூடியது, ஏன்?

முதலில் இந்த மூன்றும் தரும் நன்மைகளைப் பார்க்கலாம்.

மதுவால் என்ன நன்மை?

ஒரு நன்மையும் கிடையாது. மன ரீதியான மயக்கமே இதில் அதிகம் இருக்கிறது. தன்னை மறக்கிறேன் என்று குடிக்கிறேன் என்பவர்களும், தன்னை மறந்து உற்சாகமாக இருக்கிறேன் என்பவர்களும்தான் பெரும்பாலானவர்களாய் இருக்கிறார்கள். ஒரு சிகரெட்டைப் போல, போதை மருந்தைப் போல மதுவும் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் ஒரு கெட்ட பழக்கம்.

அரசியலால் என்ன நன்மை?

தனிமனிதர்களாய் இருப்பவர்கள் ஒன்றுபட்டு ஊராகி நாடாகி ஆட்சி செய்யும்போது, அதன் வளர்ச்சி அபாரமானது. சாலை, காவல், சட்டம், நீதி என்று பொதுவான காரியங்களை அரசியலே செய்யும். அதோடு தன் சட்டதிட்டங்களால் எது சரி எது தவறு எது தண்டனைக் குரியது என்பதைச் மக்களுக்குச் செய்து மக்கள் இன்னல்கள் இல்லாமல் யாவரும் நலமுடன் அருமையாக வாழ வழிசெய்கிறது, எதிரிகளிடமிருந்தும் காக்கிறது. ஆகையால் மது அரசியலின் அருகில் நிற்கக்கூட அருகதை அற்றது.

மதத்தால் என்ன நன்மை?

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தான், மன்னர்கள்கூட கொடுங்கோலர்களாய் இருந்தார்கள். நீதி நியாயங்கள் எதுவென்றே அறியாத நிலைப்பாடே அன்றெல்லாம் இருந்தது. அப்போது தோன்றியவைதான் இந்த மதங்கள். மனிதர்களை நல்வழிப்படுத்தவும் எது சரி எது தவறு என்று வரையறுக்கவும், கடவுள் இருக்கிறார் அவர் உன்னைக் கூர்ந்து பார்க்கிறார் தண்டனைகள் வழங்குவார் என்ற பயத்தை உருவாக்கி தீமைகளிலிருந்து தடுக்கவும் நல்வாழ்க்கைக்கான அனைத்தையும் செய்வதற்காகவும் உருவானதுதான் மதம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றார் பட்டுக்கோட்டையார். திருடன் ஏன் திருந்தப் போகிறான்? நாட்டின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் போதுமே அவனுக்கு? யாரும் அறியாவிட்டால் அவன் செய்வதெல்லாம் சரிதானே அவனுக்கு, அவன் எளிதாகத் தப்பித்துக்கொள்வானே? இங்கேதான் சாமி கண்ணைக்குத்தும் என்ற பயங்கள் அறிமுகமாகின்றன. அவன் மதத்தில் பற்றுடையவனாய் ஆகிவிட்டால், கடவுளை முழுவதும் நம்பிவிட்டால், அவன் திருடமுடியாது, குற்றங்கள் செய்யமுடியாது, நல்ல வாழ்க்கையே வாழமுடியும். அன்று நாட்டின் சட்டதிட்டங்கள் அமைக்கப்படும்போதுகூட மதமே வழிகாட்டியாய் இருந்திருக்கிறது.

சரி இதெல்லாம் நன்மைகள். நன்மைகளைக் கொண்டுமட்டுமா ஒரு விசயம் நல்லது என்று தீர்மானிக்க முடியும்? அதன் கேடுகளைக் கணக்கில் கொண்டுதானே அதன் அவசியம் உறுதிசெய்யப்பட முடியும்?

குடியால் கெடுபவன் முதலில் அவன் மட்டுமே. பின் அவனைச் சார்ந்துள்ள குடும்பம். கண்ணதாசன் சொல்வார், என்னால் என் குடியால் எனக்குத்தான் நஷ்டம், யாருக்கும் எந்தக் கேடும் இல்லை. ஆனால் ஒரு கெட்டவனால் ஊருக்கும் நாட்டுக்கும் கேடு என்று. ஆக குடி குடியைத்தான் கெடுக்கும்.

பிழையான அரசியல் தனி மனிதர்களையும் நாசம் செய்யும் ஊரையும் நாசம் செய்யும் நாட்டையும் நாசம் செய்யும்.

ஆனால் மதம் கேடாகிப் போனால், அது உலகத்தையே அழித்து முடித்துவிடும்.

அளவில்லாமல் குடிப்பவன் செத்துத் தொலைவான். அளவில்லாமல் ஊழல் செய்பவன் வீட்டை நாட்டைக் குட்டிச்சுவராக்குவான். அளவில்லாமல் மதவெறிகொண்டவன் வீட்டை நாட்டை மட்டுமின்றி இந்த உலகத்தையே அழித்துப் போடுவான்.

ஆகவேதான் மிதவாதம் என்பது வாழ்க்கைக்கு முதன்மையானதாகிறது! மதத்தை வேறோடு அழிப்பது என்பதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. அது அழியும்போது அழியட்டும் அல்லது இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டு, மதச் சகிப்பு மத நல்லிணக்கம் என்பதை வெகுவாகப் போற்றி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், மதத்துக்கும் கடவுளுக்கும் பயந்து தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்வோரின் விழுக்காடு அதிக அளவில் இருக்கும். சட்டம்மட்டும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிட முடியாது.

மது, அரசியல், மதம் என்ற இந்த மூன்றையும்விட கொடூரமான ஒன்று யாதெனில் அது மனித வக்கிரம் மட்டும்தான்.

மனித வக்கிரத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காகவே மதங்கள் தோன்றின. அரசியல் தன் சட்டங்களை வகுத்தன.  ஆனாலும் உலகில் மனித வக்கிரங்கள் வளர்ந்த வண்ணமாய்த்தான் இருக்கின்றன.

ஒரு பெண்ணை ஓர் ஆண் அடக்க நினைப்பதன் பின்னணியிலும் வக்கிரம்தான் இருக்கிறது.

பஸ்ஸில் நிகழும் கற்பழிப்புக்கு மதுவல்ல காரணம், அரசியல் அல்ல காரணம், மதம் அல்ல காரணம், மனித வக்கிரம் மட்டும்தான் காரணம்.

மனித வக்கிரம் குடியோடு சேர்ந்தால் நிச்சயம் ஒரு கொடியது நிகழும். ஆனால் அதன் எல்லை சிறியதாகவே இருக்கும்.

மனித வக்கிரம் அரசியலோடு சேர்ந்தால் அதன் நாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

மனித வக்கிரம் மதத்தோடு சேர்ந்தால் அதன் நாசத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

மதுவும், அரசியலும், மதமும் மனிதர்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றன. ஏன்?

மதுவின் செயல்பாடே சுயத்தை இழக்கச் செய்யும் ஆதிக்கம்தான். அரசியலின் ஆதிக்கம் ஏன்? ஒரு சிலர் மட்டும் உயரத்தில் இருப்பதும் ஏனையோரைச் சுரண்டித் தின்பதும் என்ற கொடிய சுயநலம்தான். மதத்தின் ஆதிக்கம், உலகம் வக்கிரத்திலிருந்து விடுபடவேண்டும் என்பததால்தான். ஆக மதுவும் மதமும் இங்கே சுயநலமில்லாதவை.

ஒரு குடிகார சுயநல அரசியல்வாதிக்கு மதவெறி பிடிக்கிறது. என்னாகும்?

உறைபனிக் கூடுகளில் தெறுநிலத் தமிழன் - கட்டுரைகள்


அந்தரங்கமாய்ப் பேசும் குரல்கள்

வாழ்வெளியில் வழியும் துளிகள் - எதிர்மறை

வாழ்வனத்தில் வழியும் துளிகள் - எதிர்மறை

கிலியில் கிளியைக் கிழித்து -

என்னை மீறும் எண்ணங்கள்

இதயம் மீறும் எண்ணங்கள்

எனக்குள் நான்

என்னோடு நான்

எனக்கு நிலா உனக்குச் சூரியன்

ஒளிக்கீற்றின் படிகளில் உடைந்த பாதங்களில் உதடுகள் - எதிர்மறை

நெஞ்ச நதிக்கரையில் ஒரு புல்லின் நடனம்

பனிவிழும் கவிவனம்

பனிக்குள் மறைந்த புற்கள்

டிராபிகல் கோல்ட் கன்றி