என் நூல்களுள் சில மின் நூல்களாய் நிலாச்சாரல் டாட் காமில் கிடைக்கும்

http://www.nilacharal.com/product-category/poetry/?filter_ebookauthor=buhari

1. வெளிச்ச அழைப்புகள்
http://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

2. அன்புடன் இதயம்
http://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

3. சரணமென்றேன்
http://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/

4. பச்சை மிளகாய் இளவரசி
http://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/

5. காதலிக்கிறேன் உன்னை எப்போதும் - மின்னூலாய் இன்னும் வெளிவரவில்லை

6. அறிதலில்லா அறிதல் - மின்னூலாய் இன்னும் வெளிவரவில்லை

அன்புடன் புகாரி
பரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபாட்டுடன்/ பக்தியுடன் வழிபட்டு, இறுதியில் முதிர்ந்த பற்றற்ற ஞானநிலை அடையலாம். அவரவர்கள் மனதால், சொல்லால், உடல் உறுப்புகளால், செய்யும், நல் / தீய செயல்களுக்கேற்ப, இது ஒரு பிறவியிலோ, பல பிறவியிலோ நடக்கலாம்.
-பாஸ்கர்

இறைவன் ஒருவன் தான் என்று இதை நான் உறுதி செய்துகொள்ளலாமா? உங்களுக்கு ஒரு இறைவன் எனக்கு ஒரு இறைவன் என்று இறைவன் பல என்பது பிழைதானே?
-அன்புடன் புகாரி

உருவ வழிபாட்டையும் அதைச் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிந்துரைக்க, இந்த பரம்பொருள் ஒன்று என்ற ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் சரி. ஏனென்றால் உருவ வழிபாடு ஈடுபாட்டுடனான பக்தியை வளர்க்கும், அப்படி வழிபடும் தேவதைகளும் கடவுளால் உருவானவை, அந்த வழிபாட்டையும் கடவுள் தனக்கே உரியதாக ஏற்றுக் கொள்கிறார் என்பதும் இந்து சமயத்தின் ஆணிவேரான கோட்பாடு. இதுவே எதிலும் கடவுளைக் காணும்/ ஆராதிக்கும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
-பாஸ்கர்

நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவரவர் விருப்பம் நம்பிக்கை. அதனால் யாருக்கும் எக்கேடும் இருப்பதாய் நான் உணரவில்லை. இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி. அவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும் வணங்கட்டும் நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும். அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன். உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா? அதுதானே உண்மை என்றும் தெளிய முடியவில்லையா? நான் இணக்கம்தேடிப் போராடுபவன்!
-அன்புடன் புகாரி

இந்து மதக் கோட்பாட்டில் இந்த இணக்கத்திற்கு எந்தத் தடையும் இல்லை. அல்லாவும், ஏசுவும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என ஏற்பதில் தவறேயில்லை, அதேபால் சிவனும், திருமாலும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என்று ஏற்பதிலும் தடையேதுமில்லாமல் இருக்குமானால் இணக்கத்திற்கு தடையேதுமில்லை.
-பாஸ்கர்

அல்லா = இறைவன். அரபு மொழியில் அல்லா. தமிழ் மொழியில் இறைவன். அவ்வளவுதான்.

சிவனும் திருமாலும் பரம்பொருள் என்ற ஓர் இறைவன் இல்லையா? பின்புலமாய் தசாவதாரக் காட்சிகள் கண்முன் வருகிறது. இந்து மதத்திற்குள்ளேயே இறைவன் ஒருவனே என்ற கொள்கை இல்லையா?
-அன்புடன் புகாரி

இருக்கிறது. அந்த ஏதுமற்ற நிலையை அடைய/உணர, எந்த உருவத்தில்/ பெயரில் உங்களால் அசைக்கமுடியா ஈடுபாட்டை/பக்தியை செலுத்த முடியுமோ, அதைச் செய்யலாம் என்ற வழிகாட்டுதலும் / சுதந்திரமும் சேர்த்து வழங்கப் பட்டுள்ளது.
-பாஸ்கர்

ஒன்று என்பதே இறுதி என்பது நன்று. அதைத் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறது இஸ்லாம்.

ஒன்று என்பதை உணர்ந்துகொண்டால் விரோதங்கள் மனிதர்களுக்கு இடையில் இல்லை.

அசைக்கமுடியா பக்தி என்பதும் சிறப்பு. மிக அவசியம் ஆனதும் கூட. ஆனால் அது மற்றதன்மீதான வெறுப்பாய் ஆகிவிடக் கூடாது.

ஒரே இறைவனின் பிள்ளைகள் என் தாய் வேறு என்று சண்டை போட்டால் இறை கொள்கையே அர்த்தமற்றதாகப் போய்விடும். இறைவனே இல்லை என்ற நிலைக்குத்தான் தள்ளப்படுவோம்
-அன்புடன் புகாரி

மற்றதன் மீதான வெறுப்பு, மனதால் தொடங்கும் தீய செயல். இந்து சமயக் கோட்பாட்டின்படி தீய செயல்கள் ஏதுமற்ற பரம்பொருளை அடைவதற்குத் தடை. ஆனால் தன் நம்பிக்கைகள் மீது குறிவைத்து எறியப்படும் இழிந்துரைகளை கேட்கும்,போது முற்றும் துறந்த ஞானநிலை அடையாத மனது வெகுண்டெழுகிறது.
-பாஸ்கர்

இழிந்துரைகள் தூண்டல்கள். இறைநம்பிக்கையாளர்கள் அதில் சிக்கிவிடக்கூடாது. சிக்கினால் அவர்கள் வென்றுவிடுவார்கள், நல்லவர்கள் நாம் தோற்போம்
-அன்புடன் புகாரி
நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை.

அது அவரவர் விருப்பம் நம்பிக்கை.

அதனால் யாருக்கும் எக்கேடும் ஆவதாய் நான் உணரவில்லை.

இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி.

அந்த ஒருவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும், வணங்கட்டும், நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும்.

அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன்.

உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா?

அதுதானே உண்மை என்றும் தெளிவு பெற முடியவில்லையா?

நான் இணக்கம்தேடிப் போராடும் எளிய வெண்புறா!

அன்புடன் புகாரி
தமிழா நீ கனடா வந்துவிட்டாய்
அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று
நூற்றிப் பதினெட்டு நாடுகளில்
பெட்டிக்கடை முதல் கூகுள் உயரதிகார நிர்வாகம் வரை
எல்லாமும் தொட்டுவிட்டாய்

ஆனால் இந்தப் புலம் பெயர் நாட்டில்
படிக்கத்தானே அனுப்பினோம் மகனை
பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டதே
மருந்துக்கும் விருந்தாகி மறைந்தே போனானே
பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நான்கு காதல்விழி வீசி
எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்களே

பெற்ற பிள்ளைகளை
நல்ல பண்பாட்டுக்குள் கட்டிவைப்பதென்பது
நயாகராவை முந்தானையில் ஏந்துவதைப்
போன்றதாகவல்லவா இருக்கிறது

தமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க
மிகுந்த கவர்ச்சிகாட்டியல்லவா
நிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம் என்று கலங்குகிறாய்
ஏன் வந்தோம் இந்த நாட்டுக்கு என்று நொந்து மடிகிறாய்

தமிழா நீ சற்றே அமர்ந்து சிந்தையில் தீபம் ஏற்றிப்பார்
உன் வீட்டில் தமிழிருந்தால்
தமிழ்ப்பிள்ளை தடம்மாறுமா

தமிழ் வெறும் மொழியல்ல
கற்புமிகு பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவுகள் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்

தமிழில் சிந்தித்துத் தமிழாய் வாழும் இளைஞர்கள் எங்கே
இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தானே போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக....
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
தமிழர் மேடைகள் அமைந்திடல் வேண்டாமா

ஐம்பதைக் கடந்தவர்களே
வந்து நொந்து அமர்ந்திருக்கும் முதியோர்க் கூடமாய்
நம் தமிழ் மேடைகள் இருந்தால்
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்
ஒற்றைத் தலைமுறையோடு கருகிச் சிதையாதா
கயானாக் கதை என்ன நாம் அறியாததா

ஒவ்வொரு புலம்பெயர் ஊரிலும் ஒரு தமிழ்ப்பள்ளியேனும்
இலவசமாய் நடத்தப்படுதல் வேண்டும்
அங்கே தமிழர் உணவும் உற்சாகமாய் வழங்கப்படவேண்டும்

இதுவே உன்முன் என் உறுதியான வேண்டுகோள்

அன்புடன் புகாரி
20171202
68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை.
குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.
- அருந்ததிராய்
எம்மதமும்
அம்மதத்தினரால்
தெளிவாகப்
புரிந்துகொள்ளப் படாததாய்
இருக்கிறது

எம்மதமும்
அடுத்த மதத்தினரால்
புரிந்துகொள்ளவே
முயற்சி செய்யக்கூடாது
என்கிற
எண்ணங்களைக்
கொண்டிருக்கிறது

எம்மதமும்
பகுத்தறிவாளர்கள்
என்று
சொல்லிக்கொள்பவர்களால்
தவறான
பொருள் கூறப்படுவதாய்
இருக்கிறது.

இவை
அத்தனைக்குமே
காரணம்
மனிதர்களின்
அறியாமைகளும்
விகாரங்களும்தானே
அன்றி வேறில்லை

அன்புடன் புகாரி
20171201

*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்*

கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே? என்று சிலரும் நீங்கள் கூட காதல் திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்திருக்க முடியும்? என்று சிலரும் என்னை எப்போதும் கேட்பார்கள்.

என் திருமணம் காதல் திருமணம் தான்.

ஆனால் இந்தக் காதல் நிச்சயத்திற்குப் பின்தான் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டு படபடவென்று துள்ளிக்குதித்துக்கொண்டு நயாகராவுக்கே நீர் வழங்கும் ஊற்றாய் பொங்கி எழுந்தது.

அதுவரை நான் என் மனைவியைக் கண்டதே இல்லை.

இருபது வயதின் இறுதியில் முதன்முதலாக சவுதி அரேபியா சென்றவன் இருபத்தி மூன்று வயதில் ஒன்றரை மாத விடுப்பெடுத்து முதன் முதலாக ஊர் வந்து நின்றேன். அம்மாவின் மரபீரோவில் நான் ஏதோ காகிதங்களை உருட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய புகைப்படம் என் கண்ணில் பட்டது. அது ஒரு பதினைந்து வயது பெண்ணின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம்.

எடுத்துப் பார்த்து, அம்மா இது யார் என்று கேட்டேன். என் பதினைந்து வயது கடைக்குட்டித் தம்பி குதூகலத்தின் உச்சத்தில் உற்சாக மேட்டிற்கும் குறும்புப் பள்ளத்துக்குமாய் குதித்துக் குதித்துக் கூக்குரலிட்டான், ’அம்மா அண்ணனே எடுத்துருச்சு அண்ணனே பாத்துருச்சு’.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அறிந்துகொண்டேன், என் மூன்றாவது தம்பி எனக்காக தன் நண்பனின் சகோதரியைப் பெண்பார்த்து வைத்திருந்த கதையை. ஆனால் பேச்சை என்னிடம் ஆரம்பிக்க அனைவரும் அஞ்சி இருந்தார்கள்.

ஏனெனில் எனக்குத் திருமணம் இப்போது வேண்டவே வேண்டாம், சவுதியை முடித்துக்கொண்டு ஊருக்கே வந்ததும்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருந்தேன்.

எனக்கெல்லாம் ’அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே’ என்று வலைகுடாப் பாலைப்பாடல் சிச்சுவேசன் எல்லாம் ஒத்துக்காது.

பிறகென்ன நாளும் பொழுதும் இரவும் பகலும் அம்மாவின் பாசத் தொல்லைதான். எனக்கோ உடம்பு சரியில்லை உயிரோட இருக்கும்போதே உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணி நான் என் கண்ணோடு பாக்குறேண்டா.

உனக்கு உடம்பு சரியில்லேன்னா மருந்து சாப்பிடு அதுக்கு ஏன் எனக்கு ராணி கோணியையெல்லாம் கட்டி வைக்கப் பார்க்குறே. எனக்கு எப்போதுமே இந்த நகைச்சுவை உணர்வு கூடவே பிறந்த மருந்து. பெண்ணின் பெயர் ராணி என்றழைக்கப்படும் யாஸ்மின்.

இறுதியாகச் சொன்னேன், அம்மா தம்பிகளே உங்களுக்காக நிச்சயதார்த்தம் வேண்டுமானால் செய்துகொள்கிறேன். அதை ஒரு திருமணம்போலச் செய்யலாம். ஆனால் கல்யாணம் மட்டும் முடியவே முடியாது. இரண்டு வருடங்கள் கழித்துத்தான்.

அப்போது எனக்கு வயது 23 என் மனைவிக்கு வயது 15. எப்படி?

இன்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் வீடுகளில் இப்படியான விடலையர் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் என் 25ம் வயதில்தான் 17 வயது ராணியைக் கைப்பிடித்துக் கைகொடுத்தேன்.

என் காதல் ஒருதலைக் காதலும் இல்லை இருதலைக் காதலும் இல்லை இரண்டும் கலந்த தனித்தலைக் காதல். எப்படி என்கிறீர்களா?

நிச்சயம் செய்த நாளிலும் என் மனைவியை யாரும் என் கண்ணில் காட்டவில்லை. அதன்பின் நான் சவுதியில் ஈராண்டுகள் கன்னாபின்னாக் கனவுகளோடு இருந்திருக்கிறேன். அப்போதும் என் மனைவியை என்னோடு தொலைபேசியில்கூட உரையாட அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமல்ல சின்னச் சின்னக் கவிதை வாழ்த்துக்களாய் பல கடிதங்கள் அனுப்பினேன். இருவரிச் சிறுமடல் தொடங்கி இருநூறு வரி பெருங் கடிதம்வரை எழுதி அனுப்பினேன். ஒன்றுக்குமே பதில் இல்லை.

எல்லாமே ஆழ்கிணற்றில் இட்ட மணல் துகள்களாய்க் காணாமல் போயின. இரண்டு காதுகளையும் இருநூறு காதுகளாக்கி எத்தனைதான் கூட்தீட்டிப் பிடித்திழுத்து வைத்திருந்தாலும் கிணற்றில் விழும் சத்தம்கூட கேட்கவில்லை.

என்றால் இது ஒருதலைக் காதல்தானே?

ஆமாம் என்கிறீர்களா, அதுதான் இல்லை. அங்கே என் மனைவி அவளது சொந்தக் கனவுகளில் என்னை நினைத்துக் காணாமல் போய்க்கொண்டிருந்திருக்கிறாள். ஆக அவளும் காதலிக்கிறாள் நானும் காதலிக்கிறேன்.

என்றால் இது இருதலைக்காதல்தானே?

ஆமாம் என்கிறீர்களா? அதையும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில், பாக்கல பழகல பேசல ஒரு கடிதத் தொடர்புகூட இல்ல புகைப்பட முகத்தைத்தவிர மனவோட்டம் விருப்பு வெறுப்பு என்று வேறு எதுவுமே தெரியல. அப்புறம் என்ன காதல்? ஆகவே இது ஒருவகைத் தனித்தலைக் காதல்தானே?

அவ்வகைத் தனித்தலைக் காதலில் நான் எழுதிய ஒரு புலம்பல் கவிதைதான் இது:

*எழுது ஒரு கடுதாசி*

நேத்துவர எம்மனச
      நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
      பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
      விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
      ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
      பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
      நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
      மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
      தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
      வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
      பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
      புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
      மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
      அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
      புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
      வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
      குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
      தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
      போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
      கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
      வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
      ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
      ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
      நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
      தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
      தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
      புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
      நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
      எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
      நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
      வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
      நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
      எழுது ஒரு கடுதாசி


*

ஒருவழியாகத் திருமணமும் முடிந்து ஓரிரு வருடங்கள் கழித்து நான் என் திருமணத்தை நினைத்து அதன் கதையை இப்படி ஒரு கவிதையாய் எழுதினேன். அந்தக் கவிதைதான் இது:

*கல்யாணமாம் கல்யாணம்*

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
      ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
      மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
      மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
      அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
      புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
      வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
      இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
      மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
      குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
      சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
      செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
      வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
      உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
      கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
      பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
      சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
      மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
     எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
     நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
     சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
      ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
      முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
      தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
      சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
      வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
      முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
      சிரிப்பாளே பெண்ணின்தாய்

அன்புடன் புகாரி
எவரொருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான். -பகவத்கீதை 7:20
கண்ணால் காணமுடியாதது எவனோ, அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்குப் பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை. -ரிக்வேதம் 6:45:16.
அன்பு நண்பர்களே, மேலே குறிப்பிட்டுள்ள வேதங்கள் இரண்டும் உண்மையானவையா என்று எவராவது எனக்கு அறியத் தருவீர்களா?
இப்பல்லாம் இட்டுக்கட்டி வரும் கதைகளே மிக அதிகம். இது எனக்குக் கடந்த வருடம் வந்த செய்தி.
அன்புடன் புகாரி
20171130
சில இந்துக்கள் என்னை
இந்து விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில முஸ்லிம்கள் என்னை
முஸ்லிம் விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில நாத்திகர்கள் என்னை
நாத்திக விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

ஆனால்
பெரும்பாலானவர்கள் என்னை
நல்லிணக்கம் தேடும்
வெள்ளைப் புறாவாகத்தான்
பார்க்கிறார்கள்

இவற்றைச் சந்தித்துத்தான்...

ஒவ்வொரு கவிஞனும்
இங்கே வளர்ந்து வந்திருக்கிறான்

ஒவ்வொரு எழுத்தாளனும்
இங்கே காலூன்றி இருக்கிறான்

ஒவ்வொரு கலைஞனும்
இங்கே கலை வளர்த்திருக்கிறான்

ஒவ்வொரு புரட்சியாளனும்
இங்கே புரட்சி செய்திருக்கிறான்

உலகம் புதிதல்ல
நான் தான் உலகுக்குப் புதியவன்

நான்தான் இம்மாதிரி
வெறுப்புணர்வுகளையும் சகித்து
இணக்கம் தேடிப் போராட வேண்டும்

எதிர்ப்பவர்கள்
எண்ணங்களை ஊட்டுகிறார்கள்
அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்

பாராட்டுபவர்கள்
ஊக்கம் தருகிறார்கள்
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஆகவே
எதிர்ப்பும் இணக்கமும்
என் வேர்களுக்கான நீர்தான்
என்று புரிந்துகொள்கிறேன்

போற்றுதலும் தூற்றுதலும் கடந்து
நல்லறம் செய்க
அன்பு நெஞ்சங்களே

அன்புடன் புகாரி
20171130
வாட்சப்பில் ஒரு நண்பர் சொல்கிறார். எல்லா கோவில்களும் முகலாயர் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டுவிட்டன. இப்போது இருப்பவை வெள்ளைக்காரன் கட்டியது என்கிறார். எனக்கு வியப்பளிக்கிறது.
உண்மை என்ன?
நான் தஞ்சாவூர்க் காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். அடிக்கடி தஞ்சை பெரியகோவில் - பிரகதீஸ்வரர் கோவில் சென்று அந்த வளாகத்தில் அமர்ந்திருப்பதை விரும்புபவன். அந்த அமைதி எனக்குப் பிடிக்கும். என் இளவயதில், திசைகள் பத்திரிகைக்காக எழுத்தாளர் கவிஞர்கள் ஓவியர்கள் என்று நாலைந்துபேர் வாரம் ஒரு சந்திப்பு நிகழ்த்துவோம். அதற்கு ஏற்ற இடம் கோவிலின் உள் வளாகம்தான் என்று முடிவெடுத்து அங்கேயே கூடுவோம்.
இப்போது அந்தக் கோவிலுக்கு மிக அருகிலேயே என் வீடு இருக்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
அந்தக் கோவிலைக் கட்டியது வெள்ளைக்காரன் இல்லை. 1003-1010 ல் கட்டப்பட்ட அந்தக் கோவிலைப் போல பெரிய கிருத்துவ ஆலயமோ இஸ்லாமிய பள்ளிவாசலோ இந்தியாவிலேயே கிடையாது.
தாஜ்மகால் ஒரு சமாதி. பள்ளிவாசல் அல்ல. அந்த சமாதியைவிட உயர்வான கட்டிடக் கலையைக் கொண்டது தஞ்சை பெரியகோவில்
ஏன் ஒருசில தமிழர்களின் மனம் இப்படிச் சுருங்கி மதவெறிக்குள் சிக்கிச் சீரழிகிறது சமீபகாலமாக?
அன்புடன் புகாரி
என்னிடம் ஒரு நான்கு கேள்விகள் இருக்கின்றன. அதற்கு சரியான விளக்கம் உங்களிடமிருந்து வேண்டும்:
1. ”நான் உன்னை நினைத்து உருகிக் கரைகிறேன்.” உடம்பு உருகிக் கரையுமா? கரைந்தபின் எப்படி உயிரோடு இருக்க முடியும்?
2. ”உன்னைக் காணாமல் நான் செத்தே போயிட்டேன்” செத்துப் போனவன் எப்படி இப்போது பேசுகிறான். என்றால் அவன் பிசாசா?
3. ”கமலைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல” காலாவது ஓடும். கை எப்படி ஓடும். என்றால் இவன் ஆடா மாடா? கைகள் இல்லாமல் இவனுக்கு இருப்பவை அத்தனையும் கால்களா?
4. ”என் தந்தை இறந்த சொல் கேட்டு தூள் தூளாய் வெடித்துச் சிதறினேன்” ஓர் உடம்பு இப்படித் தூள் தூளாய் வெடித்துச் சித்றுமா? அப்படிச் சிதறியது ரத்தமும் சதையுமாய் வீதியில் கொட்டிக் கிடக்கிறதா? அதன்பின் அவன் உயிரோடு இருந்து நம்மிடம் பேசுகிறானா?
கவிதையைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. பலரது கேள்விகள் என்னைத் திடுக்கிட வைக்கின்றன. நான் அதிர்ந்து வாயடைத்துப் போகிறேன். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்லமுடியும் என்று திணறினேன். பிறகுதான் இப்படி எளிய முறையில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என்று இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். எல்லோரும் பதில் சொல்லலாம். இது எப்படிச் செல்லப் போகிறது என்று காண உண்மையிலேயே ஆவல்.
இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா என்பது ஆதாரக் கேள்வி. நான் உருவம் இல்லை என்கிறேன். இருக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்தின் இலக்கிய நடையைப் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த வழியில் புரியவைக்க முடியுமா என்பதே என் வேர் முயற்சி.
உதாரணம்:
மிக்க வல்லமையும்
கண்ணியமும் உடைய
உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
(குர்-ஆன் : 55:27)
இக் குர்-ஆன் வசனத்தில் இறைவனின் முகமே என்று வருகிறதே. அதனால் இறைவனுக்கு முகம் உண்டு, இறைவனுக்கு உருவம் உண்டு என்கிறார்கள் சிலர். அவர்களுக்குக் கவிதை வாசிப்பைக் கற்றுத் தருவதே இந்த இடுகையின் உண்மையான நோக்கம்.
அன்புடன் புகாரி
20171130
உன்னை
அறியவைப்பதே
எனக்கு வெற்றி

தோற்கடிப்பது
வெற்றியே அல்ல
வெறி

நான்
வெறிகொள்வதில்லை

என்
உரையாடல்
தோற்பதில்லை

அன்புடன் புகாரி
20171130
அணுசக்தி அறிஞர் நண்பர் கனடா ஜெயபாரதன் அவர்களிடம் நான் கேட்ட என் கேள்விகள் சிலவற்றிற்கு அவரின் பதில்கள் பின்வறுமாறு. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
​1. பூமியின் சுனாமி போன்ற பேராபத்துகளுக்கு பூமி மத்தியின் சூடு காரணமா அல்லது வானம் காரணமா?​
​பூகம்பத்தால் கடலில் எழும்பும் சுனாமிக்குப் பேரளவு சேமிப்பு இயக்கசக்தி [Stored Kinetic Energy] தேவைப்படுகிறது. அந்த இயக்கசக்தியைத் தருவது பூமியின் உட்கரு அணு உலை. விண்ணிலிருந்து [சூரியனிடமிருந்து] பூகம்பத்தைத் தூண்ட ஒளிக்கதிர் பாய்கிறது.
​
​2. ​சூரியனில் ஓட்டை விழ முடியுமா? அது என்ன திடப் பொருளா? வாயுப் பொருளா?​
சூரியன் மாபெரும் வாயுக்கோளம் [பேரளவு ஹைடிரஜன் + சிறிதளவு ஹீலியம்]​
In a recent report NASA has revealed that a monstrous coronal hole (low-density gas regions of the Sun’s atmosphere), measuring more than ten percent of the Sun’s surface area, has opened up on our star, the sun.
The footage was captured May 17 and 19, 2017 by the US space agency’s Solar Dynamics Observatory.
Coronal holes are areas on the Sun where the solar magnetic field extends up and out into interplanetary space, sending solar material speeding out in a high-speed stream of solar wind.
​​3. ​உஷ்ண சூடேற்றத்திற்கு நாம் இயற்கையை அழிப்பதுதான் காரணமா? அல்லது அது ஒரு இயற்கைச் சுழற்சியா? ​
​நாம் தினம் பெட்ரோல் கார்கள் மூலமும், நிலக்கரியால் தொழிற்சாலைகள் இயக்கியும் கரிவாயு [CO2] உற்பத்தி செய்வது ஓரளவு காரணம். காட்டுத்தீக்கள் ஒரு காரணம். எரிமலைகள் ஒரு காரணம். பூமியின் சுழல் அச்சு சற்று சாய்வதும் ஒரு காரணம்.​
​தற்போதைய பூகோளச் சூடேற்றம் ஒருபோக்கு மீளா நிகழ்ச்சி. இதைக் குளிர்ப்படுத்த பனியுகக் காலம் எப்போது வரும், பூமியின் அச்சு பழைய நிலைக்கு மாறுமா என்று ஊகிக்க முடியாது.​
​4. ​முன்பு உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதா?​
​60 மில்லியன் [ஆறு கோடி] ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் சுமார் 12 மைல் விண்பாறை விழுந்து பயங்கர சூடான பூமியில் டைனோசார்ஸ்கள் அத்தனையும் மரித்துள்ளன. பூமியே கொந்தளித்துச் சுற்றுப்பாதை நகன்று, சூரியனுக்கு அப்பால் தள்ளப்பட்டு, உஷ்ணம் தணிந்து புதிய பயிரினம், உயிரினம், மானிடம் தோன்றியுள்ளது என்று நான் அறிந்தது.
அன்புடன் புகாரி
20171130
இறைவனுக்கு
இணைவைத்தால்
நான்
இஸ்லாமியனில்லை

மாற்றுக்
கருத்துண்டா?

இறைவனின் சொல்லான
குர்-ஆனுக்கு
இணைவைத்தால்
நான்
நல்ல இஸ்லாமியனா?

என் கேள்விக்குப்
பதிலுண்டா?

அன்புடன் புகாரி
கவிதை எழுதுபவன் கவியன்று
கவிதையே வாழ்க்கையாய் உடையோன்
வாழ்க்கையே கவிதையாய் செய்தோன்
அவனே கவி

-பாரதி

அட்சய வரம் அம்மா

இந்த வாழ்வில்
கிடைத்தற்கரிய ஒன்று
எல்லோருக்குமே
கிடைத்துத்தான் இருக்கிறது

தொகையிடாக்
காசோலையைப்போல

பிறப்போடு ஒட்டிவந்த 
குறைந்தழியாக்
கருணையைப்போல

அட்சய வரம்
அம்மா

அன்புடன் புகாரி
கடவுள் இல்லை என்று
அறிவித்த புத்தர்
அன்பைப் போதித்தார்
கடவுளாக்கப்பட்டார்

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்
என்கிறது இஸ்லாம்

அன்பே சிவம் என்றார்
திருமூலர்

அன்பே கடவுள்
என்பதுதான்
ஆன்மிக அடிப்படை
என்பார் பலர்

இப்படியாய் யாவரும்
அன்பைத்தான் போதித்தார்கள்
அன்பாகத்தான் ஆனார்கள்
கருணையைத்தான் கற்பித்தார்கள்
கருணையாகவேதான் நின்றார்கள்

இனி நாம்
இறைவனை நோக்கிப்
பயணப்படுவது
எத்தனை எளிதானது
என்று சிந்தியுங்கள்

இறைவனை நெருங்க
ஒற்றை வழி
நாம் அவன்போலவே
அன்பாலும் கருணையாலும்
உயர்ந்துகொண்டே செல்லுதல்தான்

அதி உயர்ந்த
அன்பாய்க் கருணையாய்
நாமும் உயர உயர
அவனுக்கு அருகே அருகே
செல்கிறோம்

அன்புடன் புகாரி
20171126
எனக்கு இறைவன் என்பவன் மனிதன் அல்ல.
உருவமே இல்லா இணையே இல்லா மாபெரும் சக்தி.
ஆகவே ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால் அவன்.
பிறகு ஏன் இறைவனை அவன் என்கிறாய் என்கிறீர்களா?
என் மகளை வாடா என்று நான் அழைத்தால் என் மகள் ஆண்பிள்ளையாகிவிடுமா?
என் மகள் வந்தது நின்றது சென்றது என்று நான் சொன்னால் இலக்கணம் தடுக்கலாம் இதயம் தடுக்குமா? என் மகள் விலங்கினம் ஆகிவிடுமா?
என் மகளைப் பஞ்சவர்ணக்கிளி என்று கொஞ்சினால் என் மகள் பறவையினமாகிவிடுமா?
இலக்கணத்தை எப்போதுமே இலக்கியம் வென்றெடுத்தே செல்லும்.
கற்பனைகளை எப்போதும் உண்மை களையெடுத்தே நடக்கும்
இறைவனை அவன் என்று அழைப்பதால் இறைவன் மனிதன் ஆகிவிடமாட்டான்.
இது என்னுள்ளக் கருத்து.
மறுப்போரை வெறுப்போனும் நானில்லை ஏற்போனும் நானில்லை.
அன்புடன் புகாரி
பூக்களைத் தொடுத்தால் மாலை
புலர்வினைத் தொடுத்தால் காலை
கோடுகள் தொடுத்தால் ஓவியம்
கவிதைகள் தொடுத்தால் காவியம்
எவற்றைத் தொடுத்து நான் சொல்ல
உங்கள் அன்பை என் நன்றி வெல்ல

அன்புடன் புகாரி
நீதான் தேவதை
நீயேதான் ராட்சசி

நீதான் தீபம்
நீயேதான் கும்மிருட்டு

நீதான் உயிர்
நீயேதான் மரணம்

நீதான் உடன்பாடு
நீயேதான் முரண்பாடு

நீதான் அமுதம்
நீயேதான் விசம்

நீதான் படுக்கை
நீயேதான் சுடுகாடு

நீதான் தெய்வம்
நீயேதான் சாத்தான்

நீதான் ரகசியம்
நீயேதான் அம்பலம்

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை மகிழ்வித்ததில்லை

உனையன்றி
வேரு எவரும் என்னை
இத்தனை துக்கப்பட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என் முன்
இத்தனை
அசடுவழிந்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இப்படித்
திடுக்கிட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை சேவையில்
மூழ்கடித்ததில்லை
உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் சொர்க்கம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் நரகம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை முறை
பிறக்கச் செய்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனைமுறை
கொன்றழித்ததில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி