11

நான் அதிக நேரம் வாசிக்கும்
ஒரே கவிதை
உன் புகைப்படம்

புரிகிறது புரியவில்லை
புரிகிறது புரியவில்லை
உன் பார்வையை வாசித்துக்கொண்டே
ஒரு பைத்தியம்

பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் நீ
புகைப்படமா இலக்கிய மேடையா

எப்போது நிறுத்துவாய் என்று
உன்னிடம் நீ கேட்டுச் சொல்
நீ சொல்லப்போகும் சொல்லுக்குக்
கட்டுப்படுமா என் கண்கள் என்று என்னிடம்
நான் கேட்கத் தேவையில்லை

கொஞ்சம் திரும்பு
இப்படி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர் திரி கொளுத்தப் பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது

இன்றும் அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி
நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது
உயிர் போவதைத்தான் உணரமுடிகிறது

*
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


_______________________________________
இளமை விகடன் பிரசுரம்

3 comments:

N Suresh said...

அருமை, மிக அருமை
வாழ்த்துக்கள்

அன்புடன் என் சுரேஷ்

Unknown said...

இந்த எளிமையான கவிதையை அருமையாக பாராட்டியதற்கு நன்றி சுரேஷ்

அன்புடன் புகாரி

சாந்தி said...

நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது

உயிர் போவதைத்தான்
உணரமுடிகிறது




நன்று.

இதற்காகத்தான் குழந்தைகள் படம் கூட வைத்துக்கொள்வதில்லை . மேசையில்.மயக்கிடுவார்கள் மனதை..




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..