27 எது என் ஊர்கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!

Comments

அருமை அருமை - வித்தியாசமான கண்ணோட்டம் - அரிய கருத்துகள். சொந்த ஊரைத் தேடித் தேடி, இருக்குமிடம் தேடி, இல்லாத இடமெல்லாம் அலைந்து, கடைச்யில் கண்டு பிடித்த மகிழ்ச்சியே மகிழ்ச்சி. எளிய நடை. எளிதில் புரியும் வண்ணம் கவிதை படைப்பது பாராட்டுதலுக்குரியது.

//நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த
அந்த என் ஊர் எது//

வாழ்த்துகள்
நிறைய கவிதைகளை அள்ளி வந்து கொட்டியிருக்கிறீர்கள். ஆர அமர படித்துக் கொண்டிருக்கிறேன்.

//என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த
அந்த என் ஊர் எது ? //

மென்மையான மனசும், தூய்மையான நட்பும், ஆத்மார்த்தமான கவிதைகளும் கொண்ட நீங்களே ஒரு உலகு மாதிரி தானே.
சாந்தி said…
> என் ஊரை என்னைத் தவிர வேறு
> யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
> அந்த என் ஊர் எது
>
> நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
> என்னைப் பெற்றவளும் அறியா
> என் பிரத்தியேக ரகசியங்களின்
> பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது
>
> எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
> ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
> அந்த ஊர்தான் எது
>
> எது என் ஊரென்று
> அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
> நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!அருமை..
--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.
பூங்குழலி said…
//எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று//

அது எந்த ஊர் ?
நல்ல கவிதை
பிரசாத் said…
எது ஊர் என்ற உங்கள் கேள்விக்கு எனக்கு தெரிந்த பதில் இதோ.

தாயின் கருப்பையில் விதையாய் இருந்திட்டு
தரணியில் விழுந்ததும் கண்ணீரை தண்ணீராக்கி (தனக்கே நீராக்கி)
தங்குமிடம் தழைக்க வேரூன்றி வாழும்
தன்னலமில்லா மனிதனுக்கு தரணியே ஊராகும்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்