சரணமென்றேன் (இசையில் கேட்க)

சந்தம்!

இன்றைய கவிஞர்கள் பலருக்கும் சந்தம் எழுதத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அவர்களுக்கு அது இயல்பாக வருவதில்லை. 

சீத்தலைச் சாத்தனாரைப்போல தலையில் குத்தி ரத்தம் வரவழைப்பதே அதிகம் இருக்கும், சந்தத்தின் இயல்பு நடை மிகக் குறைவாகவே இருக்கும்.

உணர்வுகளோடு பொதிந்து சிந்தனையின் ஓட்டத்தை ஆரம்பம் முதலே சந்தத்தோடு இணைத்துக்கொண்டிருந்தால், சந்தம் மிக மிக எளிமையான அதே சமயம் மிகவும் கவர்ச்சியான ஒரு நடை. 

அதற்காக சந்தத்தில் எழுதினால்தான் அது கவிதை என்று சொல்வது முட்டாள்தனம்.

கவிதையின் இலக்கணம் வாழ்க்கையின் இலக்கணத்தைப்போல மாற்றங்களால் மட்டுமே ஆனது. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முறப்டும்போது சந்திக்கும் அனைத்து ஐயங்களையும் தடுமாற்றங்களையும் கவிதை என்றால் என்ன என்று வரையறுக்க  முற்படும்போதும் சந்திக்க நேரிடும். 

அதுதான் கவிதை.

கவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும் என்பதே கவிதையின் இலக்கணம் என்று பல நேரம் நான் முடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் தப்பிப்பதற்கான ஒரு வழி என்றும் கொள்ளலாம். 

சில கவிஞர்கள் சந்தம் என்ற சொல்லைக் கேட்டதும், எட்டுப்பத்து கிலோமீட்டர் ஓட்டம் பிடிப்பது ஏன் என்று சிந்தித்தால், அங்கே ஒரு விமரிசகனின் முகம்தான் தெரியும்.

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு எழுத்தாளர்கள் முதலில் கவிதை எழுத முயன்றவர்கள்தாம். அது கைவரப் பெறவில்லை என்றுதான் பின்னர் உரைநடை எழுதவந்தார்கள்.

சந்தம் எழுதாத சிலநூறு கவிஞர்களுக்கும் உரைநடை எழுதும் பலநூறு எழுத்தாளர்களுக்கும் சந்தக் கவிதைகளை வாசிக்கப் பிடிக்கும் என்பதே உண்மை. 

சந்தம் மனதில் தங்கும் குணம் கொண்டிருப்பதால் சில சந்தக் கவிதைகள் காலத்தால் அழியாததாய் நெஞ்சிலேயே தங்கிவிடும். இந்த நிலை எழுத்தாளர்கள் பலரையும் இன்னலுக்குள் உருவாக்கி இருக்கிறது.

ஓர் எழுத்தாளன் பெறும் அத்தனை உயரங்களையும் சில கவிதைகளே எழுதிய கவிஞன் முறியடித்துவிடுகிறானே என்ற அங்கலாய்ப்பு பல எழுத்தாளர்களுக்கு உண்டு. 

அவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களை உயரப் பிடித்தி நிறுத்தும் தேவை அதிகம் இருக்கிறது. அதனால் கவிதைகளை இறக்கிக் காட்டும் குணம் இயல்பாகவே மிகுத்துப் போய்விட்டது.

கவிதைகளை ஒழிக்க முடியாது என்று அறிந்த அவர்கள், கவிதைகளை அதிகம் புகழத் தொடங்கினார்கள். கவிதைகளைப் புகழ்ந்துவிட்டு, அதே சூட்டில், இன்று யாரும் கவிதை எழுதுவதே இல்லை ஒரு கவிஞனும் இன்று கிடையாது என்று ஒரு போடு போடத் தொடங்கினார்கள்.  

இதுதான் புகழ்வதுபோல் புதைப்பது என்பது.

அவன் கவிஞனே இல்லை என்று ஒரு விமரிசனத்தை வைப்பார்கள். அதற்கு ஏகமாய்ப் பல ஆராய்ச்சிகளைச் செய்து, தான் சொன்னதை நிறுவ முயற்சிப்பார்கள். ஆனால் அந்தக் கவிஞனின் கவிதைகளை உச்சிமுகர்ந்து உள்ளுக்குள் ரசிப்பார்கள்.

ஒரு பெரும் கவிஞனை சீண்டுவதற்காக விளங்காத ஒருவனின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். புதிதுபுதிதாக இலக்கணங்களை வகுக்கப் பார்ப்பார்கள். அதையே உண்மையென்றும் நிரூபிக்க அரும்பாடு படுவார்கள்.

ஆனால் சந்தக் கவிதைகளைக் கண்மூடிக்கொண்டு நேசிக்கக் கூடாது. இயல்பாக வரும் சந்தக் கவிதைகளை அடையாளம் காணத் தெரியவேண்டும். 
சந்தத்திற்காக வலிந்து ஏற்றும் விரையச் சொற்களால் கவிதை கழன்றுவிழுந்துவிடும் என்ற உண்மை சந்தம் எழுதுபவர்களுக்குத் தெரியவேண்டும்.

காதல் கவிதைகள் சந்தத்திற்குப் பெரிதும் ஏற்றவை. நினைத்து நினைத்துப் பாடிப்பார்க்கும் அற்புதங்களால் ஆனவை காதல் சந்தக் கவிதைகள்.


இதோ ஓர் காதல் சந்தக் கவிதை, காதலர் தினத்திற்காக இங்கே இடுகிறேன்.

தலைப்பைச் சொடுக்கினால் இசையில் கேட்கலாம்

அலையலையாய் வீசுதடி
ஞாபகங்கள் உன்
தலைமுடிக்குள் நழுவுதடி
யோசனைகள்

துளைவழியே ஊதுதடி
உயிரிதழ்கள் உன்
துணைகேட்டுப் பாடுதடி
காற்றலைகள்

பழையதயிர் மதமதப்பில்
கன்னவில்லை அதில்
போனஉயிர் போனதுதான்
மீளவில்லை

தலைகொதித்தே வெடித்தாலும்
விடுவதில்லை உன்
தீயிதழால் நீவிரிக்கும்
முத்தவலை

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்

கலைகொழிக்கும் இடைதொட்டுத்
திண்டாட்டம் என்
காலமெல்லாம் காணவேண்டும்
கொண்டாட்டம்

மழைவிழுந்த மண்வீசும்
வாசனைபோல் என்
மனமெங்கும் நீவிழுந்த
வாசமடி

குலைகுலையாய்ச் சரிந்துநிற்கும்
வாழையடி உன்
கோலங்கண்ட காய்ந்தநதி
ஊறுதடி

பள்ளங்களோ
வளர்நாளில் ஏராளம் உன்
பனிதூவும் புன்னகையால்
மேடாகும்

நில்லுங்கள் ராசாவே
என்றழைத்து இடும்
நெற்றிமுத்தம் துயர்வேரைக்
கொன்றழிக்கும்

வள்ளலுனை வாழ்வினிலே
கண்டுவிட்டேன் என்
வாய்க்காலில் கங்கைவளம்
கொண்டுவிட்டேன்

உள்ளங்கை நடுவிலுனை
உறங்கவைத்தே என்
உயிர்மூச்சுக் காற்றாலே
உனைக்காப்பேன்

மேகமொட்டு மலைமுகட்டில்
ஓய்வதுபோல் என்
மார்மீது மதுசொட்டச்
சாய்கின்றாய்

தேகமெல்லாம் எலும்பழியக்
குழையுதடி உயிர்
திரவத்தோடு திரவமென்று
வழியுதடி

நாகமணித் தேரிழுத்து
ஓடிவந்தேன் நீ
நாணமுடன் காலெடுத்து
ஏறிக்கொண்டாய்

சோகங்களைக் கொத்தாகத்
தீயிலிட்டாய் உன்
சொந்தமென்று சொல்லியெனை
உயிரிலிட்டாய்

பயிரழிந்து பட்டுப்போன
பாழ்நிலத்தில் புதுப்
பசுமையேற்றிப் பரிவோடு
ஏருழுதாய்

உயிரெடுத்து உயிருக்குள்
ஊட்டுகின்றாய் என்
உயிர்த்துடிப்பை எனக்கே நீ
காட்டுகின்றாய்

கயிறிழுக்கும் போட்டியுள்ளே
நடக்குதடி என்
கர்வமெல்லாம் பெண்மையிடம்
தோற்குதடி

சுயநினைவில் உயிலொன்று
எழுதுகின்றேன் உன்
சொர்க்கவிழிச் சிறையொன்றே
சரணமென்றேன்

No comments: