‪#‎தமிழ்முஸ்லிம்‬ கைலி - கையலி - லுங்கி - சாரம் நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன். கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு. ”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. இணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன. 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது. கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பர்மா, ப்ருனெய், மலேசியா, நேபால், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்காவில் என்று பல பல நாடுகள் அணிகின்றனர். இந்த லுங்கி / கைலியின் ஆரம்பம் என்பது என்ன தெரியுமா ?! சரோங் (Sarong)....... இது இன்று உலகம் முழுவதும் தெரிந்த கைலியின் ஆரம்ப பெயர் எனலாம். இதை ஆண்களும், பெண்களும் கட்டலாம். ஒரு அமெரிக்க கடற்கரையில் சென்று பார்த்தால் பெண்கள் இந்த சரோங்கை வண்ண நிறங்களில் கட்டி இருப்பதை பார்க்கலாம், அவ்வளவு ஏன், கோவா சென்று பார்த்தால் ஆண்கள் சிலர் இந்த சரோங்கை கட்டிக்கொண்டு செல்வதை பார்க்கலாம், கைலி இப்படி பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு தமிழ் முஸ்லிமுக்கு அது தேசிய வீட்டு உடை. அதையே வெள்ளையில் கொண்டுவந்து கல்லூரியிலும் கட்டும் உடையாக மாற்றிக்கொண்டுவிட்டனர். என் அம்மா பிறந்த ஊரான அதிராம்பட்டிணம் சென்றால், அங்கே ஆயிரம் பல்லாயிரம் வெள்ளைக் கொக்குகள் நிற்பதாகவும் பறப்பதாகவும் தெரியும். ஆமாம் அவர்களின் கொரவமான உடை என்பது வெள்ளைக் கைலியும் வெள்ளை சட்டையும் உடுத்துவதுதான். என் அம்மா பெரும்பாலும் பத்தை(batik) கைலியும் அதற்கேற்ற தாவணியும்தான் அணிவார்கள். அந்த கைலி பல வண்ணங்களில் வெகு அழகாக இருக்கும். அவை மலேசியாவிலிருந்தும் இந்தோநேசியாவிலிருந்தும்தான் பெரும்பாலும் வரும். சிங்கப்பூரிலிருந்து ஊர்வரும் தமிழ்முஸ்லிம் ஒவ்வொருவரின் பெட்டியிலும் வெகு நிச்சயமாக பெண்கள் அணியும் இந்த வகை வண்ணக் கைலிகள் இருக்கும். எனக்கெல்லாம் வெள்ளைக்காரணின் பேண்ட் சட்டையோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கவ்விப் பிடித்திருக்கும் அந்தக் கடைசிக் கவசத்தையும் கழற்றி எறிந்துவிட்டு கைலிக்குள் மாறினால்தான் மூச்சே வரும். சுதந்திரம் கிடைத்த நிறைவு நெஞ்சில் ஏறும். * நான் கைலி கட்டி இருக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். இதோ ஒன்று. டொராண்டோ செண்ட்ரல் ஐலாண்டில் கட்டிக்கொண்டு நின்றது ;-) https://www.facebook.com/photo.php?fbid=907678302590677&set=a.534332339925277.129828.100000455463856&type=3&theater

No comments: