கருசமணி - கருகமணி - தாலி
தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும் தாலியை கருசமணி அல்லது கருகமணி என்றுதான் சொல்வார்கள், தாலி என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இன்றெல்லாம் முஸ்லிம்பெண்கள் கருசமணி அணிவதில்லை.
இந்துக்களுக்கு இருப்பதைப்போல முஸ்லிம் பெண்களுக்குத் திருமணத்தின்போது கருசமணி கட்டுவது என்பது மதக்கட்டாயம் அல்ல.
இது மாற்றுமதக் கலாச்சாரம் என்பதால் கட்டுவது கூடாது என்று சொல்லும் வகாபியம் ஒரு புறமும், கட்டுவது கட்டாயம் இல்லை, கட்டினால் பிழையும் இல்லை, ஏனெனில் இது மதச்சடங்காய் முஸ்லிம் பெண்களுக்குக் கட்டப்படுவதில்லை உலக வழக்காகக் கட்டப்படுகிறது திருமணமான பெண் என்ற அடையாளமாகக் கட்டப்படுகிறது என்று சொல்லும் மிதவாதம் இன்னொருபுறமும் உண்டு.
ஆனாலும் இன்றெல்லாம் இந்துப் பெண்களே தாலியைத் துறந்துவிட்டார்கள், அல்லது முன்புபோல முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் சாலினி தாலியைக் கழற்றி காலண்டரோடு மாட்டிவிட்டு உறங்கச் செல்வார்.
நான் திருமணம் ஆன புதிது. மனைவிக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை வந்தது. நான் என் மனைவி மற்றும் கடைசித் தம்பியோடு மருத்துவ ஆய்வு நிலையத்துக்குச் சென்றேன்.
எக்ஸ்ரேக்குமுன் என் மனைவியிடம் கருசமணியைக் கழற்றிவிடக் கூறி இருக்கிறாள் நர்ஸ். அவ்வளவுதான், கண்களில் பதட்டம் நிலவ என் தம்பியை அழைத்து இதைக் கழற்றி கணவரிடம் கொடுக்கக்கூடாது, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், முடிந்ததும் நான் பெற்றுக்கொள்கிறேன் என்று கண்களில் நீர் நிறைந்த நிலையில் கூறி இருக்கிறார். இதை அறிந்த எனக்குப் பெருமையாய் இருந்தது.
என் மனைவி ஒரு நல்ல தமிழ்ப்பெண். இப்படித்தான், தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் அனைவரும் மிக நல்ல தமிழ்ப்பெண்கள் என்றே நான் இதுவரை கண்டிருக்கிறேன். அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அனைத்தையும் வள்ளுவன் தங்களுக்கே சொன்னதுபோல பொது இடங்களில் நடந்துகொள்வார்கள்.
இன்றெல்லாம் என் மனைவியின் கழுத்தில் கருசமணி என்று ஏதும் கிடையாது. அது பிறமதம் சார்ந்தது என்று அவர் எப்போதோ கழற்றிவிட்டார். அணிந்தால் பிழையில்லை என்பது என் கருத்து என்றாலும் எனக்கும் அதில் பெரும் நாட்டம் கிடையாது.
அதோடு கணவன் தாலிகட்டிக்கொள்ளாத போது மனைவியின் கழுத்தில் மட்டும் ஏன் இந்த அடையாளக் கயிறு என்ற பெண்ணுரிமை எண்ணமும் எனக்கு உண்டு. ஆனாலும் ஊரில் தமிழ் முஸ்லிம் பெண்கள் பலரும் இன்றும் கருசமணி அணிந்துகொண்டுதான் இருக்கிறார்கள், குறிப்பாக முதியவர்கள்.

No comments: