மத நல்லிணக்கமும் மதச் சகிப்பின்மையும்

மத நல்லிணக்கம் என்பது எது?
மதச் சகிப்பின்மை என்பது எது?
என்பதற்கு மிக அருமையான இரு சான்றுகளைக் கண்டேன்.
இருவரும் நல்ல எழுத்தாளர்கள்.
ஒருவர் எப்படி சகோதர மதத்தவரை நோக்குகிறார் இன்னொருவர் எப்படி அதை உமிழ்கிறார் என்று பாருங்கள்.
இருவரின் கட்டுரைகளும் இதோ:
சமஸ்
http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html
ஜெயமோகன்
http://www.jeyamohan.in/84362#.VroliFgrI2w

சமஸ் அவர்களின் கட்டுரை நிறைய விசயங்களில் ஒத்துப் போக வைத்த கட்டுரை என்று எழுதி இருந்தேன். என்றால் எவற்றோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. அல்லது விளக்கம் தேவை என்பதை ஒவ்வொன்றாகக் காண விழைகிறேன்.
>>> உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்? <<<<
நல்ல கேள்வி. வெறி பிடித்தவர்கள் விட்டுவைக்கத்தான் மாட்டார்கள். பாபர் மசூதியை இடித்ததைப் போல, புத்தர் சிலையை உடைத்ததைப் போல.
ஆனால் அதுவல்ல இஸ்லாம். அதுவல்ல இந்துத்துவம். அதுவல்ல கிருத்தவம்.
மதச்சகிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சிவனை வணங்கும் நீயும், சுடலைமாடனை வழிபடும் அவனும் ஏசுவைத் தொழும் இவனும் என் சகோதரர்கள் என்று அன்பு பாராட்டுவதுதான் மதச் சகிப்பு.
அதுவல்லாமல், நான் எல்லோரையும் வழிபடுவேன் என்று எல்லோரும் சொல்வதுதான் மதச் சகிப்பு என்று எவரேனும் நினைத்தால் அது பெருந்தவறு.
அப்படி ஒருவன் எல்லா தெய்வங்களையும் வழிபட்டு நின்றால் அவனையும் தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை.
அவனை மதச்சகிப்பாளன் என்று சொல்வதைவிட பல மதங்களின் அல்லது பல கடவுள்களின் அல்லது பல தத்துவங்களின் நேசன் என்று சொல்லலாம்.
எவனையும் வணங்கமாட்டேன் என்று ஒரு நாத்திகன் சொல்வதைப்போல எல்லோரையும் வணங்குவேன் என்று ஒரு ஆத்திகன் சொல்கிறான்.
ஆனால் எல்லோரும் அப்படியாய் ஆகிவிடவேண்டும் என்று சமஸ் நினைத்து இதை எழுதி இருந்தால் அவர் பிழையாகவே எண்ணி எழுதி இருக்கிறார் என்பதே சரி.

>>>>இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.<<<< சமஸ்
அன்பின் சமஸ், உங்கள் ஏக்கம் மிகவும் நியாயமானது, மத நல்லிணக்கத்திற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டு. உங்களைப் பாராட்டுகிறேன்.
ஆனால் எங்கோ கேட்ட வயாபிய முழக்கம் காரணமாக நீங்க எல்லாம் அழிந்தது என்று எண்ணத் தேவையில்லை.
இன்றும் இப்போதும் தமிழகமெங்கும் தமிழகத் தமிழர்கள் வாழும் உலகமெங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான்கள்தான்.
சென்னை வெள்ளத்தில் கோவிலைச் சுத்தம் செய்த முஸ்லிம்கள் என்று உங்கள் கட்டுரையிலேயே எழுதி இருக்கிறீர்கள் பாருங்கள்.
கனடாவில் பலகாலம் வாழ்ந்தாலும் என் கிராமத்தையும் என் தஞ்சை பெரிய கோவிலையும் அவ்வப்போது என் பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருப்பேன். என்னைப் போன்றவர்களால் ஆனதுதான் பெரும்பான்மை உணர்வுகள்.
இந்த வருடப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடினோம். கொண்டாடினோம் என்றால் இந்துக் கடவுள்களைத் தொழச்சென்றோம் என்று பொருள் அல்ல, விவசாயத்துக்கு உதவும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொன்னோம்.
நீங்கள் இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். அவை இந்து முஸ்லிம் மத நல்லிணகத்தை போற்றி வளர்ப்பதாய் இருக்க வேண்டும்.
நன்றாகவே ஆய்வு செய்து நேரடியாகவே கண்டும் கேட்டும் நடுநிலையோடு எழுதுங்கள்.
நன்றி

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்