#தமிழ்முஸ்லிம்

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் ”இடையில்” ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 17 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்கு மரியாதை அதிகம்.

எனக்குக் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. என் சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆனது.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அம்மாங்க கேட்டார்.

Mother என்று ஆங்கிலத்தில் சொல்வதை அம்மா - அம்மாங்க என்று தமிழ்ப்படுத்திச் சொன்னால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

தமிழுக்குச் சம்மந்தமே இல்லாத பீவீ என்ற சொல்லை என் சகோதரிக்குப் பயன்படுத்துவது எப்படி சரி?

கல்லாதவர்கள் எதையோ சொல்லலாம் கற்றவரான, ஒரு மடத்தின் நிர்வாகியான நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன்.

சற்றே சங்கடப்பட்டார் ஆனால் தான் சொல்வது சரிதானே என்ற ஐய உறுதியோடு என்னிடம் விளக்கம் கேட்டார்.

பீவீ என்பது பீபீ என்ற சொல் மருவி வந்தது.

Bibi என்றால் உருதுவில் Miss அதாவது செல்வி என்று பொருள்.

பீபீ ஜெயலலிதா அல்லது ஜெயலலிதா பீவி என்றால் பொருள் சரி. ஆனால் அப்படியா அழைக்கிறோம்? ஏன் அப்படி அழைப்பதில்லை? எவரேனும் விடை சொல்வார்களா?

ஏனெனில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் பெண்மணி இல்லை. அவ்வளவுதான் ;-)

உருது, ஆப்கானிஸ்தான் மற்றும் சில பகுதியினர் பீபீ என்று மணமான பெண்களையும் கன்னியமாய் அழைத்தார்கள்.

பீபீ என்றால் மனைவி என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். உங்க பீவீ யாரு என்றால் உங்கள் மனைவி யார் என்று பொருள்.

பீபீ என்பது உருது.

ஒரு தமிழ்ப் பெண்ணை சகோ (சகோதரி) என்றுதானே அழைக்க வேண்டும்? அல்லது திருமதி என்று மணமான பெண்களையும் செல்வி என்று மணமாகாத பெண்களையும் தமிழ் வழக்கப்படியல்லவா அழைக்க வேண்டும்?

இந்த பீபீ, பீவீ எல்லாவற்றையும் உருது மற்றும் ஆப்கானிஸ்தான் காரர்களிடமே விட்டுவிடுங்கள். தமிழர்களாகிய நமக்கு அது தேவை இல்லை. அது நம்மைத் தாய்மொழி அறியாதவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டுவிடும்.

ஓர் முஸ்லிமிற்கு தாய், தாய்மொழி, தாய்மண் என்பனவெல்லாம் மிக அவசியம்.

இஸ்லாமிய வேத நூலை எவரும் அவரவர் தாய் மொழியிலேயே பயிலலாம். ஆர்வம் இருந்தால் தாராளமாக குர்-ஆனின் மொழியை அரைகுறையாய் அல்லாமல் ஆழமாகக் கற்றும் பயிலலாம்.

குரானின் மொழி அந்தக் கால அரபுமொழி. அதன் சொற்களுக்கு இந்தக்கால அரபிகள் சிலருக்கே பொருள் தெரிவதில்லை.

சங்ககாலத் தமிழைப்போல குர்-ஆனின் மொழி கலப்படமற்றத் தூய்மையானது.

முதலில் தமிழ்நாட்டின் முஸ்லிம்கள் சரியாகப் புரிந்துகொண்டால்தான் தவறாகச் சொல்லும் மற்ற மதத்தினருக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

* சிலர் முஸ்லிம் பெண்களை பேகம் என்றும் அழைப்பார்கள்.

பேகம் என்பது துருக்கி, பெர்சியன் மற்றும் உருது மொழியில் பயன்பாட்டில் உள்ள சொல்.

பேகம் என்பது உயர் அதிகாரியைக் குறிக்கும். அதோடு நின்றுவிடாமல் உயர் அதிகாரிகளின் மனைவி, மகள் ஆகியோரையும் குறிக்கும்.

அதாவது மரியாதைக்குரிய சொல். ஆங்கிலத்தில் ஹானரபிள் என்பார்கள் தமிழில் உயர்திரு என்பார்கள். அப்படியான ஒரு சொல்.

ஆனால் வழக்கம்போல தென்னாசிய மக்கள் பேகம் என்பதை உயர்வடைந்த முஸ்லிம் பெண்களை அழைக்கப் பயன்படுத்தினார்கள்.

பேகம் என்றால் அரசி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.

பிறகு மெல்ல மெல்ல பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் செல்லமாக அல்லது பெருமையாக தங்கள் தங்கள் மனைவிகளையே ’எங்கூட்டு பேகம்’ என்பதுபோல் அழைக்கத் தொடங்கினார்கள்.

* அடுத்தது இந்த ’பானு’.

பானு என்ற பெயர் முஸ்லிம் பெண்களுக்குப் பரவலாக வழங்கப்படுகிறது.

பானு என்பதும் இதே வகையில்தான் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெர்சியன் என்றாலும் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி, இந்தியா மற்றும் நேபாளம் ஆகியநாடுகளில் வழக்கில் இருக்கும் பெயர் இது.

பீவி பேகம் என்பதெல்லாம் ஒரு மரியாதைச் சொல்போல பயன்பட்டாலும், பானு என்பது ஒரு பெயராகவே பயன்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளில் புழங்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் பானு என்பதை சின்ன சகோதரி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.
பானு இங்க வாம்மா என்றால், தங்கச்சி இங்க வாம்மா என்று பொருள். பானுவைக் கட்டிக்கொண்டவர்களுக்கு பானு மனைவியாகிறாளே என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை. எங்கிருந்தோ வந்த சொல்லைப் பயன்படுத்தும்போது நாம் பொருள் பார்த்து பயன்படுத்துவதில்லை. அதனால் வரும் குழப்பங்கள் நியாயமானவை தானே?

ஆனால் பெண்ணே, இளவரசியே, மணமகளே என்றுதான் ஈரானில் பயன்படுத்துகிறார்கள். ஏன்? ஏனெனில் பார்சி அவர்கள் மொழி ;-) அதனால் அவர்களுக்குத் தெரியும் பானு என்ற சொல்லின் பொருள்.

இதில் மிகச் சரியான பானு என்பதை பெயராக மட்டுமே பயன்படுத்துவோர் துருக்கிக்காரர்கள்தாம். அதுதான் பானு என்ற சொல்லின் சரியான பார்சிய மொழிப் பயன்பாடு.

ஆகவே சகோக்களே பானு என்பது ஒரு பெயர்.

தமிழ்நாட்டில் பானு என்ற பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்தவர்கள் பானுவுக்கு தங்கச்சி என்ற பொருளோ என்று கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், பார்சியில் அது வெறுமனே ஒரு பெயர். உயர்வான பெண் என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

கூடுதலாக ஓர் ஆறுதல் என்னவென்றால், தெலுங்கு மொழியில் பானுவுக்கு ஓர் அருமையான பொருள் உண்டு. அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கொள்ளவும் செய்யலாம். பானு என்றால் தெலுங்கில் ”சூரியக்கதிர்கள்”

சாய்ரா பானு இப்ப நிமிர்றா பார்த்தீங்களா ;-)


Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்