*****56

வளைகுடாவில் வாங்கிய காகிதத்தில்...


உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோஜா நிற காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பினேன். இப்போதும் வாசித்து நெகிழ்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வுதேடி பாலைவனம் வந்த ஒரு தந்தையின் வலிகளைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிப்பேழை இது. எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

பனிரோஜா வம்சத்தின்
ஒற்றை இளவரசியைப் போல்
பிறந்த என் மகளே மகளே
நலமா நலமா

நீ
பிறந்த
பொற்பொழுதான
அப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்
முதல் பிறந்த நாளான
இப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்னை மறந்தல்ல
நான் இங்கே வாழ்கிறேன்
உன் நலன்
நினைத்துத்தான்
நான் இங்கே தேய்கிறேன்

மூடிவைத்த
மின்னலொளிப் பூவே

என்
மனப்பூ வெளியெங்கும்
உன் சிரிப்பூ மகளே

என்
நினைப்பூப் பரப்பெங்கும்
உன் விழி துருதுருப்பூ
மகளே

உன் தாய்தரும் பாலிலே
பாசமுண்டு

உனக்கென இங்கே
நான்விடும் கண்ணீரிலே
என் உயிருண்டு

உன் மொழியை
எழுத்தாய் எழுதும்
கலையை நான் அறிந்திருந்தால்
நம்மூர் அஞ்சலகம்
என் கடிதங்களால் மூழ்கிக்
காணாமல் போயிருக்கும்

அடக்கி அடக்கி வைக்கும்
என் கொஞ்சல்கள் பீறிட
ஈரமாகும் காற்றலைகள்
ஏழுகடல் தாண்டும்
உன் பஞ்சுமேனியைத்
தீண்டும்

நீ வீரிட்டு அழுதால்
உன் அன்னை
வேதனை கொள்வாள்

அவளுக்குப் புரியாது
என் உணர்வுகளின் அதிர்வுகள்
உன் தேன்கன்னம் தொட்டுக்
கிள்ளிவைக்கும் இரகசியம்

பொன்
மகளே மகளே
நலமா நலமா

உன் கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே
உனை நான்
தேடிவரும் நாளொன்றும்
தூரத்திலில்லை

நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்

அன்புடன் புகாரி

#தமிழ்முஸ்லிம்

10 comments:

M.Rishan Shareef said...

வேதனைகளை எடுத்துரைக்கும் வார்த்தைகளைக் கோர்த்து... கவிதை அருமை.
குடும்பம்,பாசம் அத்தனையையும் கடிதம்,மின்னஞ்சல்,குறுஞ்செய்தி,தொலைபேசிக் குரல்களிலேயே அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.
என்ன செய்ய ? திரவியம் தேடி தாய்நாடகன்று தொலைதூரம் ஏகியிருக்கிறோம்.

இப்பொழுதிருக்கும் எல்லா வேதனைகளும் இரட்டிப்பாகக் காத்திருக்கிறது 'அம்மா,இது யார்?' என்று நம்மைக் காட்டிக் கேட்கும் ஓர் நாளில்.

Anonymous said...

இந்தக் கவிதையில் இருக்கும் அழகைவிட இதன் சோகமே என்னை மிகவும் பாதிக்குது புகாரி...பணத்திற்காகவும், வசதிக்களுக்காகவும் நாம் மீண்டும் பெற முடியாத எத்தனை விஷயங்களை இழந்து விடுகிறோம் நம் வாழ்வில்!!...ஹும்ம்ம்ம்... :(

சுரேகா.. said...

//கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே
உனை நான்
தேடிவரும் நாளொன்றும்
தூரத்திலில்லை//

ஆஹா..! அற்புத வலி வெளிப்பாடு

//நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்//

அழகு !!
வாழ்த்துக்கள்!

பூங்குழலி said...

என் நெஞ்சைத் தொட்ட கவிதை இது புகாரி.
எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல
அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இது சமர்ப்பணம்.

பூங்குழலி

பாச மலர் / Paasa Malar said...

பெரும்பாலானோர் நிலை இங்கு இதுதான்..மிகவும் அழகிய வரிகள்..

cheena (சீனா) said...

புகாரி, கவிதை அருமை - அயலகத்தில் வாழும் நண்பர்களின் வேதனையை அழகாக வடித்திருக்கிறீர்கள். மகவைக் காண தாயகம் வந்தால் மகிழ்ச்சிதான். பிறகு மறுபடியும் பிரிவு .... என் செய்வது. பிரிவின் காரணமே மகவின் நலன் தானெ !!

Anonymous said...

வலிகளைச் சொல்லும் கவிதை. ஒரு தந்தையின் இயலாமைகளையும், இயலாமை அதிகப்படுத்தும் வலியையும், பாசத்தின் வீரியம் அதிகரிக்கும் போதெல்லாம் அழுத்தம் தரும் சோகத்தையும் அடர்த்தியான தமிழில் படம் பிடித்திருக்கிறீர்கள்.

Unknown said...

நன்றி சேவியர். இந்தக் கவிதை எங்கோ ஓர் கடிதமாக மறக்கப்பட்டுக் கிடந்தது. உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோசா நிற அழகிய கடிதக் காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பியிருக்கிறேன். இப்போது வாசித்து நெகிழ்ந்தேன். நடப்புகளைப் பதிவுசெய்வது எத்தனை உயர்வானது என்பதை இதுவும் எனக்கு உணர்த்தியது.

Begum said...

நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்.

வித்தியாசமான கற்பனை.
பிரிவின் வேதனை புரிகிறது கவிதையில். நல்லாயிருக்கு புகாரி.

அன்புடன் ஆயிஷா

சத்ரியன் said...

//உன் கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே..//

அடடா...அற்புதம் புகாரி,

உங்கள் மழலைக்கு இந்த கவிதை வரிகள் புரியாதே. புரியும் பருவத்தில் நிச்சயம் பெருமிதம் கொள்வாள்.அப் பாவை உங்களை அப்பாவாய் பெற்றதற்கு!

உங்களுக்கு ஒரு பணி வைத்திருக்கிறேன்."http://manavili.blogspot.com" ‍ க்கு வந்து பாருங்கள்.