தைமகளின் தமிழ்ப் புத்தாண்டு

தைமகளே
எழில் தமிழ்மகளே
தாய்மடியில் உன் தாலாட்டே

எத்தனையோ
தமிழ் மாதங்களும்
இன்னமுதத் தேன் அளந்தாலும்

முத்தொளிரும்
தமிழ்ப் புத்தாண்டில்
முரசொலித்தே உன் முகமெடுத்து

முத்தமிழர்
ஏன் முன்வைத்தார்
மொழிவாயே என் தைமகளே

அத்தைமகள்
விழி மார்கழியும்
அழகொளிரும் சுடர் சித்திரையும்

முத்தமிடும்
பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ
இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப்
பண் பாடிவர
தைமகளே நீ ஏனடியோ

கத்தரியாய்த்
துயர் துண்டாடி
அமுதளக்கும் நிலத் தைமகளே

எத்தனையோ
துய்ர் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

தைமகளே
தவப் பொற்கொடியே
ஏருலகம் உன் சொற்படியே

முத்தெடுக்கும்
நீள் மூச்சழகே
முறைதானே நீ தலைமகளே

முத்துரதம்
மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும்
வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

புத்தாண்டின்
புது நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச் சுரம்பாட

தைமகளே
நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

எழுதக் கூடாத கடிதம்

அன்பே

கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்

இருந்தும்
நான் இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும் என்னால்
மௌனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது

ஆம்
அந்த ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன் ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப் பூட்டிவைத்திருக்கிறேன்



எனக்குத் தெரியாததா
மௌனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை எனக்கெனவே
இன்னமும் உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை

எனக்குக் கேட்காததா
நீ உன் அந்தரங்கத்துக்குள்
என்னை இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்

பல நேரங்களில்
நீ உன் விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட முன் வந்திருக்கிறாய்

உன் பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில் என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்

இருந்தும் என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை

நான்
உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும் ஈர நெஞ்சன் தான்

ஒரு நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்

உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ

எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்

ஆனால்
உன் சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

எனவேதான் என் அன்பே
என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற உன் விழிக் கெஞ்சல்களையும்
நான் நிதானமாகவே நிராகரிக்கிறேன்

இருந்தும்
என் காதலை உன்முன்
என் உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர் உற்சவமே நடத்திவிட்டது

சந்தேகமிருந்தால்
நான் அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி

அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்
அவை சொல்லும்

கண்ணே
நான் உன்னைக் காதலிக்கிறேனடி

இதயத்தின் எல்லா அணுக்களாலும்
நான் உன்னை நேசிக்கிறேனடி

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை அஉச்சரிக்கிறேனடி

என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை

நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்

இருந்தும் என் அன்பே
நான் எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்

அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்

என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய

பிரிகின்றேன் கண்மணி

எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும் ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.


பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்


இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்

இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை


மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்

தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி


துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்

அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை


மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய

எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே


இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே

எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்
*பதினோராம் குடியரசுத் தலைவா*

ஓ
வைர விதையே
*எங்கள் அப்துல் கலாம்*

ஒரு பனித்துளி
தென்னிந்தியப் புழுதிப்
புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை

ஒரு சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை

எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம்
ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே

உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது

சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன் மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்

சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி

குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்

நீயோ
இந்தியாவின் முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும்
வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்

ஐயனே
எங்களை ஆள வந்த மெய்யனே

எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே

வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும் எந்நேரமும்
பணிக்குள் புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின் ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே
நல்ல தமிழ்க் கவிஞனே

ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே

உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ஆட்டிப் பார்த்துவிட்டன

அதோடு
அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர் ஏவுகணை செய்வாயா

கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே

நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு பிரகாச உற்சவத்தில்

சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய்
எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்

ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா

மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும் அவலம்
இன்னும் நீள்கிறதே
அதை அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா

திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்

உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்

தேனளக்கும் நம்பிக்கையை
நீ வாரி வாரி வழங்குகின்றாய்

உன் தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்

கண்களின்
கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா

உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியொரு
தோல்வியைச் சொல்ல
நீ யொன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்

துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்

ஒரு கூட்டு வேண்டுதலாய்
இறைமுன் தொழுகின்றோம்

மறவாதே ஐயனே
கொண்ட கொள்கையின்
தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே
எங்களின்
பதினோராம் குடியரசுத் தலைவனே

கவிஞர் புகாரி
(2002ல் எழுதிய கவிதை)

15 அக்டோபர் 1931 – 27 ஜூலை 2015

அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்

உலகின்
அத்தனை அன்பையும்
ஒன்று குவித்து
தன் பாச உதடுகளால்
என் நெற்றியில்
முத்தமிட்டாள்



பொட்டிற்கு என்பது
உபரிப் பணி
அவளின் முத்தத்திற்கு
என்பதே
என் நெற்றியின்
தலையாயப் பணி



மங்கலாய் எரியும்
தெருவிளக்குகளில்
ஒளிந்து பிடித்து விளையாடியவள்

கணினிப் பெருநகரில்
கைநிறைந்த சம்பளத்தில்
மூக்குக் கண்ணாடி வழியே
மொத்த உலகத்தையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்

ஆம்
இந்தக் கிராமிய நிலா
இன்று பட்டணத்து வானில்

நுனிநாக்கில் 'டமில்' பேசும்
சென்னைத் தமிழ் இளசுகளும்
மூக்கின்மேல் விரல்வைக்கும்
ஓர் இடத்தில்



நாட்டுக்கு ஒரு கிளையும்
ஆளுக்கு ஒரு கணினியும்
என் நிறுவனத்தின் பெருமை

இணையத்தில் நுழைந்து
நிமிடத்தில் பொருள் குவிக்கும்
நுட்பங்கள் அடர்ந்தது
எங்கள் பணி



எட்டுமணி நேர
அலுவலக இறுக்கம்
பல்லவன் வந்து முகமூடி கிழிக்க
நான் என்னிடம் மீள்வேன்



எண்ணெய் வழிய
இறுக்கிப் பின்னிய
இரட்டை சடைப் பின்னலுடன்
எங்களூர் மண்ணில்
மணிக்கணக்காய் ஓடியாடியபோது

பக்கத்து வீட்டுப்
பட்டணத்து அக்காவின்
அலங்கரித்த முகமும்
ஆங்கிலம் பேசும் அழகும்
எப்போது நாமும்
இப்படி வளர்ந்து
வாளிப்பாய் நிற்போம் என்று
கண்களுக்குள் கனவுகளை
இறக்குமதி செய்யும்



இன்று
எல்லாம்தான் இருக்கிறது

அடுத்த மாதம் நான்
அமெரிக்கா போக
வேலையும் விசாவும் தயார்



ஆம்
இருந்தது இல்லாமல்
போனதைத் தவிர
மற்ற எல்லாம்தான்
இருக்கிறது



மனிதர்களைத்
தனிமைப் படுத்தும்
விஞ்ஞான வளர்ச்சி

இரத்த பந்தங்களை
ஊருக்கு ஒன்றாய்த்
தூக்கி எறிந்து விளையாடும்
வேலை வாய்ப்பு

வெறுமையை
நிரந்தரப் படுத்தும்
இயந்திரங்கள்



அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்

அடுத்தவாரமே
உன் மடிதேடி வருவேன் நான்

எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்

அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்

நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல

நாணமே நீயிடும் அரிதாரம்

நீ
வைகறைப் பனிவிழும்
புல்மடியோ - மலை
வாழையில் வெடித்த பொற்
கனிநிலவோ

அந்தி
வானத்துச் சந்தன
ஒவியமோ - நதி
கடலுக்குச் சூட்டிடும்
நுரைச்சரமோ

முழு
நிலவு உன் கூந்தலில்
முகங்கழுவும் - வன
வண்டுகள் கண்களைக்
காதலிக்கும்

வான்
வசந்தம் உன் இளமையில்
அசைந்தாடும் - தேன்
அருவியுன் இடைவிழ
மனுப்போடும்

உயிர்
எழுத்துக்கு உன் பெயர்
உயிராகும் - உன்
நாணமே நீயிடும்
அரிதாரம்

நீ
நடப்பது நிலத்துக்குத்
தெரியாது - உன்
நினைவின்றி கனவே
விளையாது

மெல்ல
முகர்ந்தால் துவள்வது
அனிச்சமலர் - கண்
பார்வையில் துவளும் நீ
என்ன மலர்

உன்
நகத்தையே உறிஞ்சும்
செந்தேனீ - பொன்
விரலுக்கு வேண்டாம்
மருதாணி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*ஐயா இது அமெரிக்கா*

கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை

அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே

எந்த அட்டை
இருந்தால் என்ன

கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்

+

இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்

கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது


ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர்
அசிங்கமும் கிடைக்காது
"ஐலவ்யூ" சொல்ல

கடன் அட்டை மட்டும்
கொஞ்சம்
கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்

+

கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ

அலாவுதீன் பூதம்
தன்
முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு

+

வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்

வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி

தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி

மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று

வந்து வந்து வழிவர்

+

நொந்த மனமுடன்
ஓர்
இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்

"இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான்"

என்கிறாயே
நிஜமா தோழா

அன்புடன் புகாரி
20001006

ஒரு வாரிசு உருவாகிறது

நாடெங்கும் கொடிக் கம்பம்
நட்டுவச்சாச்சு
நட்டநடு வீதியெங்கும்
செலையும் வச்சாச்சு

வீடெங்கும் புகுந்தலசி
ஓட்டுக் கேட்டாச்சு
வெவரமாகப் பேசினவன்
இடுப்பொடிச்சாச்சு

காடுமலை மேடுயெல்லாம்
மேடை இட்டாச்சு
கள்ள ஓட்டுப் போட்டு இப்போ
ஆட்சி வந்தாச்சு

ஏடெங்கும் பொய்யெழுதிப்
புகழும்வந்தாச்சு
ஏழெட்டுத் தலைமுறைக்குக்
காசும் சேத்தாச்சு

கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு

ஆடு மாடு மந்தையான
மக்கள் மாறிடுமா
ஆட்சி நம்மக் கையைவிட்டு
ஓடிப்போயிருமா

பாடுபட்டுப் புளுகிவச்ச
சத்தியங் கேட்டு
பழயபடி இந்தமொறையும்
நமக்குத்தான் ஓட்டு

ஏடெடுத்துப் புகழெழுது
செத்த பயலுக்கு
எனக்கும் அதுல பொய்யெழுது
நல்ல பெயருக்கு

நாளைக்கு நான் புதுச்சட்டம்
போட்டுறப் போறேன்
நாடெங்கும் லஞ்சத்தையே
அமுலிலாக்கிடுவேன்

வேளைக்குயோர் ஊழலுன்னு
வரிசைப் படுத்திட்டேன்
வேறெதுக்கு ஓட்டு வாங்கி
ஜெயிச்சு வந்திருக்கேன்

ஏழை ஜனங்க ஏமாறும்
வழியைத் தெரிஞ்சிக்க
எட்டடுக்குக் காரனுக்கு
ஒதவி செஞ்சிக்க

காளை மனசுக் காரங்களைத்
தூண்டி விட்டுக்க
காரு கடை வீதியெல்லாம்
நாசமாக்கிக்க

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க

கேளுயின்னும் எத்தனையோ
புத்தி வச்சிருக்கேன்
கேட்டெனக்குப் பின்னுமதைச்
செய்ய நெனைச்சிக்க

பாலுமோரு தயிருயெல்லாம்
ஓரினச்சாதி
பந்தபாசம் நம்மளுக்கும்
அந்த மாதிரி

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

ஓருயிர் அழிந்தால் உலகம் அழவேண்டும்
உன்னுயிர் போல்தான் அந்நியர் உயிராகும்
போரெனில் அழிவது பாமரத் தலைதானோ
பண்பைத் துறந்த உன்பெயர் அழியாதோ

பேச்சே இல்லாப் பண்டைக் காலத்தில்
பயத்தால் கொன்றான் பார்க்கும் மனிதர்களை
ஆச்சோ அப்படி ஆயிரம் மொழியிருந்தும்
அரசியல் தீர்வில் ஆயுதம் வரலாமோ

ஏழை வயிற்றின் கூழைப் பறித்தெடுத்தே
ஏவு கணைகள் ஆயிரம் செய்கின்றாய்
பாலை வனத்தின் எண்ணெய்க் கிணறுகளில்
தீயை மூட்டி நாசம் செய்கின்றாய்

அகிலம் யாவும் உயிரினச் சொத்தாகும்
அதனுள் என்றும் அன்பே மூச்சாகும்
முகிலைப் போலே உப்பை விலக்கிவிட்டு
மக்கள் மீதுன் நல்லதைப் பொழிந்துவிடு

கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்

உலகின் தலைவன் யாரோ அவன்யாரோ
உயிர்கள் காக்கும் கருணை வேந்தனன்றோ
சலவை செய்துன் அழுக்கைத் போக்கிவிடு
சகலரும் வாழ பூமியைப் பூக்கவிடு



உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

கண்களின் அருவியை நிறுத்து

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா

உள்ளத்துச் சிறையின் உள்ளே
ஓயாமல் தள்ளப் பட்டே
சிறையையே தண்டிக்கின்ற
பொல்லாத கைதிகளடா - தோழா
பிணந்தின்னிக் கவலைகளடா

முடக்கங்கள் இந்தப் பக்கம்
பலகீனம் அந்தப் பக்கம்
மனத்தினுள் கிள்ளி வைக்கும்
கவலைகள் முள்ளாய் தைக்கும் - தோழா
முள்ளுக்குள் உயிரும் சிக்கும்

வாழ்வெனும் கடலில் நீந்தி
நம்பிக்கை வலைகள் வீசி
விழிகளை விரித்தே பாரு
குதூகல மீன்கள் நூறு - தோழா
கவலையோ விலகும் சேறு

மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்

கைவிட்ட காதல்தனையும்
கஷ்டத்தில் காணாதொளியும்
கயவாளித் தோழர்களையும்
காலுக்கடி மிதித்துவிடடா - தோழா
கருத்தினில் ஒதுக்கிவிடடா

ஏமாறு தவறே இல்லை
ஏமாற்றம் குற்றம் இல்லை
ஏமாற்றம் முதல்முறையென்றால்
ஏமாறு தவறே இல்லை - தோழா
ஏமாற்றம் குற்றம் இல்லை

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்

வாழ்க்கையில் விட்டுக்கொடு
விட்டுநீ கொடுக்கும் போது
விண்தொட்டு வளரும் இன்பம்
கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா
எட்டியே நடக்கும் துன்பம்

பொருள் தேடி உலகம் ஏறு
பொன்னோடு பண்பும் சேரு
பொருள் கண்ட உன்னையாரும்
பணம் என்று மட்டும் பார்த்தால் - தோழா
பிணம் என்று மட்டும் பாரு

சப்தத்தின் சிரிப்பும் கானல்
மௌனத்தின் புன்னகை வரம்
ரசிக்கின்ற உன்னுளம் தென்றல்
பாராட்டும் ஒளிமுகம் விடியல் - தோழா
பாராட்டும் பண்பே வானம்

மாறாத மகத்துவம் என்று
மண்மீது மாற்றமே உண்டு
இருண்ட உன் இதயமே கேடு
சொர்க்கமும் பூட்டிய கூடு - தோழா
திறவுகோல் உனக்குள் தேடு

கைகளில் அள்ளியே நாளும்
கணக்கின்றி உரித்தென்ன லாபம்
கவலைகள் பெருகியே போகும்
வெங்காயம் வேறென்ன ஆகும் - தோழா
வீசிநீ எறிந்தாலே தீரும்

மோப்பநாய் போலவும் தேடி
ஆனந்தம் காணுவாய் கோடி
பதுங்கியப் பூனைபோல் தாவி
சுகங்களைக் கவ்வியே வாழி - தோழா
சந்தோசம் உனக்கான தோணி

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்களை அறுத்து - தோழா
கண்களின் அருவியை நிறுத்து

இ. விமரிசனம் - சேவியர் - வெளிச்ச அழைப்புகள்


கனடாவில் வாழும் தமிழ்க் கவிஞர் புகாரியின் முதல் கவிதைத் தொகுப்பு இது!

தமிழகத்தைவிட்டு வெளியே இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ்மீது தீவிர காதல் இருக்கும்போல!

இங்கே
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையடும்போதுமட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்


என்னும் முன்னுரையோடு ஆரம்பிக்கிறார் கவிஞர்.

மொத்தம் முப்பது கவிதைகள், கவிதையின் அத்தனை வடிவங்களையும் கொஞ்சமேனும் தொட்டுவிடவேண்டும் என்னும் கவிஞரின் வேகம் இத்தொகுப்பில் புரிகிறது. கிராமியக் கவிதை, நகர்ப்புறக் கவிதை, இசைக் கவிதை, ஆராய்ச்சிக் கவிதை, தனி நபர்க் கவிதை, நிகழ்ச்சிக் கவிதை என்று பட்டியல் இன்னும் நீள்கிறது.

கவிஞன்
தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்
கவிதை


என்னும் முதல் கவிதையிலேயே கவிதைமீதும், கவிஞர்மீதும் நமக்கு ஓர் ஈடுபாடு வந்துவிடுகிறது.

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை


என்னும் வரிகளில் வாழ்வின் எதார்த்தம் வழிகிறது. கவிதைகள் எதுவும் அவலச்சுவையோடு முடியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

'இலவசம்' மற்றும் 'குளிர்' ஆகிய கவிதைகளை அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் வாசகர்களே அதிகம் ரசிக்க முடியும். இலவசம் கவிதையில் கவிஞரின் நகைச்சுவை நடை கவிதை உடையோடு அவைக்கு வந்து நடனம் ஆடுகிறது.

தாலி வாங்கினால்
பொண்டாட்டி இலவசம்
என்று
கடைதிறக்காததுதான்
மிச்சம்


எனவும்

ஒன்றுக்கு மூன்று இலவசம்
என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத் தீரும் அவலம்


என்றும் கவிஞர் அடுக்கிக்கொண்டேபோகும்போதும் நிலைமையின் வீரியம் மனச்சுவர்களில் பட்டென்று ஒட்டிக்கொள்கிறது

'குளிர்' - இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. அத்தனை வரிகளையும் செதுக்கிச் செதுக்கி உறையவைத்திருக்கிறார் புகாரி. எழுதும்போது பனியில் புரண்டுகொண்டே எழுதினாரோ என்று தோன்றுமளவுக்கு ஒரு சில்லிடும் குளிர் கவிதை வரிகளில் பாய்ந்து கிடக்கிறது. இன்னொரு கசிறப்பான கவிதை 'இருட்டு பேசுகிறது' - ஓஷோவின் இருட்டு பற்றிய சிந்தனைகளும், புகாரியின் கவிதையும் சில இடங்களில் ஒத்துப்போவது இனிய ஆச்சரியம்!

'தாமதம்', 'நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்', 'இன்னும் விடியாமல்' போன்ற கவிதைகள் மனித சமூகத்தைக் குறிவைத்து எழுதப்பட்டவை. கவிதை என்பது கவிதை மட்டுமே, அதற்கும் சமூகத்துக்கும் சம்பந்தமில்லை என்று சந்திகளில் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இலக்கியச் சிந்தனைகள் புகாரியின் கவிதைகளில் இல்லை, கவிதை என்பது சமூகத்தைச் சேரவேண்டும். படிக்கும் மக்கள் ஒரு கணமேனும் கவிதையின் தாக்கத்தை மனசுக்குள் வாங்கவேண்டும் அந்தத் தாக்கம் சமுதாயத்தில் சிறு துரும்பையேனும் நகர்த்த வேண்டும் என்னும் உன்னத ஆசையேஇவர் கவிதைகளில் நிறைய. உதாரணமாய் -

நம்
அரசியல் வயல்களில்
அழுகிய
விதைகளுக்கே
அமோக விளைச்சல்


இன்றைய அரசியல் நிலமையை இப்படிப் 'பளிச்' என்று சமீபத்தில் எந்தக் கவிதையும் சொன்னதாக நினைவில்லை!

'செப்டம்பர் 11' கவிதையும், நடிகர் திலகம் பற்றிய கவிதையும் கவிஞரின் ஆழமான வேதனையின் அழுத்தமான, அழகிய வெளிப்பாடு! கவிதையின் ஒவ்வோர் வரியின் முடிவிலும் சோகத்தின் அடர்த்தி. கவிஞர்கள் சோகமாவது நல்லதுதான் போலிருக்கிறது, சாமானியன் கண்ணீரால் அழும்போது, கவிஞன் கவிதைகளால் அழுகிறான்! கண்ணீரைக் காலம் துடைத்து விடுகிறது, கவிதையோ அடிக்கடி கண்ணீர் அணையை உடைத்து விடுகிறது!

கவிதையின் நீளம் குறைவாக இருந்திருக்கலாம் என்பதுமட்டுமே குறையாக் காண்கிறேன். ஏழெட்டு பக்கங்கள் நீளும் கவிதைகள் கவியரங்கங்களில் கைதட்டல் பெறும் அளவிற்கு புத்தகங்களில் ரசிக்க்பபடுவதில்லை. இரண்டாவது பக்கம் போரடித்தால் வாசகன், மூன்றாவது பக்கம் செல்வதற்குப் பதிலாக அடுத்த கவிதைக்கு விமானமேறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது! சில கவிதைகள் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து சொல்வது சற்றே சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. தலைப்புக் கவிதையான 'வெளிச்ச அழைப்புகள்' அவ்வளவாக திருப்திப்படுத்தவில்லை. புகாரியின் இரண்டாவது தொகுப்பு இவற்றைச் சரிசெய்துவிடும் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை.

முழுமையான தொகுப்பாகப் பார்க்கும்போது இந்த சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. முன்னுரையில் கவியரசர் வைரமுத்து சொல்வதுபோல, 'இந்தத் தொகுப்பு கவியுலகில், புகாரி அவர்களுக்கு பிரகாசமான இடத்தைத் தரும்'

30 அன்புடன் இதயம்


விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

என்
கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன்
கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம்
இருவர் எண்ணங்களும்
அருகருகே
நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

’சரியா?’ -- ’நூறுசதம்’
’அழகா?’ -- ’அற்புதம்’
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

’சரியா?’ -- ’ம்ஹூம்’
’அழகா?’ -- ’மாற்று’
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த
உலக நம்பிக்கை அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா


25 கவியரசனே கண்ணதாசனே
அக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை


*

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்

அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால் நீ இறந்த நாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது

ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..

அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:

ஞானத் தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான் எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன் வலக்கர விரல்கள் ஆறு

ஆம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என் கையெழுத்தைத் தவிர
என் காதல் கடிதங்களில்
உன் கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என் உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன் செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ அழுதிருக்கமாட்டாய்

அந்த அகோர ராகத்திற்கும்
ஓர் அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது கொஞ்ச நாள்
இயற்றியது எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா

என் இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981

22 தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
உன் உயிரின் மொழியென்பது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்

தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
கொஞ்சிக் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

10 தோழியரே தோழியரே


தோழியரே தோழியரே...

ஓ பெண்ணே நீ போகாதே பின்னே
நீ பின்னுக்குப்போனால்
வாழ்க்கை மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே

போராடு
யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க
உன்னோடு இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும் மூர்க்கச் செயலல்ல
ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற அவலமல்ல
ஆணோடு பெண்ணும் சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய

பிறப்புச் சூட்சுமம் உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர் உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக ஊதாரிதானே ஆண்
கவலையை விடுங்கள்

பெண்களின் விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம் உங்கள் ஆண்கள்
அவர்களிடம் கேளுங்கள் தோழியரே
காதல் பேசிய விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக் கேளுங்கள்

தொட்ட நாள் முதல் தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல் வீரமாய் நின்று
வார்த்தை மொட்டவிழ்த்துக் கேளுங்கள்
கேட்பது என்பது எவருக்கும் பொது
நாளெல்லாம் அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே அதைப் போல
கேளுங்கள் தோழியரே

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம் பெண்கள்
அதைக் கொடுத்துவிட்டு அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும் எழுதப் பட்டிருக்கின்றன
அந்தப் பயத்தில் எவரேனும் முரண்டுபிடிக்கலாம்
அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும் போக்கு அல்ல

உங்கள் வரங்கள் வாழ்வதற்கன்றி
வதைப்பதற்கல்ல என்று
உங்கள் முகப்பூக்களின் விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய் எழுதி வையுங்கள்

பிறகு பாருங்கள்
நீங்கள் கேட்கும் முன்னரே
எல்லாமும் கிடைக்கக் கூடும்

திருமணம் என்பது தண்டனை அல்ல
செக்கில் கட்டிச் சிதைக்கும் காரியமல்ல
தலையைக் கொய்யும் தலையெழுத்தல்ல
அடிமையாவதற்கு அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச் சாசனம் அல்ல

இதைத் தெளிவாக்கிக்கொண்டுவிட்டால் தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று தெறித்துச் சிதறி
எங்கும் சமத்துவமே துளிர்க்கும்
வாழ்த்துக்கள்

6 வெள்ளிப் பௌர்ணமியே


வெள்ளிக் கால்கொலுசு
வீதியெல்லாந் தாளமிட
முல்லைச் சிரிப்புதிர்த்து
முந்தானைக் கையசைத்து

வெள்ளிப் பௌர்ணமியே
விரைகிறாயடி - மனதைக்
கிள்ளித் தவிக்கவிட்டே
மறைகிறாயடி

அல்லிக் குளத்தினிலே
அந்தியொளி மஞ்சளிலே
மெல்ல நீரிறைத்து
முகப்பூவை ஈரமாக்கிப்

புள்ளி இளமானே
நிற்கிறாயடி - நெஞ்சை
அள்ளிப் பனிமடியில்
வைக்கிறாயடி

உள்ளக் கனவுகளை
ஒருவருக்கும் சொல்லாமல்
நெல்லி மரத்தடியில்
நெடுநேரம் தலைசாய்த்து

மெல்ல வேறுலகம்
நுழைகிறாயடி - என்பால்
உள்ளம் உருகுவதை
ரசிக்கிறாயடி

கள்ளக் கண்ணோட்டம்
கண்மணியே போதுமினி
உள்ளம் எனக்கென்றே
உருகிவரும் சத்தியத்தைக்

கிள்ளை மொழியாலே
சொல்லிவிடடி - என்னைக்
கொல்லும் தவிப்பினையே
கிள்ளிவிடடி

3 கைகள் ஏந்தி

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்

ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்

மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்


உருப்படாத படம்
நூறு ரூபாய் தண்டம்

ஓர் ஏழை வீட்டு
அடுப்பெரிக்க
காரணமாயிருந்திருக்கலாம்

நல்லதாய்
நான்கு
வாழ்த்தாவது வந்திருக்கும்



சட்டைப்பையில் இருந்த
பத்து ரூபாய்
பறிபோயிருக்கிறது
பேருந்து நிறுத்தம் வரும்முன்

கண்ணில்லாப்
பிச்சைக்காரிக்கு
கண்திறந்து போட்டிருக்கலாம்

அந்தச் சிரிப்பில்
இறைவனையாவது
பார்த்திருக்கலாம்



சரி சரி

இனியும் இந்த
லாம்... லாம்.... கள் வேண்டாம்
புறப்படு

இன்றைய தேதிக்கு
உன் மனிதாபிமானத்தின்
மதிப்பென்ன

எத்தனையோ
மனிதநேய அமைப்புகள்
கைகள் ஏந்திய வண்ணம்

கொடுக்கத்தான்
மனிதர்கள் இல்லை

2 நான்தான் வேண்டும் எனக்கு

 அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல் என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன்
என்று நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்
என் உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரியஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்
தொடர்ந்து என்னை என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

ஆ. அணிந்துரை - கவிப்பேரரசு வைரமுத்து


புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. காரணம், என் கவனத்தில் கல்லெறியும் அவர்களது கனமான எழுத்துக்கள்தாம்.

அந்த வரிசையில் நெஞ்சைப் பிழியும் ஆழமான பதிவுகளையும், புகைப்படத்தின் நிழலுருவுக்கு நிஜம் கொடுக்கும் வார்த்தைகளையும் சுமந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியின் "வெளிச்ச அழைப்புகள்" வாசித்த போது மெல்லிய அதிர்வுகள் மனமெங்கும் பரவுவதை உனர்ந்தேன்.

குழந்தையின் புகைப்படத்தோடு தொடங்கும் இவரது கவிதைப் பிரசவம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து - நடந்து - பேச முற்படும்போது முதிர்ந்த சிந்தனைகள் சிறகடிக்கின்றன.

"விழிகளில்
நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப்
பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும்
அன்புக்கரம்
கவிதை"


கவிதை குறித்த இந்தக் கவிதை ஓர் அழகான வெளிப்பாடு.

இளங்குழந்தை இளைஞனானதும் காதலியின் மௌனம் கலையும் நேரத்திற்காய் தவமிருக்கையில்

"அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா"
- என்கிறார்.நம்பிக்கை குறித்த 'உலகம்' எனும் கவிதை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொறித்துக் கொள்ள வேண்டிய முத்திரைக் கவிதை.

"அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்".


- தமிழ்நாட்டின் நயாகரா குற்றாலம் குறித்த கவிஞர் புகாரியின் வர்ணணையில் நம் மனமும் குளித்துக் குதூகலமடையும் சுகானுபவத்தை என்ன சொல்ல

஑இலவசம்஑ எனும் கவிதை வணிக வாழ்க்கையின் சாமர்த்தியத்தை அழகாகச் சித்தரித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" இருட்டின் இலக்கணத்தைத் தேன் தோய்த்துத் தரும்போது எதார்த்தம் இனிக்கிறது.

கேளிக்கைகளோடு முடிந்து போகும் கவிதைத் தொகுப்போ என்ற என் எண்ணத்தின் திசையைத் திரும்பி பார்க்க வைத்தன ஑செப்டம்பர் 11, 2001ஒ, ஑இறுதியாய் ஒரு கேள்விஒ எனும் இரு கவிதைகள்.

நியூயார்க் கட்டடங்களைத் தீண்டிய தீவிரவாதத்தையும், குஜராத் மக்களின் மன அமைதி திருடிய வன்முறையையும் பதிவு செய்யும் போது கவிஞர் புகாரியின் ஈர இதயம் பற்றி எரிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சமகால நிகழ்வுகளின் பதிவுகளை நாளைய வரலாறாய் ஆக்குவது படைப்பாளர்களே அதில் புகாரியும் ஒருவர்.

அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சமூக விமர்சனத்துடன் பார்க்கும் இவரது பார்வையில் புதுமைகள் பூத்துக்குலுங்குகின்றன.

஑நினைத்துப் பார்க்கிறேன்ஒ கவிதையில் பொருள் தேடி கண்ணுக்குத் தெரியாத தேசத்தில் குடும்பத்தைப் பிரிந்து வாடும் தலைவனின் பிரிவுத் துயரை உணர்ச்சியோடு எழுதி உருகவைத்திருக்கிறார். அந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

"மண்ணுக்குப் பொழியாத
மழைமேகம் மேகமல்ல
தென்னையினைத் தழுவாத
தென்றலுமோர் தென்றலல்ல
கண்ணுக்குள் விரியாத
கனவும் ஓர் கனவல்ல
உன்னருகில் இல்லாயென்
உயிரும் ஓர் உயிரல்ல"


புதுக்கவிதையை விடவும் இவருக்கு இசை லயத்துடன் கூடிய இந்த நடை இயல்பாக அமைந்திருக்கிறது.

நவீனத்தின் போக்குவரத்து நெரிசலில் இருந்தாலும் கவிஞரால் ஑எழுது ஒரு கடுதாசிஒ கவிதை மூலம் கிராமத்து நடவு வாழ்க்கையோடும் நடந்துவர முடிகிறது; நேசத்தோடு அதன் வாழ்வியலை நுகர்ந்து வர முடிகிறது.

஑எங்கள் கலைக்கூடம் கலைந்ததுஒ எனும் நடிகர் திலகம் அவர்கள் பற்றிய கவிதை இத்தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று; அந்த மகா கலைஞனின் மகத்துவம் சொல்லும் அந்தக் கவிதையால் ஆசிரியர் என் மனதின் மதிப்பில் உயர்ந்தார்.

உற்றதை உணர்ச்சியின் உயிர்கெடாது வார்த்தெடுக்கும் வல்லமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும் வாய்த்திருக்கிறது.

புதுக்கவிதையின் பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும் ஆற்றலைப் புகாரி பெற்றிருக்கிறார்.

நுட்பமான கருத்தாழமும் பரந்து பட்ட பார்வையும் அமையப்பெற்றால் இன்னும் கனமான கவிதைகளை வருங்காலங்களில் படைப்பார் என்பது என் எண்ணம்.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" கவியுலகில் பிரகாசமான எதிர்காலத்தைக் கவிஞர் புகாரிக்குத் தரும் என்பதும் திண்ணம்.

கடல்தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரியைப் போன்ற படைப்பாளிகளின் புதிய வரவுகளால் தமிழ்க் கவிதை தழைக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களோடு
வைரமுத்து

அ. முன்னுரை - வெளிச்ச அழைப்புகள்


கவிதைகளாக
இந்த மனசு
மனசாக
அந்தக்
கவிதைகள்

*

உயிர் முத்தங்கள்

என்னை
எழுதத்
தூண்டும்
உணர்வுகளுக்கும்
எழுத
வைக்கும்
தமிழுக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில்
அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு
சிந்தனா முற்றத்தில்
கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே
எனக்குக் கவிதைகள்

என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை
எனக்குப் பிடித்த வண்ணமாய்
என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய்
இங்கே பிடித்து வைத்திருக்கிறேன்

எனக்கு ஞாபகம் முளைத்த
அந்தப் பழைய நாள் முதலாய்
கவிதைகளை என் உயிரின் ஆழம் வரை முகர்ந்து
நான் சுவைத்து வருகிறேன்

என் தாய் மொழி தமிழ் என்பதில்
எனக்கு அளவில்லா ஆனந்தம்
தமிழகத்தில் பிறந்த நான்
இன்று கனடாவில் வாழ்கிறேன்.

இங்கே,
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையாடும்போது மட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்.

தமிழ் வாழ்க

கவிதைகளுடன்,
புகாரி

186 Staines Road
Toronto, Ontario M1X 1V3
Canada

416-500-0972
anbudanbuhari@gmail.com