நான் நானா

அன்பு நண்பர் மணி வண்ணன்,

உங்கள் கருத்துப்படியே
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய்
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே


உங்கள் கருத்து என்பது
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?

நான் நானா
அல்லது நீங்கள் சொல்பவனா
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்

யார் யாரை
எப்படிப் பார்க்கிறார்களோ
அப்படித்தான் அவரா
அல்லது அவர் என்பவர்
அவரே அறியாத
மாய மனிதரா

இலக்கியம்
முதலாக வந்தது
இலக்கணம்
பிறகுதான் வந்தது என்று
தெளிவாக அறிந்தவன்
நான்

இன்றைய தமிழுக்கு
அகராதியே போட்டுவிட்டார்கள்.

இன்றல்ல
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்

https://www.jeyamohan.in/4347#.W8N1ZGhKiUk

http://crea.in/pdf/Crea%20Brochure%208pages.pdf

என்னிடம் பழைய
க்ரியா தமிழகராதி
நெடுங்காலமாய் உண்டு

இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.

என்னால் ஹ ஜ ஸ ஷா என்று
சரளமாகத் தட்டச்ச முடிகிறது

தமிழ்த் தட்டச்சு நிரலிகள்
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
வழங்கியுள்ளன

நீங்கள் சரியான கதவைத்தான்
தட்டுகிறீர்களா என்று
நீங்களே
சிந்தித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
கவிஞர் புகாரி

இதுவும் பிழைதானே

மதுரையை மெஜ்ரா என்று எழுதினான் வெள்ளைக்காரன்.

அது பிழை என்று சொல்லுகிறோம்!

ஸ்காட்லாண்டை இசுக்காட்டுலாந்து என்று தமிழன் எழுதுகிறான்.

இதுவும் பிழைதானே?

கவிஞர் புகாரி

என் பெயரை நான் எழுதுகிறேன்

அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.

அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.

கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை


புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்

ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.

குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.

சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.

நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.

தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்

வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது

அன்புடன்
கவிஞர் புகாரி
என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்


புகாரி என்பது என் பெயர்

என் பெயர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

நான் புஹாரி என்று என் இளவயதில் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் புகாரி என்று எழுதினாலும் ஓசை மாறாது என்று தமிழறிஞர்கள் சொன்னார்கள். அப்படியே கேட்டுக்கொண்டேன். ஏனெனில் என் பெயருக்கு யாதொரு சேதாரம் நிகழவில்லை. மேலும் அழகானது. நன்றிசொல்லி ஏற்றுக்கொண்டேன்

ஆகவே நண்பர்களே என் பெயர் புகாரி. அது அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

ஒரு அரபுக் காரன் வருவான் அதை Bokhari என்று எழுதவேண்டும் என்பான். அதுதான் மூலமொழி என்பான்.

ஒரு பெர்சியன் வருவான் அதை Bukaari என்று எழுத வேண்டும் என்பான். இதுதான் உண்மையான மூல மொழி என்பான்.

ஆனால் உலக மக்களே நீங்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். புகாரி என்பது என் பெயர் எனக்கு இரு மொழி தெரியும். தமிழ் + ஆங்கிலம்

தமிழில் புகாரி என்றுதான் எழுதுவேன் ஆங்கிலத்தில் Buhari என்றுதான் எழுதுவேன்.

எவராவது மாற்று கீற்று என்று வந்தால் சோலியப்பாருய்யா வெங்காயம் என்றுதான் அன்பாகச் சொல்வேன் ;-)

நீங்கள் உங்கள் குஷ் பெயரை குசு என்று மாற்றிக்கொள்ளுங்கள் எனக்குக் கவலை இல்லை. என் பெயரை விட்டுவிடுங்கள்.

என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்

ஏதாவது புரிகிறதா?

அன்புடன்
கவிஞர் புகாரி

தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?

மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்

யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?


இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை 
மரபுக்கவிதை மட்டும் 
எழுதச் சொல்லிக் 
கொன்று கொலையெடுத்தார்கள்.

விரட்டியடித்து முடிப்பதற்குள் 
போதும் போதும் என்றாகிவிட்டது

அவர்களிடமும் 
இதைத்தான் சொன்னேன். 
மரபுக்கவிதை வேண்டுமென்றால் 
நீங்கள் எழுதுங்கள். 

குசுப்பும் (குஷ்பு) 
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்) 
தேவையென்றால் 
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்

நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!

தமிழை அடுத்த தலைமுறைக்கும் 
எடுத்துச் செல்பவர்கள்

அப்படியே 
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே 
தமிழைக் கொன்றெடுப்பவர்கள் 
அல்லர்

தமிழ் 
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு 
அயலவன் அத்தனை பேரையும் 
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால் 
நான் பெரிதும் மகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்

மாற்றம் ஒன்றே மாறாதது. 
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம் 
இன்று நேற்று வந்ததல்ல. 
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது

++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ

அறியாமல் செய்யவில்லை 
அன்றைய அறிஞர்கள்.

குண்டுச் சட்டிக்குள் 
குதிரை ஓட்டுபவர்களுக்கும் 
கிணற்றுத் தவளைகளுக்கும் 
புரியவைப்பது 
இயலவே இயலாது

ஏனெனில் 
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும் 
பச்சைப் போலித்தனமே

தமிழுக்கு எது முக்கியமோ 
அதைவிட்டுவிட்டு 
இதில் வரட்டுத்தனமாய் 
தானும் சிக்கி 
மற்றவர்களையும் சிக்க வைக்கப் 
படாத பாடு படுகிறார்கள்.

அதைவிட்டு 
அடுத்த தலைமுறைக்கும் 
தமிழை அள்ளிக்கொண்டு போகும் 
அனைத்தையும் செய்ய வேண்டாமா?

நான் செய்கிறேன்...

இன்று 
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. 
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும் 
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே 
பேசுகிறார்கள். 

அதை மாற்றுவதற்கு 
ஏதாவது செய்தீர்களா? 
செய்யும் எண்ணம்தான் உண்டா?

நான் 
செய்யப் போகிறேன்

’எங்கள் தமிழ்மொழி’ 
எனும் தொண்டியத்தில் சேருங்கள்

தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்

புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய் 
அமரச் செய்யுங்கள்
வாருங்கள் 
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்

எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன்
கவிஞர் புகாரி

கனடாவில் பாரம்பரியத் தமிழர் உணவுத் திருவிழா


வாழ்க தமிழ்

வித்தகர் யாவரும்
கூடிடுவீர்
விண்ணிலும் தமிழை
ஏற்றிடுவீர்

முத்தமிழ் இன்றியோர்
வாழ்வேது
முரசுகள் ஒலித்தே
போற்றிடுவீர்

இரத்தமும் பீறிடும்
தமிழாக
முத்தமும் ஊறிடும்
தமிழ்பாட

பித்தமும் தெளிந்திடும்
தமிழ்பேச
பேய்களும் வணங்கிடும்
தமிழ்கேட்க

எத்தனைப் பொற்கரம்
தமிழோடு
இமயமும் அற்பமே
தமிழுக்கு

நித்திரை மறந்து
தமிழெடுப்போம்
நீலவான் எங்கிலும்
நட்டுவைப்போம்

கவிஞர் புகாரி
*எல்.........லாம் இன்ப......மயம்......... 🎼 ....🎼.....🎼.....🎼.....*

இந்தப் பாடல் ஒலிபரப்பாகிவிட்டால், எங்கள் (ஒரத்தராடு) ஊர்த் திரையரங்கில் படம் போடப் போகிறோம், வீட்டுவேலைகளையெல்லாம் உடப்பில் போட்டுவிட்டு, உடனே படம் பார்க்க ஓடி வாருங்கள் என்று பொருள்.

ஆமாம் அந்த அழைப்பு பாடலோடு ஒத்துப் போகிறது. காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பது அப்படி ஒன்றும் அவசியமானதல்லை. அவற்றை எல்லாம் கொஞ்சம் மறந்து மகிழ்ச்சியின் பூங்காவனங்களில் சஞ்சரிக்க வேண்டும்.

மகிழ்ச்சி என்றால் ஏதுமற்ற ஏழை வாழ்வில், தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லா வயதினருக்கும்.

திருமணமானவர்களுக்கு உரிமைக்காதல். இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று கண்ணதாசன் உள்பட பலரும் சொல்வார்கள் 😉

விபரமறியாத மிகச் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பாடலை நான் கேட்கிறேன். இந்த வயதில் கேட்கும்போது பொருளை நன்றாகப் புரிந்துகொண்டதால் நான் அப்படியே நான் இந்தப் பாடலுக்குள் சொக்கி விழுகிறேன்.

அருமையான அடர்த்தியான பொருள் கொண்ட, எதையும் நேர்மறையாய்க் காணச் சொல்லும் இனிப்பான பாட்டு. தேர்ந்த சொல்லாட்சி, சிக்கன வரிகள், நீட்டி முழக்காமல் சில வரிகளையே கொண்ட இசையில் பெரிதும் மேலோங்கிய இனிமையான பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி. நாராயணசாமி என்ற தன் இயற்பெயரை நாராயணகவி என்று மாற்றிக்கொண்டு திரைப்பாடல்கள் எழுதினார். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையானவர். தலை வணங்காத உறுதி உடையவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.

பாரதீ.... நீ யாரையும் விட்டுவைக்காத டிராகுலா தானடா. பார்ப்போரையெல்லாம் உன் நுனிப்பல் பதியும் வகையிலாவது  நீ கடித்துவைத்துவிடுவாய். பிறகெல்லாம் அவர்களும் உன்னைப் போலவே தீவிரத் தமிழனாய் புரட்சிக்காரனாய் உறங்கா விழிகளைக் கொண்டவர்களாய் ஆகிவிடுவார்கள்

https://youtu.be/UjKwSeTjYj0

இந்தப் பாடலைப் பாடியவர் எம்.எல். வசந்தகுமாரி.

திரைப்படத்தில் அழகுக் குவியலாய், சின்னஞ்சிறு கன்றுக்குட்டியாய்த் தொடைதட்டி அபிநயித்தவர் நம் நாட்டியப் பேரோளி பத்மினிதான். கூடவே அவரின் சகோதரி லலிதா.

இந்தப் பாடலின் ராகம் *சிம்மேந்திர மத்தியமம்* என்கிறார்கள். அதுமட்டும் எனக்கு இன்றுவரை விளங்கவே இல்லை. அத்தனை இசைஞான சூனியம் நான். என் ரசனையெல்லாம் இசைகேட்கும் பாமரச் செவிச்சுகமும் பாடல்வரிகளை ஆழ்ந்து ரசிக்கும் சிந்தனைச் சுகமும் மட்டுமே.

இந்தக் காலத்தில் இதே பாடலை மீண்டும் நித்யஸ்ரீ பாடி இருக்கிறார். அருமைதான் என்றாலும் அந்தப் பழைய பாடல்முன் சற்றே இடறிநிற்பதாகவே என் செவிகள் சொல்கின்றன எனக்கு. உங்களுக்கு?

https://youtu.be/2gVYogRIoEY

கவிஞர் புகாரி
*வாய்த்தவாய்*

உன்
திருவாய் திறந்துவிட்டால்....

திட்டு மட்டும்தான்
கொட்டுமா

கூர்முனைக்
கொம்பு மட்டும்தான்
முட்டுமா

கொடுந்தேள்
கொடுக்கு மட்டும்தான்
வெட்டுமா

ஈதென்ன
அழிந்தொழியாத
உன்
கொட்டமா

0

உன்
வாய் முகூர்த்தம்
என்பதென்ன
பேய் முகூர்த்தமா

0

வசையே நீண்டால்
வைதலே மூண்டால்
வெறுப்பே புரண்டால்
விசமே திரண்டால்

அதென்ன
வாயா
வயக்காட்டுத் தீயா
நாக்கா
நடுக்கூடத் தூக்கா

0

பார்
உன் வாய் திறந்தால்
எத்தனைப் பிணங்கள்
செத்தபின்னும்
அலறியடித்துக்கொண்டு
ஓடுகின்றன

பார்
உன் வாயை மூடக்கேட்டு
கொடுநெருப்புத் தீப்பந்தங்களும்
கதறியழுது துடிக்கின்றன

பார்
உன் வாய் மூடிய
அந்நொடியில்
ஜென்ம ஜென்மயாய் அடைபட்ட
ஆகாய தேவதைகளெல்லாம்
சட்டென்று விடுதலைபெற்று
படபடக்கும் சிறகுகளின்
மாமதுர ஓசைகளோடு
பறந்து பறந்து
பூத்துக் களிப்பதை

0

இந்
நோய் தீரும் நாளென்று
ஓர் நாள் இப்பிறப்பில்
உனக்குண்டா

ஒரே ஒரு முறை
உன் திருவாய் மலர்ந்து
இன்னிசையாய்
ஒரு சொல்
சொல்லித்தான் பாரேன்

அந்நொடியே
அரளிவிதை நச்சுக் காயும்
அமுதாகும்
சபிக்கப்பட்ட வெறி நாயும்
முயலாகும்

அன்றித்
திறவாதே திறவாதே
உன் வாயை
திறந்து
மூடாதே முடிக்காதே
பலர் வாழ்வை

அன்புடன் புகாரி

செல்லும் பாதை
அறம் அறம்
அறம் என்றே ஆனால்
செல்லும் சாலையும்
சேரும் சோலையும்
சொர்க்கம் சொர்க்கம்
சொர்க்கம் என்றே ஆகும்

கவிஞர் புகாரி
கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி

https://www.youtube.com/watch?v=ZV6Fz0PiWVM

வெளிநாட்டில்
தமிழைக் காக்கிற ஒரு தூதுவராக
தமிழைக் காக்கிற
காவலர்களில் ஒருவராக

தமிழ்ப் படைப்பாளிகளில்
ஒரு முன்னணி
படைப்பாளியாகத் திகழ்கிற
புகாரியின் விழாவில்
கலந்துகொள்வதை நான்
பெருமையாகக் கருதுகிறேன்

வெல்க  புகாரியின் தமிழ்
வாழ்க அவர்தம் குடும்பம்  என்று
வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து


மற்றும்....

மூத்த எழுத்தாளர் மாலன்
கவிஞர் யுகபாரதி
கவிஞர் இந்திரன்
கவிஞர் வைகைச் செல்வி
கவிஞர் அண்ணா கண்ணன்
சென்னை பத்திரிகையாளர்கள்

அன்புடன் புகாரி
கனடாவில் மக்கள் பாதையின் தமிழ்க் கையெழுத்துத் திருவிழா

என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே 
உங்கள் அனைவருக்கும் 
என் அன்புவளர் நட்பு வணக்கம்

சகாயம் அவர்களைத் 
தெரியாதோர் இருப்பதரிது 

சகாயம் என்றால் நேர்மை
நேர்மை என்றால் சகாயம் என்று 
தமிழ் அகராதிகள் ஏற்றுக்கொண்டுவிட்டன

எத்தனை இன்னல்கள் வந்து 
எதிர்த்து நின்றாலும்
விடாப்பிடியாய் அவர் தன்
நேர்மையோடு மட்டுமே ஒட்டிக்கிடப்பது 
என்னை வெகுவாகக் கவர்ந்த 
அவரின் அறம் போற்றும் ஆண்மை

மக்கள் பாதை
என்று ஓர் இயக்கத்தை
ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி 
அவரின் வழிகாட்டுதலில் உருவாக்கி 
அதன் செயல்பாடுகளில் ஒன்றாக
தமிழ்க் கையெழுத்துத் திருவிழா ஒன்றை 
சென்னையில் அக்டோபர் இரண்டில் நடத்துகிறார்கள்

அந்தக் கையெழுத்துத் திருவிழாவை
உங்கள் அனைவரின் ஆதரவோடும்
கனடாவில் நிறைவேற்றும் பணியை
நான் மகிழ்வோடு ஏற்றுள்ளேன்

நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒரு சிறு காரியம்தான்

படிவம் ஒன்றினை நான்
அச்செடுத்துக் கொண்டுவருவேன்

அதில் உங்கள் பெயரைத் தமிழில் எழுதி
தமிழிலேயே கையொப்பமும் இட்டுவிட்டால் 
நம் பணி சிறப்பாக நிறைவடைந்துவிடும்

அப்படிக் கனடாவிலும்
தமிழுணர்வோடு 
தமிழர்களாய் ஒன்றிணைந்து
தமிழ்க் கையொப்பம் இடுவதை
ஒரு காணொளியாக எடுப்போம்
மக்கள் பாதைக்கு அனுப்பி வைப்போம்

வரும் சனிக்கிழமை 
2018, 29 செப்டம்பர் மாலை 
6:30 மணிக்கு
186 Staines Road, Scarborough விலுள்ள
என் இல்லத்தில் நிகழும்
தமிழ்க் கையெழுத்துத் திருவிழாவில் 
கனடாவாழ் அன்புத் தமிழர்கள் அனைவரும்
அன்புடன் கலந்துகொண்டு சிறப்பிக்க
உங்கள் அனைவரையும்
பேரன்புடன் வரவேற்கிறேன்

நன்றி
*
அழைப்பது 
நானல்ல 
அன்னைத்தமிழ்

வரப்போவது 
நீங்களல்ல 
உங்கள் 
தாய்த்தமிழ் உணர்வு

தரப்போவது 
வெறும் கையெழுத்தல்ல
தாய்நில மக்களின் 
தலையெழுத்தை மாற்றும் 
பொன்னெழுத்து

*
தலைவன் தலைவி 
தவப்பிள்ளைகள் என்று 
அனைவரும் வருக 
அமுதத் தமிழுக்கு 
உங்கள் 
கையெழுத்து முத்தம் 
தருக

*

உங்களின் 
பத்து நிமிடங்கள் போதும்
பொங்கு தமிழின் 
கையொப்பத் திருவிழா வெற்றிக்கு

அந்தப் பத்து நிமிடங்களோ
தமிழர் வாழ்வை மீட்டுத்தரும்
தங்கப் பொழுதுகளாய் உருவெடுக்கும் 
வரும்நாட்களில்

*
தமிழனுக்கு என்று ஒரு 
தனி நாடு இல்லைதான்
ஆயினும்
அவன் காலூன்றும் ஒவ்வொருநாடும்
தமிழின் நாடாய் பரந்து விரிவதை
மெய்சிலிரிக்கக் காண்கிறோம்

யாதும் ஊரே 
யாவரும் கேளிர்

வேறெவன் சொன்னான்
தமிழனே வென்றான்!

(குறுங்கால அழைப்பினைத் தொடுப்பதற்காக 
என்னை அருள்கூர்ந்து மன்னிக்கவும்)

அன்புடன் புகாரி
416-500-0972

*இறைவன் இல்லை*

இறைவன் இல்லை
என்று இயம்புவதும்
மதங்கள் இல்லை
என்று மறுப்பதும் 
சாதிகள் இல்லை
என்று சாடுவதும்
அவற்றை
இல்லை என்று
அழித்தெறிவதற்காக
அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று முழங்குவதற்காக
காட்டுமிராண்டித்தனம் ஆகாது 
என்று கர்ஜிப்பதற்காக
வன்முறை கேடு 
என்று வலியுறுத்துவதற்காக
தீண்டாமை தவறு 
என்று தடுப்பதற்காக
மட்டுமே

அறமற்ற
கூடாதுகளைச்
செய்யாதிருக்கும் ஆத்திகர்களும்
அவற்றை
அடையாளங் காட்டும்
நாத்திகர்களும் 
உயர்ந்தவர்கள்தாம்

வேரையே
அறுக்கச் சொல்லிக்
கதறுவது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால்
மட்டும்தான்

அன்புடன் புகாரி
*அழுகையும் சிரிப்பும் தூரமில்லை*

இந்த வாழ்க்கை வினோதமானது. ஆனந்தத்தில் ஆடும்போது காலம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. ஆனந்தம் வடிந்து, கொடுந்துக்கம் பற்றிப் புறட்டிப் போடும்போது, ஆழமான தத்துவ வரிகள் நெஞ்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அவை பெரும்பாலும் விரக்தி வரிகளாகவும் நம்பிக்கையைச் சிதைக்கும் முட வரிகளாகவும் இருப்பதால், அவற்றை நான் பொதுவெளிகளில் பகிர்வதில்லை. ஆனால் இந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள் என் வாழ்வின் ஒரு மிக முக்கிய காலகட்டத்தை அழுத்தமான என் நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதால், அவசியம்தான் என்று எண்ணிப் பகிர்கிறேன். மடியும் வரைக்கும் துயரம் என்பதெல்லாம் சுத்தப் பொய். அந்த நேரக் காயத்தின் வேதனைச் சொற்கள் அவை. அதன் பின் நான் ஏராளமான இன்பங்களைத் தாராளமாகச் சுகித்துதுவிட்டேன் சுகித்துக்கொண்டும் இருக்கிறேன் என்பதே நான் இங்கே வாழ்க்கையின்மீது முன்வைக்கும் மேலான நம்பிக்கை. சத்தியம், வாழ்க்கை இனிமையானது, அதில் வந்துபோகும்ம் துயரங்கள் அந்த இனிமையை நமக்கு எடுத்துச் சொல்லும் தத்துவப் பாடப் புத்தகங்கள்.

என்னை மீறும் எண்ணங்களே
என் இதயம் எங்கும் காயங்களே
மண்ணில் வாழ்க்கை மாயங்களே
மடியும் வரைக்கும் துயரங்களே

0

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

0

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

அன்புடன் புகாரி
*முற்றுப்புள்ளி*

எல்லாமும் எந்நாளும்
தொடக்கப்புள்ளிகளே
முற்றுப்புள்ளி
என்றொரு புள்ளி
கிடையவே கிடையாது

அன்புடன் புகாரி



ஹஸ்னா

ஊத்துமலைத் தேனு
ஹஸ்னா
ஓடிவரும் மானு

பூத்தப்புதுப் பூவு
ஹஸ்னா
பொங்கிநிக்கும் பாலு

ஆத்தங்கரை வூடு
ஹஸ்னா
அழகு சந்தனக் கூடு

சாத்துக்குடி கண்ணு
ஹஸ்னா
சோத்துப்பாறை பொண்ணு

அன்புடன் புகாரி
இது நம் முதலிரவு
உன்
காதலை
நீ
சொல்
இது நம் முதலிரவு
என்
காதலை
நான்
சொல்கிறேன்
இது நம் முதலிரவு
நம்
காதலை
பின்
நாம்
மெல்லத்
தொடங்குவோம்
இது நம் முதலிரவு
தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது இறைவனுக்கு இணை வைப்பதா?
#அன்புடன்#இஸ்லாம்

கொடியைத் தொழுது துவாச் செய்யாதபோது, அது கூடாததாகாது.

தாயை மதிக்கிறோம்
தந்தையை மதிக்கிறோம்
தாய் மண்ணை மதிக்கிறோம்
தாய் நாட்டை மதிக்கிறோம்
தாய் மொழியை மதிக்கிறோம்
ஆசிரியர்களை மதிக்கிறோம்
தலைவர்களை மதிக்கிறோம்

இப்படியாய் நாம் உயர்வாக எண்ணி மதிப்பவர்கள் அல்லது மதிக்கும் பொருட்கள் ஏராளம். அவையெல்லாம் இறைவன் ஆகாது/ஆகமாட்டான் ஒரு நல்ல முஸ்லிமிற்கு.

அதைத் தெளிவாக அறியாதவன் நல்ல முஸ்லிமும் அல்ல.

மதிக்க வேண்டியவற்றை மதிக்காமல் செல்வது நல்ல முஸ்லிமிற்கு அழகல்ல.

இமாமை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

ரசூலை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

என்ன சங்கடம் இருக்கிறது இதில்?

அன்புடன் புகாரி

*உருண்டைகள்*

உலகம்
உருண்டை

இந்த
வாழ்க்கையும்
உருண்டை

இயற்கையின்
இணையிலா நியதிப்படி
உலகம்
தட்டையாக இல்லாத போது
இந்த வாழ்க்கையும்
தட்டையாக இருக்க
வாய்ப்பே இல்லை

உலக உருண்டை
ஆதாரமே இல்லாத
வெற்றிடத்தில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

வாழ்க்கையும்
எந்த ஆதாரமும் இல்லாமல்
வெறுமையில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

ஒன்றை ஒன்று
ஈர்க்கும் ஈர்ப்பில்தான்
உலக உருண்டை
வீழ்ந்துவிடாமல் சுற்றுகிறது
தன்னைச்
சுற்றிச் சுற்றும்
உருண்டைகளையும்
வீழ்ந்துவிடாமல்
காக்கிறது

அவ்வண்ணமே
வாழ்க்கையும்
மாற்றமில்லாமல்

ஈர்ப்புதான் மையம்
ஈர்ப்புதாம் உலகம்
ஈர்ப்புதான் வாழ்க்கை

ஈர்க்காத
ஈர்க்கப்படாத
எதுவும்
வெற்றிடத்தில்
வெறுமையில்
சுற்றிச் சுற்றி
உலர்ந்து
மூச்சிருந்தபோதும்
மன மரணத்துள்
வீழ்ந்து மடிவே செய்யும்

அன்புடன் புகாரி


*கலைந்தார் கலைஞர்*

கலைந்தது
தங்கத் தமிழ்ச்சங்கம்

கலைந்தது
அரசியல் ஞானக்கூடம்

கலைந்தது
சாதுர்ய மறுமொழிக்கோட்டம்

கலைந்தது
போராட்டப் படைத்தளம்



*கலைந்தார் கலைஞர்*

சூரியனுக்கே
முகவரி தந்தவர்

சந்திரனையும்
எதிர்த்து நின்றவர்

கறுப்புக்கே
நிறம் வரைந்தவர்

கழகத்தோடு
உடன் பிறந்தவர்


*கலைந்தார் கலைஞர்*

எமனோடு
மல்யுத்தம் செய்தவர்

எமலோக
விருதுபல வென்றவர்

கலைந்தும்
கலையாத நிரந்தரர்

காலத்தால்
அழியாத மறத்தமிழர்


*கலைந்தார் கலைஞர்*

அன்புடன் புகாரி
20180807