*பதினோராம் குடியரசுத் தலைவா*


வைர விதையே
*எங்கள் அப்துல் கலாம்*

ஒரு பனித்துளி
தென்னிந்தியப் புழுதிப்
புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை

ஒரு சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை

எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம்
ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே

உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது

சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன் மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்

சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி

குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்

நீயோ
இந்தியாவின் முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும்
வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்

ஐயனே
எங்களை ஆள வந்த மெய்யனே

எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே

வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும் எந்நேரமும்
பணிக்குள் புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின் ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே
நல்ல தமிழ்க் கவிஞனே

ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே

உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ஆட்டிப் பார்த்துவிட்டன

அதோடு
அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர் ஏவுகணை செய்வாயா

கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே

நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு பிரகாச உற்சவத்தில்

சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய்
எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்

ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா

மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும் அவலம்
இன்னும் நீள்கிறதே
அதை அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா

திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்

உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்

தேனளக்கும் நம்பிக்கையை
நீ வாரி வாரி வழங்குகின்றாய்

உன் தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்

கண்களின்
கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா

உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியொரு
தோல்வியைச் சொல்ல
நீ யொன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்

துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்

ஒரு கூட்டு வேண்டுதலாய்
இறைமுன் தொழுகின்றோம்

மறவாதே ஐயனே
கொண்ட கொள்கையின்
தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே
எங்களின்
பதினோராம் குடியரசுத் தலைவனே

கவிஞர் புகாரி
(2002ல் எழுதிய கவிதை)

15 அக்டோபர் 1931 – 27 ஜூலை 2015

3 comments:

cheena (சீனா) said...

அருமைத் தகைவன் அப்துல் கலாம்ற்கு அருமையான வேண்டுகோள்
//கொண்ட
கொள்கையின் தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே எங்களின்
பனிரெண்டாம்
குடியரசுத் தலைவனே//

அருமை அருமை

ரவி said...

//ஓ
வைர விதையே
எங்கள் அப்துல் கலாம்

ஒரு பனித்துளி
தென்னிந்திய புழுதிப் புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில் அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை//

கலாமின் உன்னதத்தில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவருக்கு ஈடான ஓர் உவமை அளித்ததில்
இந்த கவிதையும் அதே உன்னதம் கொள்கிறது.


//ஒரு சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம் சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும் திறமையோ உன் திறமை//

இக்கால இளைஞர்களின் கவிதை மீதான வெறுப்புக்கு
சரியான சாட்டையடி இக்கவிதை: எல்லாமே குப்பைகளல்ல,
சில மகுடமேற்க பிறந்தவை


//எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும் எழில் இராமேஸ்வரம்
ஈன்றெடுத்த தங்கத் தமிழனே

//உன்னை விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின் உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது

சூழும் சூனியங்களைச் சுட்டெரித்து நிற்கும்
உன் மனத்திண்மையும் மூளைத்திடமும் கண்டு
நான் நகக்கூச்செறிகிறேன்

சாட்டை சொடுக்கச் சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில் வீறுகொள்வதெப்படி

குஞ்சுகளைக் காக்க சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்
நீயோ
இந்தியாவின் முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல் அரண் அமைக்கும்
வித்தையில் அதிசயத்தைக் கண்டுவிட்டாய்

ஐயனே
எங்களை ஆள வந்த மெய்யனே
எழுபதைத் தொட்டும் முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே
வீணையின் நரம்புகளோடு சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும் எந்நேரமும்
பணிக்குள் புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின் ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே நல்ல தமிழ்க் கவிஞனே//

வாவ்: அற்புதம்

//ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய அணுசக்தியே

உன் ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ட்டிப் பார்த்துவிட்டன

அதோடு
அரை நூற்றாண்டிலேயே அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர் ஏவுகணை செய்வாயா//

கலாமின் மேல் உமக்கு(எமக்கும்தான்) அதீத நம்பிக்கை!

//கனலாகவே கருவான கிராமத்துக் கதிரவனே
நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு பிரகாச உற்சவத்தில்

சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய் எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின் ஒவ்வோர் இளைஞனும்
இன்று உன் முகம் பார்த்தே ஏங்கி நிற்கின்றான்
ஆயிரமாயிரம் அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா

மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும் அவலம் இன்னும் நீள்கிறதே
அதை அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா

திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்
உன் திசைகளெல்லாம் தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்
தேனளக்கும் நம்பிக்கையை
நீ வாரி வாரி வழங்குகின்றாய்
உன் தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும் இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க் காட்டுகின்றாய்

கண்களின் கரைகளிலெல்லாம்
இன்று நான் கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும் ஏற்றங்கள் காண்போமா
இல்லை ஏமாற்றம் ஒன்றேதான் கொள்வோமா

உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும் ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியொரு தோல்வியைச் சொல்ல
நீ யொன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின் இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு நான் நிற்கிறேன்

துரோகக் கிருமிகளாய்
உன்னைச் சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும் ஒன்றுபட்டே நிற்கின்றோம்
ஒரு வேண்டுதலாய்த் தொழுகின்றோம்

மறவாதே ஐயனே
கொண்ட கொள்கையின் தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே எங்களின்
பனிரெண்டாம் குடியரசுத் தலைவனே//

பொருள் ஆழம்: சிந்தனை புதிது: பாராட்டுக்கள்
ரவி.

பூங்குழலி said...

அற்புதமான கவிதை ...அவரின்
எல்லா பரிமாணங்களையும் தொட்டு

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று
உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்
ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா