நெருப்பு


ஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்

மூட்டி விட்டால் முயற்சி எழும்பும்
பற்றி விட்டால் உணர்ச்சி படரும்
ஓங்கிக் கதறும் கதறல் உள்ளும்
ஒளிந்து கிடக்கும் நெருப்பின் வேகம்

அறிவும் நெருப்பு அன்பும் நெருப்பு
கருணை ஓங்க நெருப்பே பொறுப்பு
கண்ணீர் சிந்தும் தாயின் உள்ளம்
பாசம் என்னும் நெருப்புப் பந்தம்

மோகம் மூளும் மூச்சும் வேகும்
முத்தம் பற்றும் இரத்தம் எரியும்
நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்

வேரின் நெருப்பு நீரை நாடும்
உயிரின் நெருப்பு சாவைத் தேடும்
ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்
இருளை எத்தும் நெருப்பின் கால்கள்

கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்
கடலை எரித்து மழையைக் கொட்டும்
உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்
கள்ளம் எரித்து நீதி நிறுத்தும்

வைரக் கல்லும் நெருப்பின் பிறப்பே
கணினி இணையம் யாவும் நெருப்பே
வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்
வெடித்த நெருப்பு கொடுத்த துகள்கள்

நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு
நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு

1 comment:

cheena (சீனா) said...

நெருப்பைப் பற்றி ஒரு கவிதை - கவிஞனுக்கு வானமே எல்லை - எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம் - மாறுபட்ட கோணத்தில் ஒரு பொருளை அணுகும் மனோ தைரியம் அவனுக்குத் தான் வரும். 2002 தொடக்கம் - ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை. இப்பொழுது படித்தால் ......