நிலம்


கவிமாமணி இலந்தை கூறியது:

இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.


நிலம்

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

2 comments:

cheena (சீனா) said...

நிலம் - கருத்துச் செறிவு - இலக்கிய நயம் - இலக்கண நடை - இத்தனையும் எப்படித்தான் இணைந்ததோ இக்கவிதையில்.

பாராட்டுகள். நல் வாழ்த்துகள்.

//உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை//

சொற் சிலம்பம் ஆடும் நல்லடிகள்.

/உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு//

ஆதியும் அந்தமும் நிலம் தானே !!

காற்றும் வானமும் நீரும் நெருப்பும் தொல்லை கொடுத்தாலும் பொறுமையின் சிகரம் நிலம் அல்லவா!!

//பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே//

என்ன சிந்தனை என்ன சிந்தனை. எழுதுவதற்கு சொற்கள் கிடைக்க வில்லையே !! மனம் தவிக்கிறது - எப்படிப் பாராட்டுவதென்று......

Unknown said...
This comment has been removed by the author.