* * *

உடலறிவாய் மனமே

சொல்லவந்தேன் நான்
எனதேற்றங்களின் இமயத்தையென்று
துள்ளிக்குதித்தது மனம்

நாவில்லாமல் சொல்லா
விழியில்லாமல் பார்வையா
நானில்லாமல் சொல்வதா
மிதக்காதே மனமே என்றது உடல்

என்ன முடியும் உன்னால்
என்னைப்போல்
எண்ண முடியுமா கறியே
என்று தீ திரட்டியது மனம்

உயிர் குறுக்கிட்டு
ஒரு நொடி பொறுப்போமே

சிந்தனை எரித்துச்
சொற்களாய்க் கோத்தெடுத்து
ஓடிவருகிறான் ஒரு கவிஞன்

உற்றுக்கேட்போமே
அவனை என்றது

வாயைக் கழற்றி
வாயில்வழி வீசிவிட்டு
செவியைத் துடைத்து
செறுகிக்கொண்டது சர்ச்சை

கவிஞன் துவங்கினான்
கவிதை சுழன்றது

-o0o-

உடலே உன் முதல் துணை
இறுதிவரை உன்னுடன் வரும்
ஒற்றைத் துணையும் உடலேதான்

அதன் தேவை நிறைவேற்றத்
தவமிருக்கும் சேவகனே மனம்

விருப்பங்களின் ஊற்றும்
வெறுப்புகளின் நாற்றும்
ரசனைகளின் வேரும்
பாசத்தின் கருவும் உடல்

நஞ்சு உடலேறினால்
உனக்குத்தான் நாசம்

மனதிலேற
ஊருக்கே நாசம்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இளமைக்கும் முதுமைக்கும்
உடல் மாற்றமே மனமாற்றம்

எதையும் காணாக் குருடருக்கும்
மனதை உருவாக்குவது உடல்

உணவு உடை உறைவிடம் மட்டுமல்ல
உயிர்கூட உடலின் அவசியம்

சந்ததி விரிவதும் உலகம் துளிர்ப்பதும்
உடலின் அதிசயம்

உடல் ரேகைகள்
உன் தனியடையாளங்கள்

உடலே உன் தெளிவான முகவரி
மனமுகவரியோ உனக்குமே புதிர்

மனக்குயில் தங்கும் கூடு
உடலில்லையேல் ஏது வீடு

தாய் பிள்ளை உறவும்
தாம்பத்ய உறவும் உடல்

உள்ளத்தில் சுமப்பது சரியும் உறவு
உடலில் சுமப்பதே சாசுவத சிசு

மனம் அழிந்தால்
உடலும் உயிரும் வாழும்
உடல் அழிந்தால்...

மனம் செத்தவன்
ஓடுகிறான் உடல் மாய்க்க
உடலழியாது உயிர்பிரியாதென்ற
உண்மையறிந்ததனால்

உடலை வளைப்பது
மனதுக்குக் கடினமான காரியம்
மனதை வளைப்பதோ
உடலுக்குச் சொடுக்கும் செயல்

மனம் சொல்வதை
உடல் ஓரளவே கேட்கும்
ஆனால் உடல் சொல்வதை
மனம் கேட்டே ஆகவேண்டும்

உண்பதைத் தள்ளிப்போடும் மனதால்
உட்தள்ளிய உணவைச்
செரிக்காமல் நிறுத்தமுடியுமா

உடம்பின் தேவைகளை
மனம் தள்ளிப் போட்டாலும்
துளித்துளியாய் உயிரிழக்காமல்
தவிர்த்துப் போடமுடியுமா

மனம் பறக்கச் சொன்னால்
உடல் பறந்துவிடுமா

உடல்
உறங்கச் சொல்லிக் கேட்கும்
மனம் மறுத்தால்
தானே எடுத்துக்கொள்ளும்
பிடிவாதமாய் மறுத்தால்
மனதைப் பைத்தியமாக்கிவிட்டு
எடுத்துக்கொள்ளும்

உருவ உடலுக்கும் அருவ மனதுக்கும்
உயிர்தான் முடிச்செனினும்
மனமிருப்பதும் உயிரிருப்பதும்
உடலிருக்கும் வரைதானே

ஒற்றைச் சதைத் துளியாய்
கருவறை விழுந்தபோதுதான்
உயிர் வந்தது - பின்
உடல் வளர வளரத்தான்
மனம் வந்தது.

நீ என்பதும் நான் என்பதும்
உடல்தான் உடல்தான்
உயிர் என்பதும் உள்ளம் என்பதும்
உடலின் பண்புதான்

அன்புடன் புகாரி

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்