அழுகையும் சிரிப்பும் தூரமில்லை


என்னை மீறும் எண்ணங்கள்
என் இதயம் எங்கும் காயங்கள்
மண்ணில் வாழ்க்கை மாயங்கள்
மடியும் வரைக்கும் துயரங்கள்

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

1 comment:

cheena (சீனா) said...

இன்பமோ துன்பமோ - இரண்டையும் ஒரே மாதிரி உணர்பவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இது சத்தியமான வார்த்தைகள்.