23 ஈரச் செங்கறை அப்பிய பலகோடிக் கரங்களோடு


சின்னஞ்சிறு கால்கள் சிரித்து விளையாட
மண்வாசம் எழுந்து நெஞ்சு நிரப்ப
வசந்த புழுதி பறந்த தெருக்களில்
சிதைந்த பிணக் குவியல்கள் சிதறிச்சிதறிப் பறக்க
பாழும் பூமியிலிருந்து பரிசுத்த வானம் நோக்கி
சுடுரத்தப் பெருமழை

பிசுபிசுக்கும் ஈர வெப்பம் தாளாமல்
கருங்குழி தேடி ஓடுகிறான் சூரியன்
விடைபெறுகிறது வெளிச்சம்
நிரந்தரமாய் வாழ்வீதிகளில்

தீராத பிணச்சதையுண்டு
முறிந்து தொங்கும் எலும்பு மென்று
செரிக்கத் திணறும் வயிற்றுக்கு
கடலளவு குருதி குடித்துக்
களைத்துப்போகிறது அடர் இருட்டு

ஓல ஒப்பாரிகள் மேல் மரண அச்சு பதித்து
இரும்புக் கால்களில் தரைப்படை
கட்டற்ற கண்ணீர் உப்பாறுகளில்
கொடுந்துடுப்பசைத்து கடற்படை
உடலெறிந்த அனாதை உயிர்கள்
எந்த உடலிலிருந்து எறியப்பட்டோம்
என்பதும் அறியாமல் ஹோவென்று
இடைவெளியற்று காற்றில்
நெறுக்கியடித்துப் பறந்துசெல்லும்
பாதைகளில் வான்படை

பல்லொன்றில் பலநூறு புதுப்பிணங்கள்
பல்லாயிரம் பற்களோடு அரக்கன்
இதோ நிற்கிறான்

கற்புதின்று கலாச்சாரம் குடித்து
மரபு அடையாளங்கள் தொலைத்து நிற்கும்
நாளைய பேரவலத்தை இன்றே வெளித்தள்ளும்
காட்டுமிராண்டிக் காலத்தவன்
இதோ நிற்கிறான்

இதோ நிற்கிறான்
முன்னிலும் கொடூரமாய்

ஈவு இரக்கமற்று விரிந்து திமிறும் மார்போடும்
ஈரச் செங்கறை அப்பிய பலகோடிக் கரங்களோடும்
சிறுபிள்ளை கருவயிறு முதுவுயிர்
என்றெதையும் விட்டுவைக்காமல்
மிதித்துப் பிழியும் ராட்சத கால்களோடும்
இதோ இதோ

இதோ நிற்கிறான்
முன்னிலும் மிகமிகக் கொடூரமாய்

(நன்றி: புகலி)

2 comments:

பூங்குழலி said...

மனம் பதைபதைக்கிறது படிக்கும் போதே

அ. முத்துலிங்கம் said...

அன்புள்ள புகாரிக்கு,
வணக்கம். எங்களுக்கு கிடைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டோம் இனி சொல்ல ஒன்றுமே இல்லை என்று நினைத்திருந்தபோது உங்கள் கவிதை கிடைத்தது. இப்படியும் சொல்லமுடியுமா என்று என்னை திகைப்படைய வைத்தது. கவிதை முடியும்போது கொடிய அரக்கன் ஒருவன் கைகளை விரித்து எழுந்து நிற்கும் படிமம் தோன்றியது. நெஞ்சை அதிரவைத்தது.

அன்புடன்

அ.முத்துலிங்கம்