***28

பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும்
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில்
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்
பத்துவயதுப் பருவமகளைத்
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்
பிணங்களடியில் எப்பிணம்
மகள் பிணமோவென்று
தேடிச் சாய்கிறாள்

மணத்தேரேற மனத்தேரேறி
விழித்தேர் செலுத்திய நிலவழகு மூத்தமகளின்
கற்பு சூறையாடப்படுவதைத் தன்னிரு கண்களால்
கொடுநெருப்பாய்க் கண்டவள்
அவள் தொங்கிய கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு
நிலைகுத்திய பார்வையில் வெறித்துக் கிடக்கிறாள்

பத்துமாதம் முன்புதான்
ஓர் பகல்பொழுதின் யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலியறுபட்டாள்
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
நாலுவயது பிஞ்சு மகளை
கம்பிவளைகளுக்குப்பின் காணத் துடிக்கிறாள்

வீடுநிலம்விட்டு பொட்டல் வந்தாள்
அனாதை முகாம்களாகிப்போன அகதி முகாம்களில்
பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு போராடி நிற்கிறாள்
நாலுவயதுப் பிஞ்சாவது மீதப்பட்டுப் போகாதா
என்ற மிகப்பெரிய ஆசையில்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

4 comments:

சீதாலக்‌ஷ்மி said...

கடவுளே உலகை ஏன் படைத்தாய் ?
போதும்
உலகையே அழித்துவிடு.
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் காட்சி
தாங்க முடியவில்லை.
நானும் ஒரு தாய்
புகாரி, உங்கள் எழுத்தின் வலிமை தாக்குகின்றது
சீதாம்மா

பூங்குழலி said...

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

கவிதையின் கரு சுமந்த இந்த வரிகளே போதும் புகாரி ....

செல்வன் said...

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!



அருமை...கவிதையை பாராட்ட வார்த்தைகள் இல்லை

சாந்தி said...

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!




அதேதான்.. இனியெதையும் தாங்கும் இதயம் இல்லை. அழித்திடு படைத்தவனே..சீதாம்மா சொன்னதுபோல.

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..