வீடு

கனடாவில் 2001ல் முதன்முதலில் நான் ஒரு வீடு வாங்கிக் குடிபுகுந்தேன். டவுன் ஹவுஸ் என்றழைக்கப்படும் கூட்டுவீடுகளில் ஒன்று. எங்கள் குடும்பத்தின் ஆனந்தம் வீட்டின் சுவர்களில் எல்லாம் கூட ஒட்டிக்கொண்டு கூத்தாடியது. வீட்டை என் மகள் அழகிய பெண்சில் ஓவியமாய் வரைந்து தன் வகுப்பில் பாராட்டுப் பெற்றது. எனக்கு அந்த ஓவியம் பிடித்துப் போகவே, அதை அழகிய சட்டத்தில் இட்டு சுவற்றில் மாட்டினேன். ஆனால் மகள் வரைந்த ஓவியத்திற்கு இணையாக நான் ஒரு வரியேனும் அதில் எழுதவேண்டும் அல்லவா?

சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின் கூட்டுயிரே
வீடு

என்று எழுதினேன். வீட்டுக்கு வருவோரெல்லாம் ஓவியத்தையும் அதன் கவிதை வரிகளையும் பார்த்து மகிழ்வார்கள். பின்னொருநாள், ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அதை ஒரு முழுக்கவிதையாய் எழுதினேன். பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதை நூலிலும் அச்சேற்றி வெளியிட்டேன். அந்த நூலுக்கு அணிந்துரை தந்த எழுத்தாளர் . முத்துலிங்கம் அவர்கள் அந்த வரிகளைக் குறிப்பிட்டுகவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்கு குறைவில்லை. ஏதோ ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக எழுதப்பட்டவைகள் அல்ல அவை, ஆனால் பொருத்தமாக ஆங்காங்கே தானாகவே அமைந்துவிடுகின்றன.” என்று பாராட்டி இருந்தார். இப்போது மீண்டும் அந்த கவிதையை வாசித்து என் நினைவுகளை அசைப்போடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின் கூட்டுயிரே
வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல் பூத்திருக்கும்
வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில் வாழ்ந்திருக்கும்
வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள் ஒளிர்ந்திருக்கும்
வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய் அறிவிலாளும்
வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத விருந்தூட்டும்
வீடு

துயரறிந்து விழிகசிந்து
அயலவர்க்கும் அன்புதரும்
வீடு

பகைவருக்கும் முகமளித்து
வருகவென்று மனம்திறக்கும்
வீடு

யாருக்கும் நிழலாகும்
எந்நாளும் ஒளிவீசும்
வீடு

ஊருக்கு வளம்சேர்க்கும்
உலகுக்கே சான்றாகும்
வீடு

பேருக்கு வாழாமல்
புத்தகமாய் வாழுமிந்த
வீடு

பூட்டுக்குள் பலியான
வீட்டுக்கும் சாவியாகும்
வீடு

* (மே 2004)

ன்புடன் புகாரி

#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை


No comments: