பூகம்பம்

வாழ்க்கை என்பது நாளை இருப்போம் என்ற நம்பிக்கையோடு, மகிழ்ச்சியை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பது. ஆனால் நாளை இருப்போமா? அதை யார் முடிவு செய்வது? ஒரு சுனாமி முடிவு செய்தால் எப்படித் தடுப்பது? ஒரு பூகம்பம் புதைத்துப் போட்டால் என்ன செய்வது?

வாழ்க்கை யார் கையில் இருக்கிறது. இங்கே வாழும்போது நடக்கும் சண்டைகள் சச்சரவுகள் துரோகங்கள் பொறாமைகள் இவையெல்லாம் ஆயுளைக் கொன்று போடும் என்றால் இப்படியான சுனாமிகளும் பூகம்பங்களும் கொத்துக் கொத்தாய் அள்ளிக்கொண்டுபோய் தன் குழுகளுக்குள் புதைத்துவிடுகின்றன? என்றால் நம்பிக்கையை எதில் வைப்பது?

ஒரே ஒரு காரியத்தில் நம்பிக்கையை வைப்போம், அது என்னவென்றால் வாழும் இந்த நொடி மகிழ்ச்சியாய் இருப்பதற்கான காரியங்களைச் செய்வோம். நாளையைப் பற்றிய கவலையைவிட இன்றையைப் பற்றிய மகிழ்ச்சி மிகப் பெரிது என்று கொள்வோம்.

மறுநொடி மரணம் என்றால் பயத்தைவிடுத்து வேறு எதையெல்லாம் செய்வீர்களோ அதையெல்லாம் வாழும் அத்தனை நொடிகளிலும்செய்யுங்கள் மனிதர்களே. சாவுக்குச் சொந்தமான உங்களை வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்
கொள்ளுங்கள்


தனக்குள் தானே
குழிதோண்டிக்கொண்டு
கொத்துக் கொத்தாக
உயிர்களைப் புதைத்து
வெட்டியான் வேலையையும்
சிரத்தையாய்ச் செய்து முடித்தது
பூமி

o

அந்த நிமிடம்...

    ஒரு மழலை
    தன் முதல் அழுகையை
    உலகுக்கு வெளியிட்டுக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு முதுமை
    கண்விழிப்போமா என்ற
    நிச்சயமின்மையில்
    உறங்கிக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஓர் இளமை
    காதலியின் பனிமடியில்
    உயிர் மறந்து
    மயங்கிக்
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு நடுத்தரம்
    பிழிந்தெடுக்கும்
    பிரிவுத் துயரால்
    பரிதவித்துக்
    கொண்டிருந்திருக்கலாம்

   
 ஒரு கைதி
    தலைமறைவாய்
    குகையொன்றில்
    வெந்து
    கொண்டிருந்திருக்கலாம்

    ஒரு துரோகி
    நாடுகளை ஏப்பம்விட
    திட்டம்தீட்டிக்
    கொண்டிருந்திருக்கலாம்

    பணம் இனம் மொழி மதம்
    நாடு நிலம் வீடு விருப்பம்
    இன்னபிற காரணங்களால்
    மனிதர்களை மனிதர்களே
    மென்று தின்னும் மரண விருந்துகள்
    நீக்கமற நிறைந்து எங்கும்
    நடந்து
    கொண்டிருந்திருக்கலாம்

o

நாளை மறுநாள் நீ
மடியப்போகும் நாளென்று
இன்றே அறிவித்துவிட்டால்
சாவு பயம் பிடித்தே
மனிதன் செத்துப்போவானோ
அல்லது
இன்றைக்குச் சாவில்லை என்றே
இன்னும் ஆட்டம் காட்டுவானோ

o

நெற்றிப் பத்திரத்தில்
மர்மமாய்க் குத்தப்பட்டிருக்கும்
மரண முத்திரையை
அறிந்தவனுக்கு அப்போதுதான் சாவு
அறியாதவனுக்கோ எப்போதும் சாவு

o

மறுநொடி மரணம் என்றால்
பயத்தைவிடுத்து வேறு
எதையெல்லாம் செய்வீர்களோ
அதையெல்லாம்
வாழும் அத்தனை நொடிகளிலும்
செய்யுங்கள் மனிதர்களே

சாவுக்குச் சொந்தமான உங்களை
வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்
கொள்ளுங்கள்

* (ஏப்ரல் 2003)

No comments: