கல்வி வளர்ப்போம்

சமீபத்தில் டொராண்டோவில் நடந்த பழைய மாணவர் அமைப்பின் விழாவிற்குச் சென்றிருந்தேன் இலங்கையின் இன்றைய சூழலில் பாடசாலைகளின் நிலை சற்று சிக்கலே என்று நான் கூறித்தான் அறியவேண்டுமென்பதில்லை. ஆனால், அதன் பழைய மாணவர்கள் அமைப்பு அப்பாடசாலைகளைத் தூக்கி நிறுத்தும் பொற்பணி ஏற்றது கண்டு ஒட்டுமொத்தமாய் என் உள்ளும் புறமும் ஒன்றாகப் புல்லரிக்கக் கண்டேன். அந்த உயர் நன்றி எனக்குள் ஈந்த உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதை நான் ஒரு மகத்தான கடமையாகக் கருதுகிறேன்

கல்லாதவன்
கழுத்துக்குமேல்
எதுவும் இல்லாதவன்

இல்லாமை என்பது
கல்லாமையேயன்றி
வேறில்லை காண்

o

பள்ளிப் பாடங்களால்
நம் மூளை வயல்களிலும்
பிஞ்சு மனத் தோப்புகளிலும்
அள்ளிப் பதியனிட்டு
அன்றாடம் வளர்த்தெடுக்கும்
அறிவுக் கொழுந்துகளோ
ஆயிரம் ஆயிரம்

அத்தனைக் கொழுந்துகளிலும்
அற்புதப் பசுமை காட்டும்
சொர்க்கக் கொழுந்து யாதெனில்
அது கற்பதைப் போற்றுவோம் என்ற
கற்பூரச் சிந்தனைதானே

o

எழுத்தறிவித்தவன்
இறைவனென்றால்
எழுத்தறிவிக்க
எல்லா வசதிகளையும்
அள்ளிப் பொழியும்
மேகமனக்காரன் யார்

இறைவனுக்கெல்லாம்
அவனே இறைவனென்றால்
அது மிகையாகுமா

o

பத்து ரூபாயைப்
பசியால் வாடும்
பிச்சைக்காரனுக்கு இட்டால்
அவனின்
அந்த வேளைப் பசியே அழியும்

ஆனால்
அதில் பாதியையேனும்
கல்வியின் வேர்களில்
உரமாய் ஊட்டினால்
உலகில் பிச்சைக்காரர்களே
இல்லா வாழ்வல்லவா மலரும்

o

உணவு தந்தால் வாய் திறக்கும்
ஓசை தந்தால் செவி திறக்கும்
கல்வி தந்தால்தானே
நம் கண் திறக்கும்

தாய்க்குச் சோறிடுவதும்
கல்விக்கு நீரிடுவதும்
வேறு வேறு என்றாகுமா

கல்வி வளர்க்காத
செல்வமும் வீரமும்
கடலில் வீசிய
உப்பென்று ஆகாதா
.

ஒரு தந்தை தாயாவதில்லை
அந்தத் தாயும் முற்றாய்
ஒரு தந்தையாவதென்பது
நிகழ்வதில்லை

ஆனால்
நம் பாடசாலைகளைப்
பாருங்கள்

பண்பினை ஊட்டுவதில்
பொன்னழகுத் தாயாய் - நல்ல
அறிவினைப் புகட்டுவதில்
பேரருள் தந்தையாய் - நம்முன்
ஓங்கி உயர்ந்தல்லவா கிடக்கிறது

o

பழைய மாணவனே
ஒரு பள்ளியின் அழியாச் சொத்து

அவன்தான்
அந்தப் பழைய கூடத்தைப்
பள்ளிக்கூடம் என்று
அழைக்கக் கிடைக்கின்ற
அற்புதச் சான்று

அவனை
அள்ளித்தராவிடில்
அது பள்ளியென்று ஆகுமா

o

பழைய மாணவர்கள்
ஒன்றாய்க் கூடி
விம்மும் நன்றிப் பெருக்கோடு
தம் பள்ளிக்கு விழா எடுக்கும்
வைரப் பொழுதுகளிலெல்லாம்

ஆயிரமாயிரமாய்ப் பொருளிறைத்துத்
தம் பள்ளியை
இமாலய வெள்ளிப் பனிமலைக்கு
உயர்த்திச் சிரிக்கும் அந்த
உத்தமப் பொழுதுகளிலெல்லாம்

என் உள்ளம்
சீனிக் கண்ணீரில் நீந்திச்
சத்தேறி மிளிர்கிறது

o

நம் வாழ்க்கை வளர
நல்ல சந்ததி தழைக்க
இந்த ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றாய் உயர

அந்தக் கல்வியின்
விரிந்த மடிகளில்
கணக்கற்றுத் தினந்தோறும்
நாம் அள்ளியள்ளிக் குவிப்போம்

நல்ல
நன்றியின் பெருமை தரும்
வீர மதர்ப்போடு
நாம் அள்ளியள்ளி இறைப்போம்

நன்றி

* (செப்டம்பர் 2002)

No comments: