காதலியின் கடிதம்
நான் நிறைய காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.
அவற்றுள் சில, காதலியின் அழகை வர்ணித்து வர்ணித்து அதன் சொற்கள் எல்லாம் தனித்தனி நிலாத் துண்டுகளாய் ஒளிர்ந்து மிளிர்ந்து ஒன்றிணைந்து ஒரு பேரழகைக் காட்டி நிற்கும். சில, உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு அட்சரத்திலும் பதித்து தாகமாய் தவிப்பாய் ஆர்வமாய் ஆசையாய் கொதித்துக் கிடக்கும். சில, ஏக்கத்தில் தன்னை முழுவதும் இழந்து கரைந்து உருகி ஒவ்வொரு வார்த்தையும் கூட்டிவைத்த மணல் மேடு கொடுங்காற்றில் கரைவதைப் போல கரைந்து போய்க்கொண்டிருக்கும்.
ஆனால்….
அனைத்துக் காதல் கவிதைக்கும் பொதுவான குணம் என்று ஒன்று உண்டென்றால் அது கனவுதான். ஆசையின் கனவுகள், தனிமையின் கனவுகள், வியப்பின் கனவுகள், தவிப்பின் கனவுகள், என்றென்றும் இனிமை நிறைந்து அவளோடு வாழவேண்டும் என்ற விழைவின் விட்டுவிடா கனவுகள். ஏக்கம் எகிற எகிற ஒருநாள் ஒரு பொழுது அவளோடு வாழமாட்டோமா என்று கேட்கும் கனவுகள். சரி, அந்த ஒரு நாள் ஒருபொழுது கிடைத்துவிட்டது. பின் விட்டுவிடப்போகிறதா அந்தக் காதல்? விட்டுவிட்டால் அது காதலா?
நான் நிறைய காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.
அவற்றுள் பல ஓர் ஆணின் பார்வையில் உருவான கவிதைகள். சில, ஆணும் பெண்ணும் உரையாடிக்கொண்டிருப்பதுபோன்ற கவிதைகள். வெகு சில மட்டுமே ஒரு பெண் பேசுவதாய் அமைந்த கவிதைகள். ஒரு பெண்ணின் மனதுக்குள் புகுந்து அவளாகவே உயிர்மாறி நின்று எழுதிய கவிதைகள்.
இந்தக் கவிதை அப்படியாய் உருவான ஒரு பெண்ணின் மெல்லிய மனதை எடுத்துச் சொல்லும் கவிதை. இது முழுவதும் கற்பனை அல்ல, உண்மைக்கு மிக நெருக்கமான கவிதை என்ற பெருமை இக்கவிதைக்கு உண்டு.
கா காத்திருந்து த தவித்திருந்து ல் பின் இல்லாமல் போவதுதான் காதல் என்று எவனோ ஒருவன் சொன்னான். அதற்கான காரணம் என்ன? அன்றெல்லாம், காதலிக்கும் தைரியம் ஒன்று சேர்வதில் இருந்ததில்லை. இயலாமையே காதலைக் கசக்கி பிய்த்தெறிந்து, குழியில் போட்டுப் புதைத்தும்விடும். இன்றெல்லாம் தைரியம் நிறைய இருக்கிறது ஆனால் காதல்தான் தன் அர்த்தத்தை இழந்து வேறு வடிவம் கொண்டுவிட்டது. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரே பெயர்தான், அதுதான் காதல்.
இறுதியாக காதல் வாழ்வது என்பது கனவுகளை நினைத்துப் பார்க்கும் நெஞ்சக் குழிப் பொந்துகளில்தானோ என்று தோன்றுகிறது. ஜென்மங்களை நம்பாதவர்களெல்லாம் ஜென்மம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காதலின் நிராசைகளால்தான். இப்போது சாதிக்காதவர்கள் அடுத்த ஜென்மத்தில் மட்டும் சாதித்துவிடப் போகிறார்களா என்ற அறிவுக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது காதல் உணர்வுகள்.
சிலருக்கு காதல் என்றால் மகா உன்னதம். சிலருக்கோ காதல் என்றால் ஒருவகை முகச்சுழிப்பு. அட காதலா என்று கலுக்கென்று சிரிப்போரும் உளர். அது அவர்களின் இயலாமையின் வந்த வரட்டுக் கலுக்காகவும் இருக்கலாம்.
இயற்கை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ஒரே சக்தியைத்தான் வைத்திருக்கிறது. அதன் பெயர்தான் காதல். காதல் என்ற உணர்வுதான் ஆணையும் பெண்ணையும் இணைத்து, புத்துயிர்களை உருவாக்கி உலகை உய்வடையச் செய்கிறது. அந்தக் காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை, புல் பூண்டு செடி கொடி விலங்குகள் பறவைகள் என்று அனைத்தினுள்ளும் இருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை ஆயிரம் ஆயிரம் திரைப்படங்கள் வந்துவிட்டன, நாவல்கள் வந்துவிட்டன, சிறுகதைகள் வந்துவிட்டன. அவற்றுள் சொல்லும் கதையும் நிகழ்த்தும் சாகசங்களும் மாறிமாறி வந்திருக்கின்றன. ஆனால் காதல் என்ற ஒன்று மட்டும் காட்டப்படாமல் அல்லது சொல்லப்படாமல் இருந்ததே இல்லை. திரைப்பாடல்களில் 90 விழுக்காடு காதல் பாடல்களே
சரி, இந்தக் கவிதையில் இந்தப் பெண்ணின் உணர்வுகளை எப்படி நீங்கள் விமரிசிக்கப் போகிறீர்கள்? அவற்றின் மீதுதான் இப்போதைக்கு என் காதல் மையம் கொண்டுள்ளது.
என்னுயிர்க்
காதலனே
காதல்
என்ற
பரவசப்
பட்டாம்பூச்சியை
இந்தப்
பெண்மைக்குள்
பறக்க
விட்ட
என்னழகுக்
கள்வனே
துளையில்லா
என் இதயத்துள்
ஊரறியாத்
தருணத்தில்
தேர்பூட்டி
நீ மெல்ல
ஊர்ந்ததுதான்
எப்படி
என்
நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய
விழிகளில் அசைவில்லை
உன்
முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச்
சில்லானேன்
நீ
உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு
சிறகடிக்கும்
உன்
வண்ணத்து மொழிகள்
நீ
சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள்
சிக்கவைக்கும்
உன்
கன்னத்துக் குழிகள்
நீ அசைய
அசைய
அங்குமிங்குமாய்த்
தெறிக்கும்
பொற்
கவிதை வரிகள்
அப்பப்பா
நான்
எப்படிச் சொல்ல
நீ என்னை
அகலும்
இமைப்பொழுதோ
இந்தச்
சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய்
அலறிக்கொண்டு
உயிரின்
வேர்களில்
ஓங்கி
ஓங்கி இடிக்க
மொத்தமாய்த்
தகர்கின்றன
எனக்குள்
அத்தனையும்
ஓ
என்
ஆருயிர்க் காதலனே
நீ என்
உயிருக்குள்
உதடு
வைத்து
ஒத்தி
ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச்
சுற்றி
புரியாத
காற்றொலிகள்
ரிதம்
மீட்டுகின்றன
அவை
மல்லியைப்போல்
என்
மனம்தொட்டு
மங்கா
மணம்வீச நீ
எந்நாளும்
என்னருகே
இருப்பாயா
என்
காதலனே
காதலனே காதலனே
என்று
நான் உன்முன்
உருகி
உருகி நின்றதெல்லாம்
சத்தியம்
சத்தியம் சத்தியமே
ஆனால்
என்
காதலனே
என்
இதயத்தின்
ஒவ்வோர்
அணுவையும்
ஆக்கிரமித்த
உன்னையும்
உன்
இதயத்தின்
ஒட்டுமொத்தத்
துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான
என்னையும்
இன்று
நானே
சிலுவையில்
அறைந்துவிட்டேன்
காதல்
என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே
சமுதாயம் என்ற
சாத்தான்
தானே வலிமையானவன்
அவன்
சட்டங்களுக்குள்
சிக்கிக்
கிடக்கும்
பிணக்
குவியல்களில்
இன்று
நானும் ஒருத்தி
முனகவும்
அனுமதியில்லாத
இந்தப்
பெண்மை
மௌனிப்பதையே
துறவாய்ப் பூண்டது
இன்று
எனக்குள்
பரிதவித்துத்
துடிக்கும்
ஒவ்வோர்
அணுவும் நீ
என்னை
மறந்து எங்கேனும்
நிம்மதியாய்
வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது
தவித்துக்கொண்டிருக்கும்
நான்
மண்ணுக்குள் புதைந்த பின்னும்
* (அக்டோபர் 1994)
#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை
No comments:
Post a Comment