சுட்ட வீரப்பன்
வீரப்பனை இங்கே இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று
தெரியவில்லை. நாம் மறதிக்காரர்கள். நாம் மறக்கவேண்டும் என்பதற்காகவே அதிரடிகளை அதிகாலைதோறும்
அறிவித்துக்கொண்டே இருப்பார்கள் நம்மை ஆள்கிறவர்கள். நம்மை வைத்துத்தானே அவர்கள் பிழைப்பு
நடந்த்த வேண்டும்.
சுட்ட வீரப்பன் வேண்டுமா சுடாத வீரப்பன் வேண்டுமா என்று நான்
நகைச்சுவையாய்த் தொடங்கி இக்கவிதையை 2004ல் எழுதினேன். முப்பத்தாறு வருடங்கள் காட்டில்
வீரப்பன் ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டிருந்தான். அவன் அறியாத மறைவிடங்கள் காட்டில்
இல்லை. அவனுக்கென்று ஒரு தொண்டர் படையும் வைத்திருந்தான்.
சந்தனக்கடத்தல், யானைத்தந்தக் கடத்தல் என்றுதான் தொடங்கியது
அவனின் விளையாட்டு. பிறகு பிரபல்யங்களைக் கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு பேரங்கள்
நடக்கும். அவனை யாராலும் பிடிக்கமுடியாது என்பார்கள். ஆனால் பத்தீரிகையாளர் நக்கீரன்
கோபால் மட்டும் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீடியோக்கள் எல்லாம்
எடுத்து பெரிய செய்தியாக வெளியிடுவார். பத்திரிகை தர்மம் தெரிந்தவன் வீரப்பன் என்று
பாராட்டும் பெற்றான்.
வீரப்பனின் மீசையைவிட வீரப்பனைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்
நக்கீரன் கோபாலின் மீசை பெரிதாக இருக்கும். இவர்களின் நட்பிற்கு இவர்களின் மீசைதான்
காரணமாக இருக்குமோ என்ற ஐயமும் வந்தது.
அரசியல்வாதிகளுக்கு அன்று அவன் பெயரை வைத்துக்கொண்டு, ஊழல்கள்
செய்ய வசதியாக இருந்தது. எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை அவன் தலையில் போட்டார்கள். அவனோ பார்ப்பதற்கு நோஞ்சானாய் அவன் கையில் உள்ள
துப்பாக்கியைத் தூக்கி நடக்கவே வலுவில்லாத உடல் கட்டோடுதான் காட்சியளித்தான். நம்மூர்
மந்திரிகள் எம்எல்ஏக்கள் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கையை அவன் அனுபவித்ததாய்த் தெரியவில்லை.
இதில் மத்திய அரசுக்கும் ஓர் அச்சம் தந்தான் வீரப்பன். ஈழத்தோடு
தமிழ்நாட்டையும் சேர்த்து ஒரு புது நாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறான் என்றார்கள்.
அப்படியே தென்னிந்தியா முழுவதும் சேர்ந்துகொள்ளும் என்றார்கள். உயிருடன் சுடாமலோ, பிணமாகச்
சுட்டோ வீரப்பனைப் பிடித்தே தீரவேண்டும் என்றும் போலீஸ் தனிப்படைகள் தாறுமாறாய் அமைக்கப்பட்டன.
ஆள் கடத்தி அவன் பேரம் பேசி பெற்ற பணத்தைவிட அவனைப் பிடிப்பதற்காக
அரசுக்குப் பெரும் செலவு வைத்தான் வீரப்பன்.
உண்மையிலேயே அவனைப் பிடித்துவிடவேண்டும் என்றால் பெரும் படைகள்
கொண்ட ஒரு அரசால் இயலாதா? அவனைப் பிடிப்பது நோக்கம் அல்ல, அவனை வைத்து அரசியல் செய்வதே
நோக்கம் என்றார்கள் சில விமரிசகர்கள். வீரப்பன் இருப்பதால்தான் நம் காடுகள் பாதுகாப்பாக
இருக்கின்றன. அவன் இல்லாவிட்டால், காட்டை அழித்திருப்பார்கள் அரசியல்வாதிகள் என்றும்
வீரப்பனை சிலர் புகழ்ந்துகொண்டிருந்தார்கள்.
தமிழர்கள் உணர்வு மிகுந்தவர்கள். வீரப்பன் சுடப்பட்டான் என்று
அறிந்ததும் அவன் மீது இரக்கம் அன்பு பாசம் எல்லாம் வந்து பலருக்கும் ஒட்டிக்கொண்டிவிட்டது.
வீரப்பனின் மகன் தேர்தலில் நின்றிருந்தால், வெற்றிபெற்றிருப்பான் என்பதுபோல் தெரிந்தது.
எப்படியோ அவன் ஆண்டு அனுபவித்திருக்கவேண்டும் முப்பத்தாறு வருடங்களாக.
தானே சாகவேண்டியவனை இறுதியாக சுட்டுப் பிடித்தார்கள். இவனுக்குக் கொடுத்த விளம்பரங்களை,
விளையாட்டு வீரர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் அறச்சேவகர்களுக்கும்
ஒரு உண்மையான நேர்மையான நல்ல அரசியல் வாதிக்கும் கொடுத்திருந்தால், நாம் நிறையவே வளர்ந்திருப்போம்.
வல்லரசாக ஆகி இருப்போம்.
எப்படியோ நாம் அரசியல் செய்வதற்கு ஏதோ ஒன்று எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே
இருக்கிறது. அன்று அதில் ஒன்று, வீரப்பன். இன்று அது எது? நான் சொல்ல வேண்டுமா? உங்களுக்கே
தெரியும் அல்லவா? எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்…
சுட்ட வீரப்பன்
வேண்டுமா
சுடாத
வீரப்பன் வேண்டுமா
அதிரடி
மரத்தின்
கிளைகளிலிருந்து
நழுவி
விழுந்த வினாவிற்குத்
தம் பெருங்குரல்
சுருக்கி
ஓசை மண்
ஒட்டாமல்
விடை
மொழிந்திருப்பார்
முன்பே
யாரோ
உலகறிய
இவ்வேளையில்
ஒலிபெருக்கிகள்
கதறும்போது
கீழே
நிலத்தில் நிற்கும்
அறிவுக்
கண்கள்
கிழக்கு
வான் காலையாய்த்
திறந்து
கொள்கின்றன
o
சுட்ட
வீரப்பன் நம்மூரில்
சட்டென்று
ஆகிவிடுகிறான்
தியாகி
ஊதி ஊதி
உணர்ச்சி
அடுப்புகளில்
மகாத்மாவாகக்கூட
சுடர்
நீட்டக்கூடும்
பத்திரிகை
பசிக்கு
ஒன்றிரண்டு
கூட்டோடு
கொஞ்சமாய்
அப்பளம் நொறுக்கி
அரைவயிறு
நிறையலாம்
அவ்வளவுதான்
o
சுடாத
வீரப்பன்
அரசியல்
விசமிகளின்
அடிமடி
குதறும் வியாதி
சட்ட
வளாகங்களில்
சத்தமாய்ப்
பேசப் பேச
கூவத்தில்
மத்தாடக்கூடும்
மூக்குவெடிக்க
o
ம்ம்ம்....
இவ்வளவு
பொறுத்த காவல்
இன்னும்
கொஞ்சம்
பொறுத்திருக்கலாம்
தானே
செத்திருப்பான்
வயதான
பழம்
அடுத்து....
சந்தனமில்லாத
ஒரு
மனிதக்
கடத்தலோடு
காட்டு
மத்தியிலிருந்து
கடிதில்
வந்து சேரலாம்
ஓர்
தகவல்
அடுத்த
வீரப்பன் யாரென்ற
அறிவிப்போடு
கூட்டு
அதிரடிப்படை
வீட்டில்
கொஞ்சம்
பாட்டு
கேட்கும் அதுவரைக்கும்
o
காட்டுராணி
கோட்டையிலே
காவல்கள்
இல்லை
அங்கே
காவல்
காத்த நாட்டுத் துரோகி
உயிருடன்
இல்லை
o
சுட்ட
வீரப்பன் வேண்டுமா
சுடாத
வீரப்பன் வேண்டுமா
வீரப்பன்கள்
வேண்டாம்
ஐயா
அப்துல் கலாமோடு
அவசரகதியில்
ஈராயிரத்து
இருபது நோக்கி
நிறைய
நடக்கவேண்டி
இருக்கிறது
இந்தியா
* (அக்டோபர் 2004)
No comments:
Post a Comment