கொடிமுல்லை மூக்கழகா

எனக்கு இரண்டு பிள்ளைகள். முல்லைச்சரம் மாதிரி மகள் ஒன்று. முத்துப்பேழை மாதிரி மகன் ஒன்று.

மகள் பிறந்தபோது நான் ஊரில் இல்லை. சவுதி அரேபியாவில் பணியில் இருந்தேன். பனிரோஜா வம்சத்தின் முதல் இளவாசியான என் மகளே மகளே என்று தொடங்கி ஒரு கவிதை எழுதினேன்.

அந்தக் கவிதையை என் மகளுக்கு அப்போது வாசிக்கத் தெரியாது. ஆனால் அதை வாசித்த தாயின் பூரிப்பு என் மகளின் கன்னங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் முத்தக் கவிதைகளாக.

பின் சவுதியிலேயே என் மகன் பிறந்தான். இருவருக்கும் சேர்த்து பாடல்கள், கவிதைகள் என்று பலகாலும் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் நான் அதிகம் எழுதியது என் மகளுக்குத்தான் என்று என் மகனிடம் ஒரு மனக்குறை இருப்பதைக் கண்டேன். இல்லை அது உண்மையில்லை என்று சொல்லும் முகமாக எழுதிய கவிதைதான் இது.

ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் கொஞ்சுவது பலவகை. கள்ள படுவா, திருட்டுப் பயலே, ராசுக்கோலு, இப்படியாய் நீளும். ஆனால் இதெல்லாம் மகனைக் கொஞ்சும்போதுதான். மகளைக் கொஞ்சும்போது அப்படிக் கொஞ்சுவதில்லை. என் ராசாத்தி, என் கண்ணு, என் செல்லம், என் ரத்தினம், என் பொண்ணுமணி, என் கண்ணுமணி, இப்படியாகத்தான். தமிழன் பெண்களுக்கு இயற்கையாகவே அதிகம் மரியாதை தருகிறானோ? அதைக் காட்டும் வழிகளில் ஒன்றுதான் இதுவோ?

என் மகன் பதின்ம வயதில் நின்றபோது, அவன் முகத்திற்கு மூக்கு சற்றே பெரியதுபோல இருக்கும். அப்படித்தான் எனக்கும் என் பதின்ம வயதில் இருந்தது. அப்படியே என்னைப் போலவே அவனுக்கும் இருந்தது. வளர்ந்து பெரியவனான இப்போது அவனுக்கு அப்படி இல்லை. அத்தனையும் செய்து கோத்தவைபோல அம்சமாக இருக்கின்றன. அவன் ஆணழகன்தான் என்று இந்தத் தந்தை உள்ளம் பெருமைப்படுகிறது.

ஆனால் அன்று அக்கவிதையை எழுதியபோது ‘கொடைமிளகாய் மூக்கழகா’ என்று செல்லமாகத் தொடங்கி எழுதினேன் என் கவிதையை. அதை மகனிடம் கொடுத்தேன். வாசித்து வாசித்துப் பார்த்தான். நேசித்தான். ஆனாலும் முகத்தில் ஒரு வாட்டம் தென்பட்டது. என்னவென்றேன். அக்காவை மட்டும் தங்கம் வைரம் வைடூரியம் என்றெல்லாம் சொல்லி கவிதை எழுதறீங்க. ஆனால் என்னை ஏன் கொடைமிளகாய் மூக்கழகா என்று எழுதி இருக்கீங்க என்றான்.

அடடா, இது என் கொஞ்சல் மொழியடா. மனதில் உயர்வே கொண்டு எழுதினேன். ஆனாலும் மாற்றிவிடுகிறேன் என்று சொல்லி கொடிமுல்லை மூக்கழகா என்று மாற்றினேன். ஆனாலும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பில், கொடைமிளகாய் மூக்கழகா என்றுதான் இருக்கும்.

பச்சைமிளகாய் இளவரசிக்கு அணிந்துரை தந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் இந்தக் கவிதையைப் பாராட்டத் தவறவில்லை. அவர் சொன்னதை அப்படியே கீழே தருகிறேன் அவருக்கான என் நன்றியோடு:

இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் நயத்துடன் அமைந்திருக்கின்றன இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

          கொடை மிளகாய் மூக்கழகா
          கொத்தவரும் கண்ணழகா
          விடை சொல்லாச் சிரிப்பழகா
          ஊசிவெடிப் பேச்சழகா

இப்படி இவர் வர்ணிக்கும்போது, எமக்கு பரிச்சயமான, மிக இயல்பான ஒரு காட்சி எம் கண்முன்னே விரிகிறது.”

இனி நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்குக் கொடைமிளகாய் மூக்கழகா பிடித்திருக்கிறதா அல்லது கொடிமுல்லை மூக்கழகா பிடித்திருக்கிறதா.

இந்தக் கவிதைக்கு மிக அழகான மெட்டொன்றைத் தேர்வு செய்து மகனின் திருமண பெண்ணழைப்பு நிகழ்ச்சி மண்டபத்தில் அருமையாகப் பாடி அசத்தினார் தேன்நிறைக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன். அந்தப் பாடல்கள் அடங்கிய கணியிசைத்தட்டை அன்று அனைவருக்கும் வழங்கினேன்.

நான் இதை எழுதும்போது CD என்பதற்கு கணியிசைத்தட்டு என்று எழுதியிருக்கிறேன். இதுவரை இச்சொல்லை நான் பயன்படுத்தியதில்லை. யாரும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. எழுதும்போது தானே வந்து விழுந்தது.

அன்று இசைத்தட்டு என்போம் இன்று கணியிசைத்தட்டு என்றால் ஒரு தொடர்ச்சி கிடைப்பதாகப் படுகிறது எனக்கு. நற்சொல்லா என்று சொல்லுங்கள் நண்பர்களே.



கொடிமுல்லை மூக்கழகா
   கொத்தவரும் கண்ணழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
   ஊசிவெடிப் பேச்சழகா


தொடைமீறும் நடையழகா
   தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
   எஃகிரும்புத் தோளழகா


மீசைவரும் மணியோசை
   மேலுதட்டில் கேட்குதடா
ஓசையில்லாச் சொல்நூறு
   உதட்டோரம் ஏங்குதடா


ஆசைகொட்டிப் பேசயிலே
   அடிவயிறு ஊறுதடா
மேசையிலே பூங்கொத்தா
   மனசெல்லாம் நிறையுதடா


சின்னஞ்சிறு விரலெடுத்து
   சிக்கெடுக்க வருகின்றாய்
இன்னுமின்னும் வேண்டுமென்று
   இனிப்பள்ளித் தூவுகிறாய்


எண்ணயெண்ண  இனிக்குதடா
   இதயவெளி மணக்குதடா
தின்னத்தினம் திகட்டாத
   திங்கள்முகம் யோகமடா


விழுதாடும் ஆலமரம்
   தானூஞ்சல்  ஆடுதடா
உழுதநில எழிலான
   உன்னழகைக் கொஞ்சுதடா

நழுவிவிழும் விழித்துளிகள்
   நன்றிமழை கொட்டுதடா
பழுதில்லாப் பிள்ளைபெற
   புண்ணியமோ கோடியடா

* (ஏப்ரல் 2004)
அன்புடன் புகாரி

#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை
 







No comments: