200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்


கிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)


விலகாத கொஞ்சல் வேணும்
விரட்டாத நெஞ்சம் வேணும்
முடியாத முத்தம் வேணும்
மொறைக்காத கண்ணு வேணும்

கொஞ்சி கொஞ்சி பேசும்போது
கோடிப் பூவா பூக்க வேணும்
பிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு
பஞ்சுப் போல காக்க வேணும்

கன்னக் குழியில் விரலை விட்டு
காதல் கவிதை எழுத வேணும்
கண்ணப் பாத்து கனவக் கேட்டு
கையக் கோத்துச் சிரிக்க வேணும்

நீட்டிப் படுத்துக் கெடக்கும் போது
நெட்டி முறிச்சு அணைக்க வேணும்
நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கழுத்துக்குள்ள ஊரும் போது
காதல் மூச்சு சேர வேணும்
கட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு
கெட்டித் தேனச் சொட்ட வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்

மெத்து மெத்து மேனி எல்லாம்
பொத்திப் பொத்தித் தழுவ வேணும்
பொத்துக் கிட்டு ஆசை வந்தா
ஒத்துக் கிட்டு சாக வேணும்

198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்



ஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்


உயிரே நலம்தானா
உறவே சுகம்தானா
மன ஓடத்தில் நீ பாய்மரம்
உனை நான் நினைக்கிறேன்

கணிமடி ஏந்தும் கடிதங்களில்
உன் கனவு கண்டேன்
தனிமடல் வீசும் வசந்தங்களில்
உன் தவிப்பு கண்டேன்
உயிரே உயிர்க்கருவே
உனை நான் நினைக்கிறேன்

ரசனைக் கடலின் ஆழத்திலே
ஓர் முத்தெடுத்தேன்
ரகசியமாய் அதன் காதினிலே
என் காதல் சொன்னேன்
அழகே அலைச்சுருளே
உனை நான் நினைக்கிறேன்

ஏனோ எங்கும் காணாமல்
எனைத் தேடுகிறேன்
ஏற்றியச் சுடராய்
உன் விழிச் சிமிழில் நானிருந்தேன்
விழியில் விழித் துளியில்
உனை நான் நினைக்கிறேன்

நிலவே போதும்
நெருப்பினில் வேகும் காலங்களே
நிழலுக்கும் வேண்டாம்
நீயற்ற வெறுமை வாழ்வினிலே
நாளை உனைக் காணும்
மனம் பாடும் காவியம்

ஒரு சங்கக் காதல்


எங்கும் எழில் பொங்கும் நீ
திங்கள் முக மங்கை
அங்கம் தமிழ்ச் சங்கம் நீ
தங்கும் இடம் எங்கே

வங்கம் எனப் பொங்கும் நீ
எங்கள் நிலச் சிங்கம்
இங்கும் வெளி எங்கும் நீ
தங்கம் எனில் அங்கே

மஞ்சம் உன் நெஞ்சம் அதில்
துஞ்சும் என் நெஞ்சே
வஞ்சம் உனில் மிஞ்சும் எனில்
தஞ்சம் தரும் நஞ்சே

வஞ்சிக் கொடி கொஞ்சும் என்
நெஞ்சம் உன் நெஞ்சே
தஞ்சம் உன் நெஞ்சம் இனி
வஞ்சம் ஏன் மிஞ்சும்

ஒரு சினிமாக் காதல்


நாணம் குடிக்கிறதே உன்னை
நான் குடிக்கக் கூடாதா

மௌனம் மேய்கிறதே உன்னை
நான் மேயக் கூடாதா

தயக்கம் தின்கிறதே உன்னை
நான் தின்னக் கூடாதா

மயக்கம் இழுக்கிறதே உன்னை
நான் இழுக்கக் கூடாதா

ஆசை கவ்வுகிறதே உன்னை
நான் கவ்வக் கூடாதா

அச்சம் பறிக்கிறதே உன்னை
நான் பறிக்கக் கூடாதா

மிச்சம் இன்றி உன்னை
நீ என்னுள் கரைக்க வா

எச்சில் அரித்த என்னை
நான் உன்னுள் புதைக்க வா

அழகிய காதல் மலரே


அழகிய காதல் மலரே
என் ஆருயிர்க் காதல் கிளியே

பழகிய நாளாய் நிலவே
புதுப் பாலாற்றில் நீந்துது மனமே

குழைவது உன்னெழில் முகமே
என் காதலின் மொத்தமும் நீயே

அலைகளில் தவிக்கும் நுரையாய்
என் அணுக்களில் உனக்கென ஏக்கம்

மழையென விழுந்தாய் என்னுள்
என் மனதினை இழந்தேன் நானும்

விழைவது என்றுமுன் மனமே
அதில் உறங்காத நானோர் பிணமே

வளைக்கரம் குலுங்கிட வந்தாய்
என் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்

விலையேது உனக்கிவ் வுலகில்
என் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்

ராஜ முத்தங்கள்


இதய ஆழத்தின்
...இனிய வெளிகளில்
உதிரும் நினைவுகள்
...உணர்வைக் கூட்டியே
புதிய வாழ்த்தெனப்
...பொழிய வந்தன
ரதியுன் இதழ்களில்
...ராஜ முத்தங்கள்

ஒரு கிராமத்துக் காதல்


வெறிச்ச விழி மூடாம
வருத்தத்துடன் நானிருந்தேன்
பருத்திக் கொட்டை கண்ணழகே
பறிச்சிக்கிட்டே என்னுசுரை

வறுத்து வெச்ச முந்திரியே
வழுக்கிக்கிட்டே போகுறியே
தெறிச்சு விழும் முத்தழகே
தவிச்சிருக்கேன் பாரேன்டி

குறிச்சி வச்சத் தேதியில
கொறிச்சிப் பாக்க வேணுமடி
நரச்சமுடி ஆகும்முன்னே
நரம்பதிர வாயேன்டீ
அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று
அன்பே
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு

தினம் வெட்கப்பட்டு
வெட்கப்பட்டு
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு

உன் மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு

உன் கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்

உன் சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை உன்னுடன்
இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு

இவை அத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனிவரும் அத்தனைப் பிறவியிலுமே
இன்றுபோலவே துடித்துக்கொண்டிருக்கப்போகும்
என் அத்தனை உயிர்களையும்
இன்றே இப்பொழுதே எழுதிக்கொடுத்துவிடுகிறேன்

கனவுகள் ததும்பும் கருவிழிகள்..


கனவுகள் ததும்பும்
கருவிழிகள்
உணர்வுகள் மிளிரும்
சிறுஇதழ்கள்

தினமொரு அஞ்சலாய்
வந்துவந்து
மனதினுள் வார்ப்பது
பாற்குடங்கள்

வனமலர்க் குவியலில்
நின்றாடும்
வண்ணத்துப் பூச்சியின்
உள்ளமென

குணவதி மனரதி
வான்மதியே
என் நெஞ்சினில் பொங்குது
தேன்நதியே

பிறப்பதும் இறப்பதும்
நிகழ்ச்சிகள்தாம்
பிறக்கிறார் இறக்கிறார்
பலரும் இங்கே

குறிஞ்சியாய்ப் பிறப்பவர்
ஒரு சிலரே
நறுமலர் நீயும்
அதில் ஒன்றே

முல்லையும் மல்லியும்
கோத்தெடுத்த
நல்லதோர் கவிதையும்
எனக்குள்ளே

மெள்ளத்தான் அசையுது
பூத்து
சொல்லத்தான் காதலர்
வாழ்த்து

1998301 தீ மூச்சைத் தூதுவிடு


அவன்
அவளைச் சந்தித்தான்

அந்தச் சந்திப்பு
சிந்திப்பை முந்திக்கொண்டு
இதுதான் பந்தம்
இருவரும் சொந்தம் என்று
சந்தம் கட்டிச்
சிந்து பாடச் சொன்னது

அந்தி விரித்த
அரையிருள் பந்தியில்
இவன் இமைகள்
அவள் விழிகளிலும்
அவள் இமைகள்
இவன் விழிகளிலும்
பட படவென்று தட்டும்
தந்தித் தகவல்களால்
சிலிர்ப்புகளையும்
சிலிர்க்க வைத்துக்கொண்டன

இதய அருவிகள்
நிலவுக்குள் விழுந்து
கனவுக்குள் புரண்டோடி
நினைவுகளை ஈரமாக்கி
அவர்களின் சிந்தையைப்
பேதலிக்கச் செய்தன

ஆம்
அவர்கள் காதலித்தார்கள்

அவர்கள் மட்டுமே வாசிக்கும்
தனி ஏடுகளில் மட்டுமே
அழகழகாய்த் தட்டச்சேறியது
அவர்களின் காதல்

சில நாட்கள் நழுவி
காலத்துக்குள் விழுந்து
காணாமல் போனபின்
அவள் மனம்
அவசரமாய் நிதானமானது

மூச்சு முட்டிச் செத்தாலும்
முடிவெடுக்கும் முயற்சியின்
மன ஊஞ்சல் ஓயாது
பெண்களில் சிலருக்கு

கல்லூரிப் படிக்கட்டுகளை
கணிசமாகவே
தேய்த்துவிட்டிருந்தாலும்
அவளும் அந்தச்
சிலரில் ஒருத்தி என்னும்
விதிக்குள் சிக்குண்டாள்

காதல் வேறு
கல்யாணம் வேறு என்று
செழித்து வளர்ந்த
சமுதாயப் பாழ்மரத்தின்
ஆணிவேர் இதில்தானே
ஊட்டச்சத்தே உண்கிறது

பிறகென்ன
அவளுக்கே அர்த்தம் விளங்காத
போராட்டங்கள் அவளுக்குள்
மீண்டும் மீண்டும்
புதுப் புது வர்ணங்களில்
நாள்தோறும்
அவதாரம் எடுத்தவண்ணமாய்
இருக்கின்றன

எல்லா நிறங்களும்
முடிவில் கறுப்பாய்த் திரிவதுதான்
அவளுக்குப் புரியவே இல்லை

விளைவாய்
அவன்முன் அவள்
தன் மௌனத் தாவணியால்
முழு முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள்

அவனோ
கண்ணீர் அலை அடிக்கும்
அவன்
கண்களின் கரைகளில் நின்று
அவளின்
மெல்லிய இதயத்தின் காதுகளில்
மிகவும்
துல்லியமாய்ப் பாடுகின்றான்

O

நீ
ஈரங்கள் நீராடும் மேகம்
என்னோடு ஏனிந்த மௌனம்

கோழை மனக் காதல்
நாளும் நிறம் மாறும்
மாறாது என்னுள்ளமே

தேனோடையின் காற்றானவன்
உனைச் சேரவே புயலாகிறேன்

தீ மூச்சைத் தூதுவிடு
மணத் தேர்ஏறத் தேதி கொடு

வானம் மலர் தூவும்
வற்றாத குற்றாலம் வாழ்வாகும்

உனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
தேன் முல்லையே மொழியாததேன்

ஈரேழு ஜென்மங்கள்
நாம் வேறல்ல ஓருயிரே

நாளும் வழிமேலே
விழியல்ல
உயிர் வைத்தேன் இளமானே

கவிதைபற்றி கவிதை


கவிதைபற்றி
கவிதையெழுத வேண்டுமா
அதைக் கவிதைகேட்டு
கவிதைமனம் மறுக்குமா

கவிதைபற்றி
கவிதையென்ன எழுதுவேன்
எனைக் கவிதைகேட்கும்
கவிதைமனம் வாழ்த்துவேன்

தவிப்பதற்கும்
துடிப்பதற்கும் எதுவேண்டும்
இந்தக் கவிதைமகள்
வைத்திருக்கும் மனம்வேண்டும்

புவிநிறைந்த
பூக்களள்ளி தூவுகிறேன்
இவள் பொன்மனதை
வாழ்கவென்று வாழ்த்துகிறேன்

இணையமென்ற
மேடைதனில் சந்தித்தேன்
உயர் இதயமென்று
அப்பொழுதே சிந்தித்தேன்

அணை தாண்டும்
வெள்ளமென உணர்வுநதி
இவள் உள்ளமெங்கும்
தித்திப்பு அமுதநதி

தனைமறந்து
கவிரசிக்கும் கவிதைமலர்
என்றும் தரமிழந்து
போகாத தீபச்சுடர்

நினைவுகளில்
நிச்சயமோர் இடமுண்டு
நட்பு நெகிழவைக்கும்
இதயத்தின் அன்போடு

காதலர்தினம் வந்துவிட்டது


என்
உயிர்த்துடிப்பின் ஓசைகளை
இன்றுன்னிடம் எப்படியாவது
மொழிபெயர்த்துவிடவேண்டும்

அன்பே...
உன் தாவணிச் சிறகினைப்
பூவென விரித்து
என் காதல் வனத்துக்குள்
நீ பறந்து வரப்போகும்
அந்த நாள் எது?

கவிதையில் தொடங்கினேன்:
நீ இப்போதெல்லாம்
தாவணி போடுவதே இல்லை
செல்லம்...

தினம் கனவுகளின் தழுவல்களில்
கரைந்து போகும் உணர்வுகளை
நிஜமாய்ப் பொழியப் போகும்
அந்த நேரம் எது?

அடுத்த வரி கோத்தேன்:
உன் ”வால்பேப்பர்” விழிகள்
அலட்சியப் பார்வை வீசுகின்றன

கண்ணே
உன்னைக் காணாக் கணங்களில்
காற்றில்லாக் கூண்டுக்குள்
மூச்சுவிடத் தவிக்கும்
இளங்கிளி நான்
நினைவுப் புதை குழிக்குள்
நிமிசம் தவறாமல் மூழ்கும்
முது மான்

மேலும் தொடர்ந்தேன்:
புருவங்களைச் செதுக்கிச்
சீர்செய்ய விரைகிறாய்...

அன்பே இத்துடன் என்
தீ மூச்சைத் தூதுவிடுகிறேன்
வந்து விடு
உன் வரவுக்காக நான்
வழிமேல் விழியை அல்ல
என் உயிரையே வைத்துக்
காத்துக் கிடக்கிறேன்

கவிதையை முடித்துவிட்டேன்:
அஞ்சலைச் சொடுக்கும்முன்
என்னுடன்
விழி
மாற்றிக்கொண்டிருந்த
நீ
ஆள்
மாற்றிவிட்டாய்
என்ற
அவசரத் தகவல்...

பாவேந்தர் பிறந்தநாள் உறுதிமொழி


சொட்டுந்தேன் தமிழையள்ளி
கெட்டிப்பால் ஆடைகட்டி
பட்டுத்தழல் வீரம்தொட்டு
கொட்டுந்தேள் கோபம்பொத்தி

எட்டுத்திசை எங்கும் மின்னல்
வெட்டித்தான் கவிதை தந்தாய்
முட்டித்தினம் மூடர் எண்ணம்
விட்டுத்தான் ஓடச் செய்தாய்

சிரித்தாயே அழகின் சிரிப்பில்
சிலிர்த்தாயே இயற்கை வளத்தில்
தெறித்தோடும் முத்தே பாட்டில்
தீவீசும் கொள்கை வேட்டில்

விரித்தாயே புரட்சிக் கொள்கை
விவேகத்தின் வெற்றி முல்லை
நரிக்கள்ளம் கொண்ட மனத்தை
நறுக்கியே வைத்தாய் சொல்லில்

பாரதமும் இரண்டாம் பட்சம்
பைந்தமிழர் வாழ்வே உச்சம்
பாராட்டும் தமிழ்ப் பாவேந்தே
பாட்டாலே தந்தேன் முத்தம்

போராட்ட வெற்றிச் சுடராய்
புவிமீது தமிழர் வாழ
தேரோட்டிப் போனாய் உந்தன்
தரம்போற்ற வந்தேன் இன்றே

அமுதங்கள் அள்ளியே தந்தாய்
அழகுதமிழ் உயிரிலே வைத்தாய்
குமுறிவரும் எரிமலைக் குழம்பை
கவிதையினில் கொட்டியே தந்தாய்

சமுதாயப் போக்கினைச் சாடும்
சவுக்கோடு பாய்ந்தே வந்தாய்
தமிழுமோர் வரமெனக் கண்டாய்
தமிழினம் உயரவே நின்றாய்

விண்ணோடு கவிபாடும் சோலை
வேருக்குள் இரத்தமும் கொட்டி
மண்ணோடு கனிவளம் தோண்டி
மரமேறிக் கிளைகளும் வெட்டி

பொன்னோடு மணிகளும் செய்து
பொழுதுக்கும் உழைப்பினில் வாழும்
எண்ணிலா ஏழ்மையின் மாந்தர்
ஏற்றமே வாழ்வெனச் சொன்னாய்

போர்க்களம் வெல்லும் உன்றன்
புரட்சியின் கரங்களை நீட்டி
நேர்க்குரல் ஓங்கும் பாட்டால்
நெற்றியில் இட்டாய் பொட்டு

வேர்ப்பலா விதவைத் துயரம்
வேர்வெட்டித் தீர்த்தாய் மறவா
பார்புகழ் பாட்டின் வேந்தா
பாரதியின் தாசா வாழ்க

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழே
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழே

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழே
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழே

உறுதியெடு தமிழர் இனமே
உயர்த்திப்பிடி தமிழின் கொடியை
மறதிகளும் கொண்டார் தமிழர்
மறந்திட்டார் தமிழின் சொல்லை

குறுகித்தினம் சாவதும் தமிழோ
கெடுப்பதுவும் தமிழரின் பண்போ
உறுதிமொழி உயிரில் தைப்போம்
உலகெலாம் தமிழே வளர்ப்போம்!

---------------------------------
நினைவுநாள் ஏப்ரல் 21, 1891
பிறந்தநாள் ஏப்ரல் 29, 1964
**
பைசா கோபுரங்கள் நிமிரட்டும்



நாம்
கைகுலுக்கிக் கொள்வது
நம் விரல்களைச்
சரிபார்த்துக்கொள்ளத்தான்

தேவையற்ற
நகங்களை நறுக்கத்தான்

அழகு மிளிர விரல்களில்
சந்தனம் பூசத்தான்

பொய்ப்புகழ்ச்சி மோதிரமிடவோ
பொறாமை நெருப்பில்
தோல் கருக்கவோ அல்ல

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன

200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு


மின்னஞ்சல் ஓசை - அதை
மீட்டத்தான் ஆசை
மடிக்கணியின் பாஷை - அதில்
மூழ்கத்தான் ஆசை

கணிப்பலகை மடியிட்டு
கைவிரலின் நுனிதொட்டு
தட்டச்சும் ஓசை சங்கீதம்

நாளெல்லாம் தவிக்கவிட்டு
நகர்ந்துவரும் மடல் பார்த்து
மவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்

வலை தேடும் நேரம்
வன்களத்தின் ஓசை
சந்தோச சங்கீதம்

இணையத்தின் சாளரமெல்லாம்
இன்பத் தென்றல் தழுவும் சுகமாய்
இழையோடும் தகவல் சங்கீதம்

தட்தட்டும் அஞ்சல்களில்
துணைதேடும் உள்ளங்கள்
தடுமாறும் ஓசை சங்கீதம்

உரையாடும் மின்னறையில்
உயிரோடு உயிர்சென்று
உறவாடும் பாஷை சங்கீதம்

யாரென்றே கூறா
முகமூடி வேசம்
தவறான சங்கீதம்

எந்நாளும் ஏழை என்னை
அள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்
அன்புத்தாய் இணையம் சங்கீதம்

இந்தியா இன்பத்திரு நாடு...


நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.

1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.

இதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.



இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும்
அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ
வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப்
பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும்
எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன்
நல்லதமிழ்ச் சொல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக
வரவேண்டும் ஓடி

மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண்
மறந்ததே இல்லை

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென்
நன்றிகளோ கோடி

தமிழ் மாதக் காதல்


தைத்தான்
அவளைக் கண்களால்

மாசில்லாக் காதல்
உனதென்றால்...

பங்குநீ சரிபாதி இனியென்
வாழ்வில் என்றாள்

சித்திரை விலக்கி
வெளியில்வா பொன்மலரே

வைகாசி என்று வாட்டும்
வரதட்சணை வேண்டாமெனக்கு
என்றான்

ஆ..நீ..தானடா
ஆண்மகனென்று

ஆடிப் பாடி
தாவணிச் சிறகடித்து
அவன் மடிவிழுந்தாள்
அவள்

புரட்டாசியில் ஊருக்கே சொல்லி
ஐப்பசிக்கும் விருந்தாக
கார்த்திகைக் கணையாழியும்
மார்கழித் தேன்நிலவுமாய்
அமர்களப்பட்டது
தமிழ்க்காதல் திருமணம்

200605 காதலி வருவாளா


ஆயிரம் பாவையர்
காதல் விழியோடு
ஓருயிர்ப் பூமகள்
தேரில் வருவாளா

வேருக்குள் வேர்விட்டு
பின்னிக் கொள்வாளா
தூருக்குள் நீர்போல
நெஞ்சில் வாழ்வாளா
மூச்சுக்குள் மூச்சாகி
மூச்சைக் காப்பாளா

தாகத்தின் ராகத்தில்
காதல் இசைப்பாளா
மோகத்தின் தாளத்தில்
முத்தம் விதைப்பாளா

தோளில்
ஏறிக் கொள்வாளா
தோளாய்
மாறிக் கொள்வாளா

கீறும்
காதல் நகத்தால்
காவியம் சொல்வாளா

பூஞ்சோலைப் புன்னகையில்
பூபாளம் வேண்டும்
மூக்குத்திப் பூவோடு
மோட்சங்கள் வேண்டும்

ஏக்கம்
எங்கும் எனைக்கொல்ல
தூக்கம்
எங்கோ விடைசொல்ல

தீயில்
தீயும் உயிரால்
தீபம் தேடுகிறேன்

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை


இலக்கியச் சுடரொளி(3) - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
- சத்தி சக்திதாசன்

நேர்காணல் - நன்றி: நிலாச்சாரல்

'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே
உங்களுக்காக:


1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது ?

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்
ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய். பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக்கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளையெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி
நின்றேன். நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பதுபோலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பதுபோலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன ?

அருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.

கவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.

என் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.

வாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.

வாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.


3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா ?

எனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.

எல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.

தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.

எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.

கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.

4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா?

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரை வீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.


5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் இருக்கிறதா? எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?

நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற எனக்கு ஞாபகம் இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷ்ணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்று அழைப்பார். அப்போதெல்லாம் இசைக்குள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.

நான் கல்லூரி சென்றபின்னர்தான் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.


6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற
கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க
ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.

7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை? சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா?

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.


8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாளர்கள் யார்?

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்றிருந்தாலும் சரி பெறாமலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் சரி.


9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல் பற்றிக் கூறுவீர்களா?

அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. 2004 பிப்ரவரி 8ல் தொடங்கி பத்து தினங்களுக்கு திசைகள் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் தலைமையில், லண்டன் பல்கலைக் கழகம் பேராசிரியர் சிவாபிள்ளை முன்னிலையில், தமிழ்-உலகம் குழுமம் இணையப் பந்தலில் என் அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.

வரலாற்றின் வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.

இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.

அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோ ம் நாம்.

சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.


அன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1. அழைப்பிதழும் வரவேற்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/1.html

2. தலைமையும் உபசரிப்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/2.html

3. வாழ்த்துரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/3.html

4. வெளியீடு ஆய்வுரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/5.html

5. விமரிசனங்கள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/6.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/7.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/8.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/9.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/13.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/14.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html

6. ஏற்புரையும் நன்றியுரையும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/15.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/16.html


10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன்?

நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான்
எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.

http://buhari.googlepages.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல்
சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.

buhari@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.

http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய
முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.

தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.


11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?

இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


12. "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் ?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த
நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி
உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!


13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?

அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்
வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்


14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது?

சிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே. என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள்
எழுதும் எண்ணம் இல்லை. கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.


15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?

தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம். உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை
எண்ணிக்கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது. இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப்
பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.


16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

தமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக் கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்

தமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.

திரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்

தமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்

வாழ்க தமிழ். நன்றி வணக்கம்.