200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்


கிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)


விலகாத கொஞ்சல் வேணும்
விரட்டாத நெஞ்சம் வேணும்
முடியாத முத்தம் வேணும்
மொறைக்காத கண்ணு வேணும்

கொஞ்சி கொஞ்சி பேசும்போது
கோடிப் பூவா பூக்க வேணும்
பிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு
பஞ்சுப் போல காக்க வேணும்

கன்னக் குழியில் விரலை விட்டு
காதல் கவிதை எழுத வேணும்
கண்ணப் பாத்து கனவக் கேட்டு
கையக் கோத்துச் சிரிக்க வேணும்

நீட்டிப் படுத்துக் கெடக்கும் போது
நெட்டி முறிச்சு அணைக்க வேணும்
நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கழுத்துக்குள்ள ஊரும் போது
காதல் மூச்சு சேர வேணும்
கட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு
கெட்டித் தேனச் சொட்ட வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்

மெத்து மெத்து மேனி எல்லாம்
பொத்திப் பொத்தித் தழுவ வேணும்
பொத்துக் கிட்டு ஆசை வந்தா
ஒத்துக் கிட்டு சாக வேணும்

2 comments:

cheena (சீனா) said...

இப்படி கிறுக்குத்தனமாக எழுதி விட்டு உறங்கப் போனால் உறக்கம்தான் வருமா - முத்தங்கள் நிறைந்த கனவுகள், நினைவுகள் உறங்க விடுமா ??

ஆசை ஆசை - அதிகம் - அத்தனையும் கிடைக்க நல்வாழ்த்துகள் நண்பா.

//முடியாத முத்தம் வேணும்

நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்
//

இவை அனைத்தும் எனக்கும் பிடித்த, எப்போதாவது கிடைத்த ஆசைகள்.

அன்புடன் புகாரி said...

----இவை அனைத்தும் எனக்கும் பிடித்த, எப்போதாவது கிடைத்த ஆசைகள்.----

அடடா, அப்படிப்போடுங்க சீனா!

சீனிக்குள்ள சிக்கிக்கிட்ட சீனா இவ்ளோதானா? இல்லை நான்தான் சொல்லாம விட்டுட்டேனா :)