பாவேந்தர் பிறந்தநாள் உறுதிமொழி


சொட்டுந்தேன் தமிழையள்ளி
கெட்டிப்பால் ஆடைகட்டி
பட்டுத்தழல் வீரம்தொட்டு
கொட்டுந்தேள் கோபம்பொத்தி

எட்டுத்திசை எங்கும் மின்னல்
வெட்டித்தான் கவிதை தந்தாய்
முட்டித்தினம் மூடர் எண்ணம்
விட்டுத்தான் ஓடச் செய்தாய்

சிரித்தாயே அழகின் சிரிப்பில்
சிலிர்த்தாயே இயற்கை வளத்தில்
தெறித்தோடும் முத்தே பாட்டில்
தீவீசும் கொள்கை வேட்டில்

விரித்தாயே புரட்சிக் கொள்கை
விவேகத்தின் வெற்றி முல்லை
நரிக்கள்ளம் கொண்ட மனத்தை
நறுக்கியே வைத்தாய் சொல்லில்

பாரதமும் இரண்டாம் பட்சம்
பைந்தமிழர் வாழ்வே உச்சம்
பாராட்டும் தமிழ்ப் பாவேந்தே
பாட்டாலே தந்தேன் முத்தம்

போராட்ட வெற்றிச் சுடராய்
புவிமீது தமிழர் வாழ
தேரோட்டிப் போனாய் உந்தன்
தரம்போற்ற வந்தேன் இன்றே

அமுதங்கள் அள்ளியே தந்தாய்
அழகுதமிழ் உயிரிலே வைத்தாய்
குமுறிவரும் எரிமலைக் குழம்பை
கவிதையினில் கொட்டியே தந்தாய்

சமுதாயப் போக்கினைச் சாடும்
சவுக்கோடு பாய்ந்தே வந்தாய்
தமிழுமோர் வரமெனக் கண்டாய்
தமிழினம் உயரவே நின்றாய்

விண்ணோடு கவிபாடும் சோலை
வேருக்குள் இரத்தமும் கொட்டி
மண்ணோடு கனிவளம் தோண்டி
மரமேறிக் கிளைகளும் வெட்டி

பொன்னோடு மணிகளும் செய்து
பொழுதுக்கும் உழைப்பினில் வாழும்
எண்ணிலா ஏழ்மையின் மாந்தர்
ஏற்றமே வாழ்வெனச் சொன்னாய்

போர்க்களம் வெல்லும் உன்றன்
புரட்சியின் கரங்களை நீட்டி
நேர்க்குரல் ஓங்கும் பாட்டால்
நெற்றியில் இட்டாய் பொட்டு

வேர்ப்பலா விதவைத் துயரம்
வேர்வெட்டித் தீர்த்தாய் மறவா
பார்புகழ் பாட்டின் வேந்தா
பாரதியின் தாசா வாழ்க

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழே
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழே

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழே
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழே

உறுதியெடு தமிழர் இனமே
உயர்த்திப்பிடி தமிழின் கொடியை
மறதிகளும் கொண்டார் தமிழர்
மறந்திட்டார் தமிழின் சொல்லை

குறுகித்தினம் சாவதும் தமிழோ
கெடுப்பதுவும் தமிழரின் பண்போ
உறுதிமொழி உயிரில் தைப்போம்
உலகெலாம் தமிழே வளர்ப்போம்!

---------------------------------
நினைவுநாள் ஏப்ரல் 21, 1891
பிறந்தநாள் ஏப்ரல் 29, 1964

No comments: