நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.
1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.
இதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.
இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும்
அதுதானே கூடு
சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ
வைரப்பொன் மாலை
வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப்
பொருள்தந்த பெருமை
செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும்
எழிலான நஞ்சை
நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன்
நல்லதமிழ்ச் சொல்லை
வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக
வரவேண்டும் ஓடி
மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண்
மறந்ததே இல்லை
தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென்
நன்றிகளோ கோடி
2 comments:
காவடிச்சிந்து என்றாலே இனிமைதான். இந்தக் கவிதையையும் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மெட்டுப் போட்டால் அருமையாக உள்ளது.
கடந்த வாரம் ஒரு கவியரங்கத்திலும் இதை வாசித்தேன் சேதுக்கரசி, பாராட்டுக்கு நன்றி
Post a Comment