ஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை


சந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏதோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.

நான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...


பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி
நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்பு விழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
நண்பா

ஒரு கிளியினை நான் கண்டேன்


ஒரு கிளியினை நான் கண்டேன்
என் மனதினைப் பறிகொடுத்தேன்
அந்தக் கிளியின் இருப்பிடமோ
ஒரு சின்னஞ்சிறு தங்கக்கூண்டு

வண்ண வண்ணச் சிறகுகள்தாம்
அந்தச் சின்னஞ்சிறு கிளியிடத்தில்
மெல்ல மெல்ல விரித்ததனை
எந்த வானிலும் பறந்திடலாம்

விரித்திட வழியில்லையே
அது பறந்திடும் நிலையில்லையே
தனிமையின் மஞ்சங்களில்
அது தழுவுது தன்னைத்தானே

அதிர்ஷ்டங்கள் ஓரிடத்தில்
வெறும் அவலங்கள் வேறிடத்தில்
வாழ்க்கைப் புயல் வெளியில்
இந்த வரங்களின் ராஜ்ஜியமே

200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்


கிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)


விலகாத கொஞ்சல் வேணும்
விரட்டாத நெஞ்சம் வேணும்
முடியாத முத்தம் வேணும்
மொறைக்காத கண்ணு வேணும்

கொஞ்சி கொஞ்சி பேசும்போது
கோடிப் பூவா பூக்க வேணும்
பிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு
பஞ்சுப் போல காக்க வேணும்

கன்னக் குழியில் விரலை விட்டு
காதல் கவிதை எழுத வேணும்
கண்ணப் பாத்து கனவக் கேட்டு
கையக் கோத்துச் சிரிக்க வேணும்

நீட்டிப் படுத்துக் கெடக்கும் போது
நெட்டி முறிச்சு அணைக்க வேணும்
நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கழுத்துக்குள்ள ஊரும் போது
காதல் மூச்சு சேர வேணும்
கட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு
கெட்டித் தேனச் சொட்ட வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்

மெத்து மெத்து மேனி எல்லாம்
பொத்திப் பொத்தித் தழுவ வேணும்
பொத்துக் கிட்டு ஆசை வந்தா
ஒத்துக் கிட்டு சாக வேணும்

198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்



ஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்


உயிரே நலம்தானா
உறவே சுகம்தானா
மன ஓடத்தில் நீ பாய்மரம்
உனை நான் நினைக்கிறேன்

கணிமடி ஏந்தும் கடிதங்களில்
உன் கனவு கண்டேன்
தனிமடல் வீசும் வசந்தங்களில்
உன் தவிப்பு கண்டேன்
உயிரே உயிர்க்கருவே
உனை நான் நினைக்கிறேன்

ரசனைக் கடலின் ஆழத்திலே
ஓர் முத்தெடுத்தேன்
ரகசியமாய் அதன் காதினிலே
என் காதல் சொன்னேன்
அழகே அலைச்சுருளே
உனை நான் நினைக்கிறேன்

ஏனோ எங்கும் காணாமல்
எனைத் தேடுகிறேன்
ஏற்றியச் சுடராய்
உன் விழிச் சிமிழில் நானிருந்தேன்
விழியில் விழித் துளியில்
உனை நான் நினைக்கிறேன்

நிலவே போதும்
நெருப்பினில் வேகும் காலங்களே
நிழலுக்கும் வேண்டாம்
நீயற்ற வெறுமை வாழ்வினிலே
நாளை உனைக் காணும்
மனம் பாடும் காவியம்

ஒரு சங்கக் காதல்


எங்கும் எழில் பொங்கும் நீ
திங்கள் முக மங்கை
அங்கம் தமிழ்ச் சங்கம் நீ
தங்கும் இடம் எங்கே

வங்கம் எனப் பொங்கும் நீ
எங்கள் நிலச் சிங்கம்
இங்கும் வெளி எங்கும் நீ
தங்கம் எனில் அங்கே

மஞ்சம் உன் நெஞ்சம் அதில்
துஞ்சும் என் நெஞ்சே
வஞ்சம் உனில் மிஞ்சும் எனில்
தஞ்சம் தரும் நஞ்சே

வஞ்சிக் கொடி கொஞ்சும் என்
நெஞ்சம் உன் நெஞ்சே
தஞ்சம் உன் நெஞ்சம் இனி
வஞ்சம் ஏன் மிஞ்சும்

ஒரு சினிமாக் காதல்


நாணம் குடிக்கிறதே உன்னை
நான் குடிக்கக் கூடாதா

மௌனம் மேய்கிறதே உன்னை
நான் மேயக் கூடாதா

தயக்கம் தின்கிறதே உன்னை
நான் தின்னக் கூடாதா

மயக்கம் இழுக்கிறதே உன்னை
நான் இழுக்கக் கூடாதா

ஆசை கவ்வுகிறதே உன்னை
நான் கவ்வக் கூடாதா

அச்சம் பறிக்கிறதே உன்னை
நான் பறிக்கக் கூடாதா

மிச்சம் இன்றி உன்னை
நீ என்னுள் கரைக்க வா

எச்சில் அரித்த என்னை
நான் உன்னுள் புதைக்க வா

அழகிய காதல் மலரே


அழகிய காதல் மலரே
என் ஆருயிர்க் காதல் கிளியே

பழகிய நாளாய் நிலவே
புதுப் பாலாற்றில் நீந்துது மனமே

குழைவது உன்னெழில் முகமே
என் காதலின் மொத்தமும் நீயே

அலைகளில் தவிக்கும் நுரையாய்
என் அணுக்களில் உனக்கென ஏக்கம்

மழையென விழுந்தாய் என்னுள்
என் மனதினை இழந்தேன் நானும்

விழைவது என்றுமுன் மனமே
அதில் உறங்காத நானோர் பிணமே

வளைக்கரம் குலுங்கிட வந்தாய்
என் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்

விலையேது உனக்கிவ் வுலகில்
என் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்

ராஜ முத்தங்கள்


இதய ஆழத்தின்
...இனிய வெளிகளில்
உதிரும் நினைவுகள்
...உணர்வைக் கூட்டியே
புதிய வாழ்த்தெனப்
...பொழிய வந்தன
ரதியுன் இதழ்களில்
...ராஜ முத்தங்கள்

ஒரு கிராமத்துக் காதல்


வெறிச்ச விழி மூடாம
வருத்தத்துடன் நானிருந்தேன்
பருத்திக் கொட்டை கண்ணழகே
பறிச்சிக்கிட்டே என்னுசுரை

வறுத்து வெச்ச முந்திரியே
வழுக்கிக்கிட்டே போகுறியே
தெறிச்சு விழும் முத்தழகே
தவிச்சிருக்கேன் பாரேன்டி

குறிச்சி வச்சத் தேதியில
கொறிச்சிப் பாக்க வேணுமடி
நரச்சமுடி ஆகும்முன்னே
நரம்பதிர வாயேன்டீ
அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று
அன்பே
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு

தினம் வெட்கப்பட்டு
வெட்கப்பட்டு
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு

உன் மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு

உன் கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்

உன் சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை உன்னுடன்
இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு

இவை அத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனிவரும் அத்தனைப் பிறவியிலுமே
இன்றுபோலவே துடித்துக்கொண்டிருக்கப்போகும்
என் அத்தனை உயிர்களையும்
இன்றே இப்பொழுதே எழுதிக்கொடுத்துவிடுகிறேன்

கனவுகள் ததும்பும் கருவிழிகள்..


கனவுகள் ததும்பும்
கருவிழிகள்
உணர்வுகள் மிளிரும்
சிறுஇதழ்கள்

தினமொரு அஞ்சலாய்
வந்துவந்து
மனதினுள் வார்ப்பது
பாற்குடங்கள்

வனமலர்க் குவியலில்
நின்றாடும்
வண்ணத்துப் பூச்சியின்
உள்ளமென

குணவதி மனரதி
வான்மதியே
என் நெஞ்சினில் பொங்குது
தேன்நதியே

பிறப்பதும் இறப்பதும்
நிகழ்ச்சிகள்தாம்
பிறக்கிறார் இறக்கிறார்
பலரும் இங்கே

குறிஞ்சியாய்ப் பிறப்பவர்
ஒரு சிலரே
நறுமலர் நீயும்
அதில் ஒன்றே

முல்லையும் மல்லியும்
கோத்தெடுத்த
நல்லதோர் கவிதையும்
எனக்குள்ளே

மெள்ளத்தான் அசையுது
பூத்து
சொல்லத்தான் காதலர்
வாழ்த்து

1998301 தீ மூச்சைத் தூதுவிடு


அவன்
அவளைச் சந்தித்தான்

அந்தச் சந்திப்பு
சிந்திப்பை முந்திக்கொண்டு
இதுதான் பந்தம்
இருவரும் சொந்தம் என்று
சந்தம் கட்டிச்
சிந்து பாடச் சொன்னது

அந்தி விரித்த
அரையிருள் பந்தியில்
இவன் இமைகள்
அவள் விழிகளிலும்
அவள் இமைகள்
இவன் விழிகளிலும்
பட படவென்று தட்டும்
தந்தித் தகவல்களால்
சிலிர்ப்புகளையும்
சிலிர்க்க வைத்துக்கொண்டன

இதய அருவிகள்
நிலவுக்குள் விழுந்து
கனவுக்குள் புரண்டோடி
நினைவுகளை ஈரமாக்கி
அவர்களின் சிந்தையைப்
பேதலிக்கச் செய்தன

ஆம்
அவர்கள் காதலித்தார்கள்

அவர்கள் மட்டுமே வாசிக்கும்
தனி ஏடுகளில் மட்டுமே
அழகழகாய்த் தட்டச்சேறியது
அவர்களின் காதல்

சில நாட்கள் நழுவி
காலத்துக்குள் விழுந்து
காணாமல் போனபின்
அவள் மனம்
அவசரமாய் நிதானமானது

மூச்சு முட்டிச் செத்தாலும்
முடிவெடுக்கும் முயற்சியின்
மன ஊஞ்சல் ஓயாது
பெண்களில் சிலருக்கு

கல்லூரிப் படிக்கட்டுகளை
கணிசமாகவே
தேய்த்துவிட்டிருந்தாலும்
அவளும் அந்தச்
சிலரில் ஒருத்தி என்னும்
விதிக்குள் சிக்குண்டாள்

காதல் வேறு
கல்யாணம் வேறு என்று
செழித்து வளர்ந்த
சமுதாயப் பாழ்மரத்தின்
ஆணிவேர் இதில்தானே
ஊட்டச்சத்தே உண்கிறது

பிறகென்ன
அவளுக்கே அர்த்தம் விளங்காத
போராட்டங்கள் அவளுக்குள்
மீண்டும் மீண்டும்
புதுப் புது வர்ணங்களில்
நாள்தோறும்
அவதாரம் எடுத்தவண்ணமாய்
இருக்கின்றன

எல்லா நிறங்களும்
முடிவில் கறுப்பாய்த் திரிவதுதான்
அவளுக்குப் புரியவே இல்லை

விளைவாய்
அவன்முன் அவள்
தன் மௌனத் தாவணியால்
முழு முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள்

அவனோ
கண்ணீர் அலை அடிக்கும்
அவன்
கண்களின் கரைகளில் நின்று
அவளின்
மெல்லிய இதயத்தின் காதுகளில்
மிகவும்
துல்லியமாய்ப் பாடுகின்றான்

O

நீ
ஈரங்கள் நீராடும் மேகம்
என்னோடு ஏனிந்த மௌனம்

கோழை மனக் காதல்
நாளும் நிறம் மாறும்
மாறாது என்னுள்ளமே

தேனோடையின் காற்றானவன்
உனைச் சேரவே புயலாகிறேன்

தீ மூச்சைத் தூதுவிடு
மணத் தேர்ஏறத் தேதி கொடு

வானம் மலர் தூவும்
வற்றாத குற்றாலம் வாழ்வாகும்

உனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
தேன் முல்லையே மொழியாததேன்

ஈரேழு ஜென்மங்கள்
நாம் வேறல்ல ஓருயிரே

நாளும் வழிமேலே
விழியல்ல
உயிர் வைத்தேன் இளமானே

கவிதைபற்றி கவிதை


கவிதைபற்றி
கவிதையெழுத வேண்டுமா
அதைக் கவிதைகேட்டு
கவிதைமனம் மறுக்குமா

கவிதைபற்றி
கவிதையென்ன எழுதுவேன்
எனைக் கவிதைகேட்கும்
கவிதைமனம் வாழ்த்துவேன்

தவிப்பதற்கும்
துடிப்பதற்கும் எதுவேண்டும்
இந்தக் கவிதைமகள்
வைத்திருக்கும் மனம்வேண்டும்

புவிநிறைந்த
பூக்களள்ளி தூவுகிறேன்
இவள் பொன்மனதை
வாழ்கவென்று வாழ்த்துகிறேன்

இணையமென்ற
மேடைதனில் சந்தித்தேன்
உயர் இதயமென்று
அப்பொழுதே சிந்தித்தேன்

அணை தாண்டும்
வெள்ளமென உணர்வுநதி
இவள் உள்ளமெங்கும்
தித்திப்பு அமுதநதி

தனைமறந்து
கவிரசிக்கும் கவிதைமலர்
என்றும் தரமிழந்து
போகாத தீபச்சுடர்

நினைவுகளில்
நிச்சயமோர் இடமுண்டு
நட்பு நெகிழவைக்கும்
இதயத்தின் அன்போடு

காதலர்தினம் வந்துவிட்டது


என்
உயிர்த்துடிப்பின் ஓசைகளை
இன்றுன்னிடம் எப்படியாவது
மொழிபெயர்த்துவிடவேண்டும்

அன்பே...
உன் தாவணிச் சிறகினைப்
பூவென விரித்து
என் காதல் வனத்துக்குள்
நீ பறந்து வரப்போகும்
அந்த நாள் எது?

கவிதையில் தொடங்கினேன்:
நீ இப்போதெல்லாம்
தாவணி போடுவதே இல்லை
செல்லம்...

தினம் கனவுகளின் தழுவல்களில்
கரைந்து போகும் உணர்வுகளை
நிஜமாய்ப் பொழியப் போகும்
அந்த நேரம் எது?

அடுத்த வரி கோத்தேன்:
உன் ”வால்பேப்பர்” விழிகள்
அலட்சியப் பார்வை வீசுகின்றன

கண்ணே
உன்னைக் காணாக் கணங்களில்
காற்றில்லாக் கூண்டுக்குள்
மூச்சுவிடத் தவிக்கும்
இளங்கிளி நான்
நினைவுப் புதை குழிக்குள்
நிமிசம் தவறாமல் மூழ்கும்
முது மான்

மேலும் தொடர்ந்தேன்:
புருவங்களைச் செதுக்கிச்
சீர்செய்ய விரைகிறாய்...

அன்பே இத்துடன் என்
தீ மூச்சைத் தூதுவிடுகிறேன்
வந்து விடு
உன் வரவுக்காக நான்
வழிமேல் விழியை அல்ல
என் உயிரையே வைத்துக்
காத்துக் கிடக்கிறேன்

கவிதையை முடித்துவிட்டேன்:
அஞ்சலைச் சொடுக்கும்முன்
என்னுடன்
விழி
மாற்றிக்கொண்டிருந்த
நீ
ஆள்
மாற்றிவிட்டாய்
என்ற
அவசரத் தகவல்...

பாவேந்தர் பிறந்தநாள் உறுதிமொழி


சொட்டுந்தேன் தமிழையள்ளி
கெட்டிப்பால் ஆடைகட்டி
பட்டுத்தழல் வீரம்தொட்டு
கொட்டுந்தேள் கோபம்பொத்தி

எட்டுத்திசை எங்கும் மின்னல்
வெட்டித்தான் கவிதை தந்தாய்
முட்டித்தினம் மூடர் எண்ணம்
விட்டுத்தான் ஓடச் செய்தாய்

சிரித்தாயே அழகின் சிரிப்பில்
சிலிர்த்தாயே இயற்கை வளத்தில்
தெறித்தோடும் முத்தே பாட்டில்
தீவீசும் கொள்கை வேட்டில்

விரித்தாயே புரட்சிக் கொள்கை
விவேகத்தின் வெற்றி முல்லை
நரிக்கள்ளம் கொண்ட மனத்தை
நறுக்கியே வைத்தாய் சொல்லில்

பாரதமும் இரண்டாம் பட்சம்
பைந்தமிழர் வாழ்வே உச்சம்
பாராட்டும் தமிழ்ப் பாவேந்தே
பாட்டாலே தந்தேன் முத்தம்

போராட்ட வெற்றிச் சுடராய்
புவிமீது தமிழர் வாழ
தேரோட்டிப் போனாய் உந்தன்
தரம்போற்ற வந்தேன் இன்றே

அமுதங்கள் அள்ளியே தந்தாய்
அழகுதமிழ் உயிரிலே வைத்தாய்
குமுறிவரும் எரிமலைக் குழம்பை
கவிதையினில் கொட்டியே தந்தாய்

சமுதாயப் போக்கினைச் சாடும்
சவுக்கோடு பாய்ந்தே வந்தாய்
தமிழுமோர் வரமெனக் கண்டாய்
தமிழினம் உயரவே நின்றாய்

விண்ணோடு கவிபாடும் சோலை
வேருக்குள் இரத்தமும் கொட்டி
மண்ணோடு கனிவளம் தோண்டி
மரமேறிக் கிளைகளும் வெட்டி

பொன்னோடு மணிகளும் செய்து
பொழுதுக்கும் உழைப்பினில் வாழும்
எண்ணிலா ஏழ்மையின் மாந்தர்
ஏற்றமே வாழ்வெனச் சொன்னாய்

போர்க்களம் வெல்லும் உன்றன்
புரட்சியின் கரங்களை நீட்டி
நேர்க்குரல் ஓங்கும் பாட்டால்
நெற்றியில் இட்டாய் பொட்டு

வேர்ப்பலா விதவைத் துயரம்
வேர்வெட்டித் தீர்த்தாய் மறவா
பார்புகழ் பாட்டின் வேந்தா
பாரதியின் தாசா வாழ்க

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழே
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழே

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழே
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழே

உறுதியெடு தமிழர் இனமே
உயர்த்திப்பிடி தமிழின் கொடியை
மறதிகளும் கொண்டார் தமிழர்
மறந்திட்டார் தமிழின் சொல்லை

குறுகித்தினம் சாவதும் தமிழோ
கெடுப்பதுவும் தமிழரின் பண்போ
உறுதிமொழி உயிரில் தைப்போம்
உலகெலாம் தமிழே வளர்ப்போம்!

---------------------------------
நினைவுநாள் ஏப்ரல் 21, 1891
பிறந்தநாள் ஏப்ரல் 29, 1964
**
பைசா கோபுரங்கள் நிமிரட்டும்



நாம்
கைகுலுக்கிக் கொள்வது
நம் விரல்களைச்
சரிபார்த்துக்கொள்ளத்தான்

தேவையற்ற
நகங்களை நறுக்கத்தான்

அழகு மிளிர விரல்களில்
சந்தனம் பூசத்தான்

பொய்ப்புகழ்ச்சி மோதிரமிடவோ
பொறாமை நெருப்பில்
தோல் கருக்கவோ அல்ல

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன

200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு


மின்னஞ்சல் ஓசை - அதை
மீட்டத்தான் ஆசை
மடிக்கணியின் பாஷை - அதில்
மூழ்கத்தான் ஆசை

கணிப்பலகை மடியிட்டு
கைவிரலின் நுனிதொட்டு
தட்டச்சும் ஓசை சங்கீதம்

நாளெல்லாம் தவிக்கவிட்டு
நகர்ந்துவரும் மடல் பார்த்து
மவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்

வலை தேடும் நேரம்
வன்களத்தின் ஓசை
சந்தோச சங்கீதம்

இணையத்தின் சாளரமெல்லாம்
இன்பத் தென்றல் தழுவும் சுகமாய்
இழையோடும் தகவல் சங்கீதம்

தட்தட்டும் அஞ்சல்களில்
துணைதேடும் உள்ளங்கள்
தடுமாறும் ஓசை சங்கீதம்

உரையாடும் மின்னறையில்
உயிரோடு உயிர்சென்று
உறவாடும் பாஷை சங்கீதம்

யாரென்றே கூறா
முகமூடி வேசம்
தவறான சங்கீதம்

எந்நாளும் ஏழை என்னை
அள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்
அன்புத்தாய் இணையம் சங்கீதம்

இந்தியா இன்பத்திரு நாடு...


நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.

1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.

இதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.



இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும்
அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ
வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப்
பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும்
எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன்
நல்லதமிழ்ச் சொல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக
வரவேண்டும் ஓடி

மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண்
மறந்ததே இல்லை

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென்
நன்றிகளோ கோடி

தமிழ் மாதக் காதல்


தைத்தான்
அவளைக் கண்களால்

மாசில்லாக் காதல்
உனதென்றால்...

பங்குநீ சரிபாதி இனியென்
வாழ்வில் என்றாள்

சித்திரை விலக்கி
வெளியில்வா பொன்மலரே

வைகாசி என்று வாட்டும்
வரதட்சணை வேண்டாமெனக்கு
என்றான்

ஆ..நீ..தானடா
ஆண்மகனென்று

ஆடிப் பாடி
தாவணிச் சிறகடித்து
அவன் மடிவிழுந்தாள்
அவள்

புரட்டாசியில் ஊருக்கே சொல்லி
ஐப்பசிக்கும் விருந்தாக
கார்த்திகைக் கணையாழியும்
மார்கழித் தேன்நிலவுமாய்
அமர்களப்பட்டது
தமிழ்க்காதல் திருமணம்