எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்

கடவுள் இருக்கிறாரா? கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞான பூர்வமாக மறுக்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால்,
இந்தப் பிரபஞ்சத்தின் மூலம் என்று எதைச் சொல்கிறார்கள்?

இறைவன் என்ற பெயருக்குப்பதில் இயற்கை என்பார்கள்.
எப்படித் தோன்றியது என்றால் தானே தோன்றியது என்பார்கள்.
எப்போது முடியும் என்றால் மாற்றமே கொள்ளும் முடியாது என்பார்கள்.

ஆக, வரையறைகள்தானே மாற்றம். சக்தி ஒன்றுதானே?
அதை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?
கடவுள் என்று சொல்லவேண்டாம். மூலம் என்றே சொல்லுங்கள்.
யார் யாருக்கு எது சரியோ அதை அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்வார்கள்.

உண்மையான நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதில்லை.
ஆத்திகர்கள் சொல்லும் வரையறைகளின் படி கடவுள் இல்லை என்பார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று ர் போடுவது பழக்கம் காரணமான.
கடவுளை ஆண் என்றோ பெண் என்றோ சொல்வது முதலில் சரியாகுமா?
கடவுளை அது என்றும் சொல்லமுடியுமா?

கேள்விகள் சாகும்போதும் தீராது. கேள்விகள் இல்லாமல்
மூளையின் பங்கு ஒன்றுமே இல்லை.

நாம் தெளிவாகத் தெரிந்த விசயங்களில்தான் விவாதம் செய்யமுடியும்.
தெளிவில்லாத இம்மாதிரி விசயங்களில் சிந்தனை ஆடலே செய்யமுடியும்.
பதில்களெல்லாம் யூகங்கள்தான் பெரும்பாலும்.

பலரும் பழைய யூங்களே போதும் என்று இருந்துவிடுகிறார்கள்.
புதிதாக எவரேனும் பேசினால், நாத்திகவாதி என்று சொல்லிவிடுகிறார்கள்.
நீங்கள் கடவுளைப் பற்றி எண்ணியிருப்பதல்ல கடவுள் என்று தொடங்கினால்
அரைகுறை ஆத்திகவாதி என்றுவிடுகிறார்கள்.

பூமி சுற்றுகிறது. ஏன் சுற்றவேண்டும் அப்படியே இருக்கலாமே? இது கேள்வி....
சரி பூமிமட்டுமா சுற்றுகிறது என்று பார்த்தால், பிரபஞ்சத்தில் எல்லாமே
சுற்றுகிறது. திட்டம்போட்டுச் சுற்றுகின்றனவா திட்டம் போடாமலெயே
சுற்றுகின்றனவா என்பது பிறகு. ஏதோ ஓர் ஒழுங்கு அங்கே காணப்படுவது
உண்மைதானே?

மனித உடலின் கட்டமைப்பு எத்தனை அதிசயம். இரத்த ஓட்டத்துக்கு
இதயம் இயங்குவதும், மூச்சுக்கு நுரையீரல்கள் இயங்குவதும்,
கழிவுகளுக்கு சிறுநீரகங்கள் இயங்குவதும், உணவுக்கு இரைப்பையும்
குடல்களும் இயங்குவதும், அறிவுக்கு மூளை இயங்குவதும் எத்தனை
வினோதம். யார் இந்த நுணுக்கமான அமைப்புகளைக் கட்டிமுடித்தவர்?
யாருக்குத் தெரியும்?

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், எல்லாம் ஓர் ஒழுங்கில் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மாற்றி மாற்றி ரேகைகள்... ஆச்சரியம்.
இதன் ஒழுங்கு பிரபஞ்சத்தின் சக்தி.

பிரபஞ்சம் ஒரு சக்தி. அந்த சக்திக்கு என்ன பெயரிட்டால் என்ன?
அது சக்திதானே?

நம் கேள்விகளுக்கும் எல்லைகள் இல்லை.
நம் அறிதல்களுக்கும் எல்லைகள் இல்லை.

நாளை நாம் புதிதாக அறிந்துகொள்ள நிச்சயம் எப்போதும் ஒன்று
உண்டு என்பதே நிஜம். அறிவியலின் வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது.
இனி கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று உறங்க அறிவியலுக்கு
வழியே இல்லை.

ஒரு முழுமையைத் தேடிச் செல்லும் அறிவு தன்னைச் செதுக்கிக்
கொண்டேதானே இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை.

அறிந்தவரை அறிவியல். தான் சொன்னதே சத்திய வாக்கு என்று
அறிவியல் சொல்லிக்கொண்டும் உலவவில்லை.

மதங்கள்தான் இதுதான் பூரணம் இதுதான் முழுமை இதுதான் எல்லாம்
மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுகின்றன.
அறிவியல் ஒருபோதும் அப்படிக் கூறுவதில்லை.

மதங்களின் பெயரால் மனிதர்கள் வகுத்த வரையறைக்குள்
கடவுள் வந்து சிக்குவாரா?

பிரபஞ்சம் மொத்தமும் கடவுள்தான் என்று ஓர் அனுமானமுண்டு எனக்கு.
நீங்கள் நான் புழு பூச்சி காகிதம் சருகு கல் மண் எல்லாம் எல்லாம்.

யாவும் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் மாறும் ஒரே பொருள்!
அதன் பெயரே கடவுள். அதன் பெயரே பிரபஞ்சம்.

என் அனுமானம் தவறாய் இருக்கலாம்.
ஆனால் தவறென்று உறுதியாய்ச் சொல்ல எவரால் இயலும்?

நம்மை மீறி நடக்கும் விசயங்களுக்கு விளக்கம் தெரியாதபோது
நம்மைச் சூழ்வது பயம்....

பயத்தை மூலதனமாய் வைத்து வளர்ந்தவை எத்தனை எத்தனை?
பயம்தானே மூடநம்பிக்கைகளின் வேர்

மனிதனைப் படைத்தது இறைவன் என்றால்
இறைவனைப் படைத்தது யார் என்ற கேள்வி சரியானதுதான்!

அதே சமயம்,
மனிதனைப் படைத்தது இயற்கை என்றால்
இயற்கையைப் படைத்தது யார் என்ற கேள்வியும் வரத்தானே செய்யும்?

ஒரு கேள்வியைக் கேட்கும்போதே
அதனுள் இன்னொரு கேள்வியும் எழுகிறதல்லவா?
இது முடிவடையாமல் சென்றுகொண்டே இருக்கிறதல்லவா?

எனவேதான் எதுவும் எதனிடமிருந்தும் வரவில்லை என்று கொள்ளவேண்டும்.
எல்லாம் அப்படியே எல்லையற்று இருக்கின்றன என்று கொள்ளவேண்டும்.
ஏனெனில், அது மட்டுமே இப்போதைக்கு நம்மால் இயலும் :)

இருப்பவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன
என்பதை நாம் அறிவோம்.

தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டதுதான் பிரபஞ்சம்
என்று கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும்.

அது எப்படி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது என்று கேட்டால்
நம்மால் என்ன சொல்ல முடியும்?

பிரபஞ்சம் என்று அந்தச் சக்தியைச் சொன்னாலும் சரி
இறைவன் என்று சொல்லிக்கொண்டாலும் சரி.
எல்லாம் ஒன்றுதான்.

எல்லையற்ற பிரபஞ்சத்தையும்
இறைவனையும் பிரிப்பதை ஏற்பதற்கில்லை.

கடவுள் ஒருவன்தான் என்ற நம்பிக்கை வேண்டும்.
மதங்கள்தாம் அந்த எண்ணத்திற்கு ஊறுவிளைக்கிறதோ என்பதைப்
பல நடப்புகளில் அறிய நேர்கிறது.
எனவே அதன்மீது ஒரு வெறுப்பு வருவது இயற்கை.

இறைவன் பொதுவானவன், மதம் அப்படியா?
மதங்கள்தாம் இறைவனை வேறு வேறானவன் என்று
எல்லோருக்கும் சொல்லிக் கெடுக்கிறது!

எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்
என்ற என் எண்ணம் தவறாகாது என்று நம்புகின்றேன்.

மதம்கடந்து மனிதம் பார்த்து, தெய்வம் ஒன்றே ஒன்றுதான்
என்று நம்பினால், உலகில் 99% பிரச்சினைகள் தீரும்!

ஜாதி மதமெல்லாம் சிறிய விசயங்கள். கடவுள் என்பது
பெரிய விசயம். அது அனைவரையும் அனைத்தையும்
உள்ளடக்கியதாய் இருந்தால் மட்டும்!

4 comments:

தருமி said...

எப்படி இது போன்ற கட்டுரைகளை நான் இதுவரை காணவில்லை என்ற ஆச்சரியம். அதைவிடவும் இவ்வளவு தீர்க்கமானக் கட்டுரைகள் ஏன் பலர் கண்ணில், நினைவில் படவில்லை என்ற ஆச்சரியமும் உள்ளது.

வளர்க ...

அன்புடன் புகாரி said...

நன்றி தருமி,

என் ஆக்கஙக்ளைக் கொண்டு சேர்ப்பதில் நான் அதிக அக்கறை காட்டுவதில்லை. குழுமஙக்ளோடு நின்றுவிடுகிறேன். நான் மாறவேண்டும் என்று பரிந்துரைக்கிறது உஙக்ள் அன்பு மடல்!

Thekkikattan|தெகா said...

தருமி, என்ன புதையல் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டீங்களா :-))?

புகாரி, அசத்தலான கட்டுரைகளா இருக்கே... எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா வைச்சு வைச்சுப் படிச்சு முடிக்கணும்.

உங்களுக்கு ஒரத்த நாடா... நமக்கு பக்கம்தான் - கரம்பக்குடி.

அன்புடன் புகாரி said...

ஓ கரம்பக்குடியா.... கேட்க எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கிறது தெகா