தற்கொலை என்பது தீவிரவாதமா?

தற்கொலையும் தீவிரவாதம்தான்.

தீவிரவாதம் என்றால் என்ன? மனிதம் அழிக்கும் ஒவ்வொரு செயலும் தீவிரவாதம்தான்.

தீவிரவாதத்தை நாம் அகிம்சைக்கு எதிரான நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு செயலாகப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் தற்கொலையும் தீவிரவாதம்தான்.

மனிதரை மனிதர் மாய்ப்பது தீவிரவாதம் அல்லவா? அது தானே தன்னை அழித்துக்கொள்வது என்றாலும் நியதி ஒன்றுதானே?

என்றால் உண்ணாவிரதம் இருப்பது தீவிரவாதமா? அதுவும்தான் தன்னை வருத்திக்கொள்கிறது பிறரையும் வருத்தப்பட வைக்கிறது என்று கேட்கலாம்.

உண்ணாவிரதம் என்பது தீவிரவாதத்திற்கு எதிராக மனிதர் செய்யும் அகிம்சை யுத்தம்.

அகிம்சை இல்லாதததுதான் தீவிரவாதம்.

மனிதர்களின் கருணையை எதிர்பார்த்து உண்ணாவிரதங்கள் தொடங்கப்படுகின்றன. கருணையற்ற எவரும் துன்பத்துக்கு தன்னை ஆளாக்கிக் கொள்ள மாட்டார்கள். மனிதநேயம் உள்ளவர்கள் மனிதம் காக்க நிச்சயம் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் உண்ணாவிரத்தின் குறிக்கோள். தன் கருணை பிறரிடமும் இருக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காக தன்னை வருத்திக்கொள்வது மனித நலன் நோக்கிய வெற்றிக்கான படிக்கட்டு அல்லவா? அது எப்படி தீவிரவாதம் ஆகும்?

உழைப்பு என்பது தன்னை வருத்திக்கொள்வதுதான். ஆனால் அது தீவிரவாதமா? மனிதத்துக்கான ஓர் உரம் அல்லவா அது.

சுகப்பிரசம் என்பது பெண் தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? மனித இன ஆதாரமல்லவா?

அநீதி இழைக்கப்பட்டவன் தற்கொலைக் குண்டாக மாறுவது என்பது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? நிச்சயம் தீவிரவாதம்தான். ஏனெனில் ஒன்று அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அடுத்தது மேலும் பல உயிர்களை அழிக்கிறான். ஆகவே மாற்றுக்கருத்து இல்லாமல் அது தீவிரவாதம்தான்.

வயல்களில் பயிரிடுவது களை பறிப்பது அறுவடை செய்வது தன்னை வருத்திக்கொள்வதுதான். ஆனால் அது தீவிரவாதமா? மனித இருப்புக்கான மகத்தான செயல் அல்லவா?

பள்ளியில் படித்து பரிட்சை எழுதுவது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? மனித வளர்ச்சியின் ஆதாரங்களில் ஒன்றல்லவா?

வாழ்வின் சுமையைத் தாங்கிக்கொள்வது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? சுமை தாங்கிக்கொள்பவராக நம்மை வளர்த்துக்கொள்வதும் சக உயிர்களும் துயரத்தில் வாடாமல் காப்பதும் மனிதமல்லவா?

நல்லதங்காள் எடுத்த முடிவு தன் கண்முன்னே பெற்ற குழந்தைகள் துடித்து சாவதை விட தான் கொன்றுவிட்டு செத்திடலாம் என்பது நல்லெண்ணம் தானே, அந்த சூழ்நிலையில் எல்லா தாயும் ,. ஏன் தகப்பனுமே எடுக்கும் முடிவுதானே அது.. என்பது கேட்பது நியாயமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால், நல்லதங்காள் செய்தது சரியல்ல. அதுவும் தீவிரவாதம்தான்.

பெற்ற குழந்தைகளுக்கு ஒருநாள் விடியல் வரும். அவர்கள் துன்பத்திலேயே செத்துவிடுவார்கள் என்று நினைப்பது நம்பிக்கையே இல்லாத நிலை. அவளின் அவசர கண்மறைந்த நிலை. அவள் தன்னை அழித்ததும் அவசர நிலையே. அவள் துயர் கண்டு நாம் கண்ணீர் வடிப்போம். அவளின் கோழைச் செயல் கண்டு அவளையும் சமூகத்தையும் கண்டிப்போம்.

ஒரு பெண் தன்னையும் காத்துக்கொள்ளமுடியாத தன் பிள்ளைகளையும் காத்துக்கொள்ள் இயலாத நிலையில் இருப்பது பெண்ணடிமைத்தனம்.

இதுபோன்ற சூழலில் ஒவ்வொரு தாயும் எடுக்கும் முடிவு தற்கொலைதான் என்றால் உலகில் ஓர் உயிரும் இருக்காது! உலகின் உயிர்களை அழிக்கும் எதுவும் தீவிரவாதமேயன்றி வேறில்லை.

6 comments:

தருமி said...

மற்ற உங்கள் கட்டுரைபோலல்லாமல் இது கொஞ்சம் தெளிவற்று எனக்குத் தோன்றுகிறது.

தருமி said...

இதையும் பாருங்கள்

அன்புடன் மலிக்கா said...

நல்ல கருத்துக்கள் தாங்களின் படைப்பில்,வாழ்த்துக்கள்.


தற்கொலைதான் தீர்வு என்றால்
தாங்குமா பூலோகம்

தீர்வுகளுக்கு மனஉறுதியைக்கொண்டு தீர்வுகொடு
தற்கொலையை தன்னம்பிக்கைகொண்டு கொன்றுவிடு

அருள்மொழிவர்மன் said...

என்னுடைய எண்ணமும் அதுவே!..

~கருணையற்ற எவரும் துன்பத்துக்கு ஆளாக மாட்டார்கள்~

இது பிழையாகத் தோன்றுகிறது.

அன்புடன் புகாரி said...

நன்றி அருள்மொழிவர்மன், பொருள் மாறித் தெரிவதைக் கண்டேன். இப்படி மாற்றி இருக்கிறேன்.

“கருணையற்ற எவரும் துன்பத்துக்கு தன்னை ஆளாக்கிக் கொள்ள மாட்டார்கள்”

அருள்மொழிவர்மன் said...

மிகச்சிறப்பு..
இங்குள்ள ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது...