இரண்டு ரக்கூன்


நான் அன்புடன் என்ற ஒரு கூகுள் குழுமம் நடத்தி வருகிறேன். வருடம் முழுவதும் வசந்தம் காட்டி அன்போடு செல்லும் அந்தக் குழுமத்தில் எப்போதாவது சில வேண்டாதவர்கள் நுழைந்து அக்கிரமம் செய்வதுண்டு. அதைச் சமாளிக்க நான் பல வழிகளில் முயற்சி எடுப்பதும் உண்டு. ஒருமுறை அகிம்சை வார்த்தைகள் பலனற்றுப்போக நான் சற்று கடுமையான போர் தொடுக்க வேண்டியதாகிப் போயிற்று. அப்போது...

"அன்புடன் தென்றலாகவே தவழட்டுமே நாம் பிரச்சனைக்குள் நுழைய வேண்டாமே... ப்ளீஸ்.... கனியுள்ள மரத்தில்தானே கல்லடிபடும்.." என்று... அன்புனின்மீது மிகுந்த அக்கறையுள்ள ஒரு சகோதரி உண்மையான அன்புடனும் உரிமையுடனும் மடலிட்டிருந்தார். அவருக்கு நான் எழுதிய மறுமொழியில் ஒரு உண்மைச் சம்பவத்தை விவரித்தேன்.

அன்பிற்கினிய சகோதரி, வணக்கம். நாம் எப்போதாவது எதற்காகவாவது எந்தப் பிரச்சினைக்குள்ளும் நுழைந்திருக்கிறோமா? வந்த பிரச்சினையைத்தானே நாம் இதுவரை விரட்டி இருக்கிறோம். தென்றலென்பது தெளிந்த நீரோடைக்குச் சமமானது! வெறுமனே தென்றல் என்று அழைப்பதால் அது தென்றலாகிவிடாது!

இந்தக் கோடையில் ஒருநாள் குடும்பத்தோடு நாங்கள் கூடாரவாசம் (கேம்பிங்) காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அதிகாலையில் எங்கள் வீட்டின் கதவைத் திறந்ததுமே இரண்டு ரக்கூன்கள் உள்ளே ஓடிவந்துவிட்டன.

ரக்கூனைப் பற்றி கனடா அமெரிக்காவாழ் மக்களைக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாய்ச் சொல்வார்கள். அது ஒரு அழிச்சாட்டியம்பிடித்த மிருகம். ஒரு பெரிய பூனையின் அளவு வளர்ந்து இருக்கும்.

அவ்விரு ரக்கூன்களையும் வீட்டைவிட்டு வெளியில் விரட்டாமல் நாங்கள் எப்படி கூடாரவாசத்திற்குச் சென்று இனிமையாய்க் கொண்டாட முடியும்?

என் மனைவி அவற்றைப் பார்த்ததுமே பயந்துகொண்டு மாடிக்கு ஓடிவிட்டார் :) என் மகளும் மகனும் என் முதுகுக்குப் பின் நின்று என்ன செய்யப் போறீங்க... என்ன செய்யப் போறீங்க... பாருங்க பாருங்க குறுகுறுன்னு பாக்குது.. பயமா இருக்கு.... பயமா இருக்குன்னு கத்துறாங்க.

பத்து நிமிடங்களில் புறப்பட்டால்தான் கூடாரவாசமும் கைகூடும். நண்பர்கள் பெட்ரோல் நிறுத்தத்தில் காத்திருக்கிறார்கள்

போலீசைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தலாமென்றால் அதற்கு ஒருநாள் ஆகிவிடும். திட்டமிட்ட கூடாரவாசம் இயலாமல் போய்விடும்.

மூன்றுநாட்கள் தங்குவதற்காக புறப்பட்டிருக்கிறோம் நண்பர்களின் குடும்பங்களைச் சேர்த்தால் ஒரு முப்பது பேராவது இருக்கும் எல்லாமே கெட்டுவிடும். என்ன செய்வது? எனக்குத் தெரிந்தது தெரியாதது என்று என்னவெல்லாமோ செய்தேன்.

போ போ என்று முதல் அதட்டினேன் அவை என்ன சாதாரண நம்மூர் நாய்களைப் போலவா? அசையவே இல்லை

வீடுபெருக்கும் நீண்ட துடைப்பத்தை எடுத்து நீட்டி பயங்காட்டி விரட்டினேன் ம்ம்ம்..... அவை அசையவே இல்லை

அப்படியே காட்டேறிகளைப்போல ஓயாமல் அகண்டு விரிந்த பேய்நெருப்பு விழிகளால் பார்த்த்துக்கொண்டே இருக்கின்றன

பயமாய் இருக்கிறது, பதட்டமாய் இருக்கிறது

நண்பர் சொன்னாரென்று சுடுநீரை அள்ளி அவற்றின் முகங்களிலே எறிந்தேன். ஐயோ அதற்கும் அவை அசையவே இல்லை. அப்படியே சாம்பூவும் சோப்பும் கொடு என்று கேட்பதுபோல் முகத்தைக் காட்டின.

எனக்கும் உடம்பெல்லாம் நடுங்குது. ஆனாலும் விட்டுட முடியுமா? நான் தானே அவற்றை விரட்டவேண்டும்?

மிக நீளமான... கனமான குச்சி ஒன்றைத் தேடி எடுத்தேன் என் பயமும் வெறுப்பும் என்னைத் தின்றுகொண்டுதான் இருந்தன.

அப்படியே எட்டி எட்டித் தள்ளியே வெளியில் எறிந்தேன் முதலில் ஒன்றை. இனி அடுத்தது எங்கே என்று தேடினால் அது சோபாவுக்கு அடியில் சென்றுவிட்டது

அய்யோ அதற்காக அந்தப் புத்தம்புது பெரும் சோபாக்களை அகற்றி... எங்கே அது எகிறி என்னைக் கடித்துவிடுமே என்று பதறித் துடித்து... அப்பப்பா எத்தனைக் கொடுமை என்கிறீர்கள்

இதற்கிடையில் கலாரசனையும் காசும் கொட்டி ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த இரண்டு மீன் தொட்டிகள் விழுந்து உடைந்தன. சுவற்றில் மாட்டியிருந்த மிக அழகான இயற்கைப்படம் ஒன்று சுடுநீரால் சீரழிந்தது

மீன்கள் தரையில் விழுந்து துடிக்கின்றன. மீன்களைக் காப்பாற்ற வேண்டும். கிட்டே நெருங்கினால் கடிக்குமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் மீன் துடிப்பதைக் காணச் சகிக்காமல் ஓடிச்சென்று அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன் முதலில்

எனக்கு அவதியில் இருக்கும் உயிர்களைக் காப்பதில் அக்கறை அதிகம் என் உயிர் அழிவதுபற்றியும் கவலைப் படமாட்டேன். அப்புறம் என் கடுமையான போராட்டத்திற்குப்பின் அதையும் வெளியேற்றினேன்.

அதன்பின் எங்கள் நால்வருக்கும் கிடைத்த நிம்மதி இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. என் மகன்தான் தன் அறியாமையால் சற்றும் எதிர்பார்க்காமல் கதவை முழுவதும் திறந்து வைத்து அந்த அட்டூலியங்களை உள்ளே விட்டுவிட்டான். அதன்பிறகெல்லாம் அவனின் முன்னெச்சரிக்கைகளைப் பாராட்டியே தீரவேண்டும்.

ஆனாலும்... ஏதேனும் தீதொன்று எப்படியோ கிடைக்கும் சந்தில் புகுந்து உள்ளே வரத்தானே செய்யும் அதுதானே தீதின் முரட்டுத்தன்மை...

எங்கள் தந்தை எப்படியும் தீதை விரட்டிவிட்டு வீட்டின் அமைதியைக் காப்பார் என்றுமட்டும் என் பிள்ளைகள் முழுமையாய் நம்புகின்றன.

அதன்பின் ஆர அமர உட்கார்ந்து நண்பர்கள் கதை கேட்டுச் சிரித்தார்கள். இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று யோசனைகள் சொன்னார்கள்.

கடைசியாக விடைபெற்றுச் செல்லும்போது எங்கள் வீட்டுக்குள் ரக்கூன் வராது.அப்படி வந்துவிட்டால் உங்களைத்தான் கூப்பிடுவேன் புகாரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் :)

3 comments:

Anonymous said...

உங்களை நீங்களே புகழ்ந்துக்கொள்கீறீர்களே புகாரி.

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

வாழ்க்கையில் சில சமயம் எதிர்பாராமல் இது மாதிரி செயல்கள் நடக்கின்றன. முடிந்த வரை நாம் அவற்றை எதிர் கொள்கிறோம் - புறந்தள்ளி வெற்றியும் பெறுகிறோம். இது இயல்பு.

சீனா said...

அன்பின் புகாரி

குழுமமாகட்டும் - குடும்பமாகட்டும்

பிரச்னைகள் வரத்தான் செய்யும் - எதிர் கொண்டு சமாளிப்பது நம் வேலை.
முடியாத பிரச்னையும் உண்டு எளிதில் முடியும் பிரச்னையும் உண்டு
அடுத்தவர் உதவி கொண்டு முடிக்கலாம் - இல்லை - தானாகவே முடிக்கலாம்

இதெல்லாம் இயல்பான செயல்கள்

அன்புடம் குழுமம் குடும்பமாக இயங்கி வருகிறது - அதற்குப் பிரச்னை எனில் அனைவரும் தோள் கொடுப்பர் - துனை நிற்பர்.

நட்புடன் ..... சீனா
-----------------------------