உன்னைப் பிரிந்து
தூரமாய்ச் செல்லச் செல்ல
மனதுக்குள் மூச்சு முட்டும்
ஏதோ ஒரு பாரம் தன் எடையை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

உன் நினைவுகள்
ஒன்றிரண்டாய் வந்து வந்து
உசுப்பிவிட்டது போக
இன்று மாநாடே கூட்டி
வா... வா... என்றழைக்கும்
மரண வாயிலைத் திறந்து விடுகின்றன

என் மூச்சுக் காற்று என்னை
வாழவைத்ததெல்லாம் பழைய கதை
இன்று அந்த மூச்சுக் காற்றே
என் மூச்சை நிறுத்த வந்த
நெருப்புக் காற்றாகி விட்டது

இப்போதய என் விழிகள்
திறந்தபோதும் நீ மூடிய போதும் நீ

நீயென் அருகில் இருந்த போது
திடீரென்று விரித்துக்கொண்ட
என் சிறகுகளுக்குத்தாம்
எத்துணை வலிமை

என்னைத் தூக்கிக் கொண்டு
நான் கண்டறியாத ஏதேதோ
சொர்க்க வெளிகளிலெல்லாம்
அலைந்தனவே

இன்று தேடிப் பார்த்து
சிறகுகளைக் காணாத என் பார்வை
நிலைகுத்தி நிற்கிறது

விசித்திரம்தான்
உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது

ஆச்சரியம்தான்
உன் விழிகளின் ஒளிக்கீற்று
என்னை இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து தாக்குவது

இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள
என்ன வழி என்றுதான்
நான் தவித்தேன் அப்போது

ஆனால்
வலியின் ருசியை
உயிரில் நிறைக்க நிறைக்க
காதல் எனக்கு
வாழ்வின் அமுதத்தை
அள்ளி அள்ளி ஊட்டுகிறது

அதில்
சிக்கி இருப்பதே
சுகம் எனக்கு இப்போது!

Comments

சீதாம்மா said…
உண்மை
சீதாம்மா said…
வலிக்கும் நெஞ்சுடன் இருப்பவள். விரல்களில் தடுமாற்றம்.
க்ண்களில் நீர் பார்வையை மறைக்கின்றது
நீ எழுதியது வெறும் கவிதையானால் விமர்சனம் தரலாம்.
ஒருவன் அழுகைக்கு விமர்சனம் தரும் அளவு இன்னும் மரத்துப் போகவில்லை
ஒரு காதல் கதை எழுதி என் நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன்.
மனத்தில் சோர்வுடன் வந்தால் இங்கும் சோக கீதம்
அதனால் ஒரு வார்த்தை எழுதினேன். உங்கள் இந்தக் கவிதைக்கு விமர்சனம் கூடாது.
அணு அணுவாகப் படித்து அனுபவிக்கின்றேன்
சாந்தி said…
மிக அருமையாய் வலியை கூட உணர்ந்து அன்பவித்தால் மட்டுமே எழுத முடியும்..

>
> அதில்
> சிக்கி இருப்பதே
> சுகம் எனக்கு இப்போது!ஆச்சர்யமான மனசுதான் ... சுகமான வலி தேடி சுகம் கொள்வதும்..
சீனா said…
வலி - காதலின் வலி - உயிரில் நிறைய நிறைய

காதல் இனிக்கிறது

உண்மை உண்மை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா
விஷ்ணு said…
அருமையான கவிதை புகாரி அவர்களே ..

காதல் பிரிந்தபோதும்
உயிரில் கலந்த
அந்த சுவையை
உணர்ந்து ருசிக்கும்
உங்கள் அழகே அழகு ...

விஷ்ணு ..
பூங்குழலி said…
ஆச்சரியம்தான்
உன் விழிகளின் ஒளிக்கீற்று
என்னை இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து தாக்குவது

அருமையான வரிகள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ