அரபுக் கனலிலே எத்தனைக் காலம்


இந்தப் பாடலுக்கான முன்னுரையில், என் தாயைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். முப்பது வயதுக்குள் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு
தன் கணவனைக் காலனிடம் வாரிக்கொடுத்துவிட்ட பாலை மணலலை என் தாய்.

என் தாயின் வெள்ளைச் சேலையை மாற்றி வண்ணச் சேலை கட்டச் சொல்லி தினமும் அழுவேன் என் ஒன்பது வயதில். செய்வதறியாது என் தாய் என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை. என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டில் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன்... பாலைவனம் புறப்படேன்.

அப்படியே இரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்ட பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே ”பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்” என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.அரபுக் கனலிலே எத்தனைக் காலம்
வாழ்க்கை என்னும் பூ வாடும்

பூக்க மறந்து சருகாய்ச் சிதைய
யார் விட்ட சாபம் அரங்கேற்றம் - இங்கு
யார் விட்ட சாபம் அரங்கேற்றம்

பூங்கவிக் குயிலொன்று தானே முன்வந்து
பணம் தரும் கரங்களில் விழி பெருக்கும்

பூமெத்தை மடிகளில் பெட்ரோல் வளங்களில்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும் - என்றும்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும்

தாய்மலர் இதயத்தில் தீயொன்று விழுந்தது
துணைநின்று காத்திட வழியேது

உருக்கிய இரத்தம் பணமாய்ப் பூத்தது
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது - இன்று
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது

7 comments:

cheena (சீனா) said...

இளமையில் வறுமை கொடிது. நெருப்பினில் கூடத் தூங்கலாம். வறுமையில் வாழ, வாட முடியாது. அதற்காக அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் கூட மறைத்துக் கொண்டு பொருளீட்டிய மனங்கள் எல்லாம் உண்டு. இது இயல்பு.

மூத்த ஆண் மகனின் கடமை எனக்கும் தெரிந்ததே

SUKIRTHARANJITHAM said...

வாசிக்கும் போதே அழுது விட்டேன்,ஆம் நானும் மூத்த மகன் தான் என் அம்மாவுக்கு,எனக்கு கீழே இரெண்டு தங்கைகள்.உங்கள் அப்பாவை காலன் இளம் வயதில் பிரித்துவிட்டான் ,எங்களுக்கோ அப்பவே காலன் ஆக இருந்தார்
என் அம்மாவின் கண்களில் நான் சிறு வயது முதல் கண்டது கண்ணீர் மட்டுமே,
புஹாரி போலவே நானும் குடும்ப நிலை கருதி என் ௧௯ வது வயதிலே குளிர் தேசம் ஒன்றை நாடி வந்தேன்.
என் அம்மாவோடு கதைக்கும் போது எல்லாம் நான் சொல்லுவேன் "எனி கவலை பட வேண்டாம் அம்மா தங்கைகளும் உனிவேர்சிட்டி தானே,நானும் உழைக்கிறான் தான"என்று.அதற்கு என் அம்மா சொல்லும் பதில் "எண்ட பிள்ளை பக்கத்தில் இருந்தா தான் எனக்கு சந்தோசம்"இதை தான் தாய்மை என்பதோ?
"இளமையில் வறுமை மிக மிக கொடியது
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி!!!"

அன்புடன் சகோதரன்
சுகிர்த்தரஞ்சிதம் டிசான்

சாந்தி said...

தாங்க முடியா கொடுமை... என் தந்தை 65 வயதில் மரணித்த போதே என் அம்மாவின் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் என் அண்ணா...

9 வயதில்...:(((((((((((((((((

செய்வதறியாது என் தாய் என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை. என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டில் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன்... பாலைவனம் புறப்படேன்.

அப்படியே இரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்ட பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

:((அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே ”பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்” என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.

காலங்காத்தால்முதல் மடல் வந்து பார்த்து அடங்க மாட்டாமல் கண்ணீர் சிந்த வைத்தீர்களே.. இது போல் எத்தனை குடும்பங்கள்...:((((((((((


படத்தில் இருப்பது யார் தம்பிகளா..?

வறுமை , பிரச்னைகள் நல்லதொரு பாடம் தரும்..இருந்தாலும்.. கொடுமை..:(

இளங்கோவன் said...

அன்பின் புகாரி

மனம் வலிக்க படித்தேன்
வரிக்கு வரி வலிகளின்
வேதனைகள்..

இதற்கு மேல் என்னால் ஏதும்
எழுத முடியவில்லை...

இறைவன் துணை எப்போதும் உண்டு.

அன்புடன் இளங்கோவன்.

பூங்குழலி said...

உருக்கிய இரத்தம் பணமாய்ப் பூத்தது

உங்களை போன்ற பலரின் குரலாக இந்தக் கவிதையைப் பார்க்கிறேன் புகாரி ...

சீனா said...

அன்பின் புகாரி


இது ஏற்கனவே படித்த நினைவு - சுட்டியைச் சுட்டி அங்கே சென்றேன்

பதினெட்டு மாதங்களுக்கு முன்னரே மறு மொழியும் இட்டிருக்கிறதைக் கண்டேன்

அப்பொழுது நான் கண்fட புகாரி வேறு - அறிமுகமாகும் நிலை
இப்பொழுது காணும் புகாரி வேறு - அறிந்த நிலை

இப்பொழுதும் கருத்து் சொல்லலாம்

முப்பது வயதில் ஆறு பிள்ளைகள்

பாலை மணலலை - அருமையான வர்ணனை - துயரத்தின் உச்சத்தினைக் காட்டும் வரிகள்

வேலை இல்லாத் திண்டாட்டம் - எரியும் கவிதைகள் - சாம்பல் ஆனது
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதென பாலைவனம் புறப்பட்டது

அரபுக் கனலிலே பூ வாடும் காலம் எத்தனை
அரங்கேறும் சாபம் = சருகாய்க் கருகிட

கவிதை எனது தொழில் என்பது மாறி
அரபிக்கு விலையானது

உருக்கிய இரத்தம் பணமாகி அன்னை உயிரைக் காத்தது

அருமை அருமை புகாரி

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
------------------------------------

ஆபிதீன் said...

நண்பன் புஹாரிக்கு

காலையிலேயே இப்படி கண்கலங்க வைத்துவிட்டாயே, நியாயமா?
உம்மா ஹயாத்தாக இருக்கிறார்கள்தானே? என் சலாத்தைச் சொல்.
தம்பிகளுக்கும் பிள்ளைகளுக்கும் முத்தங்கள்.

அன்புடன்,

ஆபி