அணிந்துரை - அ. முத்துலிங்கம் - பச்சைமிளகாய் இளவரசி


வானூறி மழை பொழியும்

அ. முத்துலிங்கம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோன் அப்டைக். வயது 72. இருபது நாவல்கள், கணக்கில்லாத சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று இவர் கைவைக்காத துறையே இல்லை. சமீபத்தில் வந்த இவருடைய நாவலை மிக மோசமானது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் ஓர் எழுத்தாளர் எப்படி மோசமான ஒரு படைப்பைத் தரமுடியும்? .......முடியும்!

முழுநேர எழுத்தாளர்களுக்கு ஏற்படும் வியாதி இது. இவர்கள் எழுதினால்தான் பணம். பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்துவிடுகிறார்கள். ஒப்பந்தப்படி முடிவு தேதிக்குள் எழுதி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள் அல்லது மோசமாக எதையாவது எழுதித் தள்ளிவிடுகிறார்கள். இது பெரும்பாலும் அந்த எழுத்தாளர்களுக்கே தெரிந்திருக்கிறது.

இந்த நிலை அநேகமான தமிழ்ப் படைப்பாளிகளிடம் கிடையாது. இவர்கள் பிழைப்புக்காக எழுதுபவர்கள் அல்ல. வருமானத்துக்கு ஏதாவது ஒரு தொழில் அவர்களிடம் இருக்கும். தமிழ் ஆர்வத்தினால் உந்தப்பட்டு எழுத வந்தவர்கள்.

திரு புகாரியை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் கணினித் துறையில் நிறையப் படித்தவர். சவூதியில் பல வருடங்களாக வேலைபார்த்து இப்போது கனடாவில் நிரந்திரமாகத் தங்கி இணைய தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராக வேலைபார்க்கிறார்.

இவர் கிடைக்கும் நேரத்தைத் தன் துறையிலேயே செலவழித்து மேலும் பணம் பெருக்கலாம். ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை. கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் தமிழ் இணையதளம் ஒன்றும் வலைப்பூ ஒன்றும் யுனிகோடு தமிழ் குழுமம் ஒன்றும் நடத்துகிறார்; கவிதை, கட்டுரை என்று எழுதுகிறார்; எழுதாத நேரங்களில் கவிதையாகவே மூச்சு விடுகிறார்.

தன்னை அறிமுகம் செய்யும்போதெல்லாம் கணினித்துறை ஆலோசகர் என்று கூறுவது அவருக்குப் பிடிப்பதில்லை. கவிஞர் புகாரி என்றுதான் அடக்கமாகக் கூறிக்கொள்கிறார்.

திரு புகாரியை எனக்குத் தெரியாது என்றே சொல்லலாம். இரண்டுமுறையே அவரைக் கண்டு சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறேன். அவருடைய கவிதைகளை அவ்வப்போது திண்ணை, எழில்நிலா போன்ற பக்கங்களில் படித்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது முதன்முறையாக ஒரு புத்தக வடிவத்தில் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது கிடைக்கும் உணர்வோ புதுவிதம். அடியூடாக ஒரு சரடு ஓடிக்கொண்டே இருக்கிறது.

கவியின் உள்ளத்து உணர்வுகள் பொங்கி அவ்வப்போது நிறம் மாறினாலும், ஒரே குரல்தான் ஒலிக்கிறது. மனித நேயம், இயற்கை ரசனை, கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் இதயம், ஒரு குழந்தையின் வியப்பு, இப்படி எல்லாமே கிடைக்கிறது.

இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் நயத்துடன் அமைந்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

கொடை மிளகாய் மூக்கழகா
கொத்தவரும் கண்ணழகா
விடை சொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா


இப்படி இவர் வர்ணிக்கும்போது, எமக்கு பரிச்சயமான, மிக இயல்பான ஒரு காட்சி எம் கண்முன்னே விரிகிறது.

கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்கு குறைவில்லை. ஏதோ ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக எழுதப்பட்டவைகள் அல்ல அவை, ஆனால் பொருத்தமாக ஆங்காங்கே தானாகவே அமைந்துவிடுகின்றன. ஓர் இடத்தில்

'நான் கருவான முதல் இரவு
என் முதலிரவு இல்லையாம்'


என்கிறார். வீட்டை வர்ணிக்கும்போது

'சுவர்களல்ல, அறைகளல்ல
வசிப்போரின் கூட்டுயிரே வீடு'


என்று சொல்கிறார். பிறிதொரு இடத்தில், ஒரு தாலாட்டுப் பாடலில்

'வருவோரும் போவோரும், கண்ணே
இருப்போரின் தொடர்தானே'


என்ற உண்மையை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டுப் போகிறார்.

தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை. தள்ளாடும் ஒரு முதியவரின் உருவத்தை இரண்டே வரிகளில் மனக்கண்ணின் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

காற்றடித்த சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்.


இன்னோரிடத்தில் 'சூரியனைக் கிள்ளித்தரும் விளக்கு' என்கிறார். ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள்.

'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே
விரலெறிந்த நகச் சிமிழோ'


சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வட்டமிடுகின்றன. சூரியனை ஒரு தாய்க் கோழியாகவும், கிரகங்களை முட்டைகளாவும் எந்தக் கவியாவது வர்ணித்தது உண்டா? சூரியன் அடைகாக்கும் பூமி முட்டை என்று சொல்லும்போது அவர் கூறவந்த விசயம் சொல்லுமுன்பாகவே படிப்பவருக்கு புரிந்துவிடுகிறது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சில இடங்களில், கும்பகோணம் காட்சிகள், சுனாமி, பூகம்பம் போன்ற கவிதைகளில், கவிஞரின் மென்மையான இதயம் குமுறுகிறது. குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாய் ஆற்றாது அழுகிறாள்.

'பாவியளா, பாவியளா
என் பிள்ளை போச்சே'


மிகச் சாதாரணமான வார்த்தைகள்தான், ஆனால் அவை எழுப்பும் உணர்வுகள் நெஞ்சிலே புண்ணாக வலிக்கின்றன. அதே நேரம் சோகமான சில காட்சிகளை கிண்டலாக சொல்கிறார்.

'சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா'


இப்படித் தொடங்கும் கவிதையின் வரிகள் நகையைக் கிளப்புவதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன.

வானூறி மழை பொழியும்
வயலூறிக் கதிர் விளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்


இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.

இவருடைய தலைப்பு கவிதை கடைசியில் வருகிறது. தன்னுடைய மகளைப் பற்றி எழுதுகிறார். அவளை இளவரசி என்று அழைக்கிறார். பெற்றோருக்கு மகள் இளவரசிதானே. பச்சை என்கிறார். பச்சை என்றால் அழகும், இளமையும் பசுமையும். மிளகாய் உறைப்புபோல சுரீர் என்று அவளுக்கு கோபம் வருகிறது. பிறகு மறைந்து விடுகிறது. அதுதான் பச்சை மிளகாய் இளவரசி. அழகான தலைப்பு.

மாலை நேரம் இவர் அலுவலகத்தில் இருந்து களைத்து விழுந்து திரும்பும்போது குழந்தை ஓடி வருகிறாள். அவளை அணைத்து மடியில் இருத்துகிறார்.

மாலை கவிழ்ந்தால்
தளிர் மடியில்
என் மனதின்
கிழிசல் தைக்கின்றேன்.


மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது 'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார். கவித்துவத்தின் உச்சம்.

எனக்கு மிகவும் பிடித்த கவிதை வரிகள் எவையென்றால் சமீபத்தில் இவர் எழுதிய சுனாமி பற்றிய வரிகள்தான்.

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது.


கம்பனில் இருந்து கண்ணதாசன் கடலைப் பாடாத கவி இல்லை. ஆனால் யாராவது படுத்துக் கிடக்கும் கடல் எழுந்து நின்றது என்று வர்ணித்திருக்கிறார்களா? முற்றிலும் புதுவிதமான கற்பனை. சுனாமியின் திடீர்த்தாக்குதலும், பயங்கரமும் சில வரிகளிலேயே எமக்குக் கிடைத்து விடுகிறது. இப்படி உன்னதமான ஒரு சித்திரத்தைப் படைத்துவிட்டு அடுத்து வரும் வரிகள் படிமத்தின் உச்சத்தைக் குறைக்கச் செய்கின்றனவோ என்ற ஓர் அச்சம் எமக்கு உண்டாகிறது.

திரு புகாரியின் நாலாவது கவிதைத் தொகுப்பு இது. இதற்குமுன் வந்த கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே. வானூறி மழை பொழிவதுபோல புகாரியிடம் கவிதைகள் ஊறிப் பெருகுகின்றன; அவற்றின் தரமும் மேம்படுகிறது.

சமீபத்தில் ஒரு கவி சொல்லியிருந்ததைப் படித்தேன். 'நான் எனக்கு தெரிந்ததைச் சொன்னால் எனக்கு அலுக்கிறது. உனக்குத் தெரிந்ததைச் சொன்னால் உனக்கு அலுக்கிறது. உனக்கும் எனக்கும் தெரியாததை சொல்வதுதான் கவிதை.'

புகாரி அதைத்தான் செய்கிறார். அவருடைய படைப்புகள் புதுமையாக இருக்கின்றன. மயக்கவைக்கும் உவமைகளும், மனதை அசைக்கும் படிமங்களுமாக நெஞ்சிலே நிற்கின்றன. இன்னும் நிறைய இவர் எழுதவேண்டும். என் வாழ்த்துக்கள்.

அ. முத்துலிங்கம், கனடா
எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி

No comments: