அணிந்துரை - ஜெயபாரதனின் நூலுக்கு

உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு அந்நியர் ஆகார்...

தமிழ் என்பதொரு கடல். அதில் உலக நதிகள் அத்தனையும் வந்து கலந்திட வேண்டும். தமிழ்க்கடல் வந்து சேராத ஒரு துளி எழுத்தும் உலகின் எந்த மூலையிலும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் அத்தனை எழுத்துக்களும் அச்சுமாறாமல் தமிழுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.

தமிழ் என்பதொரு மழை. இந்த மழை பொழியாத எந்த நிலமும் உலகில் எங்கும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் காய்ந்த மண்ணிலும் ஈரமாய் தமிழ் நின்று பொழிந்திட வேண்டும். தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உலகின் அத்தனை மொழிக்கும் பெயர்க்கப்படவேண்டும்.

இவை செய்பவன் போற்றுதலுக்குரிய தமிழன். அந்தத் தமிழனை தமிழ் தன் முத்தங்களுக்குள் பொத்தி வைத்துத் தாலாட்டும். அப்படித் தாலாட்டப்படும் சில நூறு தமிழர்களுள் அறிவியல் சிரிப்போடு ஜெயபாரதனும் இருப்பார்.

கவியோகி இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர். அவர் எழுதிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாய் ஏற்று நூறு+ கோடி மக்களும் தினமும் மரியாதை செலுத்திப் பாடி வருகிறோம்.

பழம்பெரும் இந்தியப் பண்பாட்டை மேற்குலகக் கருத்துக்களோடு இணைத்து சிறப்புறச் செய்து பெருமை பெற்றவர் தாகூர். அவரின் கீதாஞ்சலிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தாகூரின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதப்பட்டு அவராலேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படியான ஒரு மொழிமாற்றத்திலிருந்து இன்னொரு மொழிமாற்றமாக நம் ஜெயபாரதன் கீதாஞ்சலியைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும் சிதையாமல் அப்படியே மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.

ஜெயபாரதனின் மொழியாக்கம் சிறப்பாய் அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர் மூலப்படைப்பின் சொல் பொருள் கவிதை நயங்களின் அலைகளில் அப்படியே சிலிர்த்துப்போயிருக்கிறார். அவை அப்படியே அவர் இதயத்தில் கூடுகட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த குஞ்சுகள் மூலத்தின் ராகத்தை அப்படியே இயல்பாய் இசைத்திருக்கின்றன.

உதாரணத்திற்காக ஜெயபாரதனின் மொழியாக்க வானத்திலிருந்து ஓரிரு நட்சத்திரங்களின் ஓரங்களை மட்டும் இங்கே நாம் உரசிப் பார்ப்போம்.

ஆதியில்லாக் காலத்திற்கு அந்தமில்லை
உந்தன் கைகளுக்குள் நகர்வதால்
எந்தன் அதிபதியே
காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை
எண்ணிக் கணிப்பவர் எவருமில்லை

சூட்சும தரிசனங்களின் ஆணிவேர்களைத் துலாவிப் பார்க்கும் இம்மாதிரியான வெளிச்ச விரல்கள்.

மெய்வருந்தி இறுகிப்போன வயலை
உழவன் எங்கே உழுதுகொண்டு இருக்கிறானோ
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்

ஆன்மிகத் தேடலின் நிதரிசனங்களாய் உருளும் இம்மாதிரியான மனப்பயணச் சக்கரங்கள்.

தன் சொந்த வீட்டை வந்தடைய
ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி தட்ட வேண்டியுள்ளது

பிறரிடம் பிச்சை எடுப்பவனே
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு

இயல்பான அசைவுகளால் காற்றில் துடிப்போடு மிதக்கும் இம்மாதிரியான சிந்தனைச் சிறகுகள்.

குளிரும் மழை வேளைகளில்
அங்குமிங்கும் அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குது என் நெஞ்சு

எப்போது முகம் காட்டுவாய் நீ என் அன்பே
கண்ணிமை கொட்டாது கவலையில் சோர்ந்துபோய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கியவண்ணம்
நிற்கிறேன் விழித்துக்கொண்டு

அழைத்துப் பாடுவது காதலியையா கடவுளையா என்று மயங்கவைக்கும் இம்மாதிரியான அழகு நயங்கள்.

நான் இசைத்த முந்தைய பாசுரங்கள்
நாக்கில் வரண்டு போனதும்
புதிய கீதங்கள் ஊறிப்
பொங்கி எழுந்தன நெஞ்சில்
பழைய தடங்கள் மறைந்து போன இடத்தில்
புதிய பூமி உதித்தது அதிசயமாய்

அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் நம்பிக்கையின் திசையில் மனதை நகர்த்தி அந்த அதிசயம் நிகழ்வதே வாழ்க்கையென்று அறிவிப்பதுபோல் இருக்கும் இம்மாதிரியான முத்திரைச் சித்திரங்கள்.

நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாடநினைத்த கீதம்
இன்றுவரை வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது

வேட்கை மீறி கீதம் வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை
பூரணமாகக் கீதம் பூத்து
விரியவில்லை சீராக இன்னும்

அருகில் பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்

கவியோகி தாகூருக்கும் அதே திருப்தியற்ற நிலைதானா என்று வியக்கவைக்கும் இம்மாதிரியான முத்துச் சரங்கள்

இப்படியாய், இந்தத் தொகுப்பு முழுவதும் தாகூரின் கவிதைகள் ஜெயபாரதனின் மொட்டிலிருந்து பூத்தவைபோல் பூத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புதானா என்று வியக்க வைக்கும் வண்ணம் குற்றால அருவிகளாய்க் கொட்டுகின்றன.

தாகூரின் எண்ண நுணுக்கங்களை அப்படியே நுணுங்காமல் தருவதிலும், பரந்து விரிந்த தாகூரின் ஆன்மிக இதயத்தை அப்படியே தமிழ்த் தாம்பூலத்தில் ஏந்தித் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயபாரதன்.

இணையம்தான் ஜெயபாரதனை எனக்கு அறிமுகம் செய்தது.

இணையவலை பிரித்துக் கொரித்துக்கொண்டிருந்த ஓர் மதியப் பொழுது ஜெயபாரதனின் கட்டுரை ஒன்றை என் கண்களுக்குள் இழுத்து வந்தது. அது ஓர் அறிவியல் கட்டுரை. நீளம் அகலம் ஆழம் என்று எல்லா திசைகளிலும் அடர்த்தியாய் இருந்த அந்தக் கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அறிவியல் கட்டுரை எழுதுவோர் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாமல் திண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்கட்டுரையோ மிக இயல்பான அழகு தமிழில், ஒவ்வொரு கலைச் சொல்லுக்கும் எளிதான தரமான தமிழ்ச்சொல் இட்டு, எண்ணத்தில் ஒரு வண்ணத்த்துப் பூச்சியைப்போல சட்டென ஏறிக்கொள்ளும் வண்ணமாய், பல புகைப்படங்களால் சூழப்பெற்று ஒரு காட்சி வர்ணனையைப் போல ஆக்கப்பட்டிருந்தது.

இன்று கனடாவில் வாழும் ஜெயபாரதன், 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்திலும் 17 ஆண்டுகள் கனடிய அணுசக்தித் துறையகத்திலும் பணியாற்றிவிட்டு இப்போது முழு ஓய்வில் இருக்கிறார். "ஆக்க வினைகளுக்கு அணுசக்தி" என்னும் இவரது முதல் புத்தகத்துக்கு சென்னை பல்கலைக் கழகம் மாநில முதற் பரிசை அளித்துள்ளது.

கடந்த கோடை விடுமுறையில் என் குடும்பத்தோடு இவர் இல்லம் சென்றேன். நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார் ஜெயபாரதன்.

தன் இரு மகள்களையும் கனேடியர்களுக்கு மணமுடித்துக்கொடுத்து பேரப்பிள்ளைகளோடு குதூகலமாய் வாழும் இவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்கும் ஒருவரால் இவரை ஓய்வுபெற்று வாழும் ஒருவராகக் காண்பது கடினம். நேற்றே மீசை முளைத்த துடிப்பான இளைஞரைப் போல சுறுசுறுப்பாய்ச் செயலாற்றி வருகிறார்.

தமிழறிவும் அதற்கு இணையான ஆங்கில அறிவும் மட்டுமல்லாமல் கவிதை ரசிப்பும் ஆன்மிகத் தேடலும் ஜெயபாரதனின் விரல்களை கீதாஞ்சலி மொழியாக்கத் தளத்தில் உறுதியானவையாக ஆக்கி உலவ விட்டிருக்கின்றன.

தாகூரின் கீதாஞ்சலியை நான் இப்போதுதான் முழுவதுமாக வாசிக்கிறேன். ஜெயபாரதனின் தமிழ் உள்ளத்தால் அது என் கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டி இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தவன் நன்றி கூறுகிறேன். என்னைப்போல் பலரும் நிச்சயம் நன்றி கூறுவர்.

தாகூர் கவிதை எழுதவில்லை. கவிதைகள் தாகூரை எழுதி இருக்கின்றன. தன்னுள்ளம் எதுவென்று பாடுகிறாரா, தன் காதலியிடம் ஏங்குகிறாரா அல்லது கடவுளிடம் தவிக்கிறாரா என்ற பொதுநிலைப்பாடு கீதாஞ்சலியின் வெற்றி.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஆன்மிகப்பற்றும் அற்புத வழிதரும் என்பதற்குச் சான்றுகளாய் இத்தொகுப்பெங்கும் பல பாடல்கள்.

ஒவ்வொரு மொழி மாற்றத்தின்போதும் ஏதோ ஒரு வகையில் மூலம் சிதைவடைவது இயல்புதான். இருந்தும், ஆங்லத்துக்கு மொழிமாற்றப்பட்ட தாகூரின் வங்காளக் கவிதைகளை நம் தமிழ்க் கடற்கரைகளில் சூரியனைத் தொட்டுப் பறக்கும் பட்டங்களாய் பறக்கவிட்டிருக்கிறார் ஜெயபாரதன்.

தாகூரின் சொற்களில் சிறு சிதறலுமின்றி லயித்திருந்தால்தான், தாகூரின் கருத்தோட்டங்களோடு செம்புலப்பெயல் நீரென ஒன்றிப்போயிருந்தால்தான், இப்படி ஓர் அழகான அச்சுமாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுத்த இன்னொரு தாயைப்போல் நிறைவோடு நிற்கமுடியும் ஜெயபரதனால்.

பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ் வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது. இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம் தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அன்புடன் புகாரி

5 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

//இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம் தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை. //
முத்தாய்ப்பாய் முடித்தது முழுதும் நிறை.
ஜெயபாரதன் அவர்கள் ஒரு சகாப்தம் என எதிர்காலம் சொல்லும்!
மிக்க நன்றி புகாரி அவர்களே!

செல்வன் சம்பத் said...

ஜெயபாரதன் சிறந்த அறிவியல் அறிஞர்.திண்னையில் அவரது அறிவியல் கட்டுரைகளை விரும்பி படிப்பேன்.அணிந்துரைக்கு நன்றி புகாரி.

விஷ்ணு said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அன்பின் புகாரி ..

ஜெயபாரதனின் கட்டுரைகள் நான் மிக விரும்பி படிப்பேன் ....

இந்த வரிகள் மிக மிக சரியே ...

// பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ் வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது. இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம் தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை. ///

விஷ்ணு ...

காந்தி said...

பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ் வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது. இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம் தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை

அட! நானும் இதை மிகவும் விரும்பி படித்தேன், விஷ்ணு....

அருமையா எழுதி இருக்கீங்க, புகாரி.

வாழ்த்துகள் ஜெபி...

அன்புடன்
~காந்தி~

சாந்தி said...

பாராட்டுகள்...அருமையான அணிந்துரை.. வாழ்த்துகள் ஜெ.பி சாருக்கும்.