30

குறிஞ்சியும்
பூதான்

ஈராறு கோடைகள்
முன்னாங்குக் குளிர்கள்
எப்படியோ கழிந்தன

எப்படியோ உடைந்தோடி
நீங்கிப்போன
நிலவுமடிப் பொழுதொன்றில்
வந்தது வசந்தம்

அந்த
வசந்தங்களின் வசந்தத்தில்
பூத்தது என் குறிஞ்சி

பூக்காது போமோ எனும்
நம்பிக்கை நெடுந் தவத்தில்
புயல் ஓய்ந்த மழைத்துளியாய்

உயிர்
சொட்டிச் சொட்டிச்
சிதற

கருந்தலை முட்களின்
உறக்கம் கடிக்கும் படுக்கையில்
எரிதனலாய்க் காத்திருந்தேன்

அடடா
அந்தக் குறிஞ்சியும்
பூத்தேவிட்டது

ஆம்
பூத்தேவிட்டது

ஆனால்....

மொட்டாகி
மொட்டுடைந்து மலராகி
பூவாய் அவிழ்த்த
தன் பொன்னிதழ்களைத்
தானே வாட்டிக்கொண்டு
மீண்டும்
உதிர்ந்தே போனது
என் காம்பினின்று...

இனியும்
பல பன்னிராண்டுகள்
குறிஞ்சியே
உனக்கே உனக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: