நீர்ப்பறவையின் முத்தக்கிடங்கினில்

ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது

அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்

அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்

அடடா
அந்தச் சொர்க்கத்தின்
முத்தக் கிடங்கில்
நான்
சுதந்திரமாகச்
சிக்கிக்கொண்டேன்

ஓர்
அற்புதக் கனவின்
நம்பமுடியா
விசித்திரங்களாக விரிந்த
வேற்றுக்கோள் உலகத்துள்
மெல்ல மெல்ல நுழைந்தேன்

சரிந்தேனா பறந்தேனா
விழுந்தேனா நனைந்தேனா
நடந்தேனா கிடந்தேனா
ஏதும் அறியேன்

கட்டுகளிடா
விடுதலை இலக்கியத்துள்
கட்டமுற்படும்
இலக்கணக் கயிறுகளை
வெட்டியெறிந்த ஏற்றத்தில்
சறுக்கியே சென்றேன்

பொற்கனவின்
பூமடிகளில்
மழலையாய்க்
கிடந்தேன்

பின்
கண்விழித்தேன்


விழித்தேனா

விழித்தேன்
என்பதே
தெரியாமல் விழித்தேன்

ஆம்
அப்படித்தான் நினைகிறேன்

அதுவன்றி
உண்மை ஏதென அறிய
நான்தான் இன்னமும்
அதனிடமிருந்து
மீளவே இல்லையே?

இப்போதும்
நான்
எதை எழுதுவது
எப்படி எழுதுவது என்றே
அறியாமல் விழிக்கிறேன்
விழி கிழிகிறேன்

No comments: