கண்களின் திறவுகோல்


உன்
உபதேச தேசத்தில்
கர்ணனும்
நீயே
கையேந்துபவனும்
நீயே

இருந்து
கொடுத்தாய்

இருந்தே
தவிக்கிறாய்

உன்
கண்களின் திறவுகோல்
உன்னிடமே இருந்தும்
பிறர்தாம்
திறக்கவேண்டும்

இது
உனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்குமே
தலையெழுத்து
வாலிபமே வாலிபமே


ஈடற்ற நிம்மதியும்
இதயம்
நிறைத்தக் குதூகலமுமாய்
இனித்துக் கிடந்த
என்
பிஞ்சுப் பிராயத்தைத்
தாண்டிவர
எனக்குள் அன்று
எந்த
எதிர்ப்பும் எழவில்லை

இன்றோ
விசக் கொடுக்கால்
முத்தமிடும்
ஏமாற்றங்களும்

பொறுக்க மாட்டாத
தவிப்புகளும்

புரையோடிய
நினைவுகளும்

சுட்டுச் சுட்டுச்
சுகங்காணும் உணர்வுகளும்

ஆழத்தில் புதைந்து விட்ட
அமைதியுமாய்

நான்-
கிழிந்து
குரலுடைந்து
விடியல் விடியலென்று
வரமாட்டாத
ஏதோ ஒன்றுக்காய்
நிரந்தரமாய்
விக்கித் தவித்தாலும்

இந்த
வாலிபத்தைத்
தாண்ட மட்டும்
என் இதயம்
அனுமதிக்க மறுப்பது ஏன்?

ஆசை



இன்னும்
ஒரு
ஜென்மம்
கவிதைகளோடு
மட்டும்
ஹைக்கூ என்ன விடுகதையா


உணர்வு வேண்டாம்
கற்பனை வேண்டாம்
மொழியழகு வேண்டாம்
உவமை என்பதோ
வேண்டவே வேண்டாம்

ஹைக்கூ என்ன
கவிதையா
ஹைதர் கால விதவையா?

முதல் இரு அடிகளில்
ஒரு கேள்வி
மூன்றாம் அடியில் பார்
ஒரு தடால் விடை

அட ஹைக்கூ என்ன
கவிதையா
கத்துக்குட்டி விடுகதையா?

ஐந்து அசை
பதினோரு அசை
மீண்டும் ஐந்து அசை
மூவரிக் கட்டுக்கோப்பு

ஹைக்கூவா அல்லது
உள்ளூர் மரபை
உடைத்தெறிந்துவிட்டு
புதிதாய்
வெளியூர் விலங்கா?

சிக்கனக் கவிதைக்குச்
சீற்றம் அதிகம்
அதை
வரட்டுச் சட்டங்களுள்
முடக்குவானேன்?

ஹைக்கூ என்னும்
அயல்கூண்டு தகர்ப்போம்

தமிழின்
செழுமை திமிறும்
வனப்பு குழைத்த
துளிக்கவிகள் பாடித்
துள்ளிக்குதிப்போம்
கறுப்புநிலா

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்
என்ன சம்பந்தம்

விழிக்குஞ்சுகளை
இமைப்பரண் ஏறவைக்கும் இக்கேள்வியை
மோனைத்தனமாய்க் கேட்டவர் யாரோ எவரோ

ஆனால்...
கறுப்புநிலா கண்டுதானே
மாதமொன்று நிறைந்துபோன
உண்மையறிகிறான் அப்துல்காதர்

பெருநாளையும் நோன்பையும்
அவனுக்கோர் உற்சாக மணியோசையாய்
உணர்த்துவதுதான் எது

வெள்ளை நிலா என்றொரு நிலா
நம் வானமாளிகையில் உண்டா

பூசிக்கொள்ளும் அரிதாரமே
மெய்முகமென்று சத்தியம் செய்யும்
திரைக்கதாநாயகியா நம் நிலா

வானத்தின் நிறம் நீலமென்றும்
நிலவின் நிறம் வெள்ளையென்றும்
இன்னும் நம்பித் தொலைக்க
இது என்ன ஹைதர் காலமா

பௌர்ணமி என்று நாம் பிதற்றும் வட்டநிலா
முழுமொத்தமும் வெள்ளைதானா
அதன் முதுகெங்கும்
பத்தை பத்தையாய் அப்பிக்கிடப்பது
சுத்தமான கறுப்பல்லவா

முழுமொத்த வெள்ளையென்பது
நிலவின் வாழ்வில் வாய்க்குமா
எந்த நொடியிலும்

பூமிக்குடை புகுந்து
சூரியச் சுடுவிழி தொடாத குருட்டுச் சிறைக்குள்
சிக்கிக்கொள்ளும்போது
நிலா என்ன நிறமாம்

கறுப்பென்று ஆனதால் மட்டும்
நிலவென்னா குறைந்தா போகும்

உலகப் பேரழகி
கிளியோபாட்ரா மட்டுமல்ல
உலகின் முதல் மனிதனே
கறுப்புநிலாதானே

அது மட்டுமா
இந்த அண்டமே ஓர் அழகு கறுப்பு
அந்தச் சத்தான கறுப்புக்குள்தானே
சகலமும் இருப்பு

வெள்ளாவியில்...


வெடிச்சு வெடிச்சுச் சிதறும் மனசு
வெள்ளாவியில் கிடக்குது
வெட்டுப்பட்டப் பல்லி வாலா
துடிச்சுத் துடிச்சுச் சாகுது

இனிப்புத் தொட்ட நாக்குநுனி
நெருப்புக் காட்டில் வேகுது
உசுரை மடிச்சு வெத்திலையாப்
போட்ட வாயி சிவக்குது

பருந்து கிழிச்ச சுண்டெலியா
மனசு நாத்தம் அடிக்குது
கிழிஞ்ச கூளம் கூட்டிவெச்சு
நெனப்பு நரியும் திங்குது

விழிப்பில்லாத தூக்கம்தேடி
கண்ணு ரெண்டும் ஏங்குது
விழிச்சு விழிச்சுப் பாத்துப்புட்டு
விம்மி விம்மிக் கதறுது

நெனப்புச் சுமை தாங்காம
மனசு எலும்பு நொறுங்குது
நொறுங்க நொறுங்க விட்டுடாம
நெனைப்புச் சுமையும் உசருது

அவமானச் சின்னமாகி
ஆவி கிடந்து அலையுது
கண்ணாடிப் பிம்பத்தையும்
காரிக் காரி உமிழுது

உச்சு முதல் பாதம்வரை
ஊசியேறிக் கிடக்குது
ஊசிமேல ஊசியேற்ற
வெந்த மனசு கெஞ்சுது

அழுகையும் சிரிப்பும் தூரமில்லை


என்னை மீறும் எண்ணங்கள்
என் இதயம் எங்கும் காயங்கள்
மண்ணில் வாழ்க்கை மாயங்கள்
மடியும் வரைக்கும் துயரங்கள்

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

தாழம்பூ நெஞ்சத்தின் தென்றல் அஞ்சல்


கடல்
அலைகளுக்கோ
கால்களில்லை
அவை
நடப்பதுவோ
ராஜநடை

உன்
விழிகளுக்கோ
இதழ்களில்லை
அவை
மொழிவதுவோ
தேன்கவிதை

உன்னைத்
தொடும்வரைத்
துயிலிலிருக்கும்
தென்றல்

உன்னைத்
தொட்டதும்
துள்ளித்துள்ளி
ஆடிவந்து

என்
காதுகளில்
கிசுகிசுக்கும்

ஏனெனில்
உன்
தாழம்பூ நெஞ்சம்
எப்பொழுதும்

எனக்குத்
தூதனுப்பத்தானே
துடித்துக்கொண்டிருக்கும்

மாப்பிள்ளை வாழ்த்து


பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ

கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்

மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்

ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்

கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்

வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்

சேவியர் மகளுக்கு வாழ்த்து


அழகழகு ரோஜா
அன்பழகு ரோஜா
மழையழகு ரோஜா
மானயழகு ரோஜா
கலையழகு ரோஜா
கவியழகு ரோஜா
இலையழகு சிவக்க
என்முத்த ரோஜா

பழகுதமிழ் ரோஜா
பனிமுத்து ரோஜா
இளயநிலா ரோஜா
இனியநதி ரோஜா
விலையில்லா ரோஜா
விண்ணாளும் ரோஜா
இளரோஜா முகத்தில்
என்முத்த ரோஜா

தினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து


இணையத்தில் கேள்விப்பட்டேன்
இலக்கியத்தில் தொட்டுப்பார்த்தேன்
அணையாத தாகத் தோடும்
அணுவிசையின் வேகத்தோடும்

மழைக்காலக் காற்றைப்போல
மனத்தோடு ஒட்டும்-எழுத்தால்
நினைக்காதத் தளமும்தொட்டு
நீச்சலிடும் வெற்றிச்-சொக்கா

உனதுமுகம் கண்டதும்-இல்லை
உனதுகுரல் கேட்டதும்-இல்லை
தினமும்வரும் தினமொருகவிதை
தெளிவாகக் காட்டியதுன்னை

கனவுலகின் வாயிலைத்திறந்து
கவிதைகளில் நாளும்-விருந்து
மனதிலொரு மத்தளங்கொட்டி
மணக்கும்புது நாளும்-மலர்ந்து

எழுத்தோடு குடித்தனம்நடத்தும்
எனதருமை லவணா-நாகா
கழுத்தோடு கைகள்பூட்டி
கதைபேச இன்னொரு-வரவா

எழுத்தாளன் மணவாழ்வென்றால்
இனிப்புக்கு எல்லைகளில்லை
பழுத்தநல் கனிகள்போல
பழகுசுகம் வேறெவர்க்குண்டு

நேரிலே வருவார்சிலபேர்
நினைவுகளும் தூரமாய்நிற்கும்
நேரிலே வரும்வழியில்லை
நெஞ்சத்தால் வருவேனங்கே

தூரிகைப் பந்தமும்வெல்லும்
தூரங்கள் மனங்களுக்கில்லை
வாரியே இறைப்பேன்-பூக்கள்
வாழ்த்துக்கள் அள்ளிநிறைத்தே

இன்பத்தில் இனித்தேகிடந்து
துன்பத்தில் துணையாய்நின்று
உள்ளங்கள் பின்னிப்பிணையும்
உயிர்க்காதல் கொண்டேவாழ்க

கண்ணோடு இமையாய்க்கோர்த்து
கல்யாண உறவைப்போற்றி
விண்முட்டும் இன்பம்-சேர்த்து
வளமோடு நெடுநாள்வாழ்க

மகளின் பிறந்தநாள் வாழ்த்து


ஆண்டுகள்
ஆயிரம்
உருண்டோட

மீண்டும்
மீண்டும்
இவ்வினியநாள்

வேண்டும்
சுகமுடன்
மலரட்டும்

பொன் மகளே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க

தீபாவளி வாழ்த்துக்கள்


இருளகற்றும்
தீபமே
இதயமாகட்டும்

கருணை அன்பு
எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்

புதிய வானம்
புதிய பூமி
விரைந்து மலரட்டும்

போற்றி போற்றி
நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்

இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்

நிச்சயித்தவளுக்கு வாழ்த்து


நியாயமான
காத்திருப்புகளுக்கு
நிச்சயம்
புனிதத்துவமுண்டு

உள்ளம் அள்ளும்
வாசம்
காத்திருந்து
கிள்ளியெடுக்கும்
மல்லிகைக்குத்தான்

வாழ்த்துக்கள்
உன்
பிறந்தநாளுக்கு

1985

மணநாள் வாழ்த்து


திருமண வாழ்த்து

ஆனந்தத் தேனூறுதே
அன்புச் சுடர் - உங்கள்
மணவிழா நாளறிந்தே...
மாணிக்கத் தேர்மீதினிலே
முல்லைக்கொடி - உங்கள்
மரோபா கைகோத்தே...
வானெங்கும் ஒளிவீசியே
வனப்போடு - என்றும்
பேரின்ப பவனிவரவே...
நானிங்கும் பூத்தூவியே
கவிதாவனம் - நின்று
நயமோடு வாழ்த்துகின்றேன்...

நாட்டிய அரங்கேற்றம்


சங்கத்தமிழ் மணம் வீசிவரும்
சந்திரப் பொன்னெழில் மேடைதனில்
சந்தனக் கிண்ணங்கள் பேரழகைச்
சிந்திடும் நாட்டிய அரங்கேற்றம்
இந்தப் புவி தனில் வேறெவர்க்கும்
என்றும் கிடைக்கா மகுடங்களை
எந்தன் கண்மணிகள் சூடிக்கொள்ள
எழிலாய் கலையாய் நிகழட்டுமே

பேராசிரியர் பசுபதி


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும்மேல்
தமிழ்நாட்டை விட்டுத்
தமிழறியா நாடுவாழ்ந்தும்
முத்தமெல்லாம் தமிழுக்கே
என்று...

கன்னித்தமிழோடும்
கணித்தமிழோடும்
கற்பூரக் காதல்பூண்டு...

ஒட்டிக்கிடக்கும்
உச்சிவான மச்சுயேறிய
பொன்மதியே...!

மாசற்ற மரபோடு
மணம்வீசும் எண்ணங்களால்
தூசற்று வாழ்கின்ற
நற்பண்பின் அதிபதியே...!

அன்புக் கவிமதியே...!
அண்ணன் பசுபதியே...!

அவைக்கழைத்த உங்கள்
அழகுமொழிக்கு
கவியடியேனின்
காலை வணக்கங்கள்!

O

சந்தவசந்தத்தில்
உங்கள் தலைமையில்
நெஞ்ச நன்றியைச்
சிந்திப் பாடிட
இந்தநல் வாய்ப்பினைத்
தந்த தலைமைக்கு
முந்தித்தருகிறேன்
வந்தன நன்றிகள்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பொன்னான பிறந்தநாள்
புகழேந்தும் பிறந்தநாள்
கண்ணோர ஆனந்தம்
கவிபாடும் பிறந்தநாள்
அன்பான உள்ளங்கள்
அமுதூட்டும் பிறந்தநாள்
வளமோடு நலம்சேர
வாழ்த்தவரும் பிறந்தநாள்

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

இன்பம் மலரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

அன்பில் மிளிரும் பிறந்தநாள்
விண்ணும் அருளும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
விண்ணில் ஒளிரும் பிறந்தநாள்

அன்னை மகிழ்ந்த பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்

உள்ளம் வாழ்த்தும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்
கைகள் வணங்கும் பிறந்தநாள்
எல்லாம் அருளும் பிறந்தநாள்

மணிசார் மணநாள் வாழ்த்து


குதிச்சுக் குதிச்சுமனம்
குத்தாலந் தாவுது
வெதச்சத் தாலிக்கொடி
விண்ணேறிப் பாயுது

மதிச்சு மதிச்சுத்தான்
மணவாழ்வு கூடுது
நெனச்சி நெனச்சித்தான்
நெஞ்சுமணி பாடுது

வருசம் வளரத்தான்
உறவும் வளருது
புருசன் பொண்டாட்டிப்
பெருமை புரியுது

கருச மணியோடு
காதல்மணி உரசுது
புருச மணியோடு
பிரேமமணி ஒலிக்குது

நாப்பத் தஞ்சாகி
நல்வாழ்க்கை மிளிருது
மூப்புக் கண்ணோரம்
மெய்க்காதல் ஒளிருது

தோப்புக் குயிலிரண்டு
தோப்பாகிப் போனது
தோப்புக்குள் நாலு
தோப்பாகி வாழுது

கண்ணில் நீரானேன்
கனிந்த பாகானேன்
எண்ணம் நெய்யாக
எரியும் சுடரானேன்

இன்னும் பல்லாண்டு
இனியும் சிறப்போடு
வண்ணம் விண்ணாக
வாழ வாழ்த்துகிறேன்

செந்தீ வளர்க


சுழல் பந்தென
களத்தில் இறங்கிய
செயல் வீரனின்
வர்த்தகச் சோலை

தழல் கொழுந்தெனத்
தாவி எழுந்தது
தமிழ் மகனிவன்
நற்பணி வாழ்க

நிழல் போலவே
வணிகர் தேவையில்
நலம் பேணிடும்
இளைய நிலவனே

குழல் இனிமையும்
செந்தீச் சுடரும்
குணம் ஆக்கியே
வெற்றி குவித்திடு